அமமுக பொருளாளர் வெற்றிவேல் மரணம்; ஜெயலலிதாவுக்காக எம்எல்ஏ பதவியை துறந்தவர்

அமமுக

பட மூலாதாரம், AMMK

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொருளாளர் பி. வெற்றிவேல் (59) சென்னையில் வியாழக்கிழமை காலமானார்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 6ஆம் தேதி அவர் சேர்க்கப்பட்டார். ஒரு வாரமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு ஏற்கெனவே உடல் நல பிரச்னைகள் இருந்ததால், அவரது உடல்நிலை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த 9ஆம் தேதி அவருக்கு சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல்நிலை அபாய கட்டத்தில் இருந்த வேளையில், அவரது உயிர் வியாழக்கிழமை மாலையில் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் ஆளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி-ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் உள்ள அதிமுகவில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக டி.டி.வி. தினகரன் தலைமையிலான அணியில் சேர்ந்த வெற்றிவேல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் தீவிர ஆதரவாளராக இருந்தார்.

2017ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்ட விவகாரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களில் வெற்றிவேலும் ஒருவர். ஆர்.கே. நகர், பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் அவர் சட்டமன்ற உறுப்பனராக இருந்தவர்.

2014ஆம் ஆண்டில், சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, தான் வகித்து வந்த ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ பதவியை இழந்தார். அந்த தொகுதிக்கு 2015ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வளர்மதி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில், அதே ஆண்டு மே மாதம் சொத்து குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார். பிறகு அவர் முதல்வராக பதவியேற்றார். விதிமுறைப்படி அவர் ஆறு மாதங்களுக்குள் எம்எல்ஏ ஆக தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதால், அவருக்காக, சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ ஆக இருந்த வெற்றிவேல், தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

அவரது மறைவுச்செய்தி குறித்து அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், துரோகத்துக்கு எதிராக நாம் நடத்தி வருகிற புனிதப்போரில் ஒரு தளபதியாக நம்மோடு களத்தில் நின்றவர். வெற்றி... வெற்றி என வாய் நிறைய அழைத்து இனி யாரிடம் அப்படி பேசப்போகிறோம் என நினைக்கிற போதே எதற்காகவும் கலங்காத என் உள்ளம் கலங்குத் தவிர்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், வெற்றிவேலின் மறைவு கழகத்துக்கும் தனிப்பட்ட முறையில் எனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.

"அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தரின் ஒழுங்கீன நடவடிக்கை தவறானது" - தமிழக சட்ட அமைச்சர்

சண்முகம்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா சிறப்பு அந்தஸ்து பெற மத்திய அரசை தொடர்பு கொண்டது ஒழுங்கீன நடவடிக்கை என்பதால் அவரிடம் தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளது என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வியாழக்கிழமை வழங்கிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரிடம், அண்ணா பல்கலைக்கழகம் துணை வேந்தர் சூரப்பா குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அமைச்சர் சி.வி.சண்முகம், "அண்ணா பல்கலைக்கழகத்திற்கு Institute of Eminence என்ற சிறப்பு அந்தஸ்தைப் பெறவேண்டும் என்பதற்காக பல்கலைக்கழக துணைவேந்தர் தமிழக அரசிடம் ஏற்கெனவே கோரிக்கை வைத்தார். அதற்கு அமைச்சர்கள் தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஆராய வேண்டும் என தமிழக முதல்வர் கூறியிருந்தார். அது தற்போது நிலுவையில் இருக்கிறது.

இந்த நிலையில் சட்டமன்றத்தில், நாங்கள் ஏற்கெனவே தெளிவுபடுத்தி இருக்கிறோம். எந்த நிலையிலும், எந்தச் சூழலிலும் தமிழகத்தினுடைய இட ஒதுக்கீட்டிற்குப் பாதகம் ஏற்படும் வகையில் எந்த செயலையும் அரசு ஏற்காது, ஏற்றுக்கொள்ள முடியாது என்பதைத் தெள்ளத் தெளிவாகச் சொல்லி இருக்கிறோம்," என்று அமைச்சர் சண்முகம் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "Institute of Eminence-யில் இருக்கக்கூடிய சில ஷரத்துக்கள் அரசினுடைய இடஒதுக்கீட்டில் அதாவது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இருக்கிறது. இதில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டபோது, அவர்கள் விளக்கம் அளிக்க மறுத்துவிட்டார்கள். ஆகவே, இது தற்போது சாத்தியமில்லை என்பதை நாங்கள் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறோம்.

இதை மீறி தற்போது கர்நாடக மாநிலத்திலிருந்து இங்கே நியமிக்கப்பட்ட சூரப்பா செயல்பட்டிருக்கிறார். தனக்கு மேல் வேந்தர், இணைவேந்தர், அதற்கு மேல் அரசாங்கம் இருக்கிறது என்பதை அவர் உணர வேண்டும். இதை எல்லாம் மீறி மத்திய அரசாங்கத்தை அவர் நேரடியாகத் தொடர்பு கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறார். நாங்களே பல்கலைக்கழகத்தன் நிதி ஆதாரங்களைப் பெருக்கிக் கொள்கிறோம் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

எப்படி எந்த நிலையில் நிதி அதரங்களைப் பெருக்கிக்கொள்வார் என்பது தெரியவில்லை. ஆகவே, இது ஒழுங்கீனமான நடவடிக்கை என்பதால், இப்போது அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது," என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முதலாவது ஆஸ்கர் விருது பெற்ற பானு அதெய்யா மரணம்

பானு

பட மூலாதாரம், BHANU ATHAIYA

இந்தியாவில் இருந்து முதன் முதலாக ஆஸ்கர் விருதுக்கு தேர்வான பானு அதெய்யா தனது 91 வயதில் காலமானார். பல ஆண்டுகளாக அவர் நோய்வாய்பட்டு இருந்த நிலையில் அவரது உயிர் பிரிந்து விட்டதாக அவரது மகள் தெரிவித்துள்ளார்.

1983ஆம் ஆண்டில் "காந்தி" என்ற படத்தில் சிறந்த ஆடை வடிமைப்புக்காக அவருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

பாலிவுட்டில் சாதனை படைத்த படங்களான சிஐடி, பியாசா, ககஸ் கி பூல், அர்ஸூ, வக்த், அம்ரபாலி, சூரஜ், அனிதா, மிலான், ராத் அவுர் தின், ஷிகார், மேரா சாயா, ஜானி மேரா நாம், கீதா மேரா நாம், அப்துல்லா, கர்ஸ், அக்னீபத், அஜூபா, 1942 ஏ லவ் ஸ்டோரி உள்ளிட்ட படங்களுக்கு அவர் ஆடை வடிவமைப்பாளராக இருந்தார்.

காந்தியின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் வகையில் வெளிவந்த காந்தி படத்தில் பிரிட்டிஷ் இயக்குநர் ரிச்சர்ட் அட்டென்பரோவின் எண்ணத்தில் உள்ளபடியே கதாபாத்திரங்களின் தோற்றத்தை கண் முன் கொண்டு வர பானு அதெய்யாவின் ஆடை வடிவமைப்பு பங்களிப்பு மிகவும் உறுதியாணையாக விளங்கியது. அந்த படத்தில் இயக்குநர், கதை வசனம், ஒளிப்பதிவாளர், தயாரிப்புக்குழு, செட் டிசைனர் என அனைவருக்கும் மத்தியில் ஒரே இந்தியராக தாம் பங்களிப்பை வழங்கிய அனுபவங்களை தமது தி ஆர்ட் ஆஃப் காஸ்ட்யூம் என்ற நினைவுப்புத்தகத்தில் பானு நினைவுகூர்ந்திருந்தார்.

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்

ஸ்டெர்லைட்

பட மூலாதாரம், VEDANTA

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்த மாநில அரசின் நடவடிக்கை அதன் கொள்கை முடிவின்படி மேற்கொள்ளப்பட்டது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ஏற்கெனவே, ஸ்டெர்லைட் ஆலையை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதில் ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றிய பகுதிகளில் ஏற்படும் காற்று மாசுபாடுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆலை செயல்பாடு காரணமாவதாகக் கருதி மாநில அரசு அந்த ஆலைக்கு சீல் வைத்த நடவடிக்கை சரிதான் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் பதில் மனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்துள்ள தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலை செயல்பாட்டால்தான் அதன் சுற்றுவட்டாரங்களில் காற்று மாசுபாடு, சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவை ஏற்படுவதாக கண்டறியப்பட்டதன் அடிப்படையிலேயே அதை மூட அரசு கொள்கை முடிவு எடுத்தது. இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றமும் அரசின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி உத்தரவிட்டுள்ளது. அதனால், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுவை நிராகரிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஹாத்ரஸ் வழக்கு: நீதிமன்றம் மேற்பார்வையிட கோரும் மனுக்கள் மீது தீர்ப்பு ஒத்திவைப்பு

ஹாத்ரஸ்

பட மூலாதாரம், Getty Images

உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் 19 வயது பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாகக் கூறப்பட்டு பின்னர் உயிரிழந்த வழக்கில் சிறப்பு புலனாய்வுக்குழு அல்லது இந்திய புலனாய்வுத்துறை விசாரணையை (சிபிஐ) நீதிமன்ற மேற்பார்வையில் நடத்த உத்தரவிடக்கோரிய மனுக்களின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்பான பிரமாண பத்திரம், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு வழக்கறிஞராக யாரை நியமிக்கலாம் என்பது தொடர்பான அவர்களின் தேர்வை அறியக்கோரும் பிரமாண பத்திரம் ஆகியவை உத்தர பிரதேச மாநில அரசு சார்பில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அவற்றை தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்பிரமணியன் அடங்கிய அமர்வு கடந்த இரு தினங்களாக விசாரித்தது.

இதையடுத்து வியாழக்கிழமை இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 19 வயது பெண் உயிரிழந்த வழக்கை உத்தர பிரதேசத்துக்கு வெளியே உள்ள நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று கோரினார்.

இந்த வழக்கில் தங்கள் தரப்பில், வழக்கறிஞர் சீமா குஷ்வாஹா ஆஜராக வேண்டும் என்று பெண்ணின் பெற்றோர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் நீதிபதிகளிடம் தெரிவித்தார். இதேபோல, உயிரிழந்த பெண்ணின் பெயரை வெளியிடக்கூடாது என்றும் அந்த பெண்ணின் பெயர் அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுகளில் இடம்பெற்றிருக்கிறது என்றும் சொலிசிட்டர் ஜெனரல் சிட்டிக்காட்டினார். இதையடுத்து, அந்த பெயரை தாமாக முன்வந்து அலகாபாத் நீதிமன்றம் நீக்கிக்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

உத்தர பிரதேசத்தில் இந்த வழக்கு நியாயமான முறையில் நடக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்றும் அம்மாநில காவல்துறை தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில், அதன் எண் கூட குறிப்பிடப்படவில்லை என்றும் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் தெரிவித்தார்.

உத்தர பிரதேச மாநில காவல்துறை தலைமை இயக்குநர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு இந்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) பாதுகாப்பு வழங்கப்படுவதாக இருந்தாலும் அதில் தமக்கு ஆட்சேபம் இல்லை என்று தெரிவித்தார்.

இதேவேளை, குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, இந்த வழக்கின் விசாரணை நடவடிக்கைகளை குடும்பத்தினரிடம் வெளியிடக்கூடாது என்றும் அது வெளிப்படையாக வழக்கு விசாரிக்கப்படுவதை பாதிக்கப்படலாம் என்று கூறினார். இதையடுத்து அந்த கோரிக்கையை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கும்படி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

கேரளா தங்கக்கடத்தல் விவகாரத்தில் தாவூத் இப்ராஹிமுக்கு தொடர்பிருக்கலாம்: நீதிமன்றத்தில் என்ஐஏ

Dawood Ibrahim

பட மூலாதாரம், file

சமீபத்தில் சர்ச்சையான கேரளா தங்கக் கடத்தல் வழக்கில், இந்தியாவால் தேடப்படும் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டுள்ள தாவூத் இப்ராஹிமுக்கு தொடர்பு இருக்கலாம் என தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு எதிராகவும், தீவிரவாத செயல்பாடுகளுக்காகவும், கேரள தங்கக் கடத்தல் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என புலனாய்வு தகவல்கள் தெரிவிப்பதாகக்கூறி, இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு ஜாமின் வழங்க என்.ஐ.ஏ-வின் சிறப்பு புலனாய்வுக்குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள பெரும் பொருளாதார நிறுவனங்களின் புலனாய்வு அமைப்பான மத்திய பொருளாதார புலனாய்வு நிறுவனம் இதுதொடர்பாக அளித்த அறிக்கை ஒன்றையும் சிறப்புப் புலனாய்வுக்குழு ரகசிய ஆவணமாக நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் வெளியுறவுத் துறை கட்டமைப்புகள் மூலமாகக் கடத்தப்பட்ட 30 கிலோ தங்கம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பிடிபட்டது. ஐக்கிய அரபு அமீகர தூதரகத்திற்கு சேர வேண்டிய பை ஒன்றில் இந்த தங்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

குற்றஞ்சாட்டப்பட்ட நபரை காவலில் வைத்து விசாரித்தால் மட்டுமே, இதன் பின் வெளியுறவுத் தொடர்புகள் உள்ளதா என்பது குறித்து தெரியவரும் என்று சிறப்புப் புலனாய்வுக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ரமீஸ், விசாரணையின்போது, தான்சானியாவில் அவருக்கு வைர தொழில் இருப்பதாகவும், அங்கிருந்து தங்கம் வாங்கி ஐக்கிய அரபு அமீகரத்திற்கு விற்றதாகவும் கூறினார்.

இந்நிலையில், தாவூத் இப்ராஹிமுக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தொழில் தொடர்புகள் குறித்து ஏற்கனவே அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது.

தான்சானியாவில் தாவூதின் தொழில்களை கையாளும் பெரோஸ் என்பவரும் தென் இந்தியாவை சேர்ந்தவர் என்று புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கத்தோலிக்க மதகுருக்கள் மீது பாலியல் வழக்கு: வாட்டிகனில் முதல்முறை

St Peter's Basilica, Vatican City
படக்குறிப்பு, செயின்ட் பீட்டர்ஸ் பேராலயம்

ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதப்பிரிவின் தலைமையகமான வாட்டிகனில் நடக்கும் பாலியல் அத்துமீறல் குறித்த முதல் விசாரணையில் இரண்டு கத்தோலிக்க மதகுருக்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

செயின்ட் பீட்டர்ஸ் பேராலயத்தில் திருச்சபை உதவியாளராக பணியாற்றிய சிறுவன் ஒருவனை 2007 மற்றும் 2012ஆம் ஆண்டுகளுக்கு இடையே பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கேப்ரியல் மார்டினெல்லி எனும் 28 வயதாகும் பாதிரியார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பாலியல் அத்துமீறல் நடந்ததாக கூறப்படும் காலகட்டத்தில் வாட்டிகனில் உள்ள சமயப் பள்ளிக்கு தலைமை தாங்கிய என்ரிகோ ரேடைஸ் எனும் 72 வயதாகும் பாதிரியார் அந்தப் பாலியல் குற்றத்தை மூடி மறைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட இருவரும் இதுகுறித்து கருத்து எதையும் வெளியிடவில்லை.

உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க பாதிரியார்கள் மீது இதற்கு முன்பும் பல்வேறு முறை பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனினும் வாட்டிகன் நகரிலேயே பாலியல் அத்துமீறல் குறித்த விசாரணை நடைபெறுவது இதுவே முதல் முறை.

"முத்தையா முரளிதரன் என்றுமே தமிழர்"

முரளிதரன்

பட மூலாதாரம், MUTTIAH MURALITHARAN FB

இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்படும் "800" என்ற திரைப்படத்தில் தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படம் தொடர்பாக முத்தையா முரளிதனுக்கு எதிராகவும் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் விஜய் சேதுபதிக்கு எதிராகவும் ஆதரவாகவும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பயனர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

"ஓ. பன்னீர்செல்வம் முதல்வர் போட்டியில் இருக்க விரும்பியதேயில்லை"

முதல்வர் மற்றும் துணை முதல்வர்

அ.இ.அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அந்த முடிவு அவ்வளவு சுலபமாக எடுக்கப்படவில்லை. அதற்கு முன்பாக பல தீவிர விவாதங்கள் கட்சிக்குள் நடந்தன. இந்த நிகழ்வுகள் குறித்து அ.தி.மு.கவின் அமைப்புச் செயலாளரும் அக்கட்சியில் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வழிகாட்டும் குழுவின் உறுப்பினருமான ஜே.சி.டி. பிரபாகரன் பிபிசியிடம் விரிவாகப் பேசினார்.

கொரோனா வைரஸ்: ஐரோப்பாவில் இரண்டாவது அலை

கொரோனா

பட மூலாதாரம், EPA

கொரோனா வைரஸ் பரவலில் இருந்து மீண்ட பல ஐரோப்பிய நாடுகளில் தற்போது இரண்டாவது வைரஸ் அலை போல மீண்டும் பெருந்தொற்று தீவிரமாகி வருகிறது.

இதன் காரணமாக பல நாடுகளில் கட்டுப்பாடுகள் படிப்படியாக கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: