அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு - ஓ.பன்னீர்செல்வம் ; தமிழக அரசியல் மோதல் முடிவு

பட மூலாதாரம், @CMOTamilNadu
எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளாராக எடப்பாடி பழனிசாமி தேர்வுச் செய்யப்பட்டுள்ளதாக தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
திண்டுக்கல் சீனிவாசன் , தங்கமணி,எஸ்.பி. வேலுமணி, ஜெயகுமார், சி.வி. சண்முகம், காமராஜ், ஜே.சி.டி பிரபாகரன் ,மனோஜ் பாண்டியன், ப. மோகன், கோபாலகிருஷ்ணன், மாணிக்கம் ஆகிய 11 பேரும் அதிமுகவின் வழிகாட்டு குழுவில் இருப்பார்கள் என்றும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது .
இவர்களில் கடைசி ஐவரும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆவர்.
அதிமுக அதிகாரச் சண்டை
தேர்தல் காலம் நெருங்க நெருங்க ஆளும் கட்சியான அதிமுகவில் அதிகாரச் சண்டை கொஞ்சம் கொஞ்சமாகச் சூடு பிடித்து வந்தது.
எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அவரையே முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டுமென கூறிய நிலையில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் அதனை ஏற்க மறுத்து வந்தனர்.
தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஒவ்வொரு கூட்டத்திலும், அதிமுகவின் முக்கிய கூட்டங்களிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து கலந்து கொள்வது வழக்கம்.
ஆனால், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் பற்றி அக்டோபர் 7ம் தேதி அறிவிக்கப்படும் என செப்டம்பர் 28 அன்று அறிவிப்பு வெளியான பின்னர், முக்கிய கூட்டத்தில் பன்னீர்செல்வம் கலந்து கொள்ளாதது மேலும் பரபரப்பை கூட்டியது.
அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்று கட்சிக்குள் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருதரப்பிலும் நிலவி வந்த மோதல் இன்றைய அறிவிப்பால் தற்போதைக்கு முடிவுக்கு வருகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முதலமைச்சரான ஓ. பன்னீர்செல்வம், அடுத்த சில மாதங்களில் அந்தப் பதவியிலிருந்து ராஜினாமா செய்யும்படி சசிகலா தரப்பினரால் வலியுறுத்தப்பட்டார்.

பட மூலாதாரம், Aiadmk
அப்போது தர்மயுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.
இதற்குச் சில நாட்களுக்குப் பிறகு எடப்பாடி கே. பழனிசாமி முதல்வராக்கப்பட்டார். அந்தத் தருணத்தில் தனி அணியாகச் செயல்பட்ட ஓ. பன்னீர்செல்வம் சில மாதங்களுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தரப்பினருடன் இணைந்தார். துணை முதல்வராகவும் பதவியேற்றார்.
இந்த இணைப்புக்கு பின் கட்சிக்கு பன்னீர்செல்வமும், ஆட்சிக்கு பழனிசாமியும் தலைமை ஏற்பது என முடிவாகி ஓ. பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார்.
எனினும், கட்சி வெளியிடும் அலுவல்பூர்வ அறிவிக்கைகள் அனைத்தும் இருவரின் பெயரிலும் வெளியிடப்பட்டு, அதில் இருவருமே கையெழுத்திட்டு வந்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












