யுக்ரேனில் உள்ள வீரர்களுக்காக சீனாவிடம் ஆயுதம் கேட்டோமா? ரஷ்யா விளக்கம்

சீனா

பட மூலாதாரம், Getty Images

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் சீனா உதவினால், கடுமையான "விளைவுகளை" சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா கூறுகிறது, என்று அமெரிக்க ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி, படையெடுப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்யா சீனாவிடம் உதவி கோரியுள்ளதாக பல அமெரிக்க செய்தி நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. ஆனால் வாஷிங்டனில் உள்ள சீன தூதரகம், ரஷ்யாவின் இந்த கோரிக்கை குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளது.

ரோமில், அமெரிக்க, சீன உயர் அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு திங்கட்கிழமை நடப்பதற்கு முன்னதாக, இந்த விவகாரத்தில் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுப்பு தொடங்கியதில் இருந்து சீனாவின் நீண்ட கால நட்பு நாடான ரஷ்யாவிற்கு ஆதரவை சீனா தெரிவித்திருந்த போதிலும், ராணுவ மற்றும் பொருளாதார உதவியை இதுவரை வழங்கவில்லை.

ஆனால் ரஷ்யா சீனாவிடமிருந்து ஆளில்லா விமானங்கள் உட்பட ராணுவ தளவாட உதவிகளை கோரியுள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக, அமெரிக்காவில் வெளியான ஊடக செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

யுக்ரேன்

பட மூலாதாரம், Getty Images

இது தொடர்பாக சிஎன்என் CNN செய்தி நிறுனத்தின் நேர்காணலில் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் அவர்கள், " சீனாவிடம் நேரடியாக தொடர்பு கொண்டு, ரஷ்யாவுக்கான ஆதரவு தருதல் அல்லது பொருளாதாரத் தடைகள் ஏற்படுத்தாமல் ஆதரவு தெரிவிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை சீனா செய்தால், அதற்கான பின் விளைவுகளை கடுமையாக சந்திக்கும் என முன்னதாக எச்சரித்துள்ளோம்.

ரஷ்யா மீது போடப்பட்ட தடைகளில் இருந்து, ரஷ்யா மீண்டு வராத வகையில், மீள்வதற்கான் ரஷ்யாவின் முன் முயற்சிகளை நாங்கள் முறியடிப்போம்" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் திட்டத்தை முன்னதாகவே சீனா அறிந்திருக்கும் என அமெரிக்கா நம்புகிறது. அதே சமயத்தில் சீனா, ரஷ்யா தொடுக்க உள்ள படையெடுப்பின் அளவை முழுமையாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஏனெனில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் சொன்ன பொய்யை சீனாவிடமும் சொல்லியிருக்கலாம், என்று கூறினார்.

அமெரிக்க கூற்றை மறுக்கும் சீனா

இந்த நிலையில், தவறான தகவல்களை தடுக்க உதவிடும்படியே ரஷ்யா தங்களிடம் கேட்டுக் கொண்டதாக சீனா தெரிவித்துள்ளது.

யுக்ரேனில் ரஷ்ய படையினருக்கு ராணுவ ரீதியிலான உதவியை வழங்கும்படி ரஷ்யா கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியிட்டுள்ள அமெரிக்க அதிகாரிகளின் தகவலும் தவறான தகவல்தான் என்று சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். யுக்ரேனுடன் ரஷ்ய போரில் சீனாவின் பங்கு குறித்து அமெரிக்கா "தீங்கிழைக்கும்" பொய்களை பரப்புவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், "அமைதியை வலியுறுத்துவதிலும், பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுப்பதிலும் ஆக்கபூர்வமான பங்கை தமது நாடு கொண்டுள்ளது" என்றும் சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் வலியுறுத்தினார்.

சீனாவின் உயர்மட்ட முடிவெடுக்கும் குழுவான அரசியல் தலைமைக்குழு (பொலிட் பீரோ) உறுப்பினரும், சீனா மத்திய வெளியுறவு ஆணையத்தின் தலைவருமான யாங் ஜீச்சியை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இன்று ரோமில் சந்திக்க உள்ளார்.

ரஷ்யா மறுப்பு

இந்த நிலையில், சீனாவிடம் எந்தவித ராணுவ உதவியையும் ரஷ்யா கேட்கவில்லை என்று அந்நாட்டின் அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோஃப் மறுத்துள்ளார்.

யுக்ரேனில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கையைத் தொடருவதற்கு தேவையான தன்னிச்சையான வளங்களை நாங்களே கொண்டுள்ளோம் என்றும் அசல் அட்டவணைப்படியோ அந்த நடவடிக்கை சென்று வருவதாகவும் அது முழுமையாக நிறைவடையும் என்றும் பெஸ்கோஃப் கூறினார்.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன்

ராய்ட்டர்ஸ் செய்தி முகமையில் தெரிவித்துள்ள ஒரு செய்தியில், அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி, இன்று நடக்கவுள்ள சந்திப்பில், சீனாவின் ரஷ்ய ஆதரவு தொடரும் பட்சத்தில் சீனா எப்படி தனிமைப்படுத்தப்படும் என்றும் பேச வாய்ப்பு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக வாஷிங்டன் டிசியில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் லியு பெங்யு பேசுகையில், ரஷ்யாவின் கோரிக்கை தொடர்பாக எதுவும் தெரியாது என்றும், "தற்போது நிலவிவரும் பதற்றமான சூழல் தனிய வேண்டும், பிரச்னைகள் அனைத்தும் கட்டுப்பாட்டை மீறாமல் தடுக்க வேண்டும் என்பதே தங்கள் முதன்மையான குறிக்கோள்" என்றும் கூறியுள்ளார்.

சீனா இதுவரை ரஷ்யாவின் படையெடுப்பிற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. மேலும் ரஷ்யாவின் "சட்டபூர்வமான பாதுகாப்பு கவலைகளை" கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுமென தெரிவித்து இருக்கிறது சீனா.

சீன அரசு ஊடகங்கள் மற்றும் சீன அரசாங்க அதிகாரிகள், ரஷ்யா தற்போது மேற்கொண்டு வருவது "சிறப்பு ராணுவ நடவடிக்கை" அது படையெடுப்பு அல்ல என்ற ரஷ்யாவின் கூற்றையே எதிரொலிக்கின்றன. அதேபோல் ரஷ்யா வெளியிடும் தவறான தகவல்களை சீன ஊடகம் கூறுகிறது.

ஆனால் சீனா அதே நேரத்தில் யுக்ரேனின் இறையாண்மைக்கு, "நிலையான ஆதரவை" வெளிப்படுத்தியுள்ளது. மேலும் அமைதிக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன், இராஜதந்திரத்தின் மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர உதவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைத் தடுக்க சீனா மேலும் முயற்சிகளை செய்ய வேண்டும் என பல நாடுகள் சீனாவை வலியுறுத்தியுள்ளன.

சீனா மீது அழுத்தம் ஏற்படக்கூடும் -ராபின் பிராண்ட், ஷாங்காய் செய்தியாளர்

ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் யுக்ரேனுக்கு உதவுகின்றன, சீனா ரஷ்யாவுக்கு உதவுகிறது; இந்த வரைமுறை, யுக்ரேனில் நடக்கும் போருக்கு மேலும் காரணம் சேர்க்கும்.

அதிபர் ஜோ பைடனின் உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசகர், சீனாவின் மூத்த இராஜதந்திரியை சந்திக்கவுள்ள நிலையில், வெள்ளை மாளிகை தனது கூற்றை மக்கள் முன் பகிரங்கப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை, சீனாவின் மீது அழுத்தம் கொடுக்கும்; அமெரிக்காவின் கூற்றை ஒன்று உறுதிப்படுத்த அல்லது மறுக்க‌ வேண்டிய சூழல் ஏற்படும்.

கடந்த வாரம் ரஷ்யாவுடனான உறவு "வலுவானது மற்றும் நிலையானது" என்று கூறப்பட்ட நிலையில், அந்த உறவின் நன்மை தீமைகளை சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பரிசீலிக்க வைக்க முயற்சிப்பதே இந்த நடவடிக்கையின் பெரிய நோக்கமாக இருக்கலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: