500 பில்லியன் டாலர்கள் செலவில் செளதியின் பசுமை நகரம் - இது சாத்தியமா?

500 பில்லியன் டாலர் செலவில் சவுதி அரேபியாவின் பசுமை நகரம்

பட மூலாதாரம், NEOM.COM

    • எழுதியவர், மெர்லின் தாமஸ் & விபேக் வெனிமா
    • பதவி, பிபிசி செய்திகள்

இருட்டில் ஒளிரும் கடற்கரைகள். பாலைவனம் ஆதிக்கம் செலுத்தும் நாட்டில் கோடிக்கணக்கான மரங்கள் நடப்பட்டுள்ளன. மிதக்கும் ரயில்கள், போலியான நிலவு போன்றவற்றோடு கார் இல்லாத, கரிம வெளியீடு இல்லாத, பாலைவனத்தில் 100 மைல்களுக்கு நேர்கோட்டில் கட்டப்பட்ட ஒரு நகரம்.

பசுமைக்கு மாறுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக நியோம் என்ற எதிர்காலத்திற்கான சூழல் நகரத்தில் வரவுள்ள சில அம்சங்கள் இவை. ஆனால், இது உண்மையில் சாத்தியமான ஒன்றுதானா?

இந்தப் பூமியின் நலனில் சமரசமின்றி மனித குல முன்னேற்றத்திற்கு வழி காட்டும் எதிர்காலத்திற்கான வரைபடம் ஆக நியோம் இருக்கும் என்று கூறப்படுகிறது. 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்தத் திட்டம், சவுதி அரேபியாவின் விஷன் 2030 என்ற அந்நாட்டைச் செழுமையானதாக மாற்றிய தொழில் துறையான எண்ணெய் வர்த்தகத்தில் இருந்து படிப்படியாகத் திசை திருப்பும் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

26,500 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்ட, குவைத் அல்லது இஸ்ரேலை விடப் பெரிய, நியோம் நகரம், தற்போதைய சவுதி நீதித்துறையின் வரம்புகளுக்கு வெளியே உள்ளது. இந்த நகரம், முதலீட்டாளர்கள் முன்வைக்கும் வரைவின் அடிப்படையில் உருவாக்கப்படும் ஒரு தன்னாட்சி சட்ட அமைப்பால் நிர்வகிக்கப்படும் என்று இந்நகரத்தை உருவாக்குபவர்கள் கூறுகின்றனர்.

இபோது நியோமின் ஆலோசனைக் குழுவில் உள்ள முன்னாள் வங்கியாளரான அலி ஷெஹாபி, பாலைவனத்தின் ஊடாக நேர்கோட்டில் செல்லும் தி லைன் எனப்படும் 170 கி.மீ நீளமுள்ள நகரமும் இந்த பிரம்மாண்ட நகரத்திற்குள் அடங்கும் என்று கூறுகிறார்.

"இது பில்லியன்களைச் செலவழித்து மேற்கொள்ளப்படும் ஒரு பைத்தியக்காரத் திட்டம் என்று மக்கள் கூறுகின்றனர். ஆனால், இது தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒவ்வொரு தொகுதியாக உருவாக்கப்படும்," என்று அவர் கூறுகிறார். அதோடு, நேர்க்கோட்டில் அமைப்பது சாத்தியமில்லை என்றால், தி லைன் அடுக்குகளாகக் கட்டப்படும் என்று ஷிஹாபி விளக்குகிறார்.

பார்சிலோனாவின் நெரிசலற்ற "சூப்பர் ப்ளாக்குகள்" போலவே, ஒவ்வொரு சதுக்கமும் தன்னிறைவு கொண்டதாக இருக்கும் என்றும் கடைகள், பள்ளிகள் போன்ற வசதிகளைக் கொண்டிருக்கும் என்றும் மக்களுக்குத் தேவையான அனைத்தும் ஐந்து நிமிட நடை அல்லது மிதிவண்டியில் செல்லும் தூரத்திலேயே இருக்கும் என்றும் அவர் விளக்குகிறார்.

கட்டுமானப் பணிகள் முடிந்ததும், தி லைன் நகரத்திற்குள் பயணம் அதிவேக ரயில்கள் மூலமாகவே இருக்கும். இங்கு மிக நீண்ட பயணம் என்பது "20 நிமிடங்களுக்கு மேல் இருக்காது," என்று இதை உருவாக்குபவர்கள் கூறுகின்றனர்.

மேலும், உலகின் மிகப்பெரிய மிதக்கும் கட்டமைப்பாக, 7 கி.மீட்டருக்கு நீரில் மிதக்கும் நகரமான ஆக்ஸகான் என்ற நகரமும் நியோமில் இருக்கும். நியோமின் தலைமை நிர்வாகி, நத்மி-அல்-நாஷர், இந்தத் துறைமுக நகரம் "அதற்குத் தேவையான முதல்கட்ட உற்பத்திகளைச் செய்ய குத்தகைதாரர்களை 2022 தொடக்கத்தில் வரவேற்கும்," என்று கூறினார்.

இந்த தொழில்துறை மையத்தில் மட்டுமின்றி செங்கடல் கடற்கரைக்கும் அப்பால், உலகின் மிகப்பெரிய பவளப்பாறை மறுசீரமைப்பிற்கான திட்டங்களையும் நியோம் அறிவித்துள்ளது. சில நேரங்களில் ஏதோவோர் அறிவியல் புனைகதையைப் போல் தோன்றும் அதன் இணையதளம், பிரம்மாண்ட பிரதேசத்தின் முதல் கட்ட வேலைகள் 2025-ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று கூறுகிறது.

500 பில்லியன் டாலர் செலவில் சவுதி அரேபியாவின் பசுமை நகரம்

அதுதான் அவர்களுடைய தொலைநோக்குத் திட்டம். இப்போதுயை எதார்த்தம் மிகவும் சாதாரணமாக உள்ளது.

பாலைவனத்தில் ஒரு சதுக்கம் தற்போது கட்டபட்டுள்ளதை செயற்கைக்கோள் படம் காட்டுகிறது. வீடுகளின் வரிசைகளுடன், இரண்டு நீச்சல் குளங்கள் மற்றும் ஒரு கால்பந்து மைதானம் உள்ளது. இது நியோம் ஊழியர்களுக்கான முகாம் என்று அலி ஷிஹாபி கூறுகிறார். ஆனால், நாம் அங்கு இல்லாததால் அதைச் சரிபார்க்க முடியவில்லை.

ஆனால், பாலைவனத்தின் நடுவில் பசுமையானது என்று கூறுவதற்கு ஏற்றவாறு ஓர் அதிநவீன நகரத்தை உருவாக்குவது எந்தளவுக்குச் சாத்தியம்?

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஆற்றல் நிபுணரான முனைவர். மணால் ஷெஹாபி, நியோம் எவ்வளவு நிலைத்தன்மை வாய்ந்தது என்பதை மதிப்பிடும்போது, கருத்தில் கொள்ளவேண்டிய சில அம்சங்கள் உள்ளன. உணவு உள்நாட்டில், அதிகப்படியான வளங்களைப் பயன்படுத்தாமல் உற்பத்தி செய்யப்படுமா அல்லது வெளிநாட்டிலிருந்து வரும் இறக்குமதியை நம்பியிருக்குமா?

நியோம் "உணவு விஷயத்தில் மிகவும் தன்னிறைவு பெற்ற நகரமாக" மாறும் என்று இணையதளம் கூறுகிறது. இது, தற்போது 80% உணவை இறக்குமதி செய்யும் ஒரு நாட்டிற்கு, செங்குத்தாக விவசாயம் செய்வது மற்றும் பசுமை இல்லங்களுக்கான, ஒரு புரட்சிகரமான தொலைநோக்குப் பார்வையைக் கட்டமைக்கிறது. இதை நிலைத்தன்மையோடு செய்ய முடியுமா என்ற கேள்விகளும் உள்ளன.

500 பில்லியன் டாலர் செலவில் சவுதி அரேபியாவின் பசுமை நகரம்

பட மூலாதாரம், NEOM.COM

படக்குறிப்பு, 500 பில்லியன் டாலர் செலவில் சவுதி அரேபியாவின் பசுமை நகரம்

நியோம் திட்டத்தைக் கொண்டுவருவதில் உந்து சக்தியாக இருந்த சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பசுமை சலவை செய்வதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவர் எதார்த்தத்தில் இருந்து திசை திருப்ப சுற்றுச்சூழலைப் பற்றிய பெரும் வாக்குறுதிகளை அளித்து வருகிறார் என்று அவர்கள் விமர்சிக்கின்றனர்.

"மிகவும் பிரம்மாண்டமான இந்தத் திட்டம்" பட்டத்து இளவரசரின் பசுமையான சவுதி அரேபியாவுக்கான தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாகும். 26-வது காலநிலை உச்சி மாநாட்டின் காலநிலை மாற்றம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவரும் சவுதி பசுமை முன்னெடுப்பைத் தொடங்கினார். 2060-ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான இலக்கை அறிவித்தார்.

இது தொடக்கத்தில் காலநிலை சமூகத்தில் குறிப்பிடத்தக்க நகர்வாகக் காணப்பட்டது. ஆனால், அது ஆய்வுக்குத் தாக்குப்பிடிக்கவில்லை என்று கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச காலநிலை மாற்ற பேச்சுவார்த்தைகளின் வல்லுநர் முனைவர் ஜோ ஆன்னா டிப்லெட்ஜ் கூறுகிறார். வெப்பமயமாதலை 1.5 டிகிரியாகக் கட்டுப்படுத்த, உலக எண்ணெய் உற்பத்தி இப்போதிலிருந்து 2030 வரை ஆண்டுக்கு சுமார் 5% குறைய வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டுகிறார்.

ஆயினும் கூட, இந்த ஆண்டு 26-வது காலநிலை உச்சி மாநாட்டிற்கான பசுமை உறுதிமொழிகள் தலைப்புச் செய்தியான சில வாரங்களில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதாக சவுதி அரேபியா உறுதியளித்தது. எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல் அஸிஸ் பின் சல்மான், சவுதிகள் எண்ணெய் எடுப்பதை நிறுத்த மாட்டார்கள் என்று கூறினார். அவர், "இன்னும் நாங்களே கடைசி வரை இருக்கும் மனிதராக இருக்கப் போகிறோம். அதோடு ஹைட்ரோகார்பனின் ஒவ்வொரு கூறும் வெளியேற்றப்படும்," என்று கூறினார்.

500 பில்லியன் டாலர் செலவில் சவுதி அரேபியாவின் பசுமை நகரம்

பட மூலாதாரம், GOOGLE EARTH

"தற்போதைய சூழலில் சவுதி அரேபியா தொடர்ந்து இந்த எண்ணெயைச் சுரண்டி பிரித்தெடுக்க முடியும் என்று நினைப்பது உண்மையில் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது," என்று முனைவர் டிப்லெட்ஜ் கூறுகிறார்.

ஒரு நாட்டின் கரிம உமிழ்வு, அது உற்பத்தி செய்யும் எரிபொருளை விட அது பயன்படுத்து எரிபொருளில் இருந்து வருகிறது. எனவே, சவுதி அரேபியா போன்ற ஒரு நாடு ஆண்டுக்கு லட்சக்கணக்கான பீப்பாய்களை உற்பத்தி செய்து, வெளிநாடுகளுக்கு அனுப்புவதை அரசாங்கம் கணக்கில் சேர்க்க வேண்டியதில்லை.

உள்நாட்டில் கூட, சவுதி அரேபியா செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகமாக உள்ளது. 2030-ஆம் ஆண்டில் 50% மின்சாரம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதே அவர்களுடைய சமீபத்திய இலக்கு. இருப்பினும், 2019-ல் சுமார் 0.1% மின்சாரம் மட்டுமே அப்படி உற்பத்தி செய்யப்பட்டது.

'ஆக்கப்பூர்வமான சிந்தனை'

நியோம் திட்டத்தின் ஆதரவாளர்கள், கரிமம் இல்லாத உப்பு நீக்கும் ஆலைகளால் வழங்கப்படும் தண்ணீரைக் கொண்டு, காற்று மற்றும் சூரிய ஆற்றலில் இயங்கும் நிலையான ஸ்மார்ட் நகரத்தை உருவாக்குவது அவசியம் என்று கூறுகின்றனர்.

"சவுதி அரேபியாவிற்கு சில ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் தேவை. ஏனெனில், மத்திய கிழக்கில் தண்ணீர் வற்றிக் கொண்டிருக்கிறது" என்கிறார் நியோம் திட்ட ஆலோசனைக்குழுவைச் சேர்ந்த அலி ஷிஹாபி.

500 பில்லியன் டாலர் செலவில் சவுதி அரேபியாவின் பசுமை நகரம்

பட மூலாதாரம், YOUTUBE/NEOM

சவுதி அரேபியா ஒரு வறண்ட நாடு. அதன் நீரில் பாதி, புதைபடிம எரிபொருள்களில் இயங்கக்கூடிய நீரிலிருந்து உப்பை அகற்றும் தொழில்நுட்பமான, உப்பு நீக்கும் ஆலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. விலை உயர்ந்த செயல்முறையான இதிலிருந்து வரும் உப உற்பத்திப் பொருள்களான உப்புநீர் குழம்பு மற்றும் நச்சு ரசாயனங்கள், மீண்டும் கடலில் கொட்டப்படுகின்றன. கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு இவை தீங்கு விளைவிக்கும்.

நியோம் நகரத்தின் உப்புநீக்கும் செயல்முறை, புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் செயல்படுவதோடு, அதில் வரும் உப்புநீர் குழம்பானது மீண்டும் கடலில் கொட்டப்படுவதற்குப் பதிலாக தொழில்துறை மூலப் பொருளாகப் பயன்படுத்தப்படும். இதில் ஒரேயொரு தடங்கல் உள்ளது. உப்பு நீக்கும் ஆலைகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துவது இதுவரை வெற்றி அடைந்ததில்லை.

நியோம், "ஒரு முன்னோடி சோதனைத் திட்டம். ஆனால் மத்திய கிழக்கில் தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க முடிந்தால், இந்தத் திட்டம் வெற்றியடைந்தால், நியோ செய்யும் அனைத்துமே பயனுள்ளதாக இருக்கும்," என்று ஷிஹாபி ஒப்புக் கொள்கிறார்.

ஆனால், காலநிலை வல்லுநர்கள், நிரூபிக்கப்படாத தொழில்நுட்பங்களை நம்புவது காலநிலை செயல்பாடுகள் தாமதாவதன் ஒரு வடிவமாக இருக்கலாம். இது காலநிலை மாற்றத்தின் எதிரான குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளுக்குக் குறுக்கே வரலாம் என்று கவலைப்படுகிறார்கள். இது சில நேரங்களில் "தொழில்நுட்ப நம்பிக்கை" என்று விவரிக்கப்படுகிறது.

மேலும் நியோம் யாருக்கானது என்பது குறித்த பெரிய கேள்விகளும் உள்ளன.

செங்கடல் கடற்கரைக்கும் மலைகள் நிறைந்த ஜோர்டானிய எல்லைக்கும் இடையே உள்ள பரந்த நிலப்பரபு ஒரு சிறு-மாநிலத்தை உருவாக்கச் சரியான இடமாகத் தோன்றியிருக்கலாம். இருப்பினும், ஏற்கெனவே, அங்கு வசிக்கும் பாரம்பரிய நாடோடிகளான பெடூயின் ஹ்யூவைடட் பழங்குடியின மக்கள் உள்ளனர். இந்த வளர்ச்சியடையாத பிராந்தியத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் செல்வத்தைப் பெருக்கவும் இந்தத் திட்டம் உறுதியளிக்கிறது. ஆனால், இதுவரை உள்ளூர் மக்கள் எந்த நன்மையையும் காணவில்லை.

500 பில்லியன் டாலர் செலவில் சவுதி அரேபியாவின் பசுமை நகரம்

பட மூலாதாரம், YOUTUBE/NEOM

இந்த பிரம்மாண்ட நகரத்தைக் கட்டுவதற்காக இரண்டு நகரங்கள் அழிக்கப்பட்டு, உரிய இழப்பீடு இன்றி, 20,000 ஹ்யூவைடட் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர். "பழங்குடியின மக்களை வலுக்கட்டாயமாக இடம் மாற்றுவதற்கான முயற்சிகள் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் ஒவ்வொரு விதிமுறையையும் மீறுகின்றன," என்று அரபு உலகத்திற்கான ஜனநாயகம் என்ற அமைப்பின் நிர்வாக இயக்குநர் சாரா லியா விட்சன் கூறுகிறார்.

இதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். 2020-ஆம் அண்டு ஏப்ரல் மதம், அப்துல் ரஹிம் அல்-ஹ்யுவைடி, தபூக்கிலுள்ள அவருடைய வீட்டிலிருந்து வெளியேற மறுத்து, இணையத்தில் காணொளிகளை வெளியிடத் தொடங்கினார். சில நாட்களுக்குப் பிறகு, அவர் கணித்திருந்தபடியே, சவுதி பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வாஷிங்டன் டிசியில் உள்ள சவுதி தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஃபஹத் நேஸர், ஹ்யூவைடட் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டதாக வரும் குற்றச்சாட்டுகளை மறுத்தார். இருப்பினும் அவர் அல்-ஹ்யூவைடியின் கொலையை மறுக்கவில்லை. அதை ஒரு "சிறிய சம்பவம்" என்று கூறினார்.

சுற்றுலாப் பயணிகள் மற்றும் பணக்காரர்கள்

சௌதி பொருளாதாரத்தை பன்முகப்படுத்த சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, நியோம் முன்னெடுத்த மக்கள் தொடர்பு முயற்சிகள், அதை விமர்சனத்திற்கு உள்ளாக்கியது. அதன் விளம்பர காணொளிகள், சவுதி அரேபியாவின் அழுகு மற்றும் கவர்ச்சியை காட்டுகின்றன.

ஆனால், இந்தத் திட்டம் பெரும் பணக்காரர்களுக்குப் பயன்படும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். நாட்டின் அரச குடும்பத்திற்காக அரண்மனைகள் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. முதல் கட்டுமானத் திட்டங்களில் ஹெலிபேட் மற்றும் கோல்ஃப் மைதானத்தை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

500 பில்லியன் டாலர் செலவில் சவுதி அரேபியாவின் பசுமை நகரம்

பட மூலாதாரம், Getty Images

அலி ஷிஹாபி "தொழிலாளர்கள் முதல் கோடீஸ்வரர்கள் வரை" அனைவருக்கும் இதில் இடம் இருக்கும் என்று கூறுகிறார். இருப்பினும் அது அவ்வாறு உணரப்படவில்லை என்பதையும் அவர் ஒப்புக் கொள்கிறார்.

"நியோமின் பிரச்னை என்னவெனில், அதன் தகவல் தொடர்பு உத்தியில் அது தோல்வியடைந்துவிட்டது," என்று கூறியவர், "இது ஒரு பணக்கார கணினி பொம்மை என்று மக்கள் நினைக்கின்றனர்," என்கிறார்.

கடினமான முடிவு

"பசுமையான எதிர்காலத்திற்கான இந்தப் பயணத்தைத் தொடங்குவது எளிதானது அல்ல. ஆனால், நாங்கள் கடினமான முடிவுகளைத் தவிர்க்கவில்லை. பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் இடையில் தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற தவறான தேர்வை நாங்கள் நிராகரிக்கோம்," என்று முகமது பின் சல்மான் கூறினார்.

நியோம் இந்த நோக்கத்தின் ஒரு பகுதியாகும். ஆனால், இதுவரை சவுதி மக்கள், புதைபடிம எரிபொருட்களை உற்பத்தி செய்வதிலிருந்து விலகுவது என்ற மிகவும் கடினமான தேர்வைத் தவிர்த்து வருகின்றனர்.

எண்ணெய் குழாய்களை மூடுவது கடினமாக இருக்கும் என்கிறார் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆற்றல் நிபுணர் மணால் ஷெஹாபி. மேலும் அவர், "எண்ணெய் மற்றும் எரிவாயுவை இந்த அளவுக்குச் சார்ந்திருக்கும் எந்தவொரு நாடும் திடீரென்று அதைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, தன்னிடம் உள்ள வளங்களைச் சுரண்டுவதை நிறுத்துவது பொருளாதாரக் கண்ணோட்டத்தில் மிகவும் கடினமாக இருக்குமென்று நான் நினைக்கிறேன்," என்றார்.

உலகின் எரிசக்தித் தேவைக்கு தாங்கள் பதில் கொடுப்பதக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. "உலகம் முழுவதும் ஹைட்ரோ கார்பன்களுக்கான தேவை இன்னும் உள்ளது என்பதே உண்மை" என்கிறார் சவுதி தூதரக செய்தித் தொடர்பாளர் ஃபஹத் நேஸர்.

அப்துல் ரஹிம் அல்-ஹ்யுவைடி

பட மூலாதாரம், YOUTUBE

படக்குறிப்பு, அப்துல் ரஹிம் அல்-ஹ்யுவைடி

திரைக்குப் பின்னால், சௌதி மற்றும் பிற புதைபடிம எரிபொருளைச் சாந்திருக்கும் நாடுகள் சர்வதேச காலநிலை பொறுப்புகளைச் சுற்றியுள்ள விவாதங்களைத் தொடர்ந்து குறைக்க முயன்றுள்ளன," என்று டிப்லெட்ஜ் கூறுகிறார்.

இது 26-வது காலநிலை உச்சி மாநாட்டிலும் தொடர்ந்தது. மேலும், "நிச்சயமற்ற தன்மைகள், செலவுகள், இயற்கை தாக்கங்கள் போன்றவற்றை மேற்கோள் காட்டியதன் மூலம் காலநிலை மாற்ற பிரச்னையின் அவசர நிலையைத் தணிக்க மிகவும் தீவிரமாகத் தலையிட்டது. இதை காலநிலை மாற்ற பேச்சுவார்த்தைகளின் ஆரம்பத்தில் இருந்தே சவுதி அரேபியா ஊக்குவித்து வருகிறது," என்று கிளாஸ்கோவில் நடந்த பேச்சுவார்த்தைகளை நெருக்கமாக கவனித்த டிப்லெட்ஜ் கூறினார்.

ஆனால், அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஃபஹத் நேஸர், பசுமை சலவை குற்றச்சாட்டுகளை மறுத்து, சவுதி அரேபியா பசுமையான எதிர்காலத்தை நோக்கிச் செல்கிறது என்று வலியுறுத்துகிறார்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: