DC vs RR ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்திய டெல்லி கேப்பிடல்ஸ்: ஆட்டத்தின் போக்கை மாற்றிய கடைசி 5 ஓவர்கள்

ipl

பட மூலாதாரம், Bcci /ipl

துபாயில் நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது டெல்லி அணி.

168 ரன்கள் எடுத்து விட முடியும் என்று சேசிங் செய்யத் தொடங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ்.

கடைசி 7 ஓவர்களில் கைவசம் ஐந்து விக்கெட்டுகளுடன் 52 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் இருந்தது.

இனி டெல்லியின் வெற்றி கேள்விக்குறியோ என்ற நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தி இருக்கிறது டெல்லி.

கடைசி 42 பந்துகளில் ராஜஸ்தான் 38 ரன்கள் மட்டுமே எடுத்தது. சேசிங்கின்15 ஓவர்கள் முடியும் வரை கூட ஆட்டம் ராஜஸ்தான் பக்கம்தான் இருந்தது.

இந்திய சுழற்பந்து மைதானங்களில் நன்றாக விளையாடிய அனுபவ வீரர் உத்தப்பா மற்றும் இந்த சீசனில் இளம் நாயகனான ராகுல் தீவாட்டியா ஆகியோர் களத்தில் இருந்தனர்.

ஆனால் 16வது ஓவரை வீசிய அஸ்வின் வெறும் இரண்டு மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஒரே ஓவரில் மெல்ல மெல்ல ஆட்டம் டெல்லி பக்கம் நகர்ந்தது.

அஸ்வின் தந்த அடித்தளத்தை இறுகப்பற்றி அன்ரிச் மற்றும் ரபாடா அடுத்த மூன்று ஓவர்களை சிக்கனமாக வீச டெல்லி அணி வெற்றி சாத்தியமாகியிருக்கிறது.

இரண்டு முறை தனது அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தானுக்கு வெற்றியை தேடித்தந்த தீவாட்டியா 18 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவிட்டார்.

நேற்றும் ஒரு ரன்னில் அஸ்வின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார் ஸ்டீவ் ஸ்மித்.

சஞ்சு சாம்சன் மீண்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினார், உத்தப்பா விக்கெட் வீழ்ச்சியைத் தவிர்க்க பொறுமையாக விளையாடினார்.

அவரால் கடைசி வரை களத்தில் நின்று அணிக்கு வெற்றி தேடித் தர இயலவில்லை.

ipl

பட மூலாதாரம், Bcci / ipl

ராஜஸ்தான் அணிக்கு ஒரே ஆறுதல் தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடி 35 பந்துகளில் 41 ரன்கள் எடுத்ததுதான்.

முன்னதாக டெல்லி அணி பேட்டிங் செய்யும்போது ப்ரித்வி ஷாவை ஆட்டத்தின் முதல் பந்தியிலே வீழ்த்தினார் ஆர்ச்சர். ரஹானேவை 2 ரன்களில் வெளியேற்றினார்.

அதன் பின்னர் ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் அரைசதம் அடிக்க டெல்லி 167 ரன்கள் எடுத்தது.

இந்தத் தோல்வி மூலம் சென்னை சூப்பர் கிங்சுக்கு கீழே 6 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ்.

ஆறு போட்டிகளில் வென்றுள்ள டெல்லி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: