செளதி அரேபியா: ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை – காரணம் என்ன?

கடந்த கால மரண தண்டனைகளை எதிர்த்து மூன்று வருடங்களுக்கு முன்பு நியூயார்க்கில் நடந்த போராட்டம் இது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த கால மரண தண்டனைகளை எதிர்த்து மூன்று வருடங்களுக்கு முன்பு நியூயார்க்கில் நடந்த போராட்டம் இது

செளதி அரேபியாவில் ஒரே நாளில் 81 ஆண்களுக்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது கடந்த வருடம் மொத்தமாக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் அதிகம்.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் ஏமன் நாட்டை சேர்ந்த ஏழு பேர் மற்றும் சிரியா நாட்டை சேர்ந்த ஒருவரும் அடங்குவர். "இவர்கள் பல்வேறு கொடூரமான குற்றங்களை" புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அதில் பயங்கரவாதமும் அடங்கும் என அரசு செய்தி முகமையான எஸ்பிஏ தெரிவித்துள்ளது.

இதில் சிலர் ஐஎஸ், அல் கெய்தா அல்லது ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சி குழுவை சேர்ந்தவர்கள் என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பல்வேறு மனித உரிமை அமைப்புகள் பல தருணங்களில் முறையான விசாரணைகள் நடைபெறுவதில்லை என்று குற்றம் சுமத்துகின்றனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை அரசு மறுக்கிறது.

தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மூன்று கட்ட நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் எஸ்பிஏ தெரிவித்துள்ளது.

இவர்கள் மீது முக்கிய பொருளாதார இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது, பாதுகாப்பு படையினரை கொன்றது, கடத்தல், பாலியல் வன்முறை மற்றும் நாட்டிற்குள் ஆயுதங்களை கடத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

செளதி அரேபியாவில் அதிக அளவிலான மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவிக்கிறது. அதிக எண்ணிக்கையில் மரண தண்டனை விதிக்கும் நாடுகளின் பட்டியலில் செளதி அரேபியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியல் அம்னெஸ்டி இன்டர்நேஷ்னலால் தொகுக்கப்பட்டது. முதல் நான்கு இடங்களில் இருக்கும் நாடுகள் சீனா, இரான், எகிப்து மற்றும் இராக்.

கடந்த வருடம் 69 பேருக்கு செளதி அரேபியாவின் மரண தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட எண்ணிக்கை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: