திருவண்ணாமலை கிராமத்தில் பாரம்பரிய களர்ப்பாலை நெல் ரகத்தை காப்பாற்றும் விவசாயிகள்: களர் நிலங்களுக்கு தீர்வா?

பட மூலாதாரம், Muniratnam
- எழுதியவர், அ.தா. பாலசுப்ரமணியன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்பதும், அவற்றை மீண்டும் உழவுக்கு கொண்டு வருவதும் பல பகுதிகளில், இயற்கை வேளாண்மை ஆர்வலர்களால் முன்னெடுக்கப்படுகிறது. களர் நிலம், உவர் நிலம், வெள்ளம் சூழும் நிலம் போன்ற குறிப்பிட்ட சில வகை நிலங்களுக்குப் பொருத்தமாக இருப்பதும், அந்த நிலங்களில் விவசாயம் செய்ய இன்றியமையாததாகவும் இருக்கும் பாரம்பரிய நெல் ரகங்கள் மிகச் சில. அப்படி ஒரு ரகம் களர்ப்பாலை.
களர், உவர் நிலங்களில் பயிர் செய்ய ஏற்றதாக தமிழ்நாட்டில் இருந்துவந்த ஒரே ரகமான களர்ப்பாலை, அழிவின் விளிம்புக்குச் சென்றுவிட்டது. ஆனால், திருவண்ணாமலை அருகே உள்ள நாகப்பாடி என்ற கிராமத்தில் காலம் காலமாக களர்ப்பாலை பரவலாக பயிர் செய்யப்படுவதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சிவப்பரிசி தரும் களர்ப்பாலையை கடைசியாக காப்பாற்றிக்கொண்டிருக்கும் ஊராக நாகப்பாடி இருப்பதோடு, நாகப்பாடி விவசாயிகள், களர்ப்பாலை விதைகளை பிற மாவட்ட விவசாயிகளுக்கும் வழங்கி வருகின்றனர். களர் நிலத்தை கொண்டுள்ள விவசாயிகளுக்கு நெல் சாகுபடிக்கான நம்பிக்கையை அளித்து வருகிறார்கள்.
செலவும் குறைவு மகசூலும் குறைவு
களர்ப்பாலை விவசாயம் செய்வதில் இருக்கும் சாதகங்கள் என்ன பாதகங்கள் என்ன? என்பது குறித்து, நீண்ட நாள்களாக இந்த ரகத்தை சாகுபடி செய்துவரும் நாகப்பாடியை சேர்ந்த விவசாயி பாண்டுரங்கனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
கடந்த 20 ஆண்டுகளாக களர்ப்பாலை பயிரிட்டு வருகிறேன். தற்போது, 2 ஏக்கரில் களர்ப்பாலையும், வேறு இரண்டு ஏக்கரில் பொன்னி பயிரிட்டிருப்பதாகவும் கூறினார் பாண்டுரங்கன். களர்ப்பாலை பயிரிட்டுள்ள 2 ஏக்கர் நிலம் களர் நிலம் என்றும், களர்ப்பாலை தவிர வேறு ரகங்கள் அங்கு விளையாது என்றும் அவர் தெரிவித்தார்.
களர்ப்பாலை வகையை நாற்றுவிட்டு, மறுநடவு செய்யாமல் விதைக்கால் முறையில் அப்படியே விதைகளைத் தூவிவிட்டு பயிர் வளர்ப்பதாகவும் கூறினார் அவர். அத்துடன் பூச்சி மருந்து அடிப்பது, களைபறிப்பது, உரம் போடுவது ஆகியவையும் களர்ப்பாலைக்குத் தேவையில்லை என்கிறார் பாண்டுரங்கன். களை வந்தாலும்கூட பிரச்சனை இல்லை. களையை மீறி பயிர் வளர்ந்துவிடும் என்கிறார்.

பட மூலாதாரம், Munirathnam
5 மாதத்தில் விளையும் களர்ப்பாலை பயிருக்கு செலவு குறைவு என்றாலும், விளைச்சலும் குறைவு, விலையும் குறைவுதான் என்கிறார் பாண்டுரங்கன். ''ஒரு ஏக்கருக்கு பொன்னி 20-25 மூட்டை விளையும் என்றால், களர்ப்பாலை 12 மூட்டைதான் விளையும், ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திலும் இதை வாங்குவதில்லை '' என்கிறார்.
விதைக்காக பயிரிடும் விவசாயிகள்
ஆனால், இதைப் பற்றியெல்லாம் பாண்டுரங்கன் கவலைப்படவில்லை. காரணம் இரண்டு. ஒன்று, இந்த முறை களர்ப்பாலை விளைச்சல் முழுவதையும் விதை கேட்டு வந்தவர்களிடமே தந்துவிட்டதாக கூறுகிறார். திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்து விவசாயிகள் விதைகளை வாங்கிச் சென்றதாகவும், கிலோ, ரூ.50 - 60 க்கு விற்றுவிட்டதாகவும் கூறுகிறார் அவர். இன்னொன்று, நெல் விளைச்சலில் பெரும் பகுதியை தாமே அரைத்து, தங்கள் குடும்பத்துக்கும், பெங்களூரில் வசிக்கும் தங்கள் சகோதரர்கள் குடும்பத்துக்கும் எடுத்துக்கொள்வதாக கூறுகிறார் பாண்டுரங்கன்.
அவரது குடும்பச் செலவுகளுக்கு அவர் விவசாயத்தை நம்பி இருக்கவில்லை. ஆண்டுக்கு ஒரு போகம் மட்டுமே பயிர் செய்யும் அவர், மீதி நாட்களில் வேறு வியாபாரத்துக்கு சென்றுவிடுவதாக கூறுகிறார்.
விதைக்காலாக நடுவதால், இயந்திரம் கொண்டு அறுக்க முடியாது என்பதால் பழைய முறைப்படி கைகளால்தான் அறுவடை செய்கிறார். உழவும், ஒரு முறை டிராக்டர் வைத்து செய்துவிட்டு மறு உழவு மாடுகட்டி உழுகிறார். கைகளால் அறுப்பதால் மாடுகளுக்கு வைக்கோல் அதிகம் கிடைப்பதாகவும் அவர் கூறுகிறார்.
விற்காத களர்ப்பாலையை தாங்கள் சாப்பாட்டுக்குப் பயன்படுத்திக்கொள்வதாகவும் அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Lenin
அவர் கூறுவதில் இருந்து, வேறு பயிர் விளையாத களர் நிலத்தில் ஏதோ ஆனமட்டில் பயிர் விளைவிக்க களர்ப்பாலை உதவி செய்வதும், ஆனால், வழக்கமான ரகங்களைப் போல விளைச்சலோ, சந்தை வாய்ப்புகளோ களர்ப்பாலைக்கு இல்லை என்பதும் தெரிகிறது. அதே நேரம், வறட்சி, பூச்சி, நோய் ஆகியவற்றைத் தாங்கி நிற்பது, உரம், களையெடுப்பது போன்ற செலவுகள் இல்லாதது ஒப்பீட்டளவில் களர்ப்பாலை விவசாயம் இடர்ப்பாடு இல்லாததாக அவருக்கு இருக்கிறது என்பது தெரிகிறது.
விவசாயிகள் மத்தியில் பாரம்பரிய விதைகளின் பயன்பாட்டை ஊக்குவித்துவரும் வேளாண் செயற்பாட்டாளர் பி.டி. ராஜேந்திரனிடம் பாண்டுரங்கனின் அனுபவத்தை சுட்டிக் காட்டி சில கேள்விகளைக் கேட்டோம்.
உற்பத்தித் திறன் குறைவாக இருப்பதைப்பற்றி கேட்டபோது, "விதைக்காலாக நடுவதற்குப் பதில், நாற்றுவிட்டு மறு நடவு செய்தால் விளைச்சல் கொஞ்சம் கூடும்," என்றார். ஆனால், சந்தைப் படுத்தல் பற்றி கேட்டபோது, அதில் சிக்கல் இருப்பதை அவர் ஒப்புக்கொண்டார். ஆனால், இதைத்தாண்டி ஏன் களர்ப்பாலை விவசாயம் நடக்கவேண்டும் என்று கேட்டபோது, "சில இடங்களில் அலரி பூ போன்ற மலர்ச்சாகுபடி களர் நிலத்தில் செய்யப்பட்டாலும், பரவலாக செய்யக்கூடிய, களர் நிலத்துக்கு ஏற்ற வேறு பயிர் இல்லை," என்றார் அவர்.
'திருச்சி' வரிசை நெல் ரகங்கள் ஆராய்ச்சி நிலையத்தில் இதற்கென உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவது பற்றிக் கேட்டபோது, அவை ஏதும் திருவண்ணாமலை, வேலூர் போன்ற பகுதிகளில் பயிரிடப்படுவதாகத் தெரியவில்லை என்றார்.

பட மூலாதாரம், Lenin
அவரது கூற்றுப்படி, களர் நிலங்கள் தரிசாக இல்லாமல் ஏதேனும் விளைய வேண்டும் என்றால், அதற்கு களர்ப்பாலை அதற்குக் கைகொடுக்கும், ஊட்டச் சத்து மிகுந்த உணவாகவும் அது நுகர்வோருக்குப் பயன்படும்.
கடலோர மாவட்டங்களில் உவர் தன்மை அதிகரித்துவரும் சில பகுதிகளுக்கு ஏற்ற நெல் ரகங்களை உருவாக்கும் முயற்சியில் திருச்சி அன்பில் தருமலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் 'திருச்சி 1' என்ற ரகத்தை முதலில் உருவாக்கியது. பிறகு, திருச்சி 2, 3, 4, 5 என மேலும் நான்கு ரகங்கள் வெளியாகியுள்ளன.
இவையெல்லாம் கடலோர மாவட்டங்களில் உவர் நிலங்களில் பயிரிட ஏதுவாக இருக்கிறது என்கிறார் ஆடுதுறையில் உள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இணைப் பேராசிரியர் டாக்டர் புஷ்பா.

பட மூலாதாரம், Munirathnam
அதே நேரம், களர், உவர் நிலங்களில் பயிரிட ஏற்றதாக பாரம்பரிய ரகமான களர்ப்பாலை உள்ளது என்பதையும், அது திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக அளவில் விளைகிறது என்பதையும் தங்கள் பாடநூல்களில் குறிப்பிட்டுள்ளதாகவும் பிபிசி தமிழிடம் கூறினார் டாக்டர் புஷ்பா. உவர் நிலங்களுக்கு மிகவும் ஏற்றது களர்ப்பாலையா, திருச்சி ரகமா என்று கேட்டபோது, அப்படி இரண்டையும் ஒப்பிடவேண்டியதில்லை என்று கூறிய அவர், ''பாரம்பரிய ரகங்கள் பொதுவாக பூச்சி தாக்காதவையாக இருந்தாலும் விளைச்சல் குறைவாக இருக்கும். ஆனால், திருச்சி போன்ற ரகங்கள் உயர் விளைச்சலைத் தரக்கூடியவை'' என்று கூறினார் அவர்.
கர்நாடகத்தின் மேற்கு கடலோரப் பகுதிகளில் உவர் நிலங்களில் கக்கா (kagga) என்றொரு பாரம்பரிய நெல் விளைவதாகவும், கேரளத்தில் பொக்கலி என்றொரு பாரம்பரிய நெல் வகை உவர், களர் நிலங்களில் விளைவதாகவும் இது தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டுவரும் விஞ்ஞானி ஒருவர் பிபிசி தமிழிடம் கூறினார். ஆனால், தமிழ்நாட்டில், களர், உவர் நிலங்களுக்கு ஏற்றதாக கூறப்படும் பாரம்பரிய நெல் வகையாக களர்ப்பாலையே இருக்கிறது.

பிற செய்திகள்:
- நியூட்ரினோ திட்டத்தால் என்ன ஆபத்து? தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியது என்ன?
- "தேர்தலில் வெற்றிபெற பணத்தையும் பரிசுப் பொருள்களையும் வாரியிறைக்கும் கட்சிகள்"
- திருவள்ளூர் சாமியாரின் ஆசிரமத்தில் விஷம் குடித்து இறந்த கல்லூரி மாணவி - என்ன நடந்தது?
- கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிரான போராட்டம்: கனடாவில் அவசரநிலை
- "என்னுடைய நிர்வாணப் படங்களை டெலிகிராம் நீக்காதது ஏன்?"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













