இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று - அச்சுறுத்தலில் மக்கள்

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று - அச்சுறுத்தலில் மக்கள்

பட மூலாதாரம், ISHARA S. KODIKARA

இலங்கையில் கொரோனா மூன்றாவது கொத்தணி பரவ ஆரம்பித்துள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அதன் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக இலங்கை அரசாங்கம் தெரிவிக்கின்றது.

கம்பஹா மாவட்டத்தின் மினுவங்கொட பகுதியிலுள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிப்புரிந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை கடந்த 3ஆம் தேதி உறுதிப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மினுவங்கொட மற்றும் திவுலபிட்டிய ஆகிய பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

அதன்பின்னர், வேயங்கொட வரை ஊரடங்கு சட்டம் விஸ்தரிக்கப்பட்டதுடன், நேற்றைய தினம் கம்பஹா போலீஸ் பிரிவிற்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்றதை அடுத்து, அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக இன்று அதிகாலை முதல் உடன் அமலுக்குவரும் வகையில் மேலும் பல பகுதிகளுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று - அச்சுறுத்தலில் மக்கள்

பட மூலாதாரம், Y.HARAN

மினுங்கொட, திவுலபிட்டிய, வேயங்கொட, கம்பஹா ஆகிய பகுதிகளை தவிர, கனேமுல்ல, கிரிந்திவெல, தொம்பே, மல்வத்துஹிரிபிட்டிய, மீரிகம, நிட்டம்புவ, பூகொட, வீரகுல, வெலிவேரிய, பல்லேவெல, யக்கல ஆகிய பகுதிகளுக்கு உடன் அமலுக்கு வரும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

அத்துடன், களனி பிராந்தியத்தின் ஜா-எல மற்றும் கந்தானை ஆகிய பகுதிகளுக்கும் இன்று முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை அமலில் இருக்கும் என இலங்கை போலீஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு செல்வதற்கும், அந்த பகுதிகளிலுள்ள மக்கள் வெளியில் வருவதற்கும் முழுமையாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தூர இடங்களை நோக்கி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளை கடந்து செல்லும் பஸ்கள், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிறுத்துதல் மற்றும் பயணிகளை ஏற்றுதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் அறிவித்துள்ளனர்.

மேலும், ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள ரயில் நிலையங்களில், ரயில்கள் நிறுத்துவதும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மக்கள் ஒன்று கூடுவதற்கு தடை

நாடு முழுவதும் மக்கள் ஒன்று கூடுவதற்கு தடை

பட மூலாதாரம், Y.HARAN

மினுவங்கொட பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்டு வருகின்ற நிலையில், நாடு முழுவதும் மக்கள் ஒன்று கூடுவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மாநாடுகள், கூட்டங்கள், கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், களியாட்டங்கள், விழாக்கள், ஊர்வலங்கள், பேரணிகள் மற்றும் அத்தியாவசியமற்ற கூட்டங்கள் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த தடையுத்தரவு நாடு பூராகவும் அமுலில் இருக்கும் எனவும் சுகாதார அமைச்சு அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.

கொவிட் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சு எதிர்பார்ப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் பதில் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய அதிகாரி எஸ்.ஸ்ரீதரன் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளுக்கு செல்ல மறுப்பு தெரிவிக்கும் நோயாளர்கள்

மருத்துவமனைகளுக்கு செல்ல மறுப்பு தெரிவிக்கும் நோயாளர்கள்

பட மூலாதாரம், Y.HARAN

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்குவதற்காக அழைத்து செல்ல அம்பியூலன்ஸ் வண்டிகளை வீடுகளுக்கு அனுப்புகின்ற போதிலும், சிலர் சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு செல்ல மறுப்பு தெரிவித்து வருவதாக சுகாதார அமைச்சு அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டு வருகின்றமையினால், அந்த பகுதியில் பி.சி.ஆர் பரிசோதனைகள் அதிகளவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு கூறுகின்றது.

இந்த பரிசோதனைகளில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்படுவோரில் சிலர், சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு செல்ல மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிடுகின்றது.

அதனால், சுகாதார அமைச்சினால் அனுப்பி வைக்கப்படும் அம்பியூலன்ஸ் வண்டிகளில் சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு செல்லுமாறும் பொதுமக்களிடம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்ச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வாறு சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு செல்ல மறுப்பு தெரிவிக்கும் நபர்களுக்கு எதிராக, தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் தவறிழைத்தவர்கள் என குறிப்பிட்டு, அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, கம்பஹா மாவட்டம் இலங்கையின் மிக முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக காணப்படுகின்றது.

கம்பஹா மாவட்டம்

பட மூலாதாரம், Y.HARAN

குறிப்பாக இலங்கையின் பிரதான விமான நிலையமான கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கம்பஹா மாவட்டத்திலேயே அமைந்துள்ளது.

இந்த விமான நிலையம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் வெளிநாட்டவர்கள் தங்கும் வகையிலான அதிகளவான ஹோட்டல்கள் இருக்கின்றன.

சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற வகையில் இந்த மாவட்டம் அமைந்துள்ளதுடன், சுற்றுலா பயணிகளினால் அதிகளவிலான வருமானமும் கிடைக்கின்றது.

மேலும், கடற்றொழிலாளர்கள் அதிகளவில் வாழும் மாவட்டங்களில் கம்பஹா மாவட்டமும் ஒன்றாகும்.

இலங்கையின் பிரதான வளங்களை கொண்ட இந்த மாவட்டத்தின் பெருமளவிலான பகுதிகள் இன்று மூடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது கொத்தணியும் நோயாளர்களும்

கடந்த மூன்றாம் தேதி முதல் நேற்றிரவு வரையான காலப் பகுதியில் மாத்திரம் 832 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்திருந்தது.

அடையாளம் காணப்பட்ட அனைத்து நோயாளர்களும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது.

அத்துடன், நேற்றைய தினத்தில் மாத்திரம் 4880 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், இலங்கையில் கொரோனா தொற்றை கண்டறிவதற்காக இதுவரை மூன்று லட்சத்து 3 ஆயிரத்து 381 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றாளர்களை அடையாளம் கண்டுக்கொள்வதற்காக இராணுவம், போலீஸார் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினரின் ஒத்துழைப்புக்களுடன் சுகாதார அமைச்சு தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 4252 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 3266 பேர் குணமடைந்துள்ள அதேவேளை, 973 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் முதலாவது கொவிட் கொத்தணி கடற்படைக்குள் உருவாகியிருந்ததுடன், இரண்டாவது கொவிட் கொத்தணி கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்குள் பரவியிருந்தது.

இந்த நிலையில், மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் தற்போது மூன்றாவது கொவிட் கொத்தணி பரவ ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: