ரஷ்யா – யுக்ரேன் நெருக்கடி சீனாவுக்கு பெரும் சவாலாக இருப்பது ஏன்?

பட மூலாதாரம், AFP
- எழுதியவர், ஸ்டீபன் மெக்டொனெல்
- பதவி, பிபிசி ந்யூஸ், பெய்ஜிங்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கிழக்கு யுக்ரேனில் ராணுவ நடவடிக்கையை அறிவிப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர், 'ரஷ்யாவும் சீனாவும் இணைந்து "ஆழ்ந்த தாராளவாதமற்ற" உலக முறைமையை உருவாக்குவதாக' அமெரிக்கா குற்றம் சாட்டியது.
இருப்பினும், குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் துவக்க விழா நடந்த அதே நாளில் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் கையெழுத்திட்ட புதிய "வரம்புகள் அற்ற" உடன்படிக்கையின் அடிப்படையில், புதினை பின்வாங்கச் செய்ய, ரஷ்யாவின் மீதான தனது செல்வாக்கைப் பயன்படுத்த சீனாவுக்கு இது ஒரு வாய்ப்பு என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.
"ரஷ்ய கூட்டமைப்பு மீது தங்கள் கணிசமான செல்வாக்கைப் பயன்படுத்தினார்களா என்று நீங்கள் சீனாவிடம் கேட்க வேண்டும்." என்று பிரைஸ் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
யுக்ரேன்-ரஷ்யா நெருக்கடி பல முனைகளில் சீனாவுக்கு பெரும் சவாலாக உள்ளது.
குளிர்கால விளையாட்டுப் போட்டிகளின் துவக்க விழாவில் கலந்துகொண்ட ஒரு சில உலகத் தலைவர்களில் புதினும் ஒருவர். இதன் வாயிலாக ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நெருங்கிய ராஜீய உறவை காணமுடிந்தது.
யுக்ரேனின் இரண்டு பிரிந்து சென்ற பகுதிகளுக்கு அங்கீகாரம் அளித்து, அவர்களுக்கு ஆதரவாக துருப்புக்களை அனுப்புவதற்கு விளையாட்டுகள் முடியும் வரை புதின் காத்திருந்தார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
யுக்ரேனில் பதற்றத்தை தணிக்குமாறு எல்லா தரப்புகளையும் சீன அரசு தனது பொது அறிவிப்புகளில் வலியுறுத்தியுள்ளது.
ஆனால் இப்போது ரஷ்யா அத்தகைய கட்டுப்பாடுகளை கைவிட்டதால் மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில் சீனாவின் அதிகாரபூர்வ நிலைப்பாடு என்னவாக இருக்கும்?
ஐரோப்பாவில் போரை ஆதரிப்பதாக தன்னை காட்டிக்கொள்ள முடியாது என்று சீன அரசு நினைக்கிறது. ஆனால் ரஷ்யாவுடன் ராணுவ மற்றும் கேந்திர உறவுகளை வலுப்படுத்த அது விரும்புகிறது.
யுக்ரேனின் முதன்மை வர்த்தக கூட்டாளி சீனா. அந்த நாட்டுடன் நல்ல உறவைப் பேண சீனா விரும்புகிறது. ஆனால் யுக்ரேனிய எல்லைக்குள் தனது துருப்புக்களை அனுப்பும் ஒரு அரசுடன் மிக நெருக்கமான உறவுகளை பராமரிக்கும் சீனாவுக்கு அது மிகவும் கடினம்.
சீனா, ரஷ்யாவின் படையெடுப்பை ஆதரிப்பதாக மேற்கு ஐரோப்பா கருதினால், சீனாவுக்கு வர்த்தக பின்னடைவை அது ஏற்படுத்தும் சாத்தியகூறும் உள்ளது.
மேலும், சீனா மற்றவர்களின் உள் விவகாரங்களில் தலையிடாது, மற்ற நாடுகள் தன் உள் விவகாரங்களில் தலையிடக்கூடாது என்றுதான் சீனத்தலைவர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.
சீனா ஒருபோதும் "மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கவில்லை [அல்லது] மறைமுகப்போர்களில் ஈடுபடவில்லை" என்றும் சீனா அமைதியின் பாதையில் உறுதியாக இருப்பதாகவும் தனது சமீபத்திய ட்வீட்டில், உயர்மட்ட ராஜீய அதிகாரி லியு சியாமிங், மீண்டும் வலியுறுத்தினார்.
ஆனால் "யுக்ரேனின் சில பகுதிகளை ரஷ்யா தன்னுடன் இணைப்பது அல்லது கீயவ் மீது படையெடுத்து கைப்பற்றுவது, இறையாண்மை புனிதமானது என்ற சீனாவின் நிலைப்பாட்டை மீறுகிறது," என்று முன்னாள் அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஜான் கல்வர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இருப்பினும், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், யுக்ரேன் மீதான படையெடுப்பை கண்டனம் செய்யவோ அல்லது அங்கு நடப்பதை "படையெடுப்பு" என்று குறிப்பிடவோ மறுத்துவிட்டார்.
சீனா யுக்ரேனை ஒரு சட்டபூர்வ நாடாக இப்போதும் அங்கீகரித்துள்ளது என்று வாங் கூறினார். ஆனால் பெய்ஜிங் யுக்ரேனின் கிழக்கில் இருந்து பிரிந்த குடியரசுகளை அது அங்கீகரிக்குமா என்பது குறித்து அவர் கருத்து தெரிவிக்கவில்லை.
புள்ளிகளை இணைத்தல்
கம்யூனிஸ்ட் கட்சியைப் பொருத்தவரை, அது தனது சொந்த மக்களையும் அவர்களின் உலகப் பார்வையையும் எங்கே கொண்டுசெல்லும் என்பதுதான் மிகவும் கவலையளிக்கும் விஷயம்.
இந்த காரணத்திற்காக, இது பத்திரிகை மற்றும் சமூக ஊடகங்களில் யுக்ரேன் நிலைமை பற்றிய பேச்சைக் கையாளுகிறது மற்றும் கட்டுப்படுத்துகிறது.
இந்தப் பிரச்னையில் தைவான் கூடிய விரைவில் இழுக்கப்படக்கூடும்.
சுய அதிகாரம் கொண்ட இந்தத்தீவு, பிரதான நிலப்பகுதியுடன் ஒன்றிணைக்கப்பட வேண்டிய ஒரு 'முரட்டு மாகாணமாக' சீனாவின் ஆளும் கட்சியால் பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் படையெடுப்பை பின்பற்றுமாறு தங்கள் நாட்டிடம் சீன தேசியவாதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சீனாவின் ட்விட்டர் பதிப்பான வீய்போவில் பதிவிட்ட அவர்கள், "தைவானை திரும்பப் பெற இதுதான் சிறந்த வாய்ப்பு!"என்று தெரிவித்துள்ளனர்.
சமீப நாட்களில் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை சீன அரசு நிராகரித்தது. தைவானை வலுக்கட்டாயமாக கைப்பற்ற முயற்சித்தால் தனக்கும் இதுதான் கதி என்று அது உணர்ந்துள்ளது.
பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு பொருளாதாரத் தடைகள் சிறந்த வழி என்று சீனா ஒருபோதும் நினைத்ததில்லை என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் பெய்ஜிங்கில் வழக்கமான செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் யுக்ரேனை ஆக்கிரமித்த ரஷ்யாவின் நியாப்படுத்துதலின் புள்ளிகளை சீன குடிமக்கள் இணைக்கத்தொடங்கி, அதை தங்கள் சொந்த நாட்டின் மீது பயன்படுத்தினால், சீன அரசின் தற்போதைய எல்லைகளுக்கான முழு விளக்கத்தையும் அது தலைகீழாக்கிவிடும்.
யுக்ரேனுக்குள் இருக்கும் ரஷ்ய மொழி பேசும் மக்களுக்கு விடுதலை பெற்றுத்தருவதாக விளாடிமிர் புதின் கூறுகிறார். அப்படியானால் இப்போது சீனாவின் ஒரு பகுதியாக இருக்கும் மங்கோலியர்கள், கொரியர்கள், கிர்கிஸ் இன மக்கள் என்ன ஆவார்கள்? திபெத்தியர்கள் அல்லது உய்குர்கள் அதிக சுயாட்சி அல்லது சுதந்திரத்திற்கான அழைப்புகளை புதுப்பித்தால் சீனா என்ன செய்யும்?
இது நடக்காமல் இருப்பது ஷி ஜின்பிங்கின் நிர்வாகத்திற்கு எல்லாவற்றையும் விட முக்கியமானது.
இந்த சூழ்நிலையில் கிழக்கு ஐரோப்பாவில் புதினின் நகர்வுகளை மக்கள் எப்படி பார்க்கவேண்டும் என்று கட்சி விரும்புகிறதோ, அதற்காக மக்களை அது இட்டுச்செல்லும் திசையை அறிய, நாம் சீன சமுக ஊடகங்களை பார்த்தால் போதுமானது.
அரசு ஊடகத்திற்கு, வீய்போவில் சொந்த கணக்கு உள்ளது. ரஷ்யா மற்றும் யுக்ரேன் பற்றிய தனது இடுகைகளுக்கான பதில்களை அது கட்டுப்படுத்துகிறது.
சில கருத்துக்களின் உதாரணம் இங்கே:
"புதின் அருமையானவர்!"
"நான் ரஷ்யாவை ஆதரிக்கிறேன், அமெரிக்காவை எதிர்க்கிறேன். அதைமட்டும்தான் நான் சொல்ல விரும்புகிறேன்."
"அமெரிக்கா எப்போதும் உலகில் குழப்பத்தை உருவாக்க விரும்புகிறது!"
அமைதிக்கு அழைப்பு விடுக்கும் பலர் இருந்தாலும், அமெரிக்காவைத் தாக்கும் பதிவுகளுக்கே பெரிதும் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
யுக்ரேனில் ரஷ்யாவின் குறிக்கோள் பற்றி சீன மக்கள் கேள்வி எழுப்புவதை பார்க்க நினைத்தால், கட்சி ஊடக த்ரெடுகளுடன் இணைக்கப்படாத தனிப்பட்ட Weibo கணக்குகளை நீங்கள் தேட வேண்டும்.
"இத்தனை பேர் ரஷ்யாவையும் புதினையும் ஏன் ஆதரிக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. படையெடுப்பு நீதியாகுமா? எந்த வகையான போரையும் நாம் எதிர்க்க வேண்டும்!"என்று ஒருவர் எழுதியுள்ளார்.
"யுக்ரேனில் இருந்து பிரிந்த பிராந்தியங்களின் சுதந்திரத்தை புதின் அங்கீகரிக்கிறார். இது மற்றொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிப்படையாக தலையிடுவதாகும்."என்று மற்றொரு பதிவு உள்ளது.
தனது மக்கள் எந்த முடிவுக்கு வரக்கூடாது என்று சீனா விரும்புகிறதோ, அதை இந்தக்கடைசி இடுகையில் பார்க்க முடிகிறது.
சீன அரசு நடந்து சென்றுகொண்டிருக்கும் கண்ணிவெடி நிறைந்த பாதையின் சாராம்சம் இது.
ஒரு பெரிய போரில் சிக்கித் தவிக்கும் யுக்ரேனுக்குள் வாழும் சீன குடிமக்களுக்கு ஒரு செய்தியை சீன தூதரகம் அனுப்பியுள்ளது.
மக்கள் தங்கள் காரில் சீனக் கொடியை ஒட்ட வேண்டும் என்றும் "ஒருவருக்கொருவர் உதவி செய்வதன் வாயிலாக சீனாவின் பலத்தை காட்டவேண்டும்" என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
யுக்ரேனில் இப்போது நடப்பது படையெடுப்புக்கு சமமா என்ற கேள்விக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங், "வரலாற்று சூழல் சிக்கலானது" என்றும் தற்போதைய நிலைமை "எல்லா வகையான காரணிகளாலும் ஏற்படுகிறது" என்றும் கூறினார்.
ஐரோப்பாவில் ஒரு பெரிய எழுச்சி நடந்துகொண்டிருக்கிறது. தனது நாடு அதை எவ்வாறு கையாளும் என்பதை ஷி ஜின்பிங் தீர்மானிக்க வேண்டும்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













