நரேந்திர மோதியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? அவரது வங்கி சேமிப்பு பற்றி விரிவான தகவல்கள்

நரேந்திர மோதி

பட மூலாதாரம், FACEBOOK / NARENDRA MODI

இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல்களை அவரது அலுவலகம் வெளியிட்டிருக்கிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி அமைச்சரவையில் இடம்பெற்றவர்களின் சொத்து மதிப்புகளை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட வேண்டும் என்ற வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இதில், கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி வரையிலான சொத்து மதிப்பு விவரத்தை முதலாவது நபராக பிரதமர் மோதி வெளியிட்டிருக்கிறார்.

அதன்படி, அவரது சொத்து மதிப்பு கடந்த ஆண்டு இருந்த ரூ. 2.49 கோடியில் இருந்து ரூ. 36 லட்சம் உயர்ந்து ரூ. 2.85 கோடி ஆகியிருக்கிறது.

அவரது சொத்து மதிப்பு உயருவதற்கு முக்கிய காரணமாக, வங்கியில் அவர் கடந்த ஆண்டு டெபாசிட் செய்த சுமார் ரூ. 33 லட்சம் என தெரிய வந்துள்ளது.

மேலும், தனது பெயரில் வங்கிக்கடனோ, வாகனமோ வாங்கவில்லை என்றும் மோதி கூறியுள்ளார்.

நரேந்திர மோதியின் அசையும் சொத்துகள் எவ்வளவு?

நரேந்திர மோதி

பட மூலாதாரம், FACEBOOK / NARENDRA MODI

கையிருப்பு ரொக்கம்: 2020ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி நிலவரப்படி, பிரதமர் மோதி தனது கையிருப்பில் ரூ. 41,340 வைத்திருப்பதாக கூறியுள்ளார்.

வங்கியில் எவ்வளவு டெபாசிட் உள்ளது?

கடந்த ஜூன் 30ஆம் தேதி நிலவரப்படி இந்திய ஸ்டேட் வங்கியின் காந்தி நகர் என்எஸ்சி கிளையில் மோதி வைத்திருக்கும் சேமிப்புக் கணக்கில் ரூ. 3 லட்சத்து 38 ஆயிரத்து 173 உள்ளது என்றும் அதே வங்கியில் ஃபிக்சட் டெபாசிட் மற்றும் மியூச்சுவல் டெபாசிட் தொகை ரூபாய் ஒரு கோடியே 60 லட்சத்து 28 ஆயிரத்து 38 உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பத்திரங்களில் முதலீடு: எல் அண்ட் டி இன்ஃபிராஸ்டிரக்சுரல் நிறுவனத்தின் ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான (2012ஆம் ஆண்டு ஜனவரி 25) பத்திரத்தை பிரதமர் மோதி வாங்கியிருக்கிறார். அந்த பத்திரங்களை அவர் வாங்கியபோது அவர் குஜராத் மாநில முதல்வராக பதவி வகித்தார்.

இது தவிர என்எஸ்எஸ், எல்ஐசி ஆகியவற்றிலும் பிரதமர் முதலீடு செய்திருக்கிறார். அதன்படி என்எஸ்எஸ் பத்திரத்தின் மதிப்பு ரூ. 8 லட்சத்து 43 ஆயிரத்து 124 என்றும் எல்ஐசி பாலிசிகளின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 957 என்றும் மோதி கூறியுள்ளார்.

ஆபரணங்கள், மதிப்புமிகு பொருட்கள் பட்டியலில், தன்வசம் சுமார் 45 கிராம் எடை கொண்ட நான்கு தங்க மோதிரங்கள் உள்ளதாகவும் அவற்றின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 875 என்றும் மோதி கூறியுள்ளார்.

மொத்தத்தில் தனது அசையும் சொத்துகளின் மதிப்பு, ரூபாய் ஒரு கோடியே 75 லட்சத்து 63 ஆயிரத்து 618 என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோதியின் அசையா சொத்துகள் விவரம்

மோதி

பட மூலாதாரம், FACEBOOK / NARENDRA MODI

குஜராத் மாநிலம் காந்தி நகரில் பிளாட் எண் 401/ஏ, செக்டார் 1 என்ற நான்கு இணை உரிமையாளர்களுடன் சேர்ந்து வாங்கிய குடியிருப்பில், 25 சதவீதம் பங்கு தனக்கு உண்டு என்றும் அதன் மொத்த பரப்பளவு 3,531 சதுர அடி என்றும் அந்த சொத்தின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 488 என்றும் கூறியுள்ளார் மோதி. இந்த சொத்தை 2002ஆம் ஆண்டு, அக்டோபர் 25ஆம் தேதி வாங்கியதாக அவர் கூறியுள்ளார். இது தவிர ரூ. 2 லட்சத்து 47 ஆயிரத்து 208 ரூபாய் அளவில் நிலத்தில் முதலீடு செய்துள்ளதாகவும் அதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூபாய் ஒரு கோடியே பத்து லட்சம் என்றும் மோதி கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: