நீட் தேர்வு முடிவுகள்: தமிழ்நாட்டில் திருப்பூர் மாணவர் ஸ்ரீஜன் முதலிடம்

ஸ்ரீஜன்

பட மூலாதாரம், Sreejan

படக்குறிப்பு, நீட் தேர்வில் தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்த திருப்பூரைச் சேர்ந்த ஸ்ரீஜன்

நீட் எனப்படும் மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வு முடிவுகள் அக்டோபர் 16ஆம் தேதி வெளியாகின. இதில் தேர்வுக்கு விண்ணப்பித்த 15,97,435 பேரில் 13,66,945 பேர் தேர்வு எழுதினார்கள். அதில் 7,71,500 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 56.55 சதவீதமாகும் என்று தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.

இந்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான ntaneet.nic.in என்ற பக்கத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் முதல் 50 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பட்டியலில் ஒடிஷாவை சேர்ந்த சோயிப் அஃப்தாப் 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்தார். அவருக்கு அடுத்தபடியாக டெல்லி, தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.

தமிழ்நாட்டின் திருப்பூரைச் சேர்ந்த ஆர். ஸ்ரீஜன் 8ஆவது இடம் பிடித்தார். இவர் பெற்ற மொத்த மதிப்பெண் 710. இவர் மாணவர்கள் பட்டியலின் தர வரிசையில் நான்காவது இடம் பிடித்துள்ளார்.

முதல் 20 இடங்கள் பிடித்த மாணவிகள் பட்டியலில், டெல்லியைச் சேர்ந்த அகாங்ஷா 720 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தார். இந்த வரிசையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மோகனபிரபா ரவிச்சந்திரன் 14ஆவது இடத்தைப் பிடித்தார். அவர் பெற்ற மொத்த மதிப்பெண் 705. இதேபோல, தமிழகத்தைச் சேர்ந்த ஜி. ஸ்வேதா 701 மதிப்பெண்ணுடன் 18ஆவது இடத்தைப் பிடித்தார்.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் தமிழ்நாடு, 48.57% பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 57.44 ஆக உள்ளது. இதேபோல, புதுச்சேரி கடந்த ஆண்டு 48.70% ஆக இருந்து, இந்த ஆண்டு 52.79% தேர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், மாநில ஒதுக்கீடு பெற விரும்பினால், அவர்கள் மாநில அளவில் விண்ணப்பிக்கலாம் என்றும் தனியார் கல்லூரிகளில் சேரும் மாணவர்களும், மாநில அரசு கவுன்சிலிங் மூலமே கல்லூரிகளில் சேர முடியும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

இழுபறியாக நீடித்த தேர்வு

முன்னதாக, நீட் தேர்வு தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் திங்கட்கிழமை நடந்தபோது, இந்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அளித்த விளக்கத்தை கேட்ட நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்பிரமணியன் அடங்கிய அமர்வு, "கோவிட்-19 வைரஸ் பரவல் அதிகம் காணப்படும் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் உடல் நலமில்லாத மாணவர்கள் அக்டோபர் 14ஆம் தேதி தேர்வெழுதலாம். தேர்வு முடிவுகள் அக்டோபர் 16ஆம் தேதி வெளியிடலாம்" என்று கூறியது.

நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி, மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்விக்கான நீட் தேர்வு நடத்தப்பட்டது. சுமார் 15 லட்சம் பேர் அந்த தேர்வை எழுதினார்கள். தொடக்கத்தில் மே 3ஆம் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்ட அந்த தேர்வு, கொரோனா பரவல் காரணமாக ஜூலை 26 நடத்துவதாக இருந்து பிறகு செப்டம்பர் 13ஆம் தேதிக்கும் தள்ளிவைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட தேர்வு, கொரோனா வைரஸ தடுப்பு வழிமுறைகளின்படி ஒரு தேர்வு அறையில் 12 மாணவர்கள் அமர வைக்கப்பட்டு நடத்தி முடிக்கப்பட்டது. இருப்பினும், சில இடங்களில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்ததால், தங்களால் தேர்வுக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பதாகக் கூறி, சில மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.

நீட்

பட மூலாதாரம், Getty Images

அவர்களின் கோரிக்கைக்கு ஆதரவாக சில மாநில அரசுகளில் குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இல்லாத மாநில அரசுகளும் உச்ச நீதிமன்றத்தை அணுகின.

ஆனால், தற்போதைய நிலையில் தேர்வு முடிவுகளை அறிவிக்காமல் தாமதப்படுத்தினால், அது அடுத்த கல்வியாண்டில் சேரக் கூடிய மாணவர்களை பாதிக்கும் என்று என்டிஏ வாதிட்டது. இந்த நிலையில், கொரோனா பரவலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் அல்லது உடல் நலமில்லாத மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் போனால் அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என இந்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியிருந்தார். இந்த நிலையில், அந்த மாணவர்கள், தேர்வு எழுத அக்டோபர் 14ஆம் தேதியை நிர்ணயித்த உச்ச நீதிமன்றம் தேர்வு முடிவை அக்டோபர் 16ஆம் தேதி வெளியிடலாம் என அறிவித்துள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் அக்டோபர் 16ஆம் தேதி வெளியானவுடன், அகில இந்திய ஒதுக்கீடான 15 சதவீத இடங்களுக்கான கவுன்சிலிங்குக்கு சுகாதார சேவைகள் தலைமை இயக்குநரகம் நடவடிக்கை மேற்கொள்ளும். மீதமுள்ள 85 சதவீதத்துக்கான இடங்கள், அந்தந்த மாநில அரசுகள் கடைப்பிடிக்கும் மருத்துவ கல்வி சேர்க்கை கொள்கை அடிப்படையில் நடக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: