"ஓ. பன்னீர்செல்வம் முதல்வர் போட்டியில் இருக்க விரும்பியதேயில்லை" - ஜே.சி.டி. பிரபாகரன் #BBCExclusive

முதல்வர் மற்றும் துணை முதல்வர்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

அ.இ.அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அந்த முடிவு அவ்வளவு சுலபமாக எடுக்கப்படவில்லை. அதற்கு முன்பாக பல தீவிர விவாதங்கள் கட்சிக்குள் நடந்தன. இந்த நிகழ்வுகள் குறித்து அ.தி.மு.கவின் அமைப்புச் செயலாளரும் அக்கட்சியில் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வழிகாட்டும் குழுவின் உறுப்பினருமான ஜே.சி.டி. பிரபாகரன் பிபிசியிடம் விரிவாகப் பேசினார். அவரது பேட்டியிலிருந்து:

கே. அ.தி.மு.கவில் திடீரென முதல்வர் வேட்பாளர் குறித்த விவாதம் எழுவதற்கு என்ன காரணம்?

ப. அ.இ.அ.தி.மு.கவில் இதுவரை முதலமைச்சர் வேட்பாளர் குறித்த விவாதம் வந்ததே இல்லை. எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்த காலத்தில் அவரை முதல்வர் ஆக்கவேண்டுமென்றுதான் மக்கள் வாக்களித்தார்கள். அவர் மறைவுக்குப் கட்சி இரண்டுபட்டது. அப்போது ஜெயலலிதாவை முதல்வராக்க வேண்டுமென்றுதான் மக்கள் வாக்களித்தார்கள். கட்சி இணைந்தது. பிறகு ஜெயலலிதா முதல்வரானார். அவரது எதிர்பாராத மறைவுக்குப் பிறகு கட்சியில் வெற்றிடம் ஏற்பட்டது. ஓ. பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை, அவர் ஜெயலலிதாவால் மூன்று முறை முதல்வரானவர். ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது, எல்லோராலும் முன்மொழியப்பட்டு அவர் முதல்வரானார்.

இதற்குப் பிறகு,ஏற்பட்ட விரும்பத்தகாத நிகழ்வுகளால் கட்சி இரண்டுபட்டது. ஒரு குடும்பத்தின் பிடியில் இந்தக் கட்சி சிக்கிவிடக்கூடாது, இந்த ஆட்சி சிதைந்துவிடக் கூடாது, இந்த ஆட்சிக்கு இருந்த நல்ல பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதால் ஓ.பி.எஸ். தர்மயுத்தத்தை ஆரம்பித்தார். எம்.ஜி.ஆர். கட்சி துவங்கியபோது இருந்த எழுச்சி, ஓ. பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தத்திற்கும் இருந்தது. அப்போது அவர் பேசிய பேச்சுகள், அவரது நீதி, நியாய உணர்வை வெளிப்படுத்தின. இவர்தான் முதல்வராக வேண்டுமென்ற எண்ணத்தை அவை வலுப்படுத்தியது.

அதற்குப் பிறகு எடப்பாடி கே. பழனிசாமி முதல்வரான பிறகு, அந்தக் குடும்பத்தின் பிடியிலிருந்து நீங்கிவிட்டோம் என்பதற்கான அறிகுறிகளைக் காண்பித்தார்கள். கட்சி அலுவலகத்தில் இருந்த போர்டுகள், பேனர்கள் எடுக்கப்பட்டன. டிடிவி தினகரன் வீட்டில் நடந்த ஒரு கூட்டத்திற்குப் பிறகு, அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும் அவரை சில நாட்கள் ஒதுங்கியிருக்கச் சொல்லியிருப்பதாகச் சொன்னார்கள். அவரும் ஒதுங்கப்போவதாகச் சொன்னார். அதற்குப் பிறகு ஓ.பி.எஸ். தலைமையிலான பிரிவைச் சேர்ந்தவர்கள் மீண்டும் இணைந்தோம். அப்படி இணையும்போது, அப்போதுதான் முதல்வரான ஒருவரை மாற்றக் கோருவது சரியல்ல என்பதால் அந்த சமயத்தில் அதைப் பேசவில்லை. வேறு சில ஒப்பந்தங்கள் பேசப்பட்டன. சில கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அவை ஏற்கப்பட்டன. அதில் ஒன்றுதான், வழிகாட்டும் குழு என்ற ஒரு குழுவை அமைப்பது. அதில் ஆறு பேர் எடப்பாடி பழனிசாமி பிரிவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்; ஐந்து பேர் ஓ. பன்னீர்செல்வம் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என முடிவுசெய்யப்பட்டது. இது பொதுக் குழுவிலும் ஏற்கப்பட்டது.

ஜே.சி.டி பிரபாகரன் மற்றும் பன்னீர் செல்வம்

பட மூலாதாரம், JCD Prabhakar/Facebook

படக்குறிப்பு, ஜே.சி.டி பிரபாகரன் மற்றும் பன்னீர் செல்வம்

கட்சியை நடத்துவதற்கு ஒரு ஒருங்கிணைப்பாளர், ஒரு இணை ஒருங்கிணைப்பாளர், இரண்டு துணை ஒருங்கிணைப்பாளர்கள் இருப்பார்கள் என முடிவுசெய்யப்பட்டது. அதைத் தொண்டர்கள் அனைவரும் ஏற்றார்கள். ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வர் பதவிகூட வேண்டாம் என்றுதான் சொன்னார். ஆனால், மற்றவர்கள் வலியுறுத்தியதும் அந்தப் பதவியை ஏற்றுக்கொண்டார். எந்த காலகட்டத்திலும் அவர் முதல்வராக வேண்டுமென விரும்பியதில்லை. அதற்காக அணிதிரட்டவும் இல்லை.

இப்படி சென்றுகொண்டிருக்கும்போதுதான், முதல்வர் வேட்பாளர் குறித்த பிரச்சனையை சிலர் எழுப்பினார்கள். தி.மு.கவில் முதல்வர் வேட்பாளரை தீர்மானம் செய்து அவர்கள் பணிகளைத் துவங்கிவிட்டதைப்போல நாமும் செய்ய வேண்டும் என்றார்கள். சிலர், தேர்தலுக்குப் பிறகு சட்டமன்ற உறுப்பினர்களைக் கூட்டி முடிவுசெய்யலாம் என்றார்கள். இந்தக் கட்டத்தில் சில மாவட்டங்களில் ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென கூறினார்கள்.

ஆகவே இந்தப் பிரச்சனை வளர்ந்துவந்த நிலையில் சீக்கிரம் முடிவுஎட்ட வேண்டும் எனக் கருதப்பட்டது.

எம்.ஜி.ஆர்
படக்குறிப்பு, எம்.ஜி.ஆர் உடன் ஜே.சி.டி. பிரபாகரன்

கே. இந்த நிலையில் திடீரென ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடந்தது. அந்தக் கூட்டம் எதற்காகக் கூட்டப்பட்டது? அதில் என்ன நடந்தது?

ப. அதை ஆலோசனைக் கூட்டமென்று சொல்ல முடியாது. ஓ. பன்னீர்செல்வம், தான் கட்சி அலுவலகத்திற்குச் செல்வதாகச் சொன்னார். அதாவது, அவர் அடிக்கடி செல்ல வேண்டுமென்று விரும்பினார். தொண்டர்கள் பலர் தங்களுக்கு சரியான பொறுப்புகள் தரப்படவில்லையென அவரது வீட்டிற்குச் சென்று பேசிக்கொண்டிருந்தார்கள். இது போன்ற விவகாரங்களை கட்சி அலுவலகத்தில் வைத்துப் பேசலாம் என ஓ.பி.எஸ். நினைத்தார். ஆனால், துணை முதல்வர் செல்வதாகச் சொல்லவும் முதல்வர் தானும் வருவதாகச் சொன்னார். ஆகவே அது ஆலோசனைக் கூட்டமாக மாறிவிட்டது.

கே. இதற்குப் பிறகு செயற்குழுக் கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. அங்கு என்ன நடந்தது என்பது குறித்து ஊடகங்களில் ஹேஷ்யங்களாக பல விஷயங்கள் வெளியாயின. உண்மையில் அங்கு என்னதான் நடந்தது..

ப. செயற்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதற்குப் பிறகு முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் இருப்பதால் பிரச்சனை வருமோ, சரியான பிரசாரம் செய்ய முடியாமல் போய்விடுமோ எனக் கருதிய அமைச்சர்கள் முதல்வர் வேட்பாளர் யார் என்ற பேச்சை எடுத்தார்கள். நிறைய பேர் பேசினார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் அவசரப்பட வேண்டாம் என்பதை நான் வலியுறுத்திப் பேசினேன்.

முதல்வர் மற்றும் துணை முதல்வர்

கே. துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் எப்போதாவது தான் முதல்வர் வேட்பாளராக இருக்கவேண்டுமென விரும்பியிருக்கிறாரா?

ப. செயற்குழுவிலும் சரி, வேறு இடங்களிலும் அவர் பேசிய பேச்சுகளை நான் கவனித்திருக்கிறேன். அப்போதெல்லாம் "மூன்று முறை அம்மாவே இந்தப் பதவியை கொடுத்தாங்க.. மூன்று முறையும் அவர் மனம் மகிழும்படி செயல்பட்டுவிட்டேன். நானாக அந்தப் பொறுப்பை ஒருபோதும் கேட்டதில்லை. இப்போதும்கூட, இந்தப் போட்டியில் இருந்தபடி யாருக்கும் சிரமம் ஏற்படுத்த வேண்டுமென நான் நினைக்கவில்லை" என்றுதான் சொன்னார்.

செயற்குழுவில் பேசும்போதுகூட, "எப்போதாவது, யாரிடமாவது என்னை முதல்வராக்குங்கள் என்று நான் கேட்டதாகச் சொல்ல முடியுமா?" என்று வெளிப்படையாகவே கேட்டார். கட்சிப் பணி ஆற்ற வேண்டுமென்பதுதான் அவருடைய எண்ணம். தொண்டர்களின் குறைகள் தீர்க்கப்பட வேண்டும்; ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிருப்தியாளர்களை சரிசெய்ய வேண்டும். அப்போதுதான் கட்சி சிறப்பாக இருக்குமென நினைத்து அவர் செயல்பட்டார். எந்த காலகட்டத்திலும் முதலமைச்சர் பதவியை குறிவைத்து அவர் காய்களை நகர்த்தவில்லை.

கே. வழிகாட்டும் குழுவில் முதல்வரின் ஆதரவாளர்கள் அதிகம் இருக்கிறார்கள். ஆகவே கட்சியைப் பொறுத்தவரைக்குமே அவர்தானே முடிவுகளை எடுக்க முடியும்..

ப. இது தவறான கருத்து. ஐந்து - ஆறு என்ற கணக்கெல்லாம் இனிமேல் கிடையாது. பதினொரு பேரும் இணைந்து கட்சியின் நலனுக்கான முடிவுகளை எடுப்பார்கள்.

கே. இந்த வழிகாட்டும் குழுவின் அதிகாரம் என்ன?

ப. ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து இதுபோன்ற பல விஷயங்களைப் பேச வேண்டியிருக்கிறது. இன்னும் பல குழுக்கள் அமைக்கப்படும். அந்தத் தருணத்தில் இந்தக் குழுக்களின் அதிகாரங்கள் நிர்ணயிக்கப்பட்டு, பொதுக்குழுவின் ஒப்புதல் பெறப்படும்.

கே. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்திருப்பது, தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி கட்சியின் வெற்றி வாய்ப்பை பாதிக்காதா..

ப. நல்ல கேள்விதான். ஆனால் நான் இதை வேறு மாதிரி பார்க்கிறேன். இந்த விவகாரத்தை தமிழ்நாட்டில் உள்ள எல்லா தொலைக்காட்சிகளும் ஊடகங்களும் தொடர்ந்து விவாதித்தன. விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாக்கப்பட்டது. இதனால், அ.திமு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததைப் போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்த பிறகு, இவர் முதல்வரா, அவர் முதல்வரா என்று பலரும் விவாதிப்பதைப் போல இருக்கிறது. இதைப் பற்றிப் பேசாமலேயே இருந்திருந்தால், ஒருபக்கச் செய்திதான் வந்திருக்கும். இப்போது, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டது. ஆனால், முதல்வர் யார் என்று விவாதிப்பதைப் போல ஆகிவிட்டது. அது நல்லதுதான்.

கே. அ.தி.மு.கவைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என தனிபர் பிம்பங்களின் மீது கட்டப்பட்ட கட்சி. இப்போது கட்சித் தலைமை ஒருவரிடமும், ஆட்சித் தலைமை மற்றொருவரிடமும் இருக்கிறது. இதன் மூலம் அ.தி.மு.க. ஜனநாயகப்படுகிறதா?

ப. ஆட்சிக்கு ஒருவர், கட்சிக்கு மற்றொருவர் என்று இரட்டைக் குழல் துப்பாக்கியாக இருவரும் பணியாற்றுகிறார்கள் என்ற எண்ணத்தை ஏழாம் தேதி எடுக்கப்பட்ட முடிவு காட்டியிருக்கிறது. அதில் எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி. 1972லிருந்து இந்தக் கட்சியில் ஏற்பட்ட பிரளயங்களைப் பார்த்தோம், வெற்றிகளையும் பார்த்தோம். படுதோல்விகளையும் பார்த்தோம். இதையெல்லாம் பார்த்த எங்களுக்கு இருவரும் இணைந்து எடுத்த முடிவுகள் மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றன.

கே. வரும் ஜனவரி மாதத்தில் வி.கே. சசிகலா விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது வருகை கட்சியில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துமென நினைக்கிறீர்கள்..

ப. அவர் விடுதலையாவதற்கு முன்பே கற்பனையிலேயே பேசிக்கொண்டிருப்பது தவறு. அவர் வரட்டும். அவர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம். அந்தத் தருணத்தில் கட்சி தன் அணுகுமுறையை வெளிப்படுத்தும். அது மக்கள் விரும்புவதைப்போல இருக்கும். மாறாக ஊடகங்கள் முன்வைக்கும் யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: