'ஹிஜாப், புர்கா' அணிந்து வர அனுமதி மறுத்ததா புதுவை அரசுப் பள்ளி? நடந்த உண்மை என்ன?

புதுச்சேரி ஹிஜாப் விவகாரம்
படக்குறிப்பு, கோப்புப் படம்.
    • எழுதியவர், நடராஜன் சுந்தர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

புதுவையில் 'ஹிஜாப், புர்கா' அணிந்து வர முஸ்லிம் மாணவி ஒருவருக்கு அரசுப் பள்ளி ஒன்றில் அனுமதி மறுத்ததாக கூறி சர்ச்சை எழுந்தது. இதையடுத்து திமுகவும் சில சமூக அமைப்புகளும் போராட்டம் நடத்தின.

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் மழலையர் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ஆண், பெண் இருபாலரும் பயில்கின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 4) அன்று இந்த பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய மாணவி வகுப்பறைக்கு புர்கா அணிந்து வந்துள்ளார். அதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மறுப்பு தெரிவித்ததாக கூறி மாணவியின் உறவினர்கள் புகார் எழுப்பினர். ஆகவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த திங்கட்கிழமை (பிப்ரவரி 7) அன்று திமுக மற்றும் சமூக அமைப்பினர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் புதுச்சேரி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இதன் உண்மைத் தன்மையை அறிய குறிப்பிட்ட தலைமை ஆசிரியர் கோமதியை பிபிசி தமிழ் சந்தித்து பேசியது.

"இந்த விஷயத்தில் சம்மந்தப்பட்ட மாணவி இப்பள்ளியில் 6ஆம் வகுப்பிலிருந்து படித்து வருகிறார். அந்த மாணவி நன்றாக படிக்க கூடியவர், என்னிடமும் சக ஆசிரியர்களிடமும் நன்கு தொடர்பில் இருப்பவர். அவர் இதற்கு முன் வகுப்பறைக்குள் இதுவரை புர்கா அணிந்து இருந்ததில்லை. சக மாணவர்களுடன் பள்ளி சீருடையில் தான் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று புர்கா உடை அணிந்தபடி எனது அறைக்கு வந்த அந்த மாணவி, தந்தை கொடுத்தனுப்பியதாக கூறி கடிதத்தை என்னிடம் வழங்கினார்," என்றார் அவர்.

அந்த கடிதத்தில் மாணவியின் தந்தை குறிப்பிட்டு இருந்ததாவது, "தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவியின் பெற்றோர் எழுதி கொள்வது என்னவென்றால், ஹிஜாப் புர்கா அணிந்து வருவதற்கு அனுமதி சட்டம் இருக்கும்போது தாங்கள் ஏன் அனுமதிப்பதில்லை. தாங்கள் மறுப்பதாக இருந்தால் அனுமதி தர இயலாது என நிர்வாகத்தின் மூலம் ஹிஜாப் புர்கா மறுப்பு எனக் கடிதம் எழுதி கையெப்பமிட்டு தருமாறு கேட்டுக் கொள்கிறோம். குறிப்பு - ஹிஜாப் புர்கா அணிந்து வகுப்பில் அமர்வதற்கு அனுமதி தர மறுத்தால், எழுத்தின் மூலம் மறுப்பு தெரிவிக்கவும்," என்று கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

"எங்கள் பள்ளியில் நிறைய இஸ்லாமிய மாணவிகள் படிக்கின்றனர். அவர்கள் பள்ளிக்கு வரும்போது புர்கா அணிந்தபடி வருகை தந்தாலும் வகுப்பறைக்குள் அவ்வாறு உடை அணிந்து இருந்ததில்லை. எப்போதும் வகுப்பிலும், பள்ளி வளாகத்திலும் பள்ளி சீருடையில் இருப்பார்கள். பிறகு மீண்டும் மாலை பள்ளி முடிவடைந்த பிறகு புர்கா அணிந்துகொண்டு செல்வது வழக்கம். ஆனால் இதுவரைக்கும் எந்த மாணவிகளிடமும் எந்த கட்டுப்பாடுகளையும் விதித்ததில்லை. இந்த விஷயத்தில் மாணவியின் பெற்றோர் வகுப்பறையில் புர்கா அணிந்திருக்க எழுத்துப் பூர்வமாக அனுமதி கேட்டிருந்தனர். ஒருவேளை மறுத்தால் அதற்கு எழுத்துப் பூர்வமாக விளக்கமளிக்கும்படி கடிதத்தில் கேட்டுள்ளார்.

அந்த சமயத்தில் மாணவியிடம் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு வகுப்பறைக்கு செல்லுமாறு கூறினேன். அன்று முழுவதும் அந்த மாணவி புர்கா அணிந்தபடி வகுப்பறையில் இருந்தார். மாணவியிடம் இதுபற்றி எதுவுமே பேசவில்லை. ஆனால் மாணவியின் தந்தை கொடுத்தனுப்பிய கடிதத்திற்குப் பதில் சொல்ல வேண்டும் என்பதால், மாணவியிடம் எதுவும் கேட்காமல், மாணவியின் தந்தையின் தொலைபேசி எண்ணிற்கு அழைத்து பள்ளிக்கு நேரடியாக வருமாறு அழைத்தேன். ஆனால் அன்று பிற்பகல் 3 மணியளவில் மாணவியின் உறவினர்கள் மூன்று பேர் வந்தனர். மாணவியின் தந்தை வரவில்லை," என்றார் பள்ளி தலைமை ஆசிரியர்.

இதுவரை வகுப்பறையில் இதுபோன்று முழுவதுமாக புர்கா அணிந்து மாணவிகள் இருந்ததில்லை. அனைவருமே சீருடையில் தான் இருப்பார்கள். வழக்கமாக புர்கா அணிந்து வந்தாலும் மாணவிகள் அதனை அப்புறப்படுத்தி வகுப்பறையில் சீருடையில் இருப்பது தான் நடைமுறையில் இருந்துள்ளதாக கூறுகிறார் தலைமை ஆசிரியர் கோமதி.

"ஆனால் மாணவிகள் இப்படி புர்கா அணிந்திருப்பது தனியாக இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக்கிறது. இப்படி அணிந்துகொண்டு வகுப்பறையில் இருப்பது வேண்டாம் என்று மாணவியின் உறவினர்களிடம் எடுத்துக் கூறினேன்.

காணொளிக் குறிப்பு, திடீரென சூழ்ந்த மாணவர்கள் - தைரியத்துக்காக அல்லாவை அழைத்தேன் - மாணவி முஸ்கான் பேட்டி

மேலும் இந்த புர்கா அணியக்கூடாது என்று நிர்ப்பந்தம் ஏற்படுத்தவில்லை, அதற்கான அறிவிப்பும் இல்லை. ஆனால் பள்ளி சீருடையில் மாணவர்கள் இருக்க வேண்டும் என்ற அறிவிப்பு உள்ளது. ஆகவே மாணவர்கள் வகுப்பறையில் பள்ளிச் சீருடையில் இருக்க வேண்டும் என்பதை வழக்கமாக பின்பற்றி வருகிறோம். மாணவர்களும் அவ்வாறே இருக்கின்றனர். இதனை எழுத்துப்பூர்வமாக எழுதி கையெப்பமிட்டு கொடுக்கும்படி மாணவியின் உறவினர்கள் கேட்டனர்.

இவ்வாறு எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுக்கும் அதிகாரம் எனக்கில்லை. இதுபற்றி முடிவெடுக்கும் அதிகாரம் பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே உள்ளது என்று அவர்களிடம் தெரிவித்தேன்.

இதற்கிடையில் மாணவியை புர்கா அணிந்து வந்ததற்கு மறுப்பு தெரிவித்ததாகவும், மாணவியை வெளியே அனுப்பியதாக தவறான தகவல்கள் வந்தன. அவை எதுவுமே உண்மையில்லை என்று தலைமை ஆசிரியர் கூறினார்.

"ஆனால் இந்த விவகாரத்தில் இதுவரை சம்மந்தப்பட்ட மாணவியின் பெற்றோர் நேரிடையாக எங்களைச் சந்திக்கவில்லை," என்று பள்ளி தலைமை ஆசிரியர் கோமதி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி ஹிஜாப் விவகாரம்

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சமூக அமைப்புகள் பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போது வந்திருந்த கல்வித்துறை முதன்மை செயல் அலுவலர் மீனாட்சி சுந்தரம் மற்றும் தலைமை ஆசிரியர் கோமதி உள்ளிட்டோர் மாணவியின் உறவினர்கள், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, "மாணவிகளை இதுவரை எந்த விஷயத்திலும் கட்டாயப்படுத்தவில்லை. மேலும் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து மாணவி புர்கா அணிந்தபடி தான் வகுப்பறையில் இருந்தார் என்று மீனாட்சி சுந்தரம் கூறினார்.

இந்த விஷயத்தில் சம்மந்தப்பட்ட 9ஆம் வகுப்பு மாணவியின் தந்தை ஜமஹாதுல் முஸ்தபாவை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது. அப்போது பேசிய அவர், "எங்களது மகள் சிறிய பிள்ளையாக இருந்தவரை எதுவும் கேட்கவில்லை. அவள் வகுப்பறையில் புர்கா அணியாமல்தான் இதுவரை இருந்துள்ளார். ஆனால் அவள் பெரிய பிள்ளையாகிவிட்ட காரணத்தினால், ஹிஜாப் அணிந்து வரலாமா என்று பள்ளி தலைமை ஆசிரியரிடம் கடந்த மாதம் பள்ளிக்கூடம் தொடங்கியபோது கேட்டிருந்தோம். இங்க படிக்கின்ற அனைத்து மாணவிகளும் ஒரே மாதிரியாக சமமாக இருக்க வேண்டும் என்பதாலும், மாணவி அணிந்தால் தனியாக இருக்கும் என்பதாலும் அவ்வாறு வேண்டாம் என்றார்.

நாங்களும் அவர் கூறியதை ஏற்று வழக்கம் போல பள்ளிக்கு அனுப்பினோம். அதையடுத்து கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டபோது, எனது மகள் ஹிஜாப் அணிந்து சென்றாள்.

மேலும் வகுப்பறையில் ஹிஜாப் அணிந்தபடி இருக்க அனுமதி வழங்கும்படி எனது மகளிடம் தலைமை ஆசிரியருக்குக் கடிதம் கொடுத்து அனுப்பினேன். தலைமை ஆசிரியரும் எனது மகளை வகுப்பறையில் ஹிஜாபுடன் இருக்க அனுமதித்தார்," என்றார் அவர்.

மேலும் ஹிஜாப் அணிய அனுமதிப்பது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக கொடுக்குமாறு தலைமை ஆசிரியருக்கு மகள் மூலமாக கடிதம் கொடுத்திருந்தேன். அதற்கு பதிலளிக்க தலைமை ஆசிரியர் என்னைப் பள்ளிக்கு அழைத்தார். ஆனால் நான் வெளியூர் சென்றிருந்த காரணத்தினால் எனது தங்கையின் கணவரை பள்ளிக்கு அனுப்பினேன்.

புதுச்சேரி ஹிஜாப் விவகாரம்

அப்போது அவர்களிடத்தில் கூறிய தலைமை ஆசிரியர், இந்த விவகாரத்தில் எழுத்துப்பூர்வமாக அனுமதி வழங்க தனக்கு அதிகாரம் இல்லை. இதற்கு கல்வித்துறை இயக்குனருக்கு தான் அதிகாரம் உள்ளது. அவரிடம்தான் இதுகுறித்து முறையான அனுமதி பெற முடியும் என்று தெரிவித்திருந்தாக கூறினார். இதனையடுத்து கல்வித்துறை முதன்மை செயல் அலுவலரிடம் கேட்டபோது, மாணவியை புர்கா அணியக்கூடாது என்று சொல்லவில்லை. வகுப்பறையில் அவர் விருப்பப்படி இருக்கலாம் என்று தெரிவித்தாக மாணவியின் தந்தை ஜமஹாதுல் முஸ்தபா தெரிவித்தார்.

பெற்றோர் இதற்கு முன்பு கடந்த ஜனவரி மாதம் ஹிஜாப் அணிந்து வர அனுமதி கேட்டதாக கூறுவது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் பிபிசி தமிழ் கேள்வி எழுதியது.

அப்போது பதிலளித்த தலைமை ஆசிரியர் கோமதி, "கடந்த மாதம் மாணவியின் தாயார் பள்ளிக்கு வந்திருந்தார். அப்போது மாணவி வகுப்பறையில் ஹிஜாப் அணிந்து வரலாமா என்று கேட்டிருந்தார். அதற்கு இங்கே நிறைய இஸ்லாமிய பிள்ளைகள் படிக்கின்றனர். அவர்கள் வகுப்பறைக்குள் புர்கா அணிந்து இருந்ததில்லை. ஆனால் ஒரு மாணவி மட்டும் அப்படி அணிந்து வந்தால் அது தனியாக தெரியும் என்றேன். அதை புரிந்து மாணவியின் தாயாரும் ஏற்றுக்கொண்டார். பிறகு அந்த மாணவியும் வழக்கம்போல வகுப்பறையில் சீருடையில் இருந்தார்," என்று தலைமை ஆசிரியர் விளக்கமளித்தார்.

புதுச்சேரி ஹிஜாப் விவகாரம்
படக்குறிப்பு, கோப்புக்காட்சி

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்," புதுச்சேரியில் மாணவர்களுக்கான சீருடை விவகாரத்தில் பள்ளி கல்வித்துறை உரிய அதற்கான நடவடிக்கை எடுக்கும்," என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இந்த நிகழ்வு குறித்து புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இயக்குனர் ருத்ர கவுடுவிடம் பிபிசி தமிழ் தொடர்ப்பு கொண்டு பேசியது.

அப்போது பேசிய அவர், "இந்த விவகாரம் தொடர்பாக முழு விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க கல்வித்துறை முதன்மை அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணை அறிக்கை சமர்ப்பித்த பிறகு அதை அரசிடம் கொடுத்து ஆலோசித்த பின்னர் அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும்.

இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை பள்ளி தலைமை ஆசிரியர் அந்த மாணவியை ஹிஜாப், புர்கா அணிந்து வரக்கூடாது என்று மறுக்கவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. அதை முழுமையாக விசாரணை செய்த பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும்," என்று தெரிவித்துள்ளார்.

(ஹிஜாப் என்பதும் புர்கா என்பதும் வெவ்வேறு ஆடைகள் என்றபோதும், மாணவியின் தந்தை தமது கடிதத்தில் 'ஹிஜாப் புர்கா' என்றே குறிப்பிடுகிறார். ஆனால், ஆசிரியர்கள் புர்கா என்று குறிப்பிடுகிறார்கள்).

கடைசி செய்தி:

ஹிஜாப்
படக்குறிப்பு, நமச்சிவாயம், புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

ஹிஜாப் சர்ச்சை தொடர்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முதன்மை செயல் அலுவலர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், இப்போது பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் சிவாகாமியை விசாரணை அதிகாரியாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வியாழக்கிழமை (பிப்ரவரி 10) நியமித்துள்ளார்.

இது தொடர்பாக புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியபோது, "கல்வித்துறை முதன்மை செயல் அலுவலர் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர் என்பதால் அவர் மீது நம்பிக்கை இல்லை சில சமூக நல அமைப்பினர் தெரிவித்தனர். அதை பரிசீலித்து பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமியை விசாரணை அதிகாரியாக நியமித்துள்ளோம். அவரிடம் இந்த சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்த அறிவுறுத்தியுள்ளோம். விசாரணை நிறைவடைந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கையை கல்வித்துறை எடுக்கும்," என்று தெரிவித்தார்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: