அப்துல் கலாமை அமைச்சராக்க விரும்பிய அடல் பிஹாரி வாஜ்பேயி; பதவி விலகலை தடுத்த மன்மோகன் சிங்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரெஹான் ஃபைஜல்
- பதவி, பிபிசி
தான் ஒரு பலவீனமான பிரதமர் என்ற பாரதிய ஜனதா கட்சியின் விமர்சனத்தால் நொந்து போயிருந்த அப்போதைய பிரதமர் இந்தர் குமார் குஜ்ரால், தனது அரசு வீழ்ச்சியடையும் முன்னர், தன்னை நாட்டின் பாதுகாப்பு குறித்து மிகுந்த அக்கறை கொண்டவராக உலகுக்கும் நாட்டுக்கும் நிரூபிக்க முடிவு செய்தார்.
'ஏவுகணை நாயகன்' என்று அழைக்கப்படும் ஏ.பி.ஜே. அப்துல் கலாமுக்கு பாரத ரத்னா வழங்க முடிவு செய்தார். அதற்கு முன்னர், 1952 ஆம் ஆண்டில், சி.வி.ராமனைத் தவிர வேறு எந்த விஞ்ஞானியும் இந்த விருதுக்குத் தகுதியானவராகக் கருதப்படவில்லை.
மார்ச் 1, 1998 அன்று, இந்தியக் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த 'பாரத் ரத்னா' விருது வழங்கும் விழாவில் கலாம் பதற்றமாகக் காணப்பட்டார். தனது நீல நிற டையை மீண்டும் மீண்டும் தொட்டுப் பார்த்துக் கொண்டார்.
இதுபோன்ற அதிகாரப்பூர்வ விழாக்களில் கலாமுக்கு ஈடுபாடு இருந்ததில்லை. காரணம் உடைக் கட்டுப்பாடுகள். தன் இயல்பு நிலைக்கு ஒவ்வாத ஆடைகளை அணிய வேண்டியிருந்தது. அவர் ஒருபோதும் சூட் அணிவதை விரும்பியதில்லை. அவர் எப்போதும் தோல் காலணிகளுக்கு பதிலாக விளையாட்டுகளில் பயன்படுத்தப்படும் காலணிகளை அணியவே விரும்பினார்.
பாரத ரத்னா பெற்ற பிறகு அவரை வாழ்த்தியவர்களில் முதன்மையானவர்களில் ஒருவர் அடல் பிஹாரி வாஜ்பேயி.
எஸ்.எல்.வி 3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதையடுத்து, 1980 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்,அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கலாமையும் பேராசிரியர் சதீஷ் தவனையும் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க அழைத்திருந்தார். கலாம் மற்றும் வாஜ்பேயி சந்தித்தது அதுதான் முதல் முறை.
இந்த அழைப்பு வந்தவுடன், கலாம் பதற்றமடைந்து தவனிடம், தன்னிடம் சூட் உடையோ நல்ல காலணிகளோ இல்லை என்றும் தன்னிடம் சாதாரண செருப்பு மட்டுமே உள்ளது என்றும் கூறியுள்ளார். அதற்கு சதீஷ் தவன் புன்னகையுடன் அவரிடம், 'கலாம், நீ ஏற்கனவே வெற்றி என்னும் ஆடையை அணிந்திருக்கிறாய். அதனால், எப்படியும் நீ அங்கு வரவேண்டும்', என்றார்.
கலாமுக்கு அமைச்சராக அழைப்பு விடுத்த வாஜ்பேயி

பட மூலாதாரம், Getty Images
பிரபல பத்திரிகையாளர் ராஜ் செங்கப்பா, 'அமைதிக்கான ஆயுதங்கள்' என்ற தனது புத்தகத்தில், 'இந்திரா காந்தி அந்த கூட்டத்தில் கலாமை அறிமுகப்படுத்தியபோது, அவருடன் கைகுலுக்குவதற்கு பதில், கலாமை ஆரத் தழுவினார் வாஜ்பேயி.. இதைப் பார்த்த இந்திரா காந்தி குறும்புச் சிரிப்புடன், வாஜ்பேயியைச் சீண்டும் விதமாக, 'அடல்ஜி ஆனால் கலாம் ஒரு இஸ்லாமியர்' என்றார். அப்போது வாஜ்பேயி, 'ஆம், ஆனால் அவர் முதலில் ஒரு இந்தியர். தவிர ஒரு சிறந்த விஞ்ஞானி' என்று பதிலளித்தார்.
18 ஆண்டுகளுக்குப் பிறகு, வாஜ்பேயி இரண்டாவது முறையாக பிரதமரானபோது, அவர் தனது அமைச்சரவையில் பங்கேற்க கலாமுக்கு அழைப்பு விடுத்தார். இதற்கு கலாம் ஒப்புக்கொண்டிருந்தால், வாஜ்பேயிக்கு ஓர் திறமையான அமைச்சர் கிடைத்திருப்பார். மேலும், பாஜக அரசாங்கத்தில் இஸ்லாமியர்கள் புறக்கணிக்கப்பட மாட்டார்கள் என்ற செய்தி இந்திய இஸ்லாமியர்களுக்கும் சென்றிருக்கும்.
இது குறித்து ஒரு நாள் முழுவதும் யோசனை செய்தார் கலாம். அடுத்த நாள் அவர் வாஜ்பேயியை சந்தித்து, மிகவும் பணிவுடன் அமைச்சர் பதவியை ஏற்க மறுத்து விட்டார். 'பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அணு ஆயுத சோதனைத் திட்டம் அதன் இறுதி கட்டத்தை எட்டுகிறது. அதில் தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதன் மூலம் நாட்டுக்குச் சிறப்பாகச் சேவை செய்ய முடியும் என்றும் கூறினார்.
இரண்டு மாதங்கள் கழித்து போக்ரானில் அணு வெடிப்புச் சோதனை வெற்றிகரமாக நடந்தபோது, கலாம் ஏன் அந்தப் பதவியை ஏற்கவில்லை என்பது அப்போது எல்லோருக்கும் தெளிவாகியது.
கலாமை குடியரசு தலைவராக தேர்ந்தெடுத்த வாஜ்பேயி
ஜூன் 10, 2002 அன்று, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கலாநிதியிடமிருந்து ஏ.பி.ஜே. அப்துல் கலாமுக்கு ஒரு செய்தி அனுப்பப்படுகிறது. கலாமைத் தொடர்பு கொள்ள பிரதமர் அலுவலகம் முயற்சிப்பதாகவும் அதனால், கலாமை உடனடியாகத் துணைவேந்தர் அலுவலகத்திற்கு வரும்படியும் தகவல் வருகிறது.
பிரதமர் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டவுடன், வாஜ்பேயி மறுமுனையில் பேசினார். கலாமிடம், 'நீங்கள் இந்த நாட்டுக்கு குடியரசு தலைவராகச் சேவை செய்ய வேண்டும்' என்றார். கலாம் வாஜ்பேயிக்கு நன்றி தெரிவித்து, இது குறித்துச் பரிசீலிக்க ஒரு மணி நேரம் தேவை என்றார். வாஜ்பேி, 'நீங்கள் நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் உங்களிடமிருந்து சாதகமான பதில்தான் வேண்டும்" என்றார்.
மாலைக்குள், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரமோத் மகாஜன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி ஆகியோர், கூட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, கலாமின் பெயரை தங்கள் கூட்டணியின் வேட்பாளராக அறிவித்தனர். டாக்டர் கலாம் டெல்லியை அடைந்தபோது, பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவரை விமான நிலையத்தில் வரவேற்றார்.
கலாம் ஏஷியாட் வில்லேஜில் உள்ள டிஆர்டிஓ விருந்தினர் மாளிகையில் தங்க விருப்பம் தெரிவித்தார்.
ஜூன் 18, 2002 அன்று, கலாம் தனது வேட்பு மனுவை அடல் பிஹாரி வாஜ்பேயி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் முன்னிலையில் தாக்கல் செய்தார். படிவத்தை நிரப்புகையில், 'நீங்களும் என்னைப் போல ஒரு திருமணமாகாதவர்' என்று வாஜ்பேயி அவரிடம் கேலியாகச் சொன்னார். அதற்கு கலாம் சிரித்துக் கொண்டே பதிலளித்தார், 'பிரதமர் அவர்களே, நான் ஒரு திருமணமாகாதவன் மட்டுமல்ல பிரம்மச்சாரியும் கூட,' என்று.
கலாமின் சூட் உருவான கதை
கலாம் குடியரசு தலைவரான பிறகு, அவர் அணிய வேண்டிய உடை என்ன? என்பது மிகப்பெரிய பிரச்சனை ஆனது.
பல ஆண்டுகளாக, நீல நிறச் சட்டை மற்றும் விளையாட்டுக் காலணிகள் மட்டுமே அணிந்திருந்த கலாமுக்கு, குடியரசு தலைவரான பிறகு அவற்றைத் தொடர்ந்து அணிய முடியவில்லை. பல முந்தைய குடியரசு தலைவர்களின் சூட்களைத் தைத்து வந்த குடியரசுத் தலைவர் மாளிகையின் தையல்காரர் ஒருவர் இருந்தார். ஒரு நாள், அவர் டாக்டர் கலாமுக்கு சூட் தைக்க அளவெடுத்தார்.
கலாமின் வாழ்க்கை வரலாறை எழுதிய அவரது சக விஞ்ஞானியான அருண் திவாரி தனது 'ஏ.பி.ஜே. அப்துல் கலாம் எ லைஃப்' என்ற புத்தகத்தில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார், '"சில நாட்களுக்குப் பிறகு, தையல்காரர் மார்புப் பகுதியை மூடும் நான்கு புதிய சூட்களைத் தைத்துக் கொண்டு வந்தார். சில நிமிடங்களில், எப்போதும் மிகச் சாதாரண உடைகளையே அணிந்த கலாமின் தோற்றமே மிடுக்காக மாறிவிட்டது. ஆனால், கலாம் அதில் மகிழ்ச்சியடையவில்லை. அவர் என்னிடம், 'என்னால் இதில் சுவாசிக்க முடியவில்லை. இதன் வடிவமைப்பில் ஏதாவது மாற்றம் செய்ய முடியுமா?" என்று கேட்டார்.
கலங்கிய தையல்காரர், என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டே இருந்தார். அதற்குள் கலாம் அவர்களே அதற்கும் வழி கூறினார். கழுத்தின் அருகிலிருந்து சிறிது வெட்ட வேண்டும் என்று அவரே அறிவுறுத்தினார். அப்போதிருந்து, கலாமின் சூட்டின் இந்த பாணி, 'கலாம் சூட்' என்று அழைக்கப்பட்டது.
புதிய குடியரசு தலைவருக்கு டை அணிவதிலும் விருப்பமில்லை. மார்புப் பகுதியை அழுத்திப் பிடிக்கும் சூட் போல, டையும் அவருக்கு மூச்சு முட்டுவது போலிருந்தது. ஒருமுறை அவர் தனது கண்ணாடியை அவரது டையைக் கொண்டு துடைப்பதை நான் பார்த்தேன். இப்படிச் செய்யக்கூடாது என்று சொன்னேன். அதற்கு அவர், "டை என்பது முற்றிலும் பயனற்ற ஒரு ஆடை. குறைந்தபட்சம் நான் அதைக் கொஞ்சம் பயன்படுத்துகிறேன்." என்றார்.
காலைத் தொழுகையை முறைப்படி செய்த கலாம்

பட மூலாதாரம், Getty Images
மிகவும் பிஸியாக இருந்த போதிலும், கலாம் தனக்காக சிறிது நேரம் ஒதுக்கிக் கொள்வார். ருத்ர வீணை வாசிப்பதில் அவருக்குப் பிரியம் இருந்தது.
"காலை பத்தரை மணிக்கு காலை உணவை எடுத்துக்கொள்வது வழக்கம். அதனால்தான் அவரது மதிய உணவு தாமதமானது. அவரது மதிய உணவு மதியம் 4:30 மணிக்கும், இரவு உணவு பெரும்பாலும் இரவு 12 மணிக்குப் பிறகும் இருந்தது. கலாம் ஒரு முஸ்லிம். தினமும் காலையில் ஃபஜ்ர் தொழுகை செய்வார். அவர் குரான், கீதை படிப்பதையும் அடிக்கடி பார்த்தேன். திருவள்ளுவரின் 'திருக்குறள்' படித்து வந்தார். அவர் ஒரு தீவிர சைவ உணவு உண்பவர். மதுவை தொடவே மாட்டார். அவர் எங்கு தங்கினாலும், எளிய சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று நாடு முழுவதும் அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டன." என்று கலாமின் பத்திரிகைச் செயலாளராக இருந்த எஸ்எம் கான் என்னிடம் தெரிவித்தார்.
அவருக்கு ஹிந்துத்துவவாத குழுக்களிடம் ஒரு தனி ஈடுபாடு இருந்ததாக ஒரு சிலர் குற்றம்சாட்டி வந்தனர். அந்தக் குழுக்களைச் சேர்ந்தவர்கள், அனைத்து இஸ்லாமியர்களும் இவரைப் போலவே இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்ததுடன் அப்படி இல்லாதவர்களின் நடத்தையைக் கேள்விக்குள்ளாக்கவும் செய்தனர்.
பாஜக-வின் பொது சிவில் சட்டம் என்ற கொள்கைக்கு கலாம் ஆதரவளித்ததும் கேள்விக்குள்ளானது.
இடதுசாரிகள் மற்றும் அறிவார்ந்த சமூகத்தினரின் ஒரு பிரிவினர், கலாம் சத்ய சாய் பாபாவை சந்திக்க புட்டபர்த்தி சென்றது குறித்தும் விமரிசித்தனர். விஞ்ஞான சிந்தனையை ஆதரிக்கும் ஒருவர் இவ்வாறு செய்வது மக்களுக்குத் தவறான முன்னுதாரணாமாகும் என்பது அவர்களின் வாதமாக இருந்தது.
தன் குடும்பத்தினரை குடியரசு தலைவர் மாளிகையில் தங்க வைத்ததற்கான செலவான மூன்றரை லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவர் செலுத்தினார்.
கலாம் தனது மூத்த சகோதரர் ஏ.பி.ஜே.முத்து மரைக்காயரை மிகவும் நேசித்தார். ஆனால் அவரை ஒருபோதும் தன்னுடன் குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்கும்படி கேட்டதில்லை.
கலாம், இந்திய குடியரசு தலைவராக இருந்தபோது அவரது சகோதரரின் பேரன் குலாம் மொயினுதீன் டெல்லியில் பணிபுரிந்து வந்தார். ஆனாலும் அவர் முனீர்காவில் ஒரு வாடகை அறையில் வசித்து வந்தார்.
மே 2006 இல், கலாம் தனது குடும்பத்தினர் சுமார் 52 பேரை டெல்லிக்கு அழைத்தார். அவர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையில் எட்டு நாட்கள் தங்கினர்.
கலாமின் செயலாளராக இருந்த பி.எம்.நாயர் என்னிடம், "அவர்கள் ராஷ்டிரபதி பவனில் தங்குவதற்கு கலாம் வாடகை செலுத்தினார். ஒரு கோப்பை தேநீர் கூட கணக்கிடப்பட்டது. அவர்கள் ஒரு பேருந்தில் அஜ்மீர் ஷெரீஃப் சென்றனர், அதன் கட்டணத்தைக் கூட கலாம் செலுத்திவிட்டார். அவர்கள் ஊருக்குப் புறப்பட்ட பிறகு, கலாம் தனது கணக்கிலிருந்து மூன்று லட்சத்து ஐம்பத்து இரண்டாயிரம் ரூபாய் காசோலையை ராஷ்டிரபதி பவன் அலுவலகத்திற்கு அனுப்பினார்" என்றார்.

பட மூலாதாரம், kalam family
டிசம்பர் 2005 இல், அவரது மூத்த சகோதரர் ஏ.பி.ஜே.முத்து மரைக்காயர், அவரது மகள் நஜிமா மற்றும் அவரது பேரன் ஆகியோர் ஹஜ் பயணத்திற்காக மக்கா சென்றனர். இது குறித்து சௌதி அரேபியாவில் உள்ள இந்திய தூதர் அறிந்ததும், அவர் குடியரசு தலைவரை அழைத்து குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும் வழங்க முன்வந்தார்.
அதற்கு கலாம் கூறிய பதில் இது தான். '90 வயதான எனது சகோதரர் எந்தவொரு அரசாங்க ஏற்பாடும் இல்லாமல் ஒரு பொதுவான யாத்ரீகரைப் போல ஹஜ் செய்ய அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்று அவர் தெரிவித்தார்.
இஃப்தார் விருந்துக்கான தொகை ஆதரவற்ற குழந்தைகளுக்குச் செலவிடப்பட்டது
நாயர் இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம் குறித்தும் என்னிடம் கூறினார்.
'நவம்பர் 2002-ல், கலாம் என்னை அழைத்து,' நாம் ஏன் இஃப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்? இங்கு வரக்கூடிய விருந்தினர்கள், வசதியானவர்களாகத்தான் இருக்கிறார்கள். எதற்கு இவ்வளவு செலவு?" என்றார்.
குடியரசுத் தலைவர் மாளிகையின் விருந்தோம்பல் துறையுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளப்பட்டது.
இஃப்தார் விருந்துக்கு சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் செலவாகும் என்று கூறப்பட்டது.
கலாம், 'இந்த பணத்தை ஏன் ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொடுக்கக் கூடாது? நீங்கள் ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களைத் தேர்ந்தெடுத்து இந்த பணம் வீணடிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்" என்றார்..
குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து இஃப்தார் விருந்துக்கு ஒதுக்கப்பட்ட தொகைக்கு மாவு, பயறு, போர்வைகள் மற்றும் ஸ்வெட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு 28 ஆதரவற்றோர் இல்லங்களின் குழந்தைகளுக்கு விநியோகிக்கப்பட்டன.
ஆனால் விஷயம் இத்துடன் முடியவில்லை. கலாம் என்னை மீண்டும் அழைத்தார், அவரும் நானும் அறையில் தனியாக இருந்தபோது, 'நீங்கள் அரசாங்க பணத்திலிருந்து இந்தப் பொருட்களை வாங்கியுள்ளீர்கள். இதில் எனது பங்களிப்பு ஒன்றுமில்லை. ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை உங்களிடம் தருகிறேன். நீங்கள் இஃப்தார் தொகையைச் செலவு செய்ததைப் போலவே இதையும் பயனுள்ளதாக்க வேண்டும். ஆனால், நான் இந்தப் பணத்தை கொடுத்தேன் என்று யாரிடமும் சொல்லாதீர்கள்'' என்றார்.
அரசியலுக்கு அப்பாற்பட்ட குடியரசு தலைவர்
கலாம் அவர்கள்தான் அனேகமாக இந்தியாவின் முதல் அரசியல் சாராத குடியரசு தலைவராக இருப்பார். அவருக்கு இணையாக ஒருவரைக் கூறமுடியுமானால், அது டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். ஆனால் ராதாகிருஷ்ணன் முற்றிலும் அரசியல் சாராதவர் அல்ல, சோவியத் யூனியனுக்கான இந்தியாவின் தூதராக அவர் இருந்தார்.
மே 22 நள்ளிரவில், அதுவும் தான் ரஷ்ய பயணத்தில் இருந்த போது, பிஹாரில் குடியரசு தலைவர் ஆட்சியை அறிவிக்க ஒப்புதல் அளித்தபோது, கலாமின் அரசியல் அனுபவமின்மை வெளிப்பட்டது.
பிஹார் சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆளுநர் பூட்டா சிங் அனைத்து வழிகளையும் ஆராயாமலே, பிஹாரில் குடியரசு தலைவர் ஆட்சியை விதிக்கப் பரிந்துரைத்தார்.
ஒரு அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு மத்திய அமைச்சரவை உடனடியாக குடியரசு தலைவரின் கையொப்பத்திற்காக அதனை மாஸ்கோவிற்கு தொலைநகல் அனுப்பியது. கலாம் இந்த பரிந்துரையில் இரவில் ஒன்றரை மணிக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் கையெழுத்திட்டார்.
ஆனால் ஐந்து மாதங்களுக்குப் பிறகு, உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை அரசியலமைப்பிற்கு முரணானது என்று தீர்ப்பு வழங்கியது. இதன் காரணமாக யுபிஏ அரசாங்கமும் கலாமும் மிகவும் விமரிசனத்துக்குள்ளாயினர்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் தான் மிகவும் வேதனை அடைந்ததாகவும், இந்த விவகாரத்தால் ராஜினாமா செய்ய நினைத்ததாகவும், ஆனால் பிரதமர் மன்மோகன் சிங் இது நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று கூறி அந்த எண்ணத்தைக் கைவிடச் செய்தார் என்றும் கலாம் தனது 'சவால்கள் மூலம் ஒரு பயணம்' ( A JOURNEY THROUGH THE CHALLENGES) என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்,
மயிலின் கட்டியை நீக்க உதவி
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், டாக்டர் கலாமின் மனித நேயம் மிகவும் குறிப்பிடத்தக்கது. ஒருமுறை குளிர்காலத்தில் அவர் குடியரசுத் தலைவர் மாளிகையின் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தார். பாதுகாப்புக் காவலரின் அறையில் ஹீட்டர் வசதி இல்லை என்பதையும், கடுமையான குளிர்காலத்தில் பாதுகாப்புக் காவலர்கள் நடுங்குவதையும் அவர் கவனித்தார்.
அவர் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து குளிர்காலத்தில் காவலரின் அறையில் ஒரு ஹீட்டரையும், கோடையில் ஒரு மின் விசிறியையும் நிறுவ ஏற்பாடு செய்தார்.

பட மூலாதாரம், Getty Images
எஸ்.எம். கான் மற்றொரு கதையை விவரித்தார், "ஒருமுறை மொகல் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு மயில் வாயைத் திறக்க முடியாமல் துன்பப்படுவதைக் கண்டார். அவர் உடனடியாக கால்நடை மருத்துவர் சுதிர் குமாரை அழைத்து மயிலின் உடல்நலப் பரிசோதனை செய்யச் சொன்னார். பரிசோதனையில், மயிலின் வாயில் ஒரு கட்டி இருப்பது கண்டறியப்பட்டது, இதன் காரணமாகத் தான் அதனால், வாயைத் திறக்கவோ மூடவோ முடியவில்லை,
எதையும் சாப்பிடவும் முடியாமல் துடிப்பது தெரிந்தது. கலாமின் உத்தரவின் பேரில், டாக்டர் குமார் மயிலுக்கு அவசர அறுவை சிகிச்சை செய்து அதன் கட்டியை அகற்றினார். மயில் சில நாட்கள் ஐ.சி.யுவில் வைக்கப்பட்டு, முழுமையாக உடல் நிலை தேறிய பின்னர் மீண்டும் மொகல் தோட்டத்தில் விடப்பட்டது."
தான்சானியா குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை
அக்டோபர் 15, 2005 அன்று, தனது 74வது பிறந்தநாளில், கலாம் ஹைதராபாதில் இருந்தார்.
அன்று காலை, ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இதய நோயால் பாதிக்கப்பட்ட தான்சானியாவைச் சேர்ந்த சில குழந்தைகளைச் சந்தித்தார். அவர் ஒவ்வொரு குழந்தையின் தலையையும் தடவி, டெல்லியில் இருந்து கொண்டு வந்த சாக்லெட் பெட்டியை ஒவ்வொரு குழந்தைக்கும் கொடுத்தார். வெளியே அமர்ந்திருந்த ஆந்திர ஆளுநர் சுஷில் குமார் ஷிண்டே, முதல்வர் ராஜசேகர ரெட்டி மற்றும் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் இவருக்காகக் காத்திருந்தார்கள்.
அருண் திவாரி, ஏபிஜே கலாமின் வாழ்க்கை வரலாற்றில் எழுதுகிறார், 'செப்டம்பர் 2000 இல் தான்சானியாவுக்கு விஜயம் செய்தபோது, பிறவி இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எந்த சிகிச்சையும் இல்லாமல் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை கலாம் அறிந்து கொண்டார். அங்கிருந்து திரும்பிய பிறகு, இந்தக் குழந்தைகளையும் அவர்களின் தாய்மார்களையும் தாரேசலாமிலிருந்து ஹைதராபாத்திற்கு அழைத்து வர எப்படியாவது இலவச ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்று அவர் என்னிடம் கூறினார்.
அப்போது ஏர் இந்தியாவின் தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் இருந்த வி துளசிதாஸுடன் பேசும்படி அவர் என்னிடம் கேட்டார். இந்தப் பணியில் உதவ அவர் ஒப்புக்கொண்டார். பின்னர் கேர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சோமா ராஜு மற்றும் முக்கிய இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கோபிசந்த் மன்னம் ஆகியோரும் அவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க ஒப்புக்கொண்டனர். இந்த குழந்தைகளை அடையாளம் காண இந்தியாவுக்கான தான்சானியத் தூதர் ஈவா ந்சாரோ தாருஸ்ஸலாம் சென்றார்.
24 குழந்தைகளும் அவர்களின் தாய்மார்களும் தாருஸ்ஸலாமிலிருந்து ஹைதராபாதிற்கு அழைத்து வரப்பட்டனர். கேர் அறக்கட்டளை 50 பேர் தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் இலவச ஏற்பாடுகளைச் செய்தது. இந்த மக்கள் அனைவரும் ஹைதராபாத்தில் ஒரு மாத சிகிச்சையின் பின்னர் பாதுகாப்பாக தான்சானியா திரும்பினர்.
சாம் மானேக் ஷா-வுடனான கலாமின் சந்திப்பு
கலாமின் பதவிக்காலம் முடிவுக்கு வரும் சமயத்தில், 1971 போரின் கள வீரரான சாம் மானேக் ஷாவை சந்திக்க விருப்பம் தெரிவித்தார்.
அவர் பிப்ரவரி 2007 இல் அவரைச் சந்திக்க ஊட்டிக்குச் சென்றார். அவரைச் சந்தித்த பின்னர், மானேக் ஷாவுக்கு பீல்ட் மார்ஷல் என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது என்பதையும் ஆனால், அதற்குண்டான சலுகைகள் மற்றும் வசதிகள் வழங்கப்படவில்லை என்பதையும் அவர் அறிந்து கொண்டார்.
டெல்லிக்குத் திரும்பிய பிறகு, இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார். ஃபீல்ட் மார்ஷல் மானேக் ஷாவுடன், மார்ஷல் அர்ஜன் சிங்குக்கும் இந்த பதவி வழங்கப்பட்ட நாளிலிருந்து நிலுவையில் உள்ள அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












