ஹிஜாப்: முஸ்லிம் பெண்கள் எழுப்பும் பழமைவாதம், நாகரிகம் தொடர்பான கேள்விகள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சோயா மத்தீன்
- பதவி, பிபிசி நியூஸ், தில்லி
ஹிஜாப் அணிய தொடங்கியப்போது, நபீலா ஷேக்குக்கு வயது 30. இதனை முன்னெடுத்து சென்ற மூன்று சகோதரிகளில், இவர் கடைசியாக இருப்பவர்.
மூத்தவரான முஸ்னாவுக்கு எட்டு வயதான போது, தனது உறவினரால் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக முதன் முறையாக ஹிஜாபை அணிந்தார். தன்னை சுற்றியுள்ளவர்கள் பொறுத்து, அவர் அதை அணிவதை தேர்வு செய்தார். ஆனால், அது அனைவரையும் திருப்திப்படுத்த முடியாது என்று தெரியும் வரையே அந்த வழக்கத்தை தொடர்ந்தார்.
இளையவரான சாரா தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால், அவர் அறுவை சிகிச்சை நிபுணர் ஆகும் கனவு சிதைந்தது. அப்போது வாழ்வின் மிகவும் கடினமான தருணத்தில் இருந்தார்.
"இது சரியான நேரத்தில் பிரார்த்தனை செய்வது போன்ற விஷயங்களுடன் தொடங்கியது," என்று அவர் கூறுகிறார். "ஹிஜாப் அணிய வேண்டும் என்ற எண்ணம் பின்னர் வந்தது, அது இயல்பாக வந்தது," என்கிறார் அவர்.
இரண்டு மருத்துவர்களுக்குப் பிறந்த இந்த சகோதரிகள், இந்தியாவின் கடலோர பெருநகரமான மும்பையில் வளர்ந்தனர். இவர்களின் தாய் தனது முகத்தை மறைப்பதில்லை. இந்த குடும்பத்துப் பெண்கள் ஹிஜாப் அணிய முற்படும்போது அது நிர்ப்பந்தம் காரணமாகவே செய்யப்படுகிறது என்று மக்கள் கருதுகிறார்கள்.
முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு செல்ல உரிமை உள்ளதா என்ற கேள்வி இப்போது நீதிமன்றத்தில் உள்ளது. இந்த சர்ச்சை விவகாரம் வன்முறையை தூண்டியது. பள்ளி வளாகங்களைப் பிளவுபடுத்தியது.
கர்நாடகாவில் பல முஸ்லிம் பெண்கள் வகுப்புகளுக்குச் செல்வதை நிறுத்தியது. இந்தியா முழுவதும் உள்ள முஸ்லிம் பெண்களிடம் பிபிசி பேசியுள்ளது.
அவர்கள் இந்த விவாதம் எழுப்பப்பட்டு இருக்கும் நோக்கம் குறித்து கோபம் கொண்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.
"எங்களை ஏற்றுக்கொள்வதற்கு, எங்கள் மதத்தை விட்டுவிட வேண்டும் என்பது எங்களுக்கு தொடர்ந்து நினைவூட்டப்படுகிறது," என்று டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண் கூறுகிறார்.
பொதுமக்கள் பலரின் கூக்குரலில் மூழ்கி இருக்கும் இந்த சர்ச்சை, இஸ்லாமிய பெண்களின் தனிப்பட்ட தேர்வு என்கின்றார் இவர்.
ஹிஜாப் அணிய விரும்புவோர், இது மதம் சார்ந்த முடிவு அல்ல என்றும், அது ஒரு பிரதிபலிப்பில் தொடங்கியது எனவும் கூறுகிறார்கள். அதை அணிய வேண்டாம் என்று முடிவு செய்தவர்கள், தங்கள் தலைமுடியை மறைப்பது, மதநம்பிக்கைக்கு அளவுகோல் அல்ல என்று கூறுகிறார்கள்.

பட மூலாதாரம், MUZNA SHAIKH
"நான் ஒடுக்கப்படவில்லை'
"தலையை மறைக்கும் வகையில் துணியை போர்த்திக் கொள்வதன் மூலம் ஒருவர் எவ்வளவு தன்னம்பிக்கையாக உணர்கின்றார் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவில்லை," என்று நபீலா சிரித்துக்கொண்டே கூறுகிறார்.
"இது அவர்களைக் குழப்புகிறது, அதனால் அவர்கள் எங்களை மீது குற்றம் காண்கின்றனர்."
ஒடுக்கப்பட்டவர்கள் என்பது பொதுவாகவே ஹிஜாப் அணியும் பெண்களை அடையாளப்படுத்த கூறப்படும் ஒரு வார்த்தை. ஆனால், அவர்கள் ஏன் அதை அணிகிறார்கள் என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ள மறுப்பது முற்போக்கு ஆகிவிடாது.
மேலும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கொண்டு பள்ளிக்கு வந்தால், அவர்களை அனுமதிக்காமல் இருப்பதும் முற்போக்கு ஆகிவிடாது என்று பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஹிஜாபுக்கு கிளம்பிய எதிர்வினை
"இளம் முஸ்லிம் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக வீதிகளில் போராடுகிறார்கள். இன்னும் [இந்த] பெண்களால் சுயமாக சிந்திக்க முடியாது என்று நீங்கள் என்னிடம் கூறுகிறீர்களா?"
பெங்களூரின் தெற்கு நகரத்தைச் சேர்ந்த 27 வயதான நக் இப்படி கேட்கிறார். நம்மிடையே அவர் தனது முதல் பெயரை மட்டுமே தெரிவித்தார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நக் 'ஹிஜாபை' எடுக்க முடிவு செய்தபோது, "வித்தியாசமான" எதிர்வினைகளை எதிர்கொண்டதாக கூறுகிறார்.
"எனது ஹிஜாப் நிறைய மக்களின் மனநிலையை வெளிப்படுத்தியது," என்று அவர் கூறுகிறார்.
"மக்கள் என்னைப் பார்த்து சீண்டுவார்கள்: நீங்கள் ஒடுக்கப்படுகிறீர்களா? உங்களுக்கு வெப்பமாக இல்லையா? நீங்கள் என்ன ஷாம்பு பயன்படுத்துகிறீர்கள்? சிலர் என்னிடம் தலைமுடி இருக்கிறதா என்று கூட கேட்டார்கள் - எனக்கு புற்றுநோய் இருப்பதாக அவர்கள் நினைத்தார்கள்," என்று கூறுகிறார் நக்.

பட மூலாதாரம், Getty Images
இவரைப் பொறுத்தவரை, ஹிஜாப் ஓர் ஆடை நாகரிகம் பரிசோதனையாக இருந்தது. ஒவ்வோர் ஆடையிலும் இவர் கவர்ச்சியையும் வண்ணங்களையும் காண்கிறார்.
"என்னுடைய ஹிஜாப் எனது நவநாகரிக உடைகளுடனும், மேக்கப்புடனும் முரண்படுவதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அப்படி அல்ல அது" என்று அவர் கூறுகிறார்.
"நான் ஒரு அறைக்குள் நுழைந்தால், மக்கள் என்னைப் பார்த்து இவ்வாறு சிந்திக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அவர் ஒரு முஸ்லிம் பெண். தனது இலக்குகளை அடைகிறார். உலகம் முழுவதும் பயணம் செய்கிறார், செழித்து வளர்கிறார் என்று நினைக்க வேண்டும்."
மற்ற முஸ்லிம் பெண்களை போலவே மங்களூருவின் தெற்கு நகரத்தில் வழக்கறிஞர் வஃபா கதீஜா ரஹ்மான், ஹிஜாப் அணியாமல் இருப்பது தங்களை முஸ்லீம்களாக குறைத்து மதிப்பிடலாகாது என்று கூறுகிறார்கள்.
"நான் ஹிஜாப் அணியவில்லை, ஏனென்றால் அது நான் யார் என்பதுடன் ஒத்துப்போகவில்லை. அதை அணிய வேண்டும் என்று யாரும் என்னிடம் சொல்ல முடியாது. ஆனால் அதைப் போலவே, நான் ஒன்றை அணியக்கூடாது என்று யாரும் என்னிடம் சொல்ல முடியாது." என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
வஃபாவின் தாயார் ஒருபோதும் ஹிஜாப் அணிந்தததில்லை - ஆனால், அவர் தன்னைச் சுற்றி மதநம்பிக்கையுடன் வளர்ந்தார். நபிகள் நாயகம் பற்றி மட்டுமல்ல, இஸ்லாத்தில் உள்ள பெண்களின் கதைகளையும் கேட்டு வளர்ந்ததாக அவர் கூறுகிறார்.
"நபியின் முதல் மனைவி ஒரு தொழிலதிபர். இரண்டாவது பெண் ஒட்டகத்தின் மீது சவாரி செய்தார். அப்படியெனில், உலகம் எங்களை எவ்வாறு பார்க்க விரும்புகிறது. நாங்கள் உண்மையில் ஒடுக்கப்பட்டிருக்கிறோமா?" என அவர் கேட்கிறார்.
'முஸ்லிமாக இருப்பதில் என்ன தவறு?'
பழமைவாத கொள்கை கொண்ட வடமாநிலத்திலுள்ள நகரமான வாரணாசியில் ஒரு வழக்கத்திற்கு மாறான தேர்வாக தனது தலைமுடியை மறைக்கும் எண்ணத்தை ஃபலாக் அப்பாஸ் வெறுத்த காலம் ஒன்று இருந்தது.
ஆனால், பாகிஸ்தானின் நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாயை டிவியில் பார்த்தபோது அவருக்கு வயது 16. பிறகு இவரது மனம் மாறியது.
"மலாலாவின் தலை மறைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் மிகவும் சக்தி வாய்ந்தவராக தெரிந்தார். என்னை அது மிகவும் ஈர்த்தது. என் தலையையும் மறைக்க முடிவு செய்தேன்."
அதற்கு, இவரது கான்வென்ட் பள்ளி எதிர்ப்பு தெரிவித்தது. ஹிஜாப் சீருடையுடன் ஒத்துப்போகவில்லை என்று நிர்வாகம் கூறியது. ஒரு நீண்ட மேலாடை மற்றும் கால்சட்டை மட்டுமே இவரது பள்ளிச்சீருடை ஆக இருந்தது.
மூன்று நாட்களுக்கு அவர் வகுப்புக்கு செல்ல தடை இருந்ததாக ஃபலாக் குற்றம்சாட்டுகிறார். இந்த கட்டுப்பாட்டால் உயிரியல் பாடத் தேர்வை கூட எழுதாமல் தவறவிட்டார் இவர். ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, பள்ளி நிர்வாகம் இவரது பெற்றோரை அழைத்து உங்களுடைய மகள் விதிமுறைகளை மீறி நடந்து கொள்கிறார் என குற்றம்சாட்டியது.
"நான் ஹிஜாப் அணிந்தால், அது எனக்கு மட்டுமல்ல, பள்ளிக்கும் பிரச்னையை உண்டாக்கும் என்று அவர்கள் கூறினார்கள். ஏனென்றால் நான் முஸ்லிம் என்று எல்லோரும் கண்டுபிடிப்பார்கள்.
"முஸ்லிமாக இருப்பதில் என்ன தவறு?" என்று தமது அனுபவத்தை நினைவு கூர்ந்தார் அவர்.
ஆனால், "ஹிஜாபினால் அவரது கல்விக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்" என்று அவரது பெற்றோர் கூறியதை அடுத்து அவர் மனம் இறங்கினார்.
எட்டு வருடங்கள் கழித்து, கர்நாடகாவில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்து, மீண்டும் ஒருமுறை கடும் கோபமாக இருப்பதாக கூறுகிறார். கேரளாவைச் சேர்ந்த கதீஜா மங்காட் என்பவரும் இந்த சர்ச்சை குறித்து கோபமடைந்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
1997ஆம் ஆண்டு ஒரே இரவில், அவரது பள்ளி ஹிஜாப்பை தடை செய்தது. பின்னர், தடை ரத்து செய்யப்பட்டது. ஆனால் கர்நாடகாவில் என்ன நடக்கும் என்று கதீஜா சந்திக்கிறார்.
"அரசியலமைப்பு, அதன் மதிப்புகள் மற்றும் எங்கள் உரிமைக்குரல்கள் - எல்லாம் உங்களுக்கு முன்னால் உள்ளன," என்று அவர் கூறுகிறார். "இருப்பினும், எங்களின் கல்வியின் பொருட்டும், இடைவிடாமல் எங்களை பாதுகாத்துக் கொள்ளும்படி நாங்கள் உருவாக்கப்படுகிறோம்."
'மக்கள் உங்களைப் பார்க்கும் விதம் உண்மையில் தாக்கம் ஏற்படுத்தும்'
நீதிமன்ற விசாரணையானது வகுப்பறையில் ஹிஜாப் அணிவதில் கவனம் செலுத்தும் அதே வேளையில், பிரதமர் நரேந்திர மோதியின் இந்து தேசியவாத அரசின் கீழ் மிகவும் ஒருமுகமாக்கப்பட்ட இந்தியாவில் தீர்ப்பு எப்படி இருக்கும் என்று முஸ்லிம் பெண்கள் கவலையில் உள்ளனர்.
ஹைதராபாதைச் சேர்ந்த சிமீன் அன்சார், "அரசியல் ஆதாயங்களுக்காக" ஒரு மோசமான அடையாளமாக ஹிஜாப் விவகாரம் மாற்றப்படுகிறது என்கிறார்.
"நான் இந்துப் பெண்களுடன் தங்கள் பள்ளிப் பாவாடையின் கீழ் கால்களை மூடிக்கொண்டு வளர்ந்தேன். சீக்கிய மாணவர்கள் தங்கள் தலைப்பாகை அணிந்திருப்பதைக் காட்டிலும், அந்த நேரத்தில் எனக்கு அது அத்தனை வித்தியாசமாக தோன்றவில்லை" என்று அவர் கூறுகிறார்.
"ஆனால் ஹிஜாப் என்று வரும்போது, முஸ்லிம் பெண்களின் மதிப்பு குறைக்கப்படுகிறது. நான் ஒன்றை அணிந்தால் நான் பழமைவாதியாகவும் ஒடுக்கப்பட்டவளாகவும் ஆகி விடுகிறேன். அணியவிட்டால், நவநாகரிகமாகவும் முற்போக்காகவும் இருக்கிறேன், "என்றார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
இவரும், இவரது சகோதரியும் ஹிஜாப் அணியத் தொடங்கியதாகவும், ஆனால் இவர்களது விருப்பம் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாததால், அதை விரைவில் கைவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.
இவரது சகோதரி பணியிடத்தில் பாகுபாடுகளை எதிர்கொண்டாலும், ஜிம், பார் அல்லது பார்ட்டி என ஹிஜாப் அணிந்த பெண்ணை மக்கள் எதிர்பார்க்காத இடங்களில் மக்கள் தன்னைப் பார்த்து குறைவாக மதிப்பிட்டதாகவும் சிமீன் கூறுகிறார்.
"மக்கள் உங்களைப் பார்க்கும் விதம் உண்மையில் தாக்கத்தை ஏற்படுத்தும்," என்று அவர் கூறுகிறார்.
இது பல முஸ்லிம் பெண்களுக்கு ஏற்படும் ஒரு பயம் - முன்பை விட இப்போது, ஹிஜாபை மட்டுமே மக்கள் பார்பார்கள்
நீதிமன்ற விசாரணை கூர்ந்து கவனிக்கும்., தலையில் முக்காடு கூட அணியாத வஃபாவை கவலையுறச் செய்கிறது.
"நான் வேலையில் இருக்கும்போது கூட, நான் என் இயர்போன்களை வைத்துக் கொண்டு [நீதிமன்ற] நிகழ்வுகளைப் பின்பற்றுகிறேன்," என்று அவர் கூறுகிறார்.
முக்காடு அணியும் நண்பர்களையும் குடும்பத்தினரையும் இது எவ்வாறு பாதிக்கும் என்று அவர் கவலை கொள்கிறார்.
"நீங்கள் என் ஹிஜாபை எடுத்து விடுக்கிறீர்கள். அடுத்து என்ன? என் பெயர் இன்னும் அரபு மொழியில்தான் இருக்கிறது. உங்களின் மரியாதை பெற நான் அதையும் மாற்ற வேண்டுமா?" என்று கோபத்துடன் கேட்கிறார் இந்த பெண்.

பிற செய்திகள்:
- திருச்சியின் முதல் 'மாநகரத் தந்தை' ஆகப்போவது யார்? - மேயர் பதவியைக் கைப்பற்ற திமுக வியூகம்
- குரு கோல்வல்கர்: 'வெறுப்பின் தலைவனா' இந்து தேசியவாதத்தின் மாபெரும் ரசிகரா?
- கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோ நியூயார்க் நகரம் மீது கொண்ட ரகசிய காதல்
- உடலுறவில் இன்பமும் பாதுகாப்பும் - உலக சுகாதார நிறுவனம் அறிக்கை
- பாகிஸ்தானை ஒதுக்கிவிட்டு செளதி அரேபியா இந்தியாவை நெருங்கி வருவது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













