பட்ஜெட் 2022: நாடு எதிர்நோக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வளிக்கிறதா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
2022-23ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமையன்று தாக்கல்செய்யப்பட்டது.
இந்த நிதியாண்டியில் இந்தியப் பொருளாதாரத்தித்தின் மதிப்பு 39,44,909 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறையைப் பொறுத்தவரை 16,61,196 கோடி ரூபாயாக இருக்குமென கூறப்பட்டுள்ளது. வருவாய்ப் பற்றாக்குறையைப் பொறுத்தவரை, 9,90,241 கோடி ரூபாயாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது 9.2 சதவீதமாக இருக்குமெனக் கணிக்கப்பட்டிருக்கிறது. புதிதாக 60 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுமென்றும் கூறப்பட்டிருக்கிறது.
இந்த நிதிநிலை அறிக்கையில் பல சமூக நலத் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கான ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டின் திருத்தப்பட்ட பட்ஜெட்டில் 98 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த நிதியாண்டில் இந்தத் திட்டத்திற்கு 73 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு திருத்தப்பட்ட பட்ஜெட்டில் ரூ. 15,989 கோடி ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் இந்தத் திட்டத்திற்கு ரூ 15,500 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஏழைகளின் வீட்டிற்கு இலவச எரிவாயு இணைப்பு தருவதற்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டில் ரூ. 1,618 கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 800 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உரத்திற்கான மானியம் ரூ. 1,40,000 கோடியிலிருந்து ரூ. 1,05,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. உணவு மானியம் ரூ. 2,86,219லிருந்து ரூ. 2,06,481ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும், 'ஸ்வச் பாரத்' திட்டத்திற்கான திருத்தப்பட்ட ஒதுக்கீடு கடந்த ஆண்டில் 2,000 கோடி ரூபாயாக இருந்த நிலையில், இந்த ஆண்டில் அந்த ஒதுக்கீடு 2,300 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏக்லவ்யா மாதிரி உறைவிடப் பள்ளிகளுக்கு 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் இந்த பட்ஜெட்டைக் கடுமையாகச் சாடியிருக்கிறார். "பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியாவில் 84 சதவீதக் குடும்பங்கள் வருவாய் இழப்பைச் சந்தித்திருக்கின்றன. 2019-20ல் தனிநபர் வருவாய் 1,08,645ஆக இருந்தது, 2021 -22ல் 1,07,801ஆக குறைந்திருக்கிறது. தனி நபர் செலவு சுமார் வருடத்திற்கு 62 ஆயிரம் ரூபாயிலிருந்து சுமார் 59 ஆயிரம் ரூபாயாகக் குறைந்திருக்கிறது.
சுமார் 4.6 கோடிப் பேர் அதீதமான வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். வேலைவாய்ப்பின்மை நகர்ப்புறங்களில் 8.2 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. ஆனால், மேலே சொன்ன பிரச்னைகளுக்கு இன்று தாக்கல்செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இதற்கான எந்தத் தீர்வும் இல்லை" என அவர் விடுத்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
மூத்த பத்திரிகையாளரான ஏ.எஸ். பன்னீர்செல்வனும் இதே கருத்தை எதிரொலிக்கிறார். "கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நிதிநிலை அறிக்கை அதைச் சரிசெய்யும் வகையில் இருக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படியேதும் இல்லை. மக்களின் பெரும் பகுதிக்கு வேலை வாய்ப்பைத் தரக்கூடிய அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை. ஜிஎஸ்டி வசூல் அதிகரித்திருக்கிறது என்கிறார்கள். அதே நேரம், ஜிஎஸ்டி அமலாக்கத்தால் ஏற்பட்ட இழப்பைச் சரிசெய்ய மாநிலங்களுக்கு அளிக்கப்படும் இழப்பீட்டை கூடுதலான ஆண்டுகளுக்கு வழங்க வேண்டுமென மாநிலங்கள் கோரிவருகின்றன. அது குறித்து எந்த பதிலும் இல்லை.
மேலும், விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச விலையை மத்திய அரசு நிர்ணயிப்பதாகச் சொல்கிறது. இது மாநிலங்களின் உரிமையில் தலையிடும் விவகாரம். ஏற்கனவே கொண்டுவந்த விவசாய சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற்றிருக்கும் நிலையில், மீண்டும் விவசாயம் தொடர்பான இந்த அறிவிப்பு, மத்திய - மாநில உறவுகளில் புதிய சிக்கலுக்கான துவக்கப்புள்ளியை விதைப்பதாக இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
மேலும் மத்திய தர வா்க்கம் எதிர்பார்த்த வருமான வரி வரம்பை அதிகரிப்பது, சரியான வகையில் சீரமைப்பது போன்றவை குறித்து பட்ஜெட்டில் ஏதுமே இல்லை. அதே நேரம் மறைமுக வரி ஏறிக்கொண்டே போகிறது. இது நடுத்தர வா்க்கத்தையும் ஏழைகளையும் கடுமையாகப் பாதிக்கிறது" என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.
இந்த பட்ஜெட்டில் க்ரிப்டோகரென்சி தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு பலரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்திருக்கிறது. "க்ரிப்டோகரென்சி வருவாயில் 30 சதவீதம் வரி விதிப்பதையும் டிடிஎஸ் பிடித்தம் செய்வதையும் வரவேற்கிறேன். இது சரியான அறிவிப்பு," என்கிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் பொருளாதார நிபுணருமான ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.
ஆனால், இந்த அறிவிப்பு கூடுதலான சிக்கல்களை உருவாக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறார் பன்னீர்செல்வன். "க்ரிப்டோகரென்சியைப் பொறுத்தவரை, இந்த பட்ஜெட்டில் அதற்கான வரிவிகிதம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதனைக் கட்டுப்படுத்தும், நெறிமுறைகளை விதிக்கும் அமைப்பு குறித்து அறிவிக்கப்படவில்லை. ஆகவே, தேர்தல் பாண்டுகளைவிட கூடுதலான சிக்கல்களை இந்தச் சூழல் உருவாக்கிவிடக்கூடும்" என எச்சரிக்கை விடுக்கிறார் அவர்.
இந்த பட்ஜெட்டில் கவனிக்க வேண்டிய வேறு சில எச்சரிக்கைக் குறியீடுகளையும் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அதாவது, இந்தியப் பொருளாதாரம் 9 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சியடைந்ததாகச் சொன்னாலும், கோவிட்டிற்கு முந்தைய நிலையையே இன்னும் எட்டவில்லை. கோவிட்டிற்கு முன்பு பொருளாதாரத்தின் மதிப்பு 71 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில் இப்போதைய மதிப்பு 68 லட்சம் கோடி ரூபாயாகத்தான் இருக்கிறது.
மேலும் நுகர்வு என்பது குறைந்திருப்பதும் பொருளாதாரத்திற்கு நல்ல அறிகுறியில்லை. இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் நுகர்வின் பங்கு என்பது 60 - 61 சதவீதத்திலிருந்து 58 சதவீதமாகக் குறைந்துள்ளது. மேலும் ஒட்டுமொத்த தனியார் முதலீடு 37 சதவீதத்தில் இருந்து 29 சதவீதமாக குறைந்துள்ளது.
மேலும், கடுமையான வேலை இழப்புகள் ஏற்பட்டிருப்பதும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகாமல் இருப்பதும் நல்ல செய்தி இல்லை.
மேலும் இந்த நிதியாண்டில் பற்றாக்குறை 15.91 லட்சம் கோடி ரூபாயாக இருக்கப்போகிறது. அந்தத் தொகை கடன்வாங்கப்படும் பட்சத்தில் அதில் 8.14 லட்சம் கோடி ரூபாய் வட்டிக்காக மட்டுமே செலவிடப்படும்.
இதைத் தவிர, இந்தப் பட்ஜெட்டில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு, அடுத்த மூன்றாண்டுகளுக்கு என அறிவிப்புகள் வெளியிடப்படுவதும் சரியல்ல என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். "பட்ஜெட் என்பது லட்சியப் பிரகடனமல்ல (Vision Document). அது அந்தந்த வருட வரவு - செலவுக் கணக்கை தாக்கல் செய்யும் அறிக்கை. இதில் அடுத்த ஐந்தாண்டுகளில் 100 ரயில் விடுவேன், அடுத்த மூன்றாண்டுகளில் இதைச் செய்வேன் என்று சொல்வதெல்லாம் சரியல்ல" என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.
இருந்தபோதும் முதலீட்டுச் செலவுகள் ரூ. 6,02,711 கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு ரூ. 7,50,000 கோடியாக அதிகரிக்கப்பட்டிருப்பது, மாநிலங்களுக்கு வட்டியில்லாமல் கடன் அளிப்பதற்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பது ஆகியவை இந்த பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க அம்சங்கள் என்பதையும் பலர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
பிற செய்திகள்:
- கோவை சூயஸ் திட்டம்: தேர்தல் நேரத்தில் சூடுபிடிக்கும் எதிர்ப்புப் போராட்டம்; திமுக நிலை என்ன?
- இந்திய பட்ஜெட் -2022 தேர்தல் பட்ஜெட்டாக இருக்குமா? யாருடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும்?
- இந்தியாவில் கடந்த ஆண்டு ரூ.3.4 லட்சம் கோடிக்கு தங்கம் வாங்கிய மக்கள்: 81 சதவீதம் அதிகரிப்பு
- யேமன் உள்நாட்டுப் போர்: பல நூறு குழந்தை போராளிகள் மரணம்
- நரேந்திர மோதிக்கு தமிழ் கட்சிகள் எழுதிய கடிதத்தால் இலங்கையில் அரசியல் சர்ச்சை
- ஆஸ்திரேலிய ஓபன்: ரஃபேல் நடால் 21 கிராண்ட்ஸ்லாம் வென்று உலக சாதனை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












