இந்தியாவில் சின்ன வெங்காய ஏற்றுமதி அதிகரிப்பு: தமிழ்நாட்டு விவசாயிகளின் நிலை என்ன?

பட மூலாதாரம், TNAU
- எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
- பதவி, பிபிசி தமிழ்
கடந்த ஆண்டு சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டது. பெரிய வெங்காயத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டது. ஆனால், தற்போது சின்ன வெங்காயம் ஏற்றுமதியில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. வெங்காயம் ஏற்றுமதியில் சாதனை படைத்தாலும், வெங்காய விவசாயிகளுக்கு பெரிதாக பலன் இல்லை. இடைத்தரகர்கள் வியாபாரிகளுக்கு மட்டுமே லாபகரமானதாக இருக்கிறது என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மகராஷ்ட்ரா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, மேற்கு வங்கம், குஜராத், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பெல்லாரி எனப்படும் பெரிய வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
சாம்பார் வெங்காயம் என்று சொல்லப்படும் சின்ன வெங்காயம் தென்னிந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில், தேனி, திண்டுக்கல், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் மேல் சின்ன வெங்காய சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டிற்கு 3-4 லட்சம் டன் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது.
சின்ன வெங்காயத்தின் பயன்பாடு தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அதிக அளவில் உள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோ - 5 என்ற ரகத்தையும் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரகத்தையே விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர்.
பன்மடங்கு அதிகரித்துள்ள சின்ன வெங்காய ஏற்றுமதி

பட மூலாதாரம், Piyush Goyal/Twitter
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 2013ம் ஆண்டுக்கு பிறகு சின்ன வெங்காய ஏற்றுமதி பெருமளவு அதிகரித்துள்ளது. அதன்படி, சின்ன வெங்காய ஏற்றுமதி 487 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக 2013 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை இரண்டு மில்லியன் அமெரிக்க டாலராக சின்ன வெங்காய ஏற்றுமதி இருந்தது. கடந்த 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 11.6 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. இது மகிழ்ச்சியளிக்கிறது என்று இந்திய தொழில், வர்த்தகம், நுகர்வோர் விவகாரங்கள், பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ப்யூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் முக்கிய வெங்காய ஏற்றுமதி நாடுகளாக இலங்கை (35.9%), மலேசியா (29.4%), தாய்லாந்து (12%), ஐக்கிய அரபு அமீரகம் (7.5%) மற்றும் சிங்கப்பூர் (5.8%) ஆகியவை விளங்குகின்றன. இந்தியா அனைத்து விதமான ஏற்றுமதியிலும் தொடர்ந்து வளர்ச்சியை கண்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்று மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டது. பெரிய வெங்காயத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டது. ஆனால், தற்போது சின்ன வெங்காயம் ஏற்றுமதியில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஏற்றுமதியில் சாதனை படைத்தாலும், அதை உற்பத்தி செய்த விவசாயிகளுக்கு பெரிதாக பலன் இல்லை. இடைத்தரகர்கள் வியாபாரிகளுக்கு மட்டுமே லாபகரமானதாக இருக்கிறது என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஏற்றுமதி அதிகரித்தாலும் விவசாயிகளுக்கு பலன் இல்லை

பட மூலாதாரம், Esanai boopathi
இது குறித்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சின்ன வெங்காய விவசாயி மற்றும் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் எசனை பூபதி பிபிசி தமிழிடம் கூறுகையில், ''சின்ன வெங்காய சாகுபடியில் முதலீடும் செலவும் அதிகம். ஆனால், விவசாயிகளுக்கு கிடைக்கும் லாபம் குறைவு. ஒரு ஏக்கருக்கு 75 ஆயிரம் வரை செலவாகும். நன்றாக விளைந்தால், 1.50 ரூபாய் கிடைக்க வேண்டும். ஆனால், வேர் அழுகல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கும் போது பெரும் நட்டம் ஏற்படும். இது வரை வேர் அழுகல் நோய்க்கு உரிய தடுப்பு வழிமுறை, மருந்து இல்லை. வெங்காய அதிக விளைச்சல் இருந்தால், விலை குறைந்து விடும். அப்போது விவசாயிகளுக்குத்தான் பாதிப்பு. ஆனால், விளைச்சல் குறைந்து, விலை அதிகரித்தால், அதன் மூலம் இடைத்தரகர்களும் வியாபாரிகளும் மட்டுமே பயன் அடைகிறார்கள். விவசாயிகளுக்கு நேரடியாக பலன் இல்லை. ஆகையால், 9 ஏக்கர் நில இருந்தாலும் 2 ஏக்கரில் மட்டுமே சின்ன வெங்காயம் சாகுபடி செய்கிறேன்.
வெங்காய ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக வரும் செய்தி கேட்க மகிழ்ச்சியானதாக இருக்கலாம். இதனால் விவசாயிகளுக்கு நேரடியாக என்ன பலன் ? என்று கேட்கிறேன். விவசாயிகள் நேரடி ஏற்றுமதியாளர்களாக இல்லை. பலருக்கும் அது குறித்த வழிமுறையும் தெரியவில்லை. மொத்த வியாபாரிகள் மூலம்தான் ஏற்றுமதி ஆகிறது. ஆகையால், வியாபாரிகள், ஏற்றுமதியாளர்கள் பயன்பெறுகின்றனர். நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு உள்ளது போல், சின்ன வெங்காயத்திற்கும் குறைந்தபட்ச ஆதார விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். ஆனால், நடைமுறையில் வியாபாரிகள்தான் விலையை முடிவு செய்கிறார்கள். இதனால், தற்போது விவசாயிகளிடம் கிலோ 20 -30 ரூபாய்க்கு வாங்குகிறார்கள். ஆனால், சந்தையில் கிலோ 60 - 80 ரூபாய் வரை விற்கிறார்கள். விளைந்தும் விவசாயிகளுக்கு விலையில்லாத நிலை உள்ளது. என்னிடம் மட்டுமே 100 மூட்டைக்கு மேல் விற்பனை ஆகாமல் இருக்கிறது. இவற்றை சேமித்து வைக்கவும் கிடங்கு வசதி இல்லை. இவற்றை விற்றாக வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளோம்.''என்கிறார் விவசாயி எசனை பூபதி.
விவசாயிகள் நேரடியாக ஏற்றுமதி செய்வதில்லை

பட மூலாதாரம், TNAU
இது குறித்து திருச்சி வெங்காய மொத்த விற்பனை சந்தை வியாபாரிகள் சங்க செயலாளர் தங்கராஜ் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''சின்ன வெங்காயம் என்றால் தமிழ்நாடுதான் பெயர் பெற்றது. தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. முன்பை விட அதிக உற்பத்தி செய்யப்படுகிறது. நான் 45 ஆண்டுகளாக இந்த தொழிலில் உள்ளேன். ஆனால், நேரடியாக ஏற்றுமதி செய்யவில்லை. ஏற்றுமதி செய்பவர்களுக்கு பல ஆண்டுகளாக சரக்கு அனுப்பி வைக்கிறேன். சரக்கு அனுப்பி ஒரு மாதத்தில் பணம் கொடுத்துவிடுவார்கள். ஆனால், நான் விவசாயிகளுக்கு ஒரு வாரத்தில் பணத்தை கொடுத்து விடுகிறேன். பணம் வர தாமதம், கொள்முதல் செய்வோர் குறித்த தொடர்பு இல்லாததால், விவசாயிகள் நேரடியாக ஏற்றுமதியில் ஈடுபடுவதில்லை. கடந்த மாதம் ஏற்றுமதிக்கு ஒரு கிலோ 60 ரூபாய்க்கு கொள்முதல் செய்தனர். தற்போது முதல் தர வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கே கிடைக்கிறது. ஆனால், அந்தளவிற்கு ஏற்றுமதியில்லை. குறிப்பாக, கடந்த 2 வாரங்களாக தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதிக்கு கொள்முதல் செய்யவில்லை. இன்று வரை ஏற்றுமதிக்கான ஆர்டரும் வரவில்லை. இதனால், தரமான வெங்காயம் கையிருப்பு இருந்தும் ஏற்றுமதி செய்யமுடியவில்லை. கர்நாடகத்தில் ஆண்டு முழுவதும் அதிக ஏற்றுமதி ஆகிறது. தமிழ்நாட்டிலும் ஏற்றுமதி வழக்கம் போல் இருந்தால், விவசாயிகளுக்கும் கூடுதல் விலை கிடைக்கும்.'' என்கிறார்.
இந்த ஆண்டும் ஏற்றுமதிக்கு அதிக வாய்ப்பு

பட மூலாதாரம், Prof. K.M.Sivakumar
தமிழ்நாட்டில் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள சின்ன வெங்காயம் ஏற்றுமதிக்கு ஏற்ற வகையில் உள்ளன. அதற்கேற்ற தரத்துடன் சின்ன வெங்காயம் உள்ளது என்று வேளாண்மைப் பல்கலைக்கழகம் கணித்துள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் பொருளியல் துறை பேராசிரியர் கே.எஸ்.சிவக்குமார் பிபிசி தமிழிடம் கூறுகையில், ஆகையால், இங்கிருந்து, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, புருனோ உள்ளிட்ட நாடுகளுக்கு சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பகுதிகளுக்கு கள ஆய்வு மேற்கொண்டோம். ஏற்றுமதிக்கு ஏற்ற வகையில் முதல் தரமான சின்ன வெங்காயம் அதிகம் உள்ளன. இதனால் ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. முதல் தரமான சின்ன வெங்காயம் ஒரு கிலோ 30 - 35 ரூபாயில் கிடைக்கிறது. இது இன்னும் குறைய வாய்ப்புள்ளது. குறிப்பாக ஏற்றுமதிக்கான முதல் தர சின்ன வெங்காயம் என்பது அடர் சிவப்பு நிறத்தில் 27 எம்.எம் அளவு இருக்க வேண்டும். இவற்றையே வெளிநாட்டில் உள்ள வியாபாரிகள் இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டுவார்கள். விவசாயிகளும் இதற்கேற்ப சாகுபடி செய்தால், ஏற்றுமதி அதிகம் செய்யலாம்.''என்றார்.
சின்ன வெங்காய சாகுபடி

பட மூலாதாரம், TNAU
நல்ல வடிகால் வசதியுடன் கூடிய வண்டல் மண் சின்ன வெங்காய சாகுபடிக்கு மிகவும் உகந்தது. களர் நிலங்கள் ஏற்றவை அல்ல. களிமண் நிலத்தில் வெங்காயம் சாகுபடி மிகவும் கடினம். வெப்பமான பருவ நிலையில் போதுமான அளவு மண்ணின் ஈரப்பதத்தில் இப்பயிர் நன்கு வளரும். சிறந்த மகசூலுக்கு மண்ணின் கார அமிலத்ததன்மை 6-7 இருத்தல் வேண்டும். நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழவு செய்யவேண்டும். கடைசி உழவின் போது 45 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும். ஏப்ரல் - மே மற்றும் அக்டோபர் - நவம்பர் சின்ன வெங்காய சாகுபடிக்கான பருவ காலம்.
நடுத்தர அளவுள்ள, நன்கு காய்ந்த வெங்காயத்தை பார்களின் இருபுறமும் சரிவில் 10 செ.மீ இடைவெளியில் நடவு செய்யவேண்டும். விதைத்த மூன்றாம் நாளும், பின்பு வாரம் ஒரு முறையும் நீர்ப் பாய்ச்சவேண்டும். அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன்பு நடவு செய்யவேண்டும். வெங்காயத் தாள்கள் சுமார் 60-75 சதவீதம் காயத் தொடங்கியதும் அறுவடை செய்யவேண்டும். தாள்களுடன் சேர்த்து வெங்காயத்தைப் பிடுங்கி, பின்னர் மேல் தாள்களை நீக்கி வெங்காயத்தை காய வைக்கவேண்டும். பின்பு நல்ல காற்றோட்டமுள்ள அறைகளில் சேமித்து வைக்கவேண்டும். ஒரு எக்டருக்கு 70 முதல் 90 நாட்களி்ல் கோ 1, கோ 2, கோ 3, கோ 4 ஆகிய ரகங்களில் 12-16 டன்கள் மகசூல் எடுக்கலாம். கோ (ஓ என்) 5 ரகத்தில் 90 நாட்களில் ஒரு எக்டரிலிருந்து 18 டன் மகசூல் அறுவடை செய்யலாம் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.
வேளாண் பல்கலைக்கழகத்தின் வழிகாட்டல்

பட மூலாதாரம், TNAU
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் விலை முன்னறிவிப்புத் திட்டம் உள்ளது. இதன்படி, சின்ன வெங்காயத்தின் விலை மற்றும் சின்ன வெங்காயம் பயிரிடப்படும் முக்கியப் பகுதிகளில் சந்தை ஆய்வுகளை மேற்கொள்கிறது. இதன் அடிப்படையில், சின்ன வெங்காய சாகுபடி காலத்திற்கு முன்பாக விலை குறித்த முன்னறிவிப்பை வெளியிடுகிறது. இதைக் கண்டு விவசாயிகள் சாகுபடி செய்வதைத் தீர்மானிக்கலாம். ஒவ்வொரு பருவத்திற்கும் முன்னதாகவும் அவ்வப்போதும் உத்தேச விலை முன்னறிவிப்பு வெளியிடப்படுகிறது. சாகுபடி முறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள், சந்தைப்படுத்தல் உள்ளிட்டவை குறித்தும் விவசாயிகளுக்கு வழிகாட்டப்படுகிறது என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மைய (CARDS) இயக்குநர் கே.ஆர்.அசோக் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- நியூட்ரினோ திட்டத்தால் என்ன ஆபத்து? தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியது என்ன?
- "தேர்தலில் வெற்றிபெற பணத்தையும் பரிசுப் பொருள்களையும் வாரியிறைக்கும் கட்சிகள்"
- திருவள்ளூர் சாமியாரின் ஆசிரமத்தில் விஷம் குடித்து இறந்த கல்லூரி மாணவி - என்ன நடந்தது?
- கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிரான போராட்டம்: கனடாவில் அவசரநிலை
- "என்னுடைய நிர்வாணப் படங்களை டெலிகிராம் நீக்காதது ஏன்?"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













