நீட் விலக்கு மசோதா: தமிழ்நாட்டில் இதுவரை நடந்தது என்ன?

ஸ்டாலின்

மருத்துவ பட்டப்படிப்புகளில் சேருவதற்கு இந்திய அரசு கட்டாயமாக்கியிருக்கும் நீட் தேர்வு முறையில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரும் மசோதா மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் (பிப்ரவரி 8) நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த விவகாரத்தில் மசோதாவை சட்டப்பேரவை சபாநாயகருக்கு ஆளுநர் திருப்பி அனுப்பியிருந்தார்.

இது தொடர்பாக அவரது மாளிகை பிப்ரவரி 3ஆம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரும் மசோதா மற்றும் இது தொடர்பாக மாநில அரசால் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் அறிக்கையை விரிவாக ஆய்வு செய்த ஆளுநர், "அந்த மசோதா மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது என்ற கருத்தை கொண்டிருக்கிறார். குறிப்பாக மாநிலத்தின் கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களின் நலன்களுக்கு அது எதிரானது என ஆளுநர் கருதுகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "பிப்ரவரி 1ஆம் தேதியே தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகரிடம் அந்த மசோதாவை திருப்பி அனுப்பி அதை பேரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்."

வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரிக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான 2020ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சமூக நீதி கண்ணோட்டத்தில் இந்த பிரச்னையை விரிவாக ஆராய்ந்து, ஏழை மாணவர்களின் பொருளாதாரச் சுரண்டலை நீட் தேர்வு முறை தடுக்கிறது மற்றும் சமூக நீதியை மேம்படுத்தும் வகையில் நீட் தேர்வு உள்ளதாக கூறியிருப்பதாகவும் ஆளுநர் கருதுவதாக அவரது மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

இந்தப் பின்னணியில், சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டத்தை கடந்த 5ஆம் தேதி கூட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அக்கூட்டத்தில் சட்டப்பேரவை சிறப்பு அமர்வைக் கூட்டி நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட ஆளுநரின் செயல் குறித்து விவாதிக்க தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி, பிப்ரவரி 8ஆம் தேதி சட்டப்பேரவையின் சிறப்பு அமர்வு கூட்டப்பட்டு நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இதுவரை என்ன நடந்தது?

தமிழ்நாட்டில் மிகவும் தீவிரமாகி வரும் இந்த நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் இதுவரை என்ன நடந்தது என்பதை கால அட்டவணையுடன் இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

மார்ச் 15, 2022: நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கக் கோரி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை மாநில முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்து வலியுறுத்தினார். இதே நாளில் மக்களவையிலும் திமுக உறுப்பினர் டி.ஆர். பாலு, ஆளுநரை மாற்றக் கோரிக்கை விடுத்தார்.

பிப்ரவரி 8, 2022: சென்னையில் சட்டப்பேரவை சிறப்பு அமர்வு கூடி நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது பற்றி விவாதித்தது. பாஜக வெளிநடப்பு செய்ய பிற கட்சிகள் நீட் விலக்கு மசோதாவை ஆதரிக்க, மசோதா மீண்டும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

பிப்ரவரி 5, 2022: சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதில் சட்டப்பேரவை சிறப்பு அமர்வைக் கூட்டி விவாதிக்க தீர்மானிக்கப்பட்டது.

பிப்ரவரி 3, 2022: நீட் விலக்கு மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகருக்கு திருப்பி அனுப்பி மறுபரிசீலனை செய்ய ஆளுநர் அறிவுரை

பிப்ரவரி 2, 2022: மக்களவையில் நீட் விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியும், ஆளுநரின் செயல்பாட்டை விமர்சித்து திமுக குழு தலைவர் டி.ஆர். பாலுவும் பேச்சு

ஜனவரி 17, 2022: சில முயற்சிகளுக்குப் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு டெல்லியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்குமாறு ஆளுநருக்கு உத்தரவிட கோரியது.

நீட்
படக்குறிப்பு, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த தமிழக அனைத்து கட்சி எம்.பிக்கள் குழு

ஜனவரி 8, 2022: அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

ஜனவரி 6, 2022: டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க தமிழக அனைத்து கட்சி எம்.பிக்கள் மேற்கொண்ட முயற்சி பலன் கொடுக்கவில்லை.

ஜனவரி 5, 2022: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் அரசின் திட்டங்களை விளக்கி ஆற்றிய தமது முதலாவது உரையில், நீட் தேர்வுகள் கிராமப்புற மாணவர்களுக்கு எதிராக சமமற்ற தளத்தை உருவாக்குகின்றன என்பதும், அது தேவையற்றது என்பதும் அரசின் கருத்து என்று தெரிவித்தார். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தடை விதிக்கும் மசோதாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பாததற்காக ஆளும் கட்சியின் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் ஆளுநர் இவ்வாறு உரையாற்றினார்.

டிசம்பர் 30, 2022: இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைத்ததாகக் கூறி டெல்லி சென்ற தமிழக அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழுவால் அவரை சந்திக்க முடியவில்லை.

டிசம்பர் 29, 2022: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து நீட் விலக்கு மசோதா விவகாரம் தொடர்பாக மனு அளிக்க தமிழக அனைத்து கட்சி எம்.பிக்கள் முயன்றனர். ஆனால், கொரோனா வழிகாட்டுதல் நெறிகள் காரணமாக, அந்த மனுவை தமது அலுவலக செயலாளர் மூலம் பெற்றுக் கொண்டு குடியரசு தலைவர் அனுப்பி வைத்தார்.

ஸ்டாலின் ஆளுநர் ரவி சந்திப்பு
படக்குறிப்பு, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

நவம்பர் 27, 2021: முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அக்டோபர் 5, 2021: செப்டம்பர் 12, 2021 அன்று நடைபெற்ற நீட்-யுஜி 2021 தேர்வை நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடத்தவில்லை என்றும் அதை ரத்து செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. நீட்-யுஜி தேர்வை ரத்து செய்யக் கோரி 20 வயதான மனுதாரர் தாக்கல் செய்த அந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அக்டோபர் 4, 2021: நீட் தேர்வுக்கு எதிராக வலுவான எதிர்ப்புக் குழுவை உருவாக்கும் முயற்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 4ஆம் தேதி, பாஜக கூட்டணியில் அல்லாத 12 மாநிலங்களின் முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார். பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஆந்திரா, ஒடிசா, தெலங்கானா, டெல்லி, கேரளா மற்றும் கோவா ஆகிய மாநில முதல்வர்களுக்கு அந்த கடிதம் எழுதப்பட்டிருந்தது.

தமிழக ஆளுநர்
படக்குறிப்பு, தமிழக ஆளுநராக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளும் ஆர்.என். ரவி

செப்டம்பர் 18, 2021: தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்றார்.

செப்டம்பர் 13, 2021: இளங்கலை மருத்துவப் படிப்புகளில் நீட் தேர்வு முறையை விலக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு இளங்கலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை மசோதா, 2021 2017ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததைப் போல பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்த வேண்டும் என்று அந்த மசோதாவில் கூறப்பட்டிருந்தது.

செப்டம்பர் 12, 2021: நீட் தேர்வை எழுத பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமானோர் நாடு முழுவதும் 3,800 க்கும் மேற்பட்ட மையங்களில் நடத்தப்பட்ட மருத்துவ நுழைவுத் தேர்வில் கலந்து கொண்டனர்.

ஜூலை 16, 2021: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.சுப்பிரமணியன், இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை டெல்லியில் சந்தித்து மருத்துவ நுழைவுத் தேர்வு 'நீட் 2021' தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதித்தார்.

நீட்
படக்குறிப்பு, இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்திக்கும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்

ஜூலை 13, 2021: தேசிய தேர்வு முகமை (NTA) NEET-UG 2021 இன் தேர்வு முறையில் மாற்றங்களை அறிமுகப்படுத்தியது. NEET (UG)-2021 இன் தேர்வு முறை இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடமும் இரண்டு பிரிவுகளைக் கொண்டது. பிரிவு A 35 கேள்விகளையும் பிரிவு B 15 கேள்விகளையும் கொண்டிருந்தது. இந்த 15 கேள்விகளில், விண்ணப்பதாரர்கள் ஏதேனும் 10 கேள்விகளை முயற்சிக்கலாம் என்று என்டிஏ கூறியிருந்தது.

நீட்

மே 7, 2021: தமிழக ஆளுநர் ஆக இருந்த பன்வாரிலால் புரோகித் சட்டப்பேரவையில் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

திமுக

மார்ச் 13, 2021: தமிழகத்தின் எதிர்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), சட்டப்பேரவை தேர்தலுக்கான தனது அறிக்கையை வெளியிட்டது. அதில் மருத்துவத் தேர்வுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட்) ரத்து செய்வதற்கான சட்டம் கொண்டு வர உறுதியளிக்கப்பட்டிருந்தது.

செப்டம்பர் 17, 2020: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், "மாநிலத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட வழிகள் ஆராயப்படும் என்றும் சட்டப்பேரவையின் அதிகாரம் மற்றும் நீதிமன்றங்களின் ஆதரவுடன் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி அமல்படுத்தும் என்று அறிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: