"அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்" - சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள்

பட மூலாதாரம், Getty Images
அரசு ஊழியர்கள் தாங்கள் பெறும் ஊதியத்தைத் தாண்டி லஞ்சம் பெறுவது, பிச்சை எடுப்பதற்கு சமம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. விவசாயிகளிடமிருந்து போதுமான அளவில் நெல் கொள்முதல் செய்யப்படாதது தொடர்பான வழக்கில் இந்த கருத்தை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னையை சேர்ந்த சூரியப்பிரகாசம் என்பவர் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் "விவசாயிகள் விளைவிக்கும் நெல், தமிழக அரசால் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், நெல் அதிகமாக விளையும் காவிரி டெல்டா பகுதிகளில் விளைந்த நெல்லை விற்க பத்து, பதினைந்து நாட்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய சூழல் இருக்கிறது. இதனால் விளைந்த நெல்லை வெயிலிலும் மழையிலும் போட்டு வைக்க வேண்டியிருக்கிறது. ஆகவே, தமிழ்நாடு முழுவதும் போதுமான நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்து, நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் செய்ய தாமதமானால், விவசாயிகளுக்கு உரிய தங்கும் வசதியை ஏற்படுத்தித் தர உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நெல் கொள்முதல் தொடர்பாக சரமாரியான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.
"தமிழ்நாட்டில் நெல்லை கொள்முதல் செய்ய எத்தனை கொள்முதல் நிலையங்கள் உள்ளன? நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லைப் பாதுகாக்க என்ன வசதிகள் உள்ளன?" என்று நீதிபதிகள் கேட்டனர்.
"விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களை சரியான நேரத்தில் விற்பனை செய்ய இயலாத காரணத்தால் சாலைகளில் இரவு பகலாக காத்து கிடக்கின்றனர். வறுமையில் சிக்கி தற்கொலை செய்து கொள்கின்றனர்," என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
விவசாயிகள் கொண்டு வரும் நெல்லைக் கொள்முதல் செய்ய ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சமாக அரசு அதிகாரிகள் பெற்று வருகின்றனர் எனக்கூறி விவசாயிகள் நடத்தும் போராட்டத்தை நாள்தோறும் தொலைக்காட்சிகளில் பார்க்க முடிகிறது என்று கூறிய நீதிபதிகள், "உற்பத்தி செய்த பொருட்களை விற்க முடியாத சூழல் ஒரு பக்கமிருக்க, அந்த பொருட்களை விற்பனை செய்ய அரசு அதிகாரிகள் லஞ்சம் பெறுவது வேதனையானது" என்று தெரிவித்தனர்.
மேலும், தங்களது ஊதியத்தை தாண்டி லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள், பிச்சைக்காரர்களுக்கு சமமானவர்கள் என்றும் நீதிபதிகள் கூறினர்.
விவசாயிகள் கொண்டு வரும் ஒரு நெல் மணி முளைத்துப் போனால்கூட அதற்குக் காரணமான கொள்முதல் நிலைய அதிகாரியிடம் அதற்கான பணத்தை வசூலிக்க வேண்டும் என்று கூறியதோடு, இந்த வழக்கில் நுகர்பொருள் வாணிப கழக இயக்குநரை எதிர் மனுதாரராக இணைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், மனு தொடர்பாக வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) உரிய விளக்கம் அளிக்க மாநில அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












