கோவை சூயஸ் திட்டம்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் சூடுபிடிக்கும் எதிர்ப்பு போராட்டம்; திமுக நிலை என்ன?

கோவை சூயஸ் திட்டம்
    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் கோயம்புத்தூரில் சூயஸ் குடிநீர் திட்டம் மீண்டும் விவாதப்பொருள் ஆகியிருக்கிறது. இந்த திட்டம் குறித்து திமுக இன்னும் தனது நிலையை தெளிவுபடுத்தாததால் அது இங்கு தேர்தலில் முக்கிய பிரச்னையாக எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் 24 மணி நேரமும் குடிநீர் சேவை வழங்குவதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு கடந்த 2018-ம் ஆண்டு சூயஸ் என்கிற பிரெஞ்சு நிறுவனத்துக்கு ரூ.3,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

அப்போது இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

ஆனாலும் அதிமுக அரசு தொடர்ந்து சூயஸ் திட்டத்தை முன்னெடுத்து வந்தது. இந்த நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிக்கு வந்தால் சூயஸ் திட்டத்தை ரத்து செய்வோம் என கோவை மாவட்டத்துக்கான தேர்தல் வாக்குறுதியில் திமுக தெரிவித்திருந்தது.

ஆனால் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு சூயஸ் திட்டம் தொடர்பாக திமுக மௌனம் காத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கொரோனா ஊரடங்கு, சட்டமன்றத் தேர்தல் போன்ற காரணங்களால் தேக்கமடைந்திருத்த சூயஸ் குடிநீர் திட்டம் தற்போது வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சூயஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக தண்ணீர் குழாய் மற்றும் மேல்நிலைத் தொட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவை இராமநாதபுரம் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் தண்ணீர் தொட்டி அமைக்க பணிகள் நடைபெற்றன.

ஆனால் அதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் பள்ளி மைதானத்தில் தண்ணீர் தொட்டி அமைக்கும் பணியை முழுமையாக கைவிட வேண்டுமென பள்ளி மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.

சூயஸ் போராட்டம்

இதில் எட்டு பள்ளி மாணவர்கள் மீது காவல்துறையினர் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் சூயஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரி வருகின்றன. கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் சூயஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோவை மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனு அளித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் சூயஸ் திட்டம் தொடர்பான விவாதம் மீண்டும் எழுந்துள்ளது.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், `தண்ணீரை தனியார்மயப்படுத்தக்கூடாது என்பது தான் ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. அடிப்படை தேவையான தண்ணீரை தனியார்வசப்படுத்துவது சரியில்லை. அது அரசாங்கத்திடம் தான் இருக்க வேண்டும். திமுகவிடம் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி உள்ளோம். திமுக தான் அதில் முடிவெடுக்க வேண்டும்,' என்றார்.

கோவை சூயஸ் திட்டம்
படக்குறிப்பு, மயூரா ஜெயக்குமார், காங்கிரஸ் செயல் தலைவர்

உள்ளாட்சித் தேர்தலில் சூயஸ் விவகாரத்தை காங்கிரஸ் கட்சி வலியுறுத்துமா என்கிற கேள்வியை முன்வைத்தபோது, `உள்ளாட்சித் தேர்தலைப் பொருத்தவரை போட்டியிடுகிற அனைத்து கட்சிகளுக்கும் பொதுவாக கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். அதை காங்கிரஸ் கட்சி முடிவு செய்ய முடியாது. சூயஸ் திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. அதை திமுகவிடமும் வலியுறுத்துவோம்,' என்றார்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சூயஸ் திட்டக் குழு தலைவர் கோபாலகிருஷ்ணன் , `சூயஸ் திட்டம் பற்றி தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. சூயஸ் நிறுவனம் தண்ணீர் விநியோகம் செய்யாது. 24 மணி நேரமும் தடையில்லாமல் தண்ணீர் வழங்குவதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியது தான் சூயஸ் நிறுவனத்தின் பணி. இதற்காக புதிய தண்ணீர் குழாய்களைப் பதித்து, மேல்நிலை தொட்டிகளை அமைத்து தண்ணீர் பயன்பாட்டை கணக்கிட மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

முறையாக டெண்டர் கோரப்பட்டு தான் சூயஸ் திட்டத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்தியாவில் எந்த நிறுவனமும் இவ்வளவு பெரிய திட்டத்தை செயல்படுத்தியதில்லை. பெரிய அளவிலான தண்ணீர் திட்டங்களை செயல்படுத்திய தகுதியின் அடிப்படையில் தான் சூயஸ் நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

சில பகுதிகளில் தண்ணீர் முறையாக கிடைக்கிறது, சில இடங்களில் கிடைப்பதில்லை. இந்தச் சிக்கலை கலைந்து 24 மணி நேரமும் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு தண்ணீர் கிடைக்க வழி செய்யும் தொலைநோக்கான திட்டம் தான் இது. தண்ணீருக்கான கட்டணத்தை மாநகராட்சி தான் நிர்ணயம் செய்யும். அதை வசூல் செய்வது மட்டும் தான் சூயஸ் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. சூயஸ் திட்டத்தில் தற்போது வரை 20% பணிகள் முடிவடைந்துள்ளன. ஆகஸ்ட் 2023-க்குள் இந்தத் திட்டம் முழுமையாக நிறைவுபெறும் என நம்புகிறோம்,' என்றார்.

சூயஸ் திட்டம்
படக்குறிப்பு, என். கார்த்திக், முன்னாள் எம்எல்ஏ

இது தொடர்பாக திமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ந.கார்த்திக் பிபிசி தமிழிடம் பேசினார். அப்போது, `2018-ம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இல்லாத நேரத்தில் அதிமுக அரசு இவ்வளவு பெரிய திட்டத்தை சூயஸ் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. அதனால் தான் இந்தத் திட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வந்தோம். திட்டம் தொடங்கி தற்போது நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. இந்த நேரத்தில் இதில் கைவைப்பது குழப்பங்களைத் தான் ஏற்படுத்தும். அவசர கதியில் எந்த முடிவையும் எடுத்துவிட முடியாது," என்றார்.

"உள்ளாட்சித் தேர்தல் முடிந்து மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்ற பிறகு முறையாக விவாதித்து, சட்ட ரீதியான விவகாரங்களை ஆராய்ந்து இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும். மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் இதைப்பற்றி எந்த முடிவும் எடுக்க முடியாது. இந்தத் திட்டம் தொடர்பாக தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம், அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்பது பற்றி உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நிச்சயம் தீர்மானிக்கப்படும்` என்கிறார் கார்த்திக்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: