பட்ஜெட் 2022: நிர்மலா சீதாராமன் அறிவித்த டிஜிட்டல் ரூபாய் இந்தியாவில் சாத்தியமா?

நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய நாடாளுமன்றத்தில் பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

கிரிப்டோகரன்சி எனப்படும் டிஜிட்டல் பணம் மூலம் பரிவர்த்தனை, முதலீடுகள் ஆகியவை மிகப்பெரும் டிஜிட்டல் பொருளாதாரமாக உருவெடுத்துள்ள சூழலில், இந்தியாவுக்கென தனியாக டிஜிட்டல் ரூபாயை ரிசர்வ் வங்கியே இந்த ஆண்டு முதல் வெளியிடும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் அறிவித்திருக்கிறார்.

அவர் தனது பட்ஜெட் உரையில் டிஜிட்டல் ரூபாய் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுப் பேசியபோது, "சிபிடிசி (CBDC) எனப்படும், மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும். இது டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய உந்துசக்தியாக அமையும். டிஜிட்டல் ரூபாய் திறமையான மற்றும் மலிவான நாணய மேலாண்மைக்கு வழிவகுக்கும்.

எனவே, பிளாக்செயின் உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ரிசர்வ் வங்கி 2022ஆம் ஆண்டில் டிஜிட்டல் ரூபாயை வெளியிடும்" என கூறியிருக்கிறார். இதன் மூலம் இணைய பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெய்நிகர் உலகில் நிர்வகிக்கப்படும் டிஜிட்டல் சொத்துக்களை மாற்றுவதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30 சதவீத வரி விதிக்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். டிஜிட்டல் சொத்துக்களை பரிசாக வழங்குவதற்கும் வரி விதிக்கப்படும் என்று கூறிய அவர், டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு 1% வரி பிடித்தம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கிரிப்டோகரன்சி - டிஜிட்டல் ரூபாய்: என்ன வித்தியாசம்?

கிரிப்டோகரன்சி அரசால் ஒழுங்குபடுத்தப்படாத டிஜிட்டல் பணமாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு கிரிப்டோகரன்சிக்கும் ஒரு தன்மை உள்ளது. அதன் மதிப்பு வேகமாக மாறக்கூடியதாக உள்ளது. தசம எண்களில் கிரிப்டோகரன்சி மதிப்பிடப்படுகிறது. அதன் மதிப்பு உயர உயர ஒரு கிரிப்டோகரன்சியில் 4-5 தசம எண்கள் கூட வரும்.

ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 'டிஜிட்டல் ரூபாய்'க்கு, இந்திய ரூபாயின் மதிப்பே இருக்கும் என கருதப்படுகிறது.

கிரிப்டோகரன்சியில் இந்தியர்களின் நிலை

பிட்காயின் நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், Reuters

எத்தனை இந்தியர்கள் கிரிப்டோகரன்சியை வைத்திருக்கிறார்கள் அல்லது எத்தனை பேர் அதில் வர்த்தகம் செய்கிறார்கள் என்பதற்கான அதிகாரபூர்வ புள்ளிவிவரம் எதுவும் இல்லை,

ஆனால் கோடிக்கணக்கான மக்கள் டிஜிட்டல் கரன்சியில் முதலீடு செய்வதாகவும், தொற்றுநோய் காலகட்டத்தில் இது அதிகரித்துள்ளதாகவும் பல ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பல தொழில் நிறுவனங்கள் சர்வதேச பரிவர்த்தனைகள் செய்வதற்கு கிரிப்டோகரன்சிகளை பயன்படுத்துகின்றன.

டிஜிட்டல் பணம் வைத்துள்ள மற்ற நாடுகள் எவை?

பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடான சீனா, ஆர்.எம்.பி என அழைக்கப்படும் டிஜிட்டல் பணத்தை வெளியிட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் 25 அன்று சிபிடிசி-ஐ அறிமுகப்படுத்திய முதல் ஆப்ரிக்க நாடு நைஜீரியா ஆகும். அந்த நாடு, 'இ-நைரா' எனப்படும் டிஜிட்டல் பணத்தை அறிமுகப்படுத்தியது. 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதியன்று, ஃபாண்டம் அறக்கட்டளையுடன் டிஜிட்டல் பணத்தை உருவாக்குவதாக தஜிகிஸ்தான் அறிவித்தது. பஹாமாஸ் நாட்டிலும் டிஜிட்டல் பணம் நடைமுறையில் உள்ளது. முன்னணி உலக நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தில் இதுவரை டிஜிட்டல் பணம் அறிமுகப்படுத்தப்படவில்லை.

டிஜிட்டல் பணம் - ஏன்?

பணப் பரிமாற்றத்தை எளிதாகவும், மலிவாகவும் மேற்கொள்ளவே கொண்டு வரப்படுவதாக அரசு கூறுகிறது. பிட்காயின் உள்ளிட்ட தனியார் கிரிப்டோகரன்சிகள் மூலம் பண மோசடி, பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல், வரி ஏய்ப்பு போன்றவை நடைபெறாமல் தடுப்பதற்கும் இந்திய அரசு இந்த முயற்சியை எடுத்து வருகிறது.

முன்னதாக, கிரிப்டோகரன்சி முதலீடு தொடர்பாக வரன்முறையை ஏற்படுத்த கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரபூர்வ டிஜிட்டல் நாணய கட்டுப்பாடு மசோதா தாக்கல் செய்யப்படும் என்று இந்திய அரசு அறிவித்திருந்தது.

டிஜிட்டல் கரன்சி

பட மூலாதாரம், Getty Images

டிஜிட்டல் ரூபாய் குறித்த அரசின் அறிவிப்பு குறித்து 'பஸ்தூரா' என்ற FINTECH நிறுவனத்தின் நிறுவனரும் நிதி ஆலோசகருமான கார்த்திகேயனிடம் பிபிசி தமிழ் பேசியது.

"பொருளாதார ரீதியாக டிஜிட்டல் ரூபாய் என்பது எவ்வித மாற்றத்தையும் கொண்டு வராது. செளதி அரேபியாவில் இவ்வாறு டிஜிட்டல் பணம் கொண்டு வந்தனர். அந்த சமயத்தில் அதன் மதிப்பு உயர்ந்ததே தவிர, பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

இதற்கான தேவை இன்றைக்கு இருக்கிறதா என்று கேட்டால், இந்திய பணத்துக்கு அந்த தேவை இல்லை. யார் இதை பயன்படுத்தப் போகிறார்கள்? ஏற்கெனவே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடைமுறையில் வெற்றிகரமாக செயல்படுகிறது," என்று கார்த்திகேயன் கூறினார்.

"அமெரிக்காவில் கிரிப்டோகரன்சியை வைத்து ஒரு பொருளை வாங்க முடியும். இந்த நடைமுறை அங்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. மாறாக, டிஜிட்டல் பணத்தை வாங்கவோ விற்கவோ அனுமதிக்க மாட்டோம், முதலீடாக மட்டும்தான் அனுமதிப்போம் என அரசு ஏற்கெனவே கூறியிருக்கிறது. இந்திய பணத்துக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு எனும் வகையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். ஆனால், இன்றைக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை.

ஒவ்வொரு கிரிப்டோகரன்சிக்கும் ஒரு தன்மை உள்ளது. உதாரணமாக, பிட்காயினை பொறுத்தவரை 10 மில்லியன் தான் வைத்திருக்க முடியும் என்ற வரையறை உள்ளது. சில கிரிப்டோகரன்சிகளில் அதன் மதிப்பு கூடுதலாகும். கிரிப்டோகரன்சி ஒன்றை புதிதாக அறிமுகப்படுத்தும்போது அதன் தன்மையை விளக்க வேண்டும். ஆனால், அரசு விளக்கவில்லை.

இதனை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறார்கள்? இதற்கு பெரிய குழு தேவைப்படும். கிரிப்டோகரன்சியில் மிக முக்கியமானதே டேட்டா மைனிங் தான். அதைப் பொறுத்துதான் அதன் மதிப்பு உயரும்," என்றார்.

டிஜிட்டல் ரூபாயை வைத்து வெளிநாடுகளில் பணப்பரிமாற்றம் சாத்தியமா?

டிஜிட்டல் கரன்சி

பட மூலாதாரம், Getty Images

"இந்தியா கொண்டு வரும் டிஜிட்டல் பணத்தை மற்ற நாடுகள் ஏற்றுக்கொண்டால்தான், அது வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். அவ்வாறு ஏற்றுக்கொள்ளும் வகையில், அதன் மதிப்பை உயர்த்துவதும், சந்தைப்படுத்துவதும் அவசியமானது. அமெரிக்கா எப்படி டாலர் மதிப்பை உலகளவில் கொண்டு சென்றதோ, அதைப்போன்று செய்ய வேண்டும். அதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்?" என்று கேள்வி எழுப்புகிறார் கார்த்திகேயன்.

டிஜிட்டல் பணத்தின் மதிப்பை, ரூபாய் மதிப்பை விட அதிகப்படுத்தி வைத்தால்தான், அதன் சந்தை மதிப்பை உயர்த்த முடியும் என்கிறார் அவர்.

டிஜிட்டல் பணத்தில் சாமானிய இந்தியர்கள் என்ன செய்வார்கள்?

"ஒரு காலத்தில் பண்ட மாற்று முறை இருந்தது. இந்தியாவில் பணப்புழக்கம் வந்த பின்னரும் கூட பண்ட மாற்று முறை என்பது நிலவி வந்தது. பணம் எளிய மக்களுக்கு சென்று சேருவதற்கு நூற்றாண்டுகள் ஆனது. இன்றைக்கு டிஜிட்டல் பணத்தை அறிமுகப்படுத்தினார்கள் என்றால், அதுவும் சாமானியர்களுக்கு சென்று சேருவதற்கு பல ஆண்டுகள் ஆகும். கல்வி, தொழில்நுட்பம் பற்றாக்குறை நிலவும் நாட்டில் எப்படி டிஜிட்டல் பணம் சாமானியர்களுக்கு சென்று சேரும்?

பெரும்பாலும் ஹேக்கர்கள், சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் கிரிப்டோகரன்சிகள் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இவர்கள் முதலில் பயன்படுத்தினார்கள். ஆனால், இப்போது பலரும் பயன்படுத்துகின்றனர். இது தவிர்க்க முடியாததுதான். ஆனால், அரசு அதனை கையாளும் விதம் தெளிவாக இருக்க வேண்டும். கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தை முறைப்படுத்துவதே முதன்மையானது" என்கிறார் கார்த்திகேயன்.

காணொளிக் குறிப்பு, கிரிப்டோ கரன்சிகளை தடை செய்யும் இந்தியா: இனி இதில் முதலீடு செய்ய முடியுமா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: