விஜய் சேதுபதியை விமர்சிப்பவர்களுக்கு நடிகை ராதிகா கேள்வி: "உங்களுக்கு வேறு வேலை இல்லையா?"

பட மூலாதாரம், RADHIKA SARATHKUMAR FB
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக வலுத்து வரும் குரல்களுக்கு பிரபல தமிழ் திரைப்பட நடிகை ராதிகா சரத்குமார் எதிர்வினையாற்றியிருக்கிறார்.
இந்த விவகாரத்தில் கடந்த மூன்று தினங்களாக விஜய் சேதுபதி, தமிழ் இன வெறுப்பாளரான முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில் நடிக்கக் கூடாது என்று பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிய ராஜா, கவிஞர் தாமரை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் விவேக், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை வெளியிட்டனர்.
தமிழக அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனனும் இந்த விவகாரத்தில் விஜய் சேதுபதி தமிழ் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் போனால் அது அவரது எதிர்காலத்துக்கு நல்லது அல்ல என்று கூறியிருந்தார். இந்த நிலையில், நடிகை ராதிகாவின் கருத்து வெளி வந்துள்ளது.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராதிகா, "முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது' என்று கூறுபவர்களுக்கு வேறு வேலையில்லையா? ஏன் இவர்கள் "சன் ரைஸர்ஸ்" குழுவின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் முத்தையாவை நீக்கும்படி கோரவில்லை? அது அரசியல் பின்புலமுள்ளது என்பதாலா..?
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
விஜய் சேதுபதி ஒரு நடிகர். நடிகரை மட்டுமே கட்டுப்படுத்தக் கூடாது. விஜய் சேதுபதி, விளையாட்டு இரண்டையும் முட்டாள்தனமாக அணுகக் கூடாது.." என்று குறிப்பிட்டுள்ளார்.
ராதிகாவின் இந்த டிவிட்டர் பதிவு வைரலானவுடன் ஒன்றரை மணி நேரம் கழித்து மீண்டும் இரண்டு இடுகைகளை அவர் மீண்டும் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
அதில் "சன் டிவி மற்றும் சன் ரைசர்ஸ் உரிமையாளர்கள் வலுவான அரசியல் பின்புலத்துடன் இருந்தாலும் தங்களுடைய அரசியலுடன் விளையாட்டு மற்றும் சினிமா துறைகளை கலக்காமல் தொழில்முறையில் அவற்றை தனியாகக் கையாண்டு வருகிறார்கள். அதுபோல, நமது சினிமா துறையும் அரசியலலில் இருந்து விலகியிருந்தால் என்ன..?" என்று ராதிகா கேள்வி எழுப்பினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
பிறகு மூன்றாவதாக பதிவிட்ட டிவிட்டில், "நான் அந்த ட்வீட்டை பதிவிட்டது சர்ச்சைகளை உருவாக்குவதற்காக அல்ல. நமது திரையுலகையும், சக கலைஞர்களையும் ஆதரிப்பதற்காகத்தான். அதனால்தான் நடுநிலை மற்றும் தொழில்முறையுடன் அணுகும் போக்குக்கு சாட்சியாக சன் ரைசர்ஸ் பெயரை இணைத்து எழுதினேன்," என்று ராதிகா கூறியுள்ளார்.
போக்சோ வழக்கில் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை

பட மூலாதாரம், Getty Images
கோவை மாவட்டத்தில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறுமியின் பெற்றோர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.ஆனைமலை காவல் நிலைய பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு அவரது தந்தை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது சம்மந்தமாக சிறுமி அவரது தாயாரிடம் தெரிவித்தும் அவர் கண்டுகொள்ளாததால் சிறுமி பள்ளி ஆசிரியரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.அதன் அடிப்படையில் சென்ற ஆண்டு ஆனைமலை காவல் நிலையத்தில் கொடுத்த புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின்கீழ் சிறுமியின் பெற்றோர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த வழக்கின் விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூபாய் 1000/- அபராதம் விதித்து நீதிபதி ராதிகா தீர்ப்பு வழங்கியுள்ளார்.
7.5% இடஒதுக்கீடு: வழக்கு விசாரணையின்போது கண் கலங்கிய உயர் நீதிமன்ற நீதிபதி

பட மூலாதாரம், Getty Images
மருத்துவக் கல்வி இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதா இன்னமும் தமிழக ஆளுநரின் பரிசீலனையில் உள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆளுநரின் முடிவு தெரியாமல் மருத்துவக் கலந்தாய்வு தொடர்பாக எந்த முடிவையும் தமிழக அரசு எடுக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மருத்துவக் கல்லூரி சேர்க்கை தொடர்பாக மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், "அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, ஆய்வு செய்து அரசுக்கு ஆலோசனை வழங்க ஓய்வுப்பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் கடந்த மார்ச் மாதம் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டதுடன், அதனடிப்படையில் அறிக்கையும் தாக்கல் செய்தது. அரசு இதனை சட்டமாக இயற்றி ஆளுநரின் இசைவுக்காக அனுப்பியுள்ளது. விரைவில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதாக தெரிகிறது. ஆகவே, மருத்துவ இடங்களில் 7.5% இடங்களை அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு வழங்குவது தொடர்பான உள் ஒதுக்கீட்டு விவகாரம் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து அரசு நிலை அறிக்கையைத் தாக்கல் செய்யவும் இந்த கல்வி ஆண்டிலேயே, மருத்துவ இடங்களில் 7.5% இடங்களை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் பெறும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், மருத்துவ இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பான சட்ட மசோதா இன்னமும் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது. ஆளுநர் அந்த மசோதாவை ஏற்கலாம், நிராகரிக்கலாம், பரிசீலிக்குமாறு கூறலாம் என்று தெரிவித்தார்.
மேலும், மசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ள நிலையில், நீதிமன்றம் ஆளுநருக்கு உத்தரவிட இயலாது. காலக்கெடுவையும் விதிக்க இயலாது என்றும் தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள், "முடிவெடுக்க ஒரு மாத காலம் போதாதா? முடிவுகள் வெளியாகி, மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர், மசோதா தொடர்பான முடிவு வெளியாகி என்ன பயன்? எடுக்கும் முடிவு என்னவாயினும், முன்பாகவே அதனை தெரிவிக்கலாமே?" எனக் கேள்வி எழுப்பினர்.
மேலும், அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பிர்கு விண்ணப்பிக்கவே முன்வரவில்லை என்பதன் மூலம் உளவியல் ரீதியாக அவர்கள் எவ்வாறு பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர் என்பது தெரியவருகிறது. உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டால் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ இடங்களில் இடம்பெறுவது அதிகரிக்கும் என்பது தெரியவருகிறது. கிராமப்புற மாணவர்களின் வருத்தங்களும், வேதனைகளும் அளவிடற்கரியது. அதன் காரணமாகவே ஏழை மாணவர்களின் வாழ்வில் ஏற்றம் பெற ஏதேனும் வாய்ப்பு கிடைக்காதா என எண்ணுவதாக கூறி நீதிபதி கண் கலங்கினார்.
இந்த விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும் என நீதிமன்றம் நம்புவதாகவும் மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என தகவல் தெரிவிக்க வேண்டுமெனக் கூறிய நீதிபதிகள் வழக்கை பிற்பகல் ஒரு மணிக்கு ஒத்திவைத்தனர்.
வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆளுநரின் முடிவு வராமல் மருத்துவ கல்லூரி சேர்க்கை கலந்தாய்வு தொடர்பாக எந்த அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடாது என தமிழக அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையடுத்து, ஏழை மாணவர்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை அக்டோபர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
கனடாவில் 69 மில்லியன் வருட டைனோசர் எலும்புக்கூட்டை கண்டறிந்த 12 வயது சிறுவன்

பட மூலாதாரம், NATURE CONSERVANCY OF CANADA
12 வயது சிறுவன் ஒருவன் 69 மில்லியன் வருடங்கள் பழமையான டைனோசரின் எலும்புக்கூட்டை கண்டறிந்துள்ளான்.
விலங்குகளின் புதைபடிமங்கள் ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்ட அந்த சிறுவன் இம்மாதிரியான புதை படிவங்கள் நிறைந்த கனடாவின் ஆல்பெர்டா பகுதியில் தனது தந்தையுடன் மலையேற்றத்திற்கு சென்றான் அப்போதுதான் அவன், பாறைகளின் இடுக்குகளிலிருந்து எலும்புகள் நீட்டிக் கொண்டு வருவதைப் பார்த்தான்.
வியாழக்கிழமையன்று இந்த எலும்புக்கூட்டைத் தோண்டி எடுக்கும் நிறைவடைந்தது.
அந்த சிறுவனின் பெயர் நாதன் ருஷ்கின். தான் முதன்முதலில் அந்த எலும்புகளைக் கண்டவுடன் அதிர்ச்சியில் பேச்சற்று போனதாக தெரிவிக்கிறான் நாதன்.
"நான் மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியாமல் நின்றிருந்தேன். டைனோசரின் எலும்புக்கூட்டை கண்டறிந்துள்ளேன் என்பது குறித்து யோசிக்கும்போது பெரும் அதிர்ச்சியில் உறைந்தேன்," என பிபிசியிடம் தெரிவித்தான் நாதன்.

பட மூலாதாரம், NATURE CONSERVANCY OF CANADA
டைனோசர்கள் மீது ஆறு வயதிலிருந்து ஆர்வம் கொண்டுள்ள நாதன், கனடாவின் பாதுகாக்கப்பட்ட இடமான ஆல்பெர்டான் பேட்லாந்த்ஸுக்கு அடிக்கடி தனது தந்தையுடன் மலையேற்றம் செல்வதுண்டு.
ஒரு வருடத்துக்கு முன்பு அவர்கள் அந்த இடத்திற்குச் சென்றபோது, சிறு சிறு புதைபடிமங்களைக் கண்டுள்ளனர். இருப்பினும் அது மேலே இருக்கும் பாறைகளிலிருந்து விழுந்திருக்கும் என நாதனின் தந்தை நினைத்துள்ளார்.
எனவே அதை நினைவில் வைத்திருந்த நாதன் இந்த ஆண்டு கோடைக்காலத்தில் அங்குச் சென்று அதை ஆராய்ந்துள்ளான். அந்த எலும்புகள் பாறையைத் தாண்டி வளர்ந்திருந்தது.
அப்பா நீங்கள் இங்கே சீக்கிரம் வாருங்கள் என நாதன் குரல் எழுப்பியதிலிருந்து அவன் எதையோ கண்டறிந்துவிட்டான் என அவரின் தந்தைக்குப் புரிந்தது.
பாங்காக்கில் காவலர்களுடன் மோதும் போராட்டக்காரர்கள்

பட மூலாதாரம், EPA
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அரசுக்கு எதிரான போராட்டக்குழுவினர் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை ஆயிரக்கணக்கணக்கில் திரண்டுள்ளனர். ஆளும் பிரதமர் பதவி விலக வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசுக்கு எதிரான ஜனநாயக இயக்கத்தை முன்னெடுத்த 20க்கும் அதிகமான தலைவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளதால், அவர்களை விடுவிக்க வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டு வருகின்றனர்.
"எங்களுடைய நண்பர்களை விடுதலை செய்யுங்கள்" என்று முழக்கமிடும் அவர்களில் பலரும் மாணவர்கள் வழிநடத்தும் இயக்கத்தின் அடையாள குறியான மூன்று விரல்களை உயர்த்திக் காண்பித்து, தங்களின் வருகையை பதிவு செய்து வருகின்றனர்.
விரிவாக படிக்க: தாய்லாந்து போராட்டங்கள்: பாங்காக்கில் காவலர்களுடன் மோதும் போராட்டக்காரர்கள் - என்ன நடக்கிறது?
புத்தம் புது காலை - திரை விமர்சனம்

பட மூலாதாரம், PUTHAMPUTHUKALAI
அமெஸான் பிரைமில் வெளியாகியிருக்கும் "புத்தம் புது காலை", ஐந்து குறும்படங்களின் தொகுப்பு. கொரோனா ஊரடங்கின் பின்னணியில் பாஸிட்டிவான உணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட படங்கள் இவை.
முதல் படம் சுதா கோங்கரா இயக்கியிருக்கும் 'இளமை இதோ, இதோ'. மனைவியை இழந்த ஒரு ஆணுக்கும் கணவனை இழந்த பெண்ணும் இடையிலான காதலே இந்தப் படத்தின் கதை. இருவருக்கும் வளர்ந்த குழந்தைகள் இருந்தாலும், இளம் காதலர்களைப் போல நடந்துகொள்கிறார்கள். அதைக் காட்ட ஒரு இளம் ஜோடியைப் பயன்படுத்தியிருப்பதும் சிறப்பாக இருக்கிறது.
விரிவாக படிக்க:புத்தம் புது காலை - திரை விமர்சனம்
மருத்துவரின் மாஸ்கை கழற்றும் குழந்தையின் படம் வைரல்

பட மூலாதாரம், DR SAMERCHEAIB INSTAGRAM
துபையில் பிறந்த குழந்தையை மருத்துவர் தூக்கிப்பிடித்து புகைப்படத்துக்கு காட்சி கொடுத்தபோது, அழும் அந்த சுட்டிக்குழந்தை மருத்துவரின் முக கவசத்தை பிடுங்கும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
2020ஆம் ஆண்டை கொரோனா பெருந்தொற்று உலக அளவில் புரட்டிப்போட்ட நிலையில், அதன் விளைவால் அமலில் உள்ள கட்டுப்பாடுகள், கெடுபிடிகள் போன்றவற்றுக்கு மத்தியில் முக கவசத்தை பிடுங்கும் சுட்டிக்குழந்தையின் செயல், விரைவில் இயல்புநிலைக்கு உலகம் திரும்ப வேண்டும் என்பதை புதிய வரவு (குழந்தை) உணர்த்துவது போல பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
எதிர்கால உலகின் அவசியம், முக கவசமில்லாத வாழ்க்கை என்பதை இந்த பிஞ்சுக் குழந்தை உணர்த்துகிறது என்று சிலர் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
நரேந்திர மோதியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பட மூலாதாரம், FACEBOOK / NARENDRA MODI
இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல்களை அவரது அலுவலகம் வெளியிட்டிருக்கிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோதி அமைச்சரவையில் இடம்பெற்றவர்களின் சொத்து மதிப்புகளை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட வேண்டும் என்ற வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இதில், கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி வரையிலான சொத்து மதிப்பு விவரத்தை முதலாவது நபராக பிரதமர் மோதி வெளியிட்டிருக்கிறார்.
அதன்படி, அவரது சொத்து மதிப்பு கடந்த ஆண்டு இருந்த ரூ. 2.49 கோடியில் இருந்து ரூ. 36 லட்சம் உயர்ந்து ரூ. 2.85 கோடி ஆகியிருக்கிறது.
அவரது சொத்து மதிப்பு உயருவதற்கு முக்கிய காரணமாக, வங்கியில் அவர் கடந்த ஆண்டு டெபாசிட் செய்த சுமார் ரூ. 33 லட்சம் என தெரிய வந்துள்ளது.
மேலும், தனது பெயரில் வங்கிக்கடனோ, வாகனமோ வாங்கவில்லை என்றும் மோதி கூறியுள்ளார்.
விரிவாக படிக்க: நரேந்திர மோதியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அவரது வங்கி சேமிப்பு பற்றி விரிவான தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












