நீட்: ராகுல், டி.ஆர். பாலு எழுப்பிய 'ஒன்றிய' பிரச்னை - "தமிழர்களை ஒருபோதும் ஆள முடியாது"

நீட் தமிழ்நாடு

பட மூலாதாரம், SANSAD TV

தமிழ்நாட்டில் கூட்டாட்சியை மதிக்காமல் மன்னர் போல மோதி அரசு செயல்படுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். நீட் விவகாரத்தில் திரும்பத்திரும்ப வந்தும் தமிழ்நாட்டின் குரலை கேட்காமல் மத்திய அரசு அவமதிப்பதாக நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர். பாலு புகார் தெரிவித்தார்.

மக்களவையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது ராகுல் காந்தி, டி.ஆர். பாலு இன்று இரவு பேசினார்கள்.

அப்போது ராகுல் காந்தி, தமிழ்நாட்டில் நீட் விவகாரம் குறித்தும் தமிழர்களின் வரலாறு குறித்து அறியாமல் மத்திய அரசு நடந்து கொள்வதாகக் கூறினார். அந்த உரையின் முழு விவரம் இதோ.

"அரசியலமைப்பை நீங்கள் படித்தீர்களானால், இந்தியா என்பது யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ் என்றே அழைக்கப்பட்டிருக்கும், அப்படியென்றால் என்ன? தமிழ்நாட்டில் உள்ள எனது சகோதரர்களுக்கு இருக்கும் அதே உரிமை, மகராஷ்டிராவில் இருக்கும் எனது சகோதரிக்கும் உத்தர பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களில் உள்ள எனது சகோதரனுக்கும், மணிப்பூர், நாகாலாந்து, மிசோரம், ஜம்மு காஷ்மீர், அந்தமான் ஆகியவற்றில் உள்ள எனது சகோதரிக்கும் இருக்கும் அதே உரிமை எல்லோருக்கும் இருக்க வேண்டும்."

"இது மிகவும் தீவிரமான விஷயம். இந்த தீவிரமான விஷயத்துக்கு பதிலை எதிர்பார்க்கிறேன். நாட்டில் இரு வித பார்வை உள்ளது. ஒன்று யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ் தொடர்புடையது. அப்படியென்றால் மத்திய அரசும் மாநில அரசும் பேச்சு நடத்துவது, உரையாடுவது என்பதாகும்."

"அப்படியென்றால் தமிழ்நாட்டில் உள்ள எனது சகோதரனிடம் சென்று, உங்களுக்கு என்ன வேண்டும் என நான் கேட்க, அவர் பதிலுக்கு உங்களுக்கு என்ன வேண்டும் என கேட்பார். இதற்கு பெயர் கூட்டு. இது ஒன்றும் ராஜ்ஜியம் கிடையாது. இதை நினைவில் கொள்ளுங்கள். வாழ்க்கையில் எப்போதும், ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் மீது உங்களுடைய ஆளுகையை செலுத்த முடியாது. நீங்கள் எந்தவொரு கற்பனையில் இருந்தாலும் உங்களால் இந்திய மக்கள் மீது எப்போதும் ஒருபோதும் ஆளுகையை செலுத்த முடியாது."

"கடந்த மூன்றாயிரம் ஆண்டுகளில் அப்படி நடந்ததே இல்லை. இந்தியாவை ஆண்ட அசோகர் ஆகட்டும், மெளரியா ஆகட்டும், குப்தாக்களாகட்டும் - எந்தவொரு ஆளுகை வரலாறையும் பார்த்தால் அந்த ஆளுகை உரையாடல் மற்றும் பேச்சுவார்த்தை மூலமே சாத்தியமாகியிருக்கும் என்பதை அறியலாம்," என்றார் ராகுல் காந்தி

நீட் தமிழ்நாடு

பட மூலாதாரம், SANSAD TV

"இப்போது பிரச்னையே நீங்கள் குழப்பம் அடைந்திருப்பதுதான். நீங்கள் (மத்திய அரசு) எல்லாம் மொழிகள், கலாசாரம், வரலாறு போன்றவற்றை புரியாமல் இந்த மக்களை (தமிழ்நாடு) ஒடுக்கலாம் என நினைக்கிறீர்கள். உங்களுக்கு வரலாறு பற்றிய சிந்தனையே இல்லை. நீங்கள் எதை கையாளுகிறீர்கள் என்பதே உங்களுக்குப் புரியவில்லை."

"தமிழ்நாட்டு மக்களுக்கு அவர்களின் மனங்களில் தமிழ்நாட்டுச் சிந்தனை உள்ளது. தமிழ் மொழி பற்றிய சிந்தனை உள்ளது. பிறகு அவர்களுக்கு இந்தியா பற்றிய சிந்தனையும் உள்ளது. இதில் நீங்கள் குழப்பம் அடைய வேண்டாம். கேரளா மக்களுக்கும் ஒரு கலாசாரம் உண்டு. நானும் கேரளாவில் இருந்து மக்களவைக்கு தேர்வானவன். அதனால் அதை உணர்கிறேன். அவர்களுக்கு என ஒரு அடையாளம், சிந்தனை உண்டு. ராஜஸ்தான் மக்களுக்கும் வரலாறு, அடையாளம், மொழி, வாழ்க்கை முறை உண்டு. இது ஒரு பூங்கொத்து போன்றது. இதுதான் நமது பலம்."

"தமிழ்நாடு, ராஜஸ்தான் போன்றவற்றின் மக்களிடம் இருந்தும் உங்களிடம் இருந்தும் கூட இதை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்."

"மத்திய அரசு, மாநில கூட்டாட்சியை ஆளும் நடவடிக்கையில் வேறொரு பார்வையை கொண்டிருக்கிறது. ஒரு பிரம்பை கொண்டு மாநிலத்தை ஆளலாம் என்று மத்திய அரசு நினைக்கிறது. ஆனால், ஒன்றை நீங்கள் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். ஒவ்வொரு முறை அந்த முயற்சியை செய்தபோதும், அந்த பிரம்பு உடைத்து நொறுக்கப்பட்டுள்ளது."

"தேசத்தின் மீதான உங்களுடைய தவறான பார்வையால், இரு வேறு இந்தியா உருவாக்கப்பட்டிருக்கிறது என்றுதான் நிச்சமாகக் கூற வேண்டும். ஒரு பார்வை: மாநிலங்களின் யூனியன், மொழிகளின் யூனியன், கலாசாரங்களின் யூனியன் - இந்த பன்முகப்பட்ட பூங்கொத்து போன்ற அமைப்பிடம் உலகின் எந்தவொரு சக்தியாலும் சவால் விட முடியவில்லை."

"மற்றொரு பார்வை - ஒரு மன்னரின் பார்வை. அந்த பார்வையை காங்கிரஸ் 1947இல் அகற்றியது. அந்த மன்னரின் சிந்தனையை உடைத்தெறிந்தோம். ஆனால், இப்போது அந்த பார்வை மீண்டும் வந்து விட்டது. ஷா இன் ஷா, மன்னருக்கு எல்லாம் மன்னர் என்ற பார்வை வந்து விட்டது."

"இந்த தவறான பார்வையால் என்ன நடந்தது தெரியுமா? நமது மக்களுக்கும் மாநிலங்களுக்கும் இடையே நடக்க வேண்டிய அமைப்புமுறையே, நாம் இந்த தேசத்தின் அமைப்பு முறை என்று அழைக்கும் முறையே தாக்குதலுக்கு உள்ளாகி ஒரே சிந்தனையால் ஆட்பட்டிருக்கிறது. உதாரணமாக, இன்று தமிழ்நாட்டின் சிந்தனையே இந்திய அமைப்பு முறையில் இருந்து விலக்கப்பட்டிருக்கிறது."

"அவர்கள் (தமிழ்நாடு) ஒவ்வொரு முறையும் உங்களிடம் திரும்பத்திரும்ப வந்து, வந்து நீட் வேண்டாம், நீட் வேண்டாம் என்று கோரினார்கள். நீங்களோ, "கிடையவே கிடையாது, இல்லை, இங்கிருந்து வெளியே போங்கள்" என்று கூறுகிறீர்கள். உங்களுடைய கட்டமைப்பில் அவர்களின் குரலுக்கு மதிப்பில்லை."

நீட் தமிழ்நாடு

பட மூலாதாரம், SANSAD TV

"பஞ்சாபின் விவசாயிகள் உங்களுடைய சட்டங்கள் எங்களுக்கு ஏற்புடையதில்லை என எழுந்து நின்றனர். உங்களுடைய கட்டமைப்பில் அவர்களுடைய குரலுக்கும் மதிப்பு கொடுக்கப்படவில்லை. இங்கே வெறும் மன்னருக்கு மட்டுமே குரல் உண்டு. உரிமைக்காக போராடிய விவசாயிகளை ஓராண்டுக்கும் மேலாக கொரோனா பாதிப்புக்கு மத்தியில் உயிரிழப்புகளை எதிர்கொண்டபடி வெளியே இருக்க விட்டீர்கள். ஆனால், மன்னர் அதை கண்டு கொள்ளவில்லை," என்று ராகுல் காந்தி பேசினார்.

இதைத்தொடர்ந்து பேசிய டி.ஆர். பாலு, "தற்செயலாக நாளை (பிப்ரவரி 3) அண்ணாதுரையின் நினைவு தினம் வரும் வேளையில், அவர் மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்தபோது பேசியதை இங்கே பதிவு செய்கிறேன். "நான் ஒரு திராவிட நாட்டில் இருந்து வருகிறேன். நான் ஒரு திராவிடன் என கூறிக்கொள்வதில் பெருமை கொள்கிறேன். இப்படி சொல்வதால் நான் குஜராத்திக்கோ மராட்டியருக்கோ எதிரானவன் இல்லை. திராவிடன் என்பவனுள் ஏதோவொன்று வித்தியாசமாக, தனித்துவமாக, உறுதியாக எழுப்புவதற்கு ஒன்று உண்டு," என்றார்.

நீட் தமிழ்நாடு

பட மூலாதாரம், SANSAD TV

பிறகு நீட் விவகாரத்தை குறிப்பிட்டுப் பேசிய அவர், "குடியரசு தலைவர் தனது உரையில் உள்ளூர் மொழிகள் தேசிய கல்விக் கொள்கையின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருவதாக கூறியிருந்தார். இளநிலை பட்டப்படிப்புகளுக்கு உள்ளூர் மொழிகளில் தேர்வுகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தார். நீட் என்ற போட்டித் தேர்வு நடத்தப்படுவது ஒரு கொடுமையான விஷயம். தமிழ்நாட்டில் அந்த தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் 30க்கும் அதிகமான இளம் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்," என்றார்.

"யாருக்கும் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என தெரியவில்லை. நீட் தேர்வு வினா அனைத்தும் மத்திய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பிளஸ்டூ வரை மாநில பாடத்திட்டப்படி மாணவர்கள் படிக்கிறார்கள். இரு வேறு பாடத்திட்டத்துக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அதனால் மாணவர்கள் தேர்ச்சி பெறாமல் தற்கொலை செய்கின்றனர்."

"இதையடுத்து தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. 80 ஆயிரத்துக்கும் அதிகமான பிரமாண பத்திரங்கள் பெறப்பட்டன. அந்த குழுவே தமிழக மாணவர்களுக்கு நீட் தேவை இல்லை. அது ஒழிக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்தது."

அதன்படி அனைத்து கட்சி குழுவினர் சேர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில், தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கலுக்கு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிறகு அதற்கென சட்டமும் இயற்றப்பட்டு மாநில ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

"ஆனால், கடந்த ஐந்து மாதங்களாக அந்த மசோதாவை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு மாநில ஆளுநர் அனுப்பி வைக்காமல் இருக்கிறார். தொடக்கத்தில் மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சரை மாநில ஆளுநரிடம் பேச தமிழக முதல்வர் அனுப்பினார். பிறகு முதல்வரே நேரில் சென்று மாநில ஆளுநரிடம் சென்று பேசினார். எதுவும் நடக்கவில்லை."

"பிறகு தமிழ்நாட்டின் அனைத்து கட்சி எம்.பிக்கள் குழு குடியரசு தலைவரை சந்திக்க முயற்சித்தது. அவருக்கு உடல் நலமில்லாததால் மனுவை அதிகாரி மூலம் பெற்றுக் கொண்டு அனுப்பினார். பிறகு நாங்கள் இந்திய உள்துறை அமைச்சரை சந்தித்து மனு அளித்தோம். 20 நிமிடங்கள் நாங்கள் பேசியதை கேட்டறிந்த பிறகும் இந்த விஷயத்தில் எதுவும் நடக்கவில்லை."

நீட் தமிழ்நாடு

பட மூலாதாரம், SANSAD TV

"அதனால்தான் குடியரசு தலைவர் இந்த விவகாரத்தில் தலையிட்டு அந்த மசோதாவை தமது பரிசீலனைக்கு அனுப்பி வைக்க மாநில ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்."

"எல்லா தளங்களிலும் நாங்கள் சென்று முறையிட்ட பிறகும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த விஷயத்தை நாங்கள் எப்படி சமாளிக்கப்போகிறோம் எனத் தெரியவில்லை."

"ஆளுநர் பதவி வகிப்பவருக்கு அரசியலமைப்பு பற்றி தெரிந்திருந்தும் அவர் எதுவும் செய்யாமல் இருக்கிறார். உள்துறை அமைச்சர் ஆவன செய்வதாக உறுதியளித்த பிறகும் கூட எதுவும் நடக்கவில்லை," என்று டி.ஆர். பாலு பேசினார்.

இதைத்தொடர்ந்து குடியரசு தின அணிவகுப்பு அலங்கார ஊர்தி தேர்வின்போது தமிழகம் சார்பில் முன்மொழியப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார், வ.உ.சிதம்பரம் பிள்ளை போன்றோரின் பெருமை அறியாமல் அவர்களின் பின்புலம் பற்றி தேர்வுக்குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதாக குறிப்பிட்டார் டி.ஆர். பாலு.

"மாநிலத்தில் ஒவ்வொரு முறையும் தேவை எழும்போது எங்களுடைய நலன்களைக் கோரி பிச்சை பாத்திரம் ஏந்தி இத்தனை தூரம் வருவது நல்லதாக இருக்காது. அத்தகைய சூழலை பிரதமர் நரேந்திர மோதி அனுமதிக்கக் கூடாது" என்றும் டி.ஆர். பாலு பேசினார்.

மக்களவையில் பேசி முடித்ததும் வெளியே ராகுலிடம் திடீரென தமிழ்நாடு விவகாரத்தை விரிவாகவும் ஆவேசத்துடனும் எழுப்ப என்ன காரணம் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "நானும் தமிழன்தான்" என்று பதிலளித்தார்.

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி எதிர்வினை

இந்த நிலையில், ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உரைக்கு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே. அண்ணாமலை எதிர்வினையாற்றியிருக்கிறார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இது தொடர்பாக அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், "வழக்கம் போல் ராகுல் காந்தி இன்று நாடாளுமன்றத்தில் பொங்கி எழுந்து பேசியதை பார்த்து வியந்தோம். அவரது பொருத்தமற்ற வகையில் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியால் ஒருபோதும் ஆள முடியாது என பேசியிருக்கிறார். இந்த மாபெரும் தமிழ் மண்ணின் மகனாக, விரைவில் என்ன நடக்கும் என ராகுல் காந்திக்கு நான் வழிகாட்டுகிறேன்," என கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: