KXIP vs RCB: கிறிஸ் கெயில் அதிரடியில் அதிர்ந்த பெங்களூரு - பஞ்சாப் பிளே ஆஃப் செல்லுமா?

BCCI / IPL

பட மூலாதாரம், கெயில்

    • எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

அது 1999-ஆம்ஆண்டின் இறுதி. இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையே கனடாவில் ஒருநாள் போட்டி தொடர் நடந்தது.

லாரா, வால்ஷ், அம்ப்ரோஸ் போன்ற ஜாம்பவான்கள் விளையாடிய மேற்கிந்திய அணியில், அந்த தொடரில் ஒரு இளம் வீரர் அறிமுகமானார்.

ஒரு ரன்னில் முதல் போட்டியில் ஆட்டமிழந்த அவர், அந்த தொடரின் மற்ற போட்டிகளிலும் பெரிதாக சாதிக்கவில்லை.

கடும் விமர்சனத்தை சந்தித்த அவர், பின்னாட்களில் 100 டெஸ்ட் போட்டிகள், 300 ஒருநாள் போட்டி என நீண்டகாலம் சர்வதேச கிரிக்கெட்டில் சாதித்த கிறிஸ் கெயில் தான். எப்போதும் அவர் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன.

சரியாக 20 ஆண்டுகள் கழித்தும், 2020 ஐபிஎல் தொடரில் முதல்முறையாக களமிறங்கிய கிறிஸ் கெயில் ஏராளமான எதிர்பார்ப்புகளையும், கேள்விகளையும் எதிர்கொண்டார்.

பொதுவாக கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி போன்ற தனி நபர் அல்லாத விளையாட்டுகளில், Impact player என்று சிலரை குறிப்பிடுவர். அதாவது அவர், தனது அணி மற்றும் எதிரணியில் மட்டுமல்ல, அந்த விளையாட்டில், களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துபவர் என்று பொருள்.

அப்படி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் கெயிலால், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கடந்த ஏழு போட்டிகளில், ஆறு போட்டிகளில் தோல்வியடைந்த போது வீரர்களின் ஓய்வறையில் இருந்து வேடிக்கை தான் பார்க்க முடிந்தது.

உடல்நலக்குறைவால் விளையாடாது போன கிறிஸ் கெயில், பல ஐபிஎல் களம் கண்டவர் தான்.

கெயில் மீதான சந்தேகங்கள், எதிர்பார்ப்புகள்

ஆனால், கடந்த ஜனவரி மாதத்துக்கு பிறகு, எந்த போட்டியிலும் விளையாடாத அவரால், நடப்பு ஐபிஎல் தொடரில் சாதிக்க முடியுமா என்ற சந்தேகத்தை ஆரம்பத்தில் சில கிரிக்கெட் நிபுணர்கள் வெளிப்படுத்தினர்.

41 வயதான நிலையில், அவரால் கடந்த காலங்களில் ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகளில் நடத்திய அதகளத்தை தற்போது நிகழ்த்த முடியுமா என்று சமூகவலைத்தளங்களில் கேள்விகள் எழுந்தன.

ஆனால், சர்வதேச கிரிக்கெட் விளையாட தொடங்கிய காலம் முதல் ஐபிஎல் தொடர் வரை இப்படிப்பட்ட கேள்விகளுக்கு களத்தில் தனது பேட்டால் பதில் கூறுவது கெயிலின் பாணி.

ஷார்ஜாவில் கிங்ஸ் லெவன் அணிக்கு எதிரான போட்டியில், முதல்முறையாக இந்த தொடரில் களமிறங்கிய கெயில் வழக்கம் போல தொடக்க வீரராக களமிறங்கவில்லை.

45 ரன்கள் எடுத்த தொடக்கவீரர் மாயங் அகர்வால் ஆட்டமிழந்தவுடன், களமிறங்கிய கிறிஸ் கெயில் முதல் 10 பந்துகளில் எந்த பவுண்டரியும் அடிக்கவில்லை.

ரன் ரேட் விகிதம் அதிகரித்து கொண்டே இருந்தது. சுழல் பந்துவீச்சாளர் சாஹல் மிகவும் நன்றாக பந்துவீசினார்.

கெயில் குறிவைத்த பந்துவீச்சாளர்

இந்த தொடரில் மிக சிறப்பாக பந்துவீசி வரும் வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சில் ரன்கள் குவிக்க முடியாது. சிக்ஸர் அடிக்க முடியாது என்ற கருத்துகள் வர்ணனையாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

அப்படியா விஷயம்? அப்போது அடித்து விட வேண்டியதுதான் என்று தீர்மானித்த கிறிஸ் கெயில், சுந்தர் வீசிய போட்டியின் 13-வது ஓவரில், இரண்டு வானளாவிய சிக்ஸர்களை விளாசினார்.

அதேபோல் சிராஜ் வீசிய ஓவரில் பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடித்தார். மீண்டும் வாஷிங்டன் சுந்தரின் இறுதி ஓவரில் மேலும் 2 சிக்ஸர்களை கெயில் அடிக்க, சமூகவலைத்தளங்களில் `கெயில் வந்தாச்சுனு போய் சொல்லு` என மீம்கள் பகிரப்பட்டன.

45 பந்துகளில் 53 ரன்கள் எடுத்த கெயில் இறுதி ஓவரில் ரன்அவுட் ஆனார்.

ஐபிஎல் தொடரில் இன்றளவும் அதிக சிக்ஸர்கள் அடித்த கெயில், தான் விளையாடிய முதல் போட்டியிலேயே தனது அதிரடி பாணியால் எதிரணியை மிரட்டியுள்ளது பஞ்சாப் அணிக்கு கூடுதல் பலத்தை தரக்கூடும்.

பெங்களூரு அணி கோட்டை விட்டது எப்படி?

பெங்களூரு அணி

பட மூலாதாரம், BCCI / IPL

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி ஒரு கட்டத்தில் 200 ரன்களை எட்டக்கூடும் என்ற நிலை இருந்தது.

தொடக்க வீரர்கள் ஃபிஞ்ச் மற்றும் தேவ்தத் ஆகிய இருவரும் அதிரடி பாணியில் விளையாடி ஆட்டமிழக்க, விராட் கோலியுடன் இணை சேர டிவில்லியர்ஸ் களமிறக்கப்படாமல் வாஷிங்டன் சுந்தர் இறங்கினார்.

அவர் ஆட்டமிழந்த பிறகு துபே களமிறங்க, அவர்களால் டிவில்லியர்ஸ் போல் அடித்தாட முடியவில்லை.

அதேபோல் இறுதி கட்டங்களில் முகமது ஷமி வீசிய அற்புத ஓவரில் டி வில்லியர்ஸ் மற்றும் கோலி ஆகிய இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, பெங்களூருவால் 171 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

அதேபோல் பந்துவீச்சிலும், சூப்பர் ஓவரில் வாஷிங்டன் சுந்தர் பயன்படுத்தப்பட்டிருந்தால் விக்கெட் விழுந்திருக்கக்கூடும் அல்லது ரன்கள் குறைந்திருக்கும்.

கெயில் தனது அதிரடியை தொடங்கிய பிறகு, ஆர்சிபியால் எதுவும் செய்ய முடியவில்லை. வேடிக்கை தான் பார்க்க முடிந்தது.

பஞ்சாப் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியுமா?

கெயிலின் அதிரடி வருகை மற்றும் சிறப்பாக விளையாடி வரும் கே எல் ராகுல் மற்றும் மாயங்க் அகர்வால் போன்றோர் பஞ்சாபின் பிளே ஆஃப் கனவுக்கு வலுவூட்டுவது உண்மை தான்.

கே எல் ராகுல் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். இந்த போட்டியிலும் அவர் எடுத்த 61 ரன்கள் வெற்றியை உறுதி செய்தது.

இனி வரும் போட்டிகளில், அதிக அளவு வெல்ல வேண்டிய கட்டாயம் உள்ள பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் இறுதி கட்டங்களில் கட்டுப்பாடு மற்றும் நேர்த்தியோடு பந்துவீசுவது அவசியம்.

ஆனால் அதை விட முக்கியம், தங்களால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை பஞ்சாப் அணிக்கு வேண்டும்.

இந்த போட்டியில்கூட கடைசி பந்தில் பூரன் அடித்த சிக்ஸரால் தான் வெல்ல முடிந்தது. ஆனால் எளிதாக 18 அல்லது 19-வது ஓவரில் வென்று இருக்க வேண்டிய போட்டி இது.

பஞ்சாப் அணியால் வெல்ல முடியுமா என்று ஒலித்த கேள்வி, தற்போது கெயிலின் வருகைக்கு பிறகு பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியுமா என்று மாறியுள்ளது.

கிரிக்கெட்டில் குறிப்பாக ஐபிஎல்-லில் எதுவும் சாத்தியம். மீண்டும் தனது சுவாரஸ்ய பயணத்தை துவக்கியுள்ள கெயில், தற்போது பஞ்சாப் அணி மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: