பட்ஜெட் 2022: ஐடி உச்சவரம்பு அறிவிப்பு இல்லாதது பாதிப்பா? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

பட்ஜெட் 2022

பட மூலாதாரம், Getty Images

இந்திய நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில், வருமான வரி உச்சவரம்பு தொடர்பான அறிவிப்பு இடம்பெறாதது சம்பளம் வாங்குவோர் மத்தியில் பரவலான ஏமாற்றத்தை தந்திருக்கிறது. ஆனால், வரித்துறை சார்ந்த விவகாரங்களை கவனிக்கும் நிபுணர்கள் இதை வேறு விதமாக பார்க்கிறார்கள்.

2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் நடைமுறைக்கு பிறகு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படாதது குறித்து பேசினார்.

அப்போது அவர், "பெருந்தொற்று காலத்தில் அரசாங்கத்தின் மிகப்பெரிய செலவின திட்டத்திற்கு கூடுதல் நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் வரி உயர்த்தப்படவில்லை," என்று கூறினார்.

நடுத்தர வர்க்கத்தின் வருமான வரி சுமையை குறைக்கும் எதிர்பார்ப்புகளை அரசு பொய்யாக்கியுள்ளதாக பரவலாக பேசப்படுகிறதே என கேட்டபோது, "வரியை உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தால், நான் அதைச் செய்யவில்லை," என்று அவர் பதிலளித்தார். "நான் அதை (வருமான வரி விகிதங்களை உயர்த்த) கடந்த ஆண்டு (மற்றும்) செய்யவில்லை, இந்த ஆண்டும் செய்யவில்லை," என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். வரிச்சுமையை திணித்து நான் ஒரு ரூபாய் கூட கூடுதலாக வசூலிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து டெல்லியில் பல்வேறு தனியார் நிறுவனங்களின் கணக்குகளை கவனித்து வரும் பட்டய கணக்காளர் பி.கே. நாராயணன் பிபிசி தமிழிடம் கூறுகையில், நேரடியாக சொல்வதென்றால், குழந்தைக்கு சாக்லேட் வாங்கித் தரவில்லை என்றால் அதற்கு ஏமாற்றமாகவே இருக்கும். ஆனால், இந்த பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி செலுத்துவோரின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனதை ஏமாற்றம் என மேலோட்டமாக பார்க்கக் கூடாது என்கிறார்.

இது குறித்த காரணத்தை விளக்கிய அவர், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படாமல் அதே நிலையில் இருக்கிறது. இந்த நடவடிக்கையை மிக ஆழமாகப் பார்க்க வேண்டும். ஒருமுறை உச்சவரம்பு அளவை அதிகரித்தால் அதை பிற்காலத்தில் குறைக்க அரசுக்கு வாய்ப்பில்லாமல் போய் விடும் என்கிறார் அவர்.

முந்தைய ஆண்டில் இருந்த நடைமுறை என்ன?

பட்ஜெட் 2022

பட மூலாதாரம், Getty Images

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பின்படி, வரும் நிதியாண்டில் எந்த மாற்றமும் இல்லாததால் நடப்பு நிதியாண்டில் செலுத்தும் அதே வரியைத்தான் அந்த நபர் கணக்கிட்டு தாக்கல் செய்ய வேண்டும்.

மத்தியில் ஆளும் நரேந்திர மோதி அரசு 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி வருமான வரி செலுத்துவோருக்கு இரு தேர்வுகளை வழங்கியிருந்தது. அதன்படி தனி நபர் அல்லது சம்பளம் பெறும் வரி செலுத்துபவர் பழைய வரி முறையைத் தொடர வருமான வரி சட்டத்தின் பிரிவுகள் 80C, 80D போன்றவற்றின் கீழ் HRA, LTA, மருத்துவ பாலிசி போன்றவற்றுக்கான விவரத்தை தாக்கல் செய்து குறிப்பிட்ட தொகைக்கு விலக்கு கோரலாம்.

இந்த வாய்ப்பை விரும்பாதவர்கள் புதிய வரி முறையை தேர்வு செய்ய விருப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வரி விலக்கு மற்றும் வரி சலுகையை பெறும் வாய்ப்பு அந்த தனி நபருக்கு வழங்கப்படும். இந்த இரண்டு வரி முறைகளின் கீழும், வருமான வரிச் சட்டம், 1961இன் பிரிவு 87A இன் கீழ் ஒரு தனிநபர் அல்லது வரி செலுத்துபவருக்கு ரூ.12,500 வரையிலான வரிச் சலுகை கிடைக்கும். இதன் மூலம் ரூ. 5 லட்சம் வரை நிகர வரிக்குட்பட்ட வருமானம் உள்ள தனிநபர்கள் எந்த வரியையும் செலுத்த வேண்டியதில்லை.

அதே சமயம், பழைய வரி விதிப்பின் கீழ், தனிப்பட்ட வரி செலுத்துவோருக்கு அடிப்படை வரி விலக்கு வரம்பு என்பது அவர்களின் வயது மற்றும் குடியுரிமை நிலையைப் பொறுத்து அமையும். இருப்பினும், புதிய வரி விதிப்பின் கீழ், ஒரு நிதியாண்டில் ஒருவருக்கு அடிப்படை வரி விலக்கு வரம்பு ரூ.2.5 லட்சம் ஆக இருக்கும்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் வேலை வாய்ப்பு இழப்பு, சம்பளக் குறைப்பு, மருத்துவ செலவினம் போன்ற பிரச்னைகளை எதிர்கொண்ட பலர், இந்த பட்ஜெட்டில் சில சலுகைகள் தங்களுக்கு வழங்கப்படும் என காத்திருந்தனர். ஆனால், நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில் எதுவும் குறிப்பிடாமல் விட்டது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்திருப்பதாக கருதுகின்றனர்.

இதுபோன்றவர்களுக்கு சில சலுகையை அரசு அறிவித்திருக்கிலாம் என்கிறார் பட்டய கணக்காளர் நாராயணன்.

வருமான வரி பட்ஜெட் 2022

பட மூலாதாரம், Getty Images

"வேண்டுமானால் அரசு நடுநிலையாக ஒரு வாய்ப்பை பயன்படுத்தியிருக்கலாம். பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட காலத்தில் வருமான வரி செலுத்துவதால் பாதிக்கப்படுவோரின் நலன் கருதி, ஒரு முறை வாய்ப்பாக இந்த நிதியாண்டில் மட்டும் சில சலுகையை அரசு அறிவித்திருக்கலாம். இது வருமான வரி சட்டப்பிரிவு 80சியுடன் எந்த தொடர்பும் இல்லாத வகையில் பொதுவாக அறிவித்திருக்கலாம். குறிப்பாக ஒரு முறை வாய்ப்பாக இதை அறிவித்திருக்கலாம்," என்கிறார் நாராயணன்.

ரூபாய் 5 லட்சம் முதல் ரூபாய் 10 லட்சம் வரை வருமானம் உள்ள ஒரு வரி செலுத்துவோருக்கு என அதை வகைப்படுத்தியிருக்கலாம். ரூபாய் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வருமானம் உள்ளவர்கள் எப்போதும் போல வருமான வரி செலுத்தும் நடைமுறையை தொடரலாம் என அரசு கூறியிருக்கலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்றுக்கு முன்புவரை வருமான வரி சட்டப்பிரிவு 80சி போன்ற சில பிரிவுகளின் வாய்ப்பை வருமான வரி குறைக்க பயன்படும் பிரிவாக மட்டுமே மக்கள் பார்த்தனர். அந்த பார்வை, கொரோனா காலத்தில் மாறியிருக்கிறது. மக்கள் பலரும் தேவையான பாலிசிகள் உள்ளிட்ட வாய்ப்புகளில் திறமையாக முதலீடுகளை செய்துள்ளனர். இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் மற்றும் பிற தனியார் பாலிசி நிறுவனங்களின் பாலிசி சந்தாதாரர் எண்ணிக்கையைப் பார்த்தால் அவை கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகமாகியிருப்பதை அறியலாம் என்று குறிப்பிடுகிறார் நாராயணன்.

பட்ஜெட் உரையில், வருமான வரி விதிப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றாலும், மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் வரி விலக்கு வரம்பை 10% இல் இருந்து 14% ஆக உயர்த்தும் யோசனையை அவர் முன்மொழிந்தார். இந்த நடவடிக்கை, மாநில அரசு ஊழியர்களின் சமூகப் பாதுகாப்புப் பலன்களை மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக கொண்டு வர உதவும் என்று கூறியிருந்தது.

"அரசு வருமான வரி செலுத்துவோரின் நிலையை கணக்கில் கொண்டுதான் இரு ஆண்டுகளுக்கு முன்பே வரி செலுத்துவதற்காக இரு தேர்வுகளை வழங்கியிருந்தது. அது தற்செயலாக நடந்த நடவடிக்கை. ஆனால், கொரோனா காலத்தில் அது பலருக்கும் பயன் கொடுத்துள்ளது. எதிர்காலத்தில் பழைய முறையில் இருந்து புதிய முறைக்கு வரி செலுத்துவோரை நகர்த்தும் வாய்ப்புகளை அரசு ஊக்கவிக்கலாம். அதனால்தான் அரசே அதை பழைய முறை, புதிய முறை என வகைப்படுத்தியிருக்கிறது. இந்த கொரோனா காலத்தில் வரி செலுத்துவோரின் நுகர்வு குறைந்துள்ளது. அதை அதிகப்படுத்தவே அவர்கள் மூலம் கிடைக்கும் வரி வருவாய்க்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்திருக்கலாம். இம்முறை உள்கட்டமைப்பு திட்டங்களில் அரசு தனி கவனம் செலுத்தியிருப்பதாக பார்க்கிறேன்," என்கிறார் நாராயணன்.

க்ரிப்டோ கரன்சி முதலீடு சட்டபூர்வமாகுமா?

பட்ஜெட் 2022

பட மூலாதாரம், Getty Images

பட்ஜெட் உரையின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், க்ரிப்டோ வடிவிலான டிஜிட்டல் சொத்துகளை மாற்றும் வருமானத்திற்கு 30% வரி விதிக்கப்படும் என்று கூறினார். நஷ்டம் ஏற்பட்டாலும் அதற்கு ஈடு கோர முடியாது என்றும் அவர் கூறினார். டிஜிட்டல் சொத்துக்களை பரிசாக பெறும் நபருக்கு வரி விதிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

க்ரிப்டோ தொழில்துறை மற்றும் நிபுணர்கள் டிஜிட்டல் சொத்துக்கள் வருமானத்திற்கான 30% வரி அறிவிப்பை வரவேற்றனர்.

ஆனால், இந்த வரி விதிப்பை வைத்து க்ரிப்டோ முதலீடுக்கு அரசு சட்டபூர்வ அனுமதி வழங்கியதாக கருதக் கூடாது என்று நாராயணன் தெரிவித்தார்.

"சில ஆண்டுகளுக்கு முன்புவரை க்ரிப்டோ கரன்சி என்பது பலருக்கு புரியாமல் இருந்தது. பிறகு பலரல் அதில் முதலீடு செய்தனர். அதற்கு வரி விதிக்கப்படும் என அரசு இப்போது அறிவித்திருக்கிறது. இதன் மூலம் க்ரிப்டோகரன்சி சட்டபூர்வமானதா என கருதிக்கொள்ள முடியாது. வரி விதிப்புக்கும் சட்டபூர்வமாக்குவதற்கும் தொடர்பு இல்லை. வருமான வரி சட்டப்படி அனுமதியில்லாத செயல்பாட்டுக்கும் வரி விதிக்க வகை செய்கிறது. தற்போதைக்கு க்ரிப்டோ கரன்சியை டிஜிட்டல், மெய்நிகர் வருவாயாக அரசு ஏற்றிருக்கிறதே ஒழிய அதை சட்டபூர்வ அங்கீகரிக்கவில்லை," என்று விளக்கினார் நாராயணன்.

இந்திய வருவாய் பணியில் கூடுதல் ஆணையராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவரான சரவணகுமார், வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படாமல் தவிர்க்கப்பட்டது மிகவும் கவனமாக எடுக்கப்பட்ட அரசின் நடவடிக்கை என்கிறார்.

"தனி நபருக்கு அடிப்படை வரி உச்ச வரம்பு 2.5 லட்சம் என்பது இந்த வருடமும் உயர்த்தப்படவில்லை. ரூ. 5 லட்சத்துக்கு மேல் வருமானம் இருப்பவர்களுக்கும் வரி உயர்த்தப்படவில்லை. தனி நபர் வருமான வரி செலுத்துவதால் மட்டும் அரசுக்கு வருவாய் உயரும் என்ற கருத்தை மத்திய அரசு கொள்வதில்லை. மற்றபடி பெருந்தொற்றால் ஒரு வளர்ச்சியை கொண்ட வர வேண்டும் என்பதால்தான் அரசு பல்வேறு திட்டங்களுக்கும் நிதியை அறிவித்திருக்கிறது. பெருந்தொற்றில் தனி நபர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதாலேயே அவர்களுக்கான வரி உச்சவரம்பை மேலும் உயர்த்தாமல் அரசு தவிர்ப்பதாக கருதுகிறேன்," என்று சரவணகுமார் தெரிவித்தார்.

காணொளிக் குறிப்பு, வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெற எந்த பிரிவுகள் உதவும் - பயனுள்ள தகவல்கள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: