அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? - ஒபிஎஸ், இபிஎஸ் இன்று அறிவிப்பு, தமிழக அரசியலில் பரபரப்பு

பட மூலாதாரம், Aiadmk official facebook page
முக்கிய இந்திய நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணையப் பக்கங்களில் வெளியான செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
இந்து தமிழ் திசை - அதிமுக வேட்பாளர் யார்?
அதிமுக முதல்வர் வேட்பாளர், வழிகாட்டுதல் குழு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருதரப்பிலும் நேற்று இரவு வரைதீவிர ஆலோசனை நடத்தப்பட்டது என்று இந்து தமிழ் திசை இணையதளச் செய்தி கூறுகிறது.
இரு தரப்பு நிபந்தனைகள், கோரிக்கைகளும் ஏற்கப்படும் நிலையை எட்டியதாக கூறப்படுகிறது. முதல்வர் வேட்பாளர் யார் என்று இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் இணைந்து இன்று காலை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது என்கிறது அந்தச் செய்தி.
தினத்தந்தி - முதல்வர் வேட்பாளர் யார் என அதிகாலை வரை ஆலோசனை
முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த ஆலோசனை இன்று அதிகாலை மூன்று மணி வரை நீடித்தது என்கிறது தினத்தந்தி செய்தி.
நேற்று காலை 11.10 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இருந்து புறப்பட்ட அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு வந்தனர். அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்லி அனுப்பியதை ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறினார்கள்.
மேலும், வழிகாட்டு குழுவில் யார் - யாரை அமர்த்தலாம் என்றும் ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டம் மதியம் 1.40 மணி வரை சுமார் 2½ மணி நேரம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, இங்கு பேசப்பட்ட விஷயங்களை எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிப்பதற்காக அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் புறப்பட்டு சென்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ½ மணி நேரம் அவர்கள் பேசினார்கள்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அவரவர் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால், இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
நேற்று காலை தொடங்கிய ஆலோசனை இன்று அதிகாலை 3 மணி வரை நீடித்தது. அமைச்சர்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் மாறி மாறி முதல்வர், துணை முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தியது அதிமுகவில் உச்ச கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை 10 மணிக்கு நல்ல செய்தி கிடைக்கும், மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வருவதற்கான ஆக்கப்பூர்வ பணிகள் நடக்கிறது என்று அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு அதிகாலை பேட்டி அளிக்கையில் தெரிவித்தார் என்கிறது தினத்தந்தி செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













