உ.பி தேர்தல்: "அதிகரிக்கும் சிலிண்டர் விலை; விறகடுப்பில் சமைக்கும் எங்களுக்கு தீர்வு வேண்டும்" - உ.பி கிராமப் பெண்கள்

காக்ரா கிராம பெண்
    • எழுதியவர், வாத்சல்ய ராய்
    • பதவி, பிபிசி நிருபர், முசாஃபர்நகர்

ரீனாவின் பல புகார்களில் இதுவும் ஒன்று. அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த கீதாவிடமும் பல புகார்கள் இருந்தன. மைக் அவர் பக்கம் திரும்பியதும், "நாங்கள் யாருக்கு வாக்களிக்கிறோமோ, அவர் எங்களுக்கு ஆதரவாக இருப்பார் என்றும் எங்களுக்கு ஒரு நல்ல சாலையை அமைத்துத் தருவார் என்றும் நினைத்துத் தான் வாக்களிக்கிறோம்." என்றனர்.

உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் காக்ரா கிராமத்தில் வசிப்பவர்கள்தான் இந்த இரண்டு பெண்களும். இங்கு 'முக்காடு' அணியும் பழக்கம் இன்னும் நடைமுறையில் உள்ளது.

இந்த கிராமத்தில் பெண்கள் அதிகம் காணப்படுகிறார்கள். பல பெண்களும் அன்றாட வேலைகளைச் செய்கிறார்கள். ஆனால் கிராமத்தில் உள்ள பெரும்பாலான பெண்களுக்கு, முக்காடு இன்றியமையாததாகக் காணப்படுகிறது.

பல சமயங்களில், பெண்கள் அரசியல் விவாதங்களில் பங்கெடுக்கவோ அல்லது கேமராவில் பேசவோ தயங்குகிறார்கள் அல்லது மறுக்கிறார்கள். இப்படி இருக்கும் இந்த ஊர் உத்தரபிரதேச தேர்தல் குறித்து என்ன நினைக்கிறது?

அரசியல் நிலவரம் என்ன?

பெண்களுக்கு 40 சதவீத சீட்டு வழங்கும் நோக்கில் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது.

அபர்ணா யாதவ், அதிதி சிங் மற்றும் காங்கிரஸின் போஸ்டர்களில் இடம்பெற்ற பெண்ணான பிரியங்கா மவுரியா (தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்) போன்ற தலைவர்களை முன்னிறுத்தி 'பாதுகாப்பு மற்றும் மரியாதை' என்ற கோஷத்துடன் பெண்களுக்கான கட்சியாக தன்னை முன்னிலைப்படுத்த பாஜக முயற்சிக்கிறது.

இதேபோல, மற்ற கட்சிகளும் பெண்கள் குறித்து பல முழக்கங்களை முன்னெடுத்து வருகின்றன. இந்நிலையில்தான் இந்தக் காட்சி காணக்கிடைக்கிறது.

வித்யா மற்றும் விர்மோ தேவி
படக்குறிப்பு, வித்யா மற்றும் விர்மோ தேவி

தலைவர்களுக்கு இந்தப் பெண்களின் செய்தி:

இப்படி ஒரு சூழலில், வாக்காளர்களின் மனநிலையை அறிந்துகொள்ள பிபிசி குழு இந்த கிராமத்தை அடைந்தது. இந்த கிராம மக்களுடனான உரையாடல் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அப்போது, ​​சில பெண்கள் முன்வந்தால், அவர்களுக்கும் கருத்து தெரிவிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று அறிவித்து பெண்களைப் பேச வைக்க முயற்சி செய்யப்பட்டது. ஆனால், எதுவும் நடக்கவில்லை. பெண்கள் வர மறுத்தார்கள்.

பின்னர் ஊர்ப் பெரியவர்களிடமும், இளைஞர்களிடமும் மட்டுமே பேசிவிட்டு, பிபிசி குழுவினர் திரும்பி வரத் தொடங்கிய சமயத்தில், ​​ஒரு இளைஞர் ஒரு செய்தியுடன் வந்தார், "சில கிராமத்துப் பெண்கள் தங்கள் மனம் திறந்து பேச விரும்புகிறார்கள், அவர்களுடன் பேச முடியுமா? அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் கூடிவிட்டனர். " என்றார்.

அவர்களைச் சந்திக்க பிபிசி குழு வந்தபோது, ​​பல பெண்கள் அங்கு காத்திருந்தனர். அவர்களில் மூத்தவர் 90 வயதான விர்மோ தேவி.

விர்மோ தேவி தான் வாக்களிக்கச் செல்லப் போவதாக மட்டுமே கூறினார்.

அவரைவிட சில வயது இளையவரான வித்யா, "எங்களுக்காக யார் பணி செய்தாலும் நாங்கள் அவர்களுக்காக வாக்களிப்போம்" என்று தெளிவாகச் சொன்னார்.

சில பெண்கள் கேமராவில் பேசுவதற்குத் தயங்கினார்கள், ஆனால் பெரும்பாலானவர்கள் தங்கள் கருத்தைத் திறம்பட வெளிப்படுத்த முயன்றனர்.

அனிதா

விறகடுப்பில் சமையல்:

இந்தப் பட்டியலில், அனிதா மட்டும் சிரித்துக்கொண்டே தன் 'பெரிய வலி'யை விவரித்தார்.

"நாங்கள் விறகடுப்பில் சமைக்கிறோம். சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து விட்டது. நாங்கள் என்ன செய்வது? என் கணவர் அவ்வளவு சம்பாதிக்கவில்லை, அவருக்கு உடல் நலமில்லை. எந்த வேலையும் இல்லை." என்றார்.

"முசாபர்நகரில் ஒரு வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை தொள்ளாயிரம் ரூபாய்க்குச் சற்று அதிகம். இந்தத் தொகை எங்களுக்கு மிக அதிகம்" என்கிறார்.

இருப்பினும், தேர்தல் தொடர்பான கேள்விக்கு, "நாங்கள் யாருக்கு வாக்களித்து வருகிறோமோ அவர்களுக்கே வாக்களிப்போம்" என்றும் கூறினார்.

கீதா

ஆதரவு யாருமில்லை:

அதேசமயம், "தேர்தலுக்குப் பிறகு எந்தத் தலைவரும், எந்தக் கட்சியும் வாக்காளர்களின் நிலை குறித்து விசாரிக்க வருவதில்லை" என்று கீதா புகார் கூறினார்.

குறிப்பாக "நோய் இருக்கவே இருக்கிறது. வீட்டில் இருக்கும் துன்பத்துக்கு ஈடு செய்யும் அளவுக்கு வருமானமில்லை. யாருக்கு வாக்களித்தாலும் பயனில்லை" என்றும் கூறினார்.

ரீனா ஒரு சுய உதவிக் குழுவில் இருக்கிறார். இவர், "தாங்கள் ஒரு குடிசைத்தொழில் செய்வதற்காக அரசு கொடுக்கும் தொகை தங்களுக்குக் கிடைக்கவில்லை. இடையில் சிலர் 'தடுக்கிறார்கள்" என்கிறார்.

"எங்கள் குழுவில் உள்ள சகோதரிகளுக்குப் பணம் தேவை, இப்போது அரசு பணம் கொடுத்தால், நாங்களும் சொந்தப் பொறுப்பில் அரசுக்கு ஆதரவளிப்போம்" என்கிறார் ரீனா.

மேலும் "அரசு பணம் கொடுத்தால் அதை இழுத்தடிக்காமல் இருந்தால் போதும். ஒன்று எந்த ஒரு பெண்ணையும் எந்த அமைப்பிலும் அரசு சேர்க்கக்கூடாது. சேர்த்தால் சரியான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்" என்றும் தெரிவித்தார்.

அத்துடன், தொழிலாளர் அட்டை தொடர்பான பிரச்னையை பூஜா முன்னெடுத்தார். தனக்கு அட்டை கிடைத்துவிட்டதாகவும், ஆனால், அரசாங்கத்தின் உதவி தன்னை வந்தடையவில்லை என்றும் அவர் கூறுகிறார். இப்படியாக இந்த ஊரில் பெண்கள் தரப்பில் ஏராளமான பிரச்னைகள் இருந்தன.

கிராமத்தின் பிரதான சாலை

24 ஆண்டுகளாக உடைந்த சாலை:

அதுபோலவே, கிராமத்தின் பிரதான சாலையின் அவல நிலை குறித்து ஏராளமான பெண்கள் புகார் கூறினர்.

24 ஆண்டுகளாக இது (சாலை) இப்படித்தான் இருக்கிறது. யாரும் போய் வரக்கூட முடியாத அளவுக்கு மோசமான நிலைமையில் இருக்கிறது" ​​என்றார் கீதா.

அதைத்தொடர்ந்து, "ரோடு போடுபவருக்கே இந்த முறை வாக்களிப்போம்" என்றார் ஊர்மிளா.

சங்கீதா

'நல்ல கட்சி, பொய்யான வாக்குறுதிகள்:

அந்த கிராமத்தில் வசிக்கும் சங்கீதா, ஒரே மூச்சில் அரசாங்கத்தைப் பாராட்டவும் செய்து விமர்சனமும் செய்தார்.

கிராம சாலைகள் குறித்த பேச்சைத் துவக்கி வைத்துப் பேசிய சங்கீதா, "சாலை போடுவது உள்ளூர்த் தலைவரின் பொறுப்பு. பிரதமரோ முதல்வரோ செய்ய மாட்டார்கள். மொத்தத்தில் பா.ஜ.க நல்ல கட்சி, ஆனால் விலைவாசி உயர்வு ஒரு பிரச்னை" என்றார்.

அப்போது சங்கீதா, பாஜக பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதாகக் குற்றம்சாட்டினார்.

"வாக்குறுதிகளும் பொய்யாகிவிட்டன. அங்கன்வாடியில் பணம் உயர்த்தியதாகச் சொல்லியும் இன்று வரை கிடைக்காதது போல், வாக்குறுதிகளும் பொய்யானவை. மத விவகாரமான ராமர் கோவில் மட்டும் உண்மையாகிறது. அதனால் மக்கள் பின்வாங்குகிறார்கள்" என்றார்.

அனிதா என்ற மற்றொரு பெண்ணும் சாலை வசதி தொடங்கி விலை உயர்வு வரை புகார்களை வைத்திருந்தார் .

"பெட்ரோல் விலை அதிகம், சிலிண்டர் விலை அதிகம். அவ்வளவு வருமானம் எங்கு இருக்கிறது? அப்படியே பசியால் சாக வேண்டியது தான், வருமானமில்லாமல் பணம் எங்கிருந்து வரும்? என்று வேதனையுடன் கேள்வி எழுப்புகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: