அதிமுக ஒபிஎஸ், ஈபிஎஸ் சமரசம்: காலையில் உடன்பாடு, மாலையில் சந்திப்பு - ஒரே நாளில் முடிந்ததா பிரச்சனை?

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆளும் அஇஅதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு புதன்கிழமை மாலையில் சென்று நன்றி தெரிவித்தார். மேலும் தேர்தலில் வெல்ல கடுமையாக உழைக்க தொண்டர்களுக்கும் அவர் கடிதம் வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார்.
அஇஅதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி கே. பழனிச்சாமி செப்டம்பர் 7ஆம் தேதி காலையில் அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் மாலை ஆறு மணியளவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்றார்.
அவருடன் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி , சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் வந்திருந்தனர். இந்தச் சந்திப்பின்போது வைத்திலிங்கம், முனுசாமி, மனோஜ் பாண்டியன், ப.மோகன், மாணிக்கம் உள்ளிட்டோரும் இருந்தனர்.
இந்த நிலையில், முதலமைச்சரும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான கே. பழனிசாமி தொண்டர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
'குருதியிலே உறுதி கலந்து உழைப்போம்' என்று தலைப்பிடப்பட்ட அந்தக் கடிதத்தில், தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததற்கு நன்றி தெரிவித்திருப்பதோடு, வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் வெல்வதற்கு கடுமையாக உழைக்கும்படியும் தொண்டர்களை அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
"உழவன் வீட்டில் உதித்த ஒருவனும், உழைத்தால் முதல்வராக முடியும் என்பதற்கு ஜனநாயக சாட்சியாக இந்த எளிமை சாமானியனை ஒன்றரை கோடி தொண்டர்களின் இயக்கம் அடையாளப்படுத்தியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ள முதல்வர், தன்னை வரும் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறிவித்ததற்காக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஆட்சியின் சாதனை பட்டியல்
இதற்குப் பிறகு அதிமுகவின் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் சாதனைகளைப் பட்டியலிட்டுள்ள முதல்வர், தமிழ்நாட்டை இந்தியாவின் மருத்துவத் தலைநகராக உயர்த்தியுள்ளதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
"மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை, ஒரே ஆண்டில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளைக் கொண்டுவந்து தமிழ்நாட்டை இந்தியாவின் மருத்துவத் தலைநகராக உயர்த்தியிருப்பது, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அகில இந்திய மருத்துவ கல்வி ஒதுக்கீட்டில் 27 சதவீத இடத்தை உறுதிசெய்ய நடவடிக்கை எடுத்தது, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் 7.5 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய சட்டம் இயற்றியது என சாதனை படைத்திருக்கிறோம்" என தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அதிமுக, தன்னைப் போன்ற லட்சோபலட்சம் எளியோருக்கெல்லாம் பச்சை மையில் கையெழுத்திடும் பாக்கியத்தைத் தந்த பாசப் பேரியக்கம் என்று குறிப்பிட்டுள்ள முதல்வர், வாரிசு அரசியலையும் சாடியுள்ளார்.
2021லும் அதிமுக ஆட்சி அமைய, குருதியிலே உறுதி கலந்து உழைக்க வேண்டுமென்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து அந்தக் கடித்தை முடித்திருக்கிறார் முதல்வர்.

பிரச்சனை முடிந்ததா? தொடருமா?
அஇஅதிமுகவில் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக நிலவிய சர்ச்சைக்கு தற்போதைக்கு முடிவு காணப்பட்டாலும், அது ஓர் தற்காலிக தீர்வாகவே இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
மொத்தத்தில் கட்சிக்குள் யார் பெரியவர், யாருக்கு அதிக செல்வாக்கு என்ற வகையில் நீடித்து வந்த பிரச்சனைக்கு எடப்பாடி பழனிசாமியும் ஓ. பன்னீர்செல்வமும் இணைந்து சமரசம் கண்டிருந்தாலும், இந்த இணக்கம் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பது கேள்விக்குறியே என்று பத்திரிகையாளர் லட்சுமணன் கூறுகிறார்.
"ஒரு வாரமாக முதல்வர் வேட்பாளர் யார், வழிகாட்டுதல் குழுவில் யார் இருப்பார்கள் என நீடித்து வந்த சர்ச்சைகள் முடிந்தது போல தோற்றமளித்தாலும், இன்றைய சந்திப்பின் மூலம், இருக்கும் நிலைமையை அப்படியே தொடர இருவரும் அனுமதித்திருக்கிறார்கள் என்பதே யதார்த்தம். அதே துணை முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் இருக்கிறார், அதே முதல்வராக எடப்பாடி பழனிசாமி தொடருகிறார். கட்சியின் வழிகாட்டுதல் குழுவில் தங்களுக்கான ஆதரவாளர்களை இருவரும் சேர்த்துக் கொண்டுள்ளனர். இதை தவிர வேறு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இன்றைக்கு நடக்கவில்லை" என்று லட்சுமணன் தெரிவித்தார்.
"வரும் டிசம்பர் மாதத்துக்குப் பிறகு சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் ஒரு அசாதாரணமான கட்டத்தை அதிமுக எதிர்கொள்ளும் என்றும் அது அக்கட்சியினருக்கு திருப்பத்தைத் தருவதாக இருக்கலாம்" என்றும் லட்சுமணன் கருதுகிறார்.
சவால்களை சாதகமாக்கும் பழனிசாமி
அதே சமயம் மற்றொரு பத்திரிகையாளர் குபேந்திரனின் பார்வை வேறு விதமாக உள்ளது.
"சமீபத்திய உள்கட்சி பிரச்சனையை சமாளிக்கும் முயற்சியில் மீண்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று, தனது செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டதாகவே இந்த விவகாரத்தை பார்க்க வேண்டியுள்ளது" என்று அவர் கூறுகிறார்.
இந்த சமரசம் தற்காலிகமா, நிரந்தரமா என இப்போதே சொல்ல முடியாது என்று கூறும் குபேந்திரன், "தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவிக்கு வந்த 30 நாட்களில் அவரது ஆட்சி போய் விடும், 60 நாட்களில் போய் விடும் என்று கணித்த நிலையை எல்லாம் அவர் மாற்றி தற்போது ஆட்சியை நிறைவு செய்யும் கட்டத்தை எட்டியிருக்கிறார்" என்று தெரிவித்தார்.
குறிப்பாக, அதிமுகவில் ஆட்சியின் எதிர்காலம் பற்றிய விவாதங்கள் தொடங்கிய நாட்களில், அக்கட்சியின் தலித் எம்எல்ஏக்கள் 30 பேர் தனியாக கூடி ஆலோசனை நடத்தியதையும், தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அமைச்சரவையில் இல்லை என்றும் அவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியபோது, அவர்களை அழைத்து சமரசம் செய்து வைக்கக் கூடியவராக எடப்பாடி பழனிசாமி தமது ஆளுமையை நிரூபித்த நிகழ்வை குபேந்திரன் சுட்டிக்காட்டுகிறார்.
அந்த தலித் எம்எல்ஏக்கள் நடத்திய தனி சந்திப்புதான், தனக்கு தெரிந்தவரை அதிமுகவில் நடந்த முதலும் முடிவுமான அதிருப்தி எம்எல்ஏக்கள் கூட்டம் என்று கூறிய அவர், அந்த கால கட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மீது உச்சகட்ட அதிருப்தியில் இருந்தவராக பார்க்கப்பட்ட அமைச்சர் சி.வி. சண்முகம்தான், செப்டம்பர் 28ஆம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில் முதல்வர் பழனிசாமிக்கு கடுமையாக ஆதரவளித்தார் என்றும் தெரிவித்தார்.
"சமீபத்திய முன்னேற்றங்களால், இரட்டை தலைமை என்பது அதிமுகவில் இனி பெயரளவுக்கே இருக்கும். காரணம், கட்சியில் 90 சதவீத ஆதரவை கிடைக்கும் சூழலை தனக்கு வாய்ப்பாக எடப்பாடி பழனிசாமி பயன்படுத்திக் கொண்டதாகவே இந்த நிகழ்வை பார்க்க வேண்டியுள்ளது" என்றும் குபேந்திரன் குறிப்பிட்டார்.
"அடுத்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என ஓ. பன்னீர்செல்வம் தனது வாயாலேயே அறிவித்திருக்கிறார். ஆனாலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம என்ன முடிவு எடுக்கப்படும், நிலைமை என்னவாகும் என்பதை இப்போதே கணிப்பது கடினம்" என்றும் குபேந்திரன் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் சவால்கள்
"அதிமுகவின் அடிமட்ட அளவில் அக்கட்சியின் முகமாக ஜெயலலிதாவுக்குப் பிறகு அவரால் அடையாளம் காணப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தை அக்கட்சியினர் பார்த்தனர். அந்த அனுதாப பார்வை ஓ.பன்னீர்செல்வம் மீது இப்போதும் கடைக்கோடி அதிமுக தொண்டர்களுக்கு உண்டு" என்று குறிப்பிட்ட குபேந்திரன், "அந்த ஆதரவு அபிமானிகளை எப்படி தன் பக்கம் எடப்பாடி பழனிசாமி ஈர்ப்பார் என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்" என்று கூறுகிறார்.
கூட்டணி பேச்சுவார்த்தை என வரும்போது அதில் எழும் சிக்கல்கள், தொகுப்பங்கீடுகள், யாருக்கு வாய்ப்பு தரப்படும் போன்ற சவால்களை எடப்பாடி பழனிசாமி எப்படி சமாளிக்கப்போகிறார் என்பதையும் கவனிக்க வேண்டும் என்கிறார் குபேந்திரன்.
"அதே நேரம், சிறையில் உள்ள சசிகலா வெளியே வருவது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் என்றால், அவரால் உடனடியாக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது" என்றும் குபேந்திரன் மதிப்பிடுகிறார்.
"சிறையில் இருந்த அவர் வெளியே வந்து தனது உடல் நலன் தொடர்புடைய பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அவர் சுதாரித்துக் கொள்ளும்போது, தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை இறுதியாகி தேர்தல் பிரசாரத்தையை கிட்டத்தட்ட அரசியல் கட்சிகள் தொடங்கியிருக்கும்" என்று குபேந்திரன் குறிப்பிடுகிறார்.
இதேவேளை, சசிகலா அல்லாத டி.டி.வி. தினகரன் மற்றும் அதிமுக இணைப்பு என்பது சாத்தியமற்றது என்றும் தற்போதைய நிலவரப்படி அதிமுகவும் பாஜகவும் அரசியல் கூட்டணியை அடுத்த ஆண்டு தேர்தலுக்கு தொடருவதாக இருந்தால், நிச்சயம் அதில் டி.டி.வி. தினகரன் இடம்பெற வாய்ப்பில்லை என்றும் குபேந்திரன் கருதுகிறார்.
"இதே டி.டி.வி. தினகரன்தான் தனது வாழ்நாள் சபதமாக பாஜக அணியுடன் இனி நான் சேரப்போவதில்லை என்று அறிவித்தார். அவரேஅதை மறந்து விட்டு அந்த கட்சியுடன் அணி சேருவாரா என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்" என்று குபேந்திரன் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- "விடுதலைப்புலிகள்" பிரபாகரன் மகன், மனைவி பயங்கரவாதிகளா? முன்னாள் தளபதி கருத்துக்கு முன்னாள் போராளி எதிர்ப்பு
- இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று - அச்சுறுத்தலில் மக்கள்
- #20thYearOfNaMo: ஆட்சி அதிகாரத்தில் 20 ஆண்டுகளை எட்டிய நரேந்திர மோதி - சாதித்தது எப்படி?
- இலங்கை சுனாமி: ஒரு மகனுக்கு இரு தாய் உரிமை கோரும் வழக்கு - மரபணு பரிசோதனை கட்டணம் செலுத்த நீதிமன்றம் உத்தரவு
- கீட்டோ உணவு முறை என்றால் என்ன, அது மரணத்தைக் கூட ஏற்படுத்துமா?
- அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: ஆளும் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் மைக் பென்ஸ் - யார் இவர்?
- கொரோனா வைரஸ்: குணமடைய சிலருக்கு தாமதம் ஆவது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












