நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மு.க. ஸ்டாலின் கோரிய பிறகும் ராஜிநாமா செய்யாத திமுகவினர் - கூட்டணிக் கட்சிகளின் கொதிப்பு முடிவுக்கு வருமா?

DMK

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒத்திவைக்கப்பட்ட பதவிகளுக்கான தேர்தல் வரும் மார்ச் 26 ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ` கூட்டணிக் கட்சிகளுக்கான பதவிகளை தி.மு.கவினர் பெற்றது தொடர்பாக, `கூனிக் குறுகி நிற்கிறேன்' என முதலமைச்சர் கூறியும் கீழே உள்ள சில பொறுப்பாளர்களுக்கு மனசாட்சி உறுத்தவில்லை' என்கின்றனர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள்.

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கான தேர்தல் முடிவுகள் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. இதன்பின்னர், மார்ச் 4 ஆம் தேதி மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகள் பலவற்றையும் தி.மு.கவினரே போட்டியிட்டு வெற்றி பெற்றது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கட்சியில் இருந்தே நீக்கப்படும் தி.மு.கவினர்

இதையடுத்து, `கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டஇடங்களில் வென்ற தி.மு.கவினர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு என்னை நேரில் வந்து சந்திக்க வேண்டும்' என தி.மு.க தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனை ஏற்று சில இடங்களில் தி.மு.கவினர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதன் தொடர்ச்சியாக, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து தி.மு.க முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் நீக்கப்பட்டார். தொடர்ந்து, கடலூர் எம்.எல்.ஏ கோ.அய்யப்பனும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார்.

மேலும், மார்ச் 4 ஆம் தேதியன்று பல்வேறு காரணங்களால் நடைபெறாமல் இருந்த காலியாக உள்ள 62 பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் மார்ச் 26 அன்று நடைபெற உள்ளது. அப்போது பதவிகளை ராஜினாமா செய்த தி.மு.கவினரின் இடங்களில் கூட்டணிக் கட்சியினர் போட்டியிடலாம் எனவும் கூறப்படுகிறது. அதற்குள் பதவிகளை ராஜினாமா செய்யாதவர்களை நிர்பந்தப்படுத்தி பதவி விலக வைக்கவும் மாவட்ட தி.மு.கவினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்படியும் கட்டுப்படாமல் செயல்படுகிறவர்களை கட்சியில் இருந்து நீக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் 13) கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் தி.மு.க பேரூர் கழக செயலாளர் எஸ்.கே.செந்தில்குமார், தருமபுரி மாவட்டம், பொ.மல்லாபுரம் செயலாளர் உதயகுமார், பேரூராட்சி முன்னாள் தலைவர் புஷ்பராஜ், ஆனந்தன், ரகுமான்ஷான், மோகன்குமார், தஞ்சை வடக்கு மாவட்டம், வேப்பத்தூர் பேரூர் துணைச் செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜதுரை உள்ளிட்ட 7 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கம் செய்து தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டார்.

மனசாட்சி உறுத்தவில்லை: இந்த உத்தரவுகள் தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளிடையே உற்சாகத்தைக் கொடுத்தாலும் உள்ளாட்சிப் பதவிகளில் பல இடங்கள் முழுமையாக கைக்கு வராத சூழலும் நிலவுவதாகக் கூறப்படுகிறது. `` உள்ளாட்சி அமைப்புகளில் மறைமுகத் தேர்தல் என்பது பல்வேறு முறைகேடுகளுக்கும் குளறுபடிகளுக்கும் ஆள்கடத்தல்களுக்கும் குதிரைப் பேரத்துக்கும் வழிவகுக்கும் என்பதைத் தொடக்கத்தில் இருந்தே கூறி வருகிறோம். அதுதான் தற்போது நடந்துள்ளது. ஜனநாயகத்துக்கு எதிராக வலிமையுள்ளவர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற மனநிலையை உருவாக்குகிறது.

தி.மு.க தலைவர் கூறிய பிறகும் சில இடங்களில் எதுவும் நடக்காமல் இருப்பது, கட்சித் தொண்டர்களும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை மீறிச் செயல்படுவது போன்ற தோற்றம் தென்படுகிறது. அதனால்தான் மக்களே தேர்வு செய்யும் நேரடித் தேர்தலை வலியுறுத்தி வருகிறோம்'' என பிபிசி தமிழிடம் விவரித்தார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு.

VCK

பட மூலாதாரம், Vanni Arasu/Facebook

``வி.சி.கவுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகள் முழுமையாகக் கிடைத்துவிட்டதா?'' எனக் கேட்டோம். `` அப்படிக் கூறிவிட முடியாது. கூட்டணிக் கட்சிகளுக்கான பதவிகளை தி.மு.கவினர் பெற்ற சம்பவம் தொடர்பாக, `கூனிக் குறுகி நிற்கிறேன்' என முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டார். அதன்பிறகும் கீழே உள்ள பொறுப்பாளர்களுக்கு மனசாட்சி உறுத்தவில்லை.

உள்ளாட்சியில் கட்சித் தாவல் தடைச்சட்டம்

குறிப்பாக, திருப்போரூர் பேரூராட்சியில் வி.சி.க சார்பில் வென்ற பாரதி சமரன், துணைத் தலைவராகப் பதவியேற்றிருக்க வேண்டும். ஆனால், தி.மு.க உறுப்பினர் பரசுராமன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, அவரை பதவி விலகுமாறு தி.மு.க மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் கேட்டபோது, `என்னைக் கட்சியில் இருந்து நீக்கிக் கொள்ளுங்கள்' எனக் கூறியுள்ளார். அவர் ஏற்கெனவே பா.ம.கவில் இருந்து வந்ததால், மீண்டும் அந்தக் கட்சிக்கே செல்ல விரும்புவதாகவும் கூறப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் கட்சித் தாவல் தடைச் சட்டம் என்பது இல்லை. அதனைக் கொண்டு வந்தால் ஜனநாயத்தைக் காப்பாற்ற முடியும்'' என்கிறார்.

`` பல இடங்களில் காங்கிரஸ், வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம் ஆகிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளை தி.மு.கவினர் தரவில்லை. முதலமைச்சர் கூறிய பிறகு எங்கள் தலைவரும் பெருந்தன்மையாக, `நடந்தது நடந்தபடியே இருக்கட்டும்' எனக் கூறிவிட்டார். சில இடங்களில் தி.மு.கவினரின் சிரமங்களையும் புரிந்து கொண்டு செயல்படுகிறோம். உதாரணமாக, நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவியை எங்களுக்கு ஒதுக்கினர். ஆனால், அது எங்களுக்குக் கிடைக்கவில்லை. இதையடுத்து அங்குள்ள நிர்வாகிகளிடம் பேசி துணைத் தலைவர் பதவியைப் பெற்றோம். சில இடங்களில்தான் பதவிகள் வரவில்லை. தோழமைக் கட்சிகளை முதலமைச்சர் அரவணைத்துச் செல்கிறார். 2024 தேர்தலில் பா.ஜ.கவை வீழ்த்த வேண்டும் என்பதால் இணக்கத்தோடு செயல்பட வேண்டிய அவசியம் இருக்கிறது'' என்கிறார்.

ராஜிநாமாவை தவிர்க்கும் தி.மு.கவினர்

DMK

பட மூலாதாரம், Getty Images

இதே கருத்தை முன்வைத்து பிபிசி தமிழிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், `` எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளில், ஓரிரு இடங்கள்தான் கிடைக்கவில்லை. சில இடங்களில் தலைவர் பதவி இல்லாவிட்டால், துணைத் தலைவர் பதவி என உள்ளூர் அளவில் பேசி சரிசெய்து கொண்டனர். இதர இடங்களும் சரிசெய்யப்பட்டுவிடும்'' என்கிறார்.

சி.பி.எம் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட திருப்பூர், திருமுருகன் பூண்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு நகராட்சி, திருத்துறைப்பூண்டி ஆகியவற்றில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தப் பதவிகளில் திருத்துறைபூண்டி துணைத் தலைவர் பதவியை தி.மு.க பிரமுகர் ராஜிநாமா செய்துவிட்டதால், 26 ஆம் தேதி நடக்கவுள்ள தேர்தலில் சி.பி.எம் கட்சிக்கு கிடைக்கலாம் எனவும் அக்கட்சியினர் நம்புகின்றன. அடுத்து, கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியும் சி.பி.எம் கட்சிக்கு கிடைக்கவில்லை. தொடர்ந்து தங்களுக்கான பதவிகளைப் பெறுவதற்கு சி.பி.எம் கட்சியினர் முயன்று வருகின்றனர்.

இதில், காங்கிரஸ் கட்சிக்குத்தான் பல இடங்களில் ஏமாற்றம் கிடைத்துள்ளது. இதையடுத்து, மாவட்டங்களில் உள்ள தி.மு.க நிர்வாகிகளிடம் பேசி சரிசெய்யும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. `` பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சில இடங்களில் ராஜினாமா செய்ய மறுக்கின்றனர். அதுவும் ஓரிரு நாள்களில் சரிசெய்யப்பட்டுவிடும்'' என பிபிசி தமிழிடம் தெரிவித்தார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகப் பிரிவின் தலைவர் ஆ.கோபண்ணா.

தி.மு.க சொல்வது என்ன?

``கூட்டணிக் கட்சிகளுக்கான பதவிகள் முழுமையாகக் கொடுக்கப்பட்டுவிடுமா?'' என தி.மு.க செய்தித் தொடர்பாளரும் தலைமைக் கழக வழக்குரைஞருமான சூர்யா வெற்றிகொண்டானிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். ``எந்தெந்த மாவட்டங்களில் சிக்கல்கள் அதிகமாக இருந்ததோ, அங்கெல்லாம் பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு எட்டப்பட்டு வருகிறது. கட்சித் தலைமையின் எச்சரிக்கைக்கு மதிப்பு கொடுத்து பலரும் ராஜினாமா செய்துள்ளனர். அப்படியும் ராஜினாமா செய்யாமல் சந்திக்க வந்தவர்களை கட்சித் தலைவர் அனுமதி கொடுக்கவில்லை. கூட்டணிக் கட்சிகளுக்கான பதவிகள் தொடர்பாக, மாவட்ட நிர்வாகிகளிடம் பேசி 80 முதல் 90 சதவீதம் அளவுக்கு சரிசெய்யப்பட்டுவிட்டது. மார்ச் 26 ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடக்கும்போது அவையும் சரிசெய்யப்பட்டுவிடும்'' என்கிறார்.

``அப்படியும் பல இடங்களில் ராஜிநாமா செய்யாத சூழல் நிலவுகிறதே?'' என்றோம். `` கட்சி மற்றும் ஆட்சியைக் கடந்து, `எனக்குப் பதவிதான் வேண்டும்' எனக் கூறினால் வாக்களித்த மக்கள்கூட அவர்களுக்கு மரியாதை தர மாட்டார்கள். கவுன்சிலர்களால் தேர்வு செய்யப்பட்ட பதவிகள்தான் தலைவரும் துணைத் தலைவரும். எனவே, மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள். அவர்களால் அதிகபட்சம் 3 மாதங்கள்தான் பதவியில் நீடிக்க முடியும்'' எனக் குறிப்பிடும் சூர்யா வெற்றிகொண்டான்,

`` பேச்சுவார்த்தையின் அடிப்படையில் கூட்டணிக் கட்சிகளுக்குக் கிடைக்க வேண்டிய மரியாதை உறுதி செய்யப்பட்டு வருகிறது. ஆளும்கட்சியின் உத்தரவை மீறிய நபர்களுக்கு மக்கள் மதிப்பு கொடுக்க மாட்டார்கள். கூனிக் குறுகி நிற்பதாக முதலமைச்சர் கூறிய வார்த்தைகள், களத்தில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அது அங்குள்ள கட்சிக்காரர்களை பாதிக்கிறதோ இல்லையோ, உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்த மக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைமையின் உத்தரவை மீறியவர்களால், அந்தப் பதவியில் நிலையாக அமரவும் வாய்ப்பில்லை'' என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: