ரஷ்யா - யுக்ரேன் மோதல்: "அதிரும் நிலம் - அதிகரிக்கும் அச்சம்" - களத்தில் சிக்கிய தமிழக மாணவர்கள்

பட மூலாதாரம், Handout
- எழுதியவர், நடராஜன் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
யுக்ரேனில் தவிக்கும் இந்தியர்களை விரைவில் மீட்கவேண்டும் என்று அந்நாட்டில் மருத்துவம் படித்துவரும் விழுப்புரம் மாணவர் முத்தமிழ் கோரிக்கை விடுத்துள்ளார்.
"இந்திய அரசு எங்களுக்கு பாதுகாப்பான இடங்களை அடையாளம் காட்டியுள்ளது. மேலும் அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்து இந்திய அரசு தெரிவிப்பதாக கூறியுள்ளது" என யுக்ரேனில் இருக்கும் தமிழக மாணவர் முத்தமிழ் தெரிவித்துள்ளார்.
கிழக்கு யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதலைத் நடத்தி வருகிறது. இந்த நிலையில், யுக்ரேன் வினிட்ஸியாவில் உள்ள வினிட்ஸியா ஸ்டேட் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முத்தமிழ் என்ற மாணவர் தற்போது அங்கு நிலவும் சூழ்நிலை குறித்து பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார்.
"வியாழக்கிழமை காலை 6.30 மணிக்கு நாங்கள் வசிக்கும் இடத்தில் இருந்து 50 கிமீ தூரத்தில் குண்டு வெடித்தது. அதனால் தொடர்ந்து இப்பகுதியில் நிலம் அதிர்வதை எங்களால் உணர முடிகிறது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியவில்லை. தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

தற்போது இப்பகுதியில் போக்குவரத்து சேவை இல்லை. மேலும் யுக்ரேன் உள்ளூர் மக்கள் கடைவீதிகளில் பொருட்களை வாங்க ஆரம்பித்தனர். இதனால் எங்களால் எளிதில் தேவையானவற்றை வாங்க முடியாத சூழல் நிலவுகிறது. மேலும் ஏடிஎம்-களில் அதிகாலையில் இருந்து காத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உள்ளூர் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பணம் எடுக்கமுடியவில்லை," என்றார் முத்தமிழ்.
3-4 நாள்களுக்கு மட்டுமே உணவு கையிருப்பு
"எங்களுக்கு முன்பே ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தால் எங்களுக்கு தேவையானவற்றை தயார் நிலையில் வைத்திருந்து இருப்போம். ஆனால், தற்போது 3 அல்லது 4 நாட்களுக்கு மட்டும் எங்களுக்கான உணவுப்பொருள் கையிருப்பில் உள்ளது," என்று அவர் தெரிவித்தார்.
இந்த பதற்றமான சூழ்நிலை திடீரென ஏற்பட்டதால் தங்களால் மற்ற பகுதிக்கு சென்று பணம் எடுக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.


"தமிழ்நாட்டு மாணவர்கள் சுமார் 150 பேர் உட்பட இந்தியாவின் பிற பகுதிகளை சேர்ந்த 800க்கும் மேற்பட்டவர்கள் எங்கள் கல்லூரியில் படிக்கின்றனர். இந்த அவசர சூழலை கருத்தில் கொண்டு இங்கிருந்து இந்தியர்கள் அனைவரையும் வெகுவிரைவில் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பட மூலாதாரம், Handout
இந்திய அரசு எங்களுக்கு பாதுகாப்பான இடங்களை அடையாளம் காட்டியுள்ளது. மேலும் தற்போது நாங்கள் இருக்கும் பகுதி பாதுகாப்பாக இருக்கும் பட்சத்தில் அங்கேயே பத்திரமாக இருக்கும்படி தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு இந்த சூழல் குறித்தும், அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்தும் இந்திய அரசு தெரிவிப்பதாக கூறியுள்ளது. அதுவரை பாதுகாப்பான இடங்களிலும், தாழ்வான இடங்களை அடையாளம் கண்டு பாதுகாப்பாக தங்கும் படி வலியுறுத்தியுள்ளனர்," முத்தமிழ் தெரிவித்துள்ளார்.
தற்போது நாங்கள் இருக்கும் பகுதி பாதுகாப்பாக இருப்பதால் இங்கே தங்கியுள்ளோம். ஆனால் எங்களை விரைவில் மீட்க வேண்டும் என்று பிபிசி தமிழ் மூலமாக இந்திய அரசுக்கு கோரிக்கை வைப்பதாக உக்ரைனில் இருக்கும் முத்தமிழ் தெரிவித்திருக்கிறார்.
மேலும் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, சக்கராபுரம் பகுதியில் வசிக்கும் முத்தமிழின் பெற்றோர் சேகர்- விஜயலட்சுமி தம்பதியினரை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது. அப்போது பேசிய முத்தமிழின் தந்தை சேகர், "எனது மகனையும் மற்ற மாணவர்களையும் உடனடியாக மீட்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

பிற செய்திகள்:
- ஹிஜாப்: முஸ்லிம் பெண்கள் எழுப்பும் பழமைவாதம், நாகரிகம் தொடர்பான கேள்விகள்
- ரஷ்யா யுக்ரேனுக்குள் துருப்புக்களை அனுப்புவது ஏன், புதின் விரும்புவது என்ன?
- சென்னை, தாம்பரத்துக்கு புதிய மேயர்கள் இவர்களா? கள நிலவரம்
- யுக்ரேன் மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கை - கள படங்கள்
- அஜித்தின் 'வலிமை' - சினிமா விமர்சனம்
- ஏதும் விளையாத களர் நிலத்தில் விளையும் பாரம்பரிய நெல் களர்ப்பாலை: அழிவிலிருந்து காக்கும் கிராமம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













