யுக்ரேன் Vs ரஷ்யா: போர்க்குற்றம் என்றால் என்ன? புதினை விசாரணை செய்ய முடியுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், டொமினிக் காசியானி
- பதவி, சட்ட நிருபர், பிபிசி நியூஸ்
யுக்ரேனில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா நடத்திய தாக்குதலை "போர்க் குற்றம்" என்று அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். அது உண்மைபோல் தெரியவில்லை. ஆனால் "போருக்குக் கூட விதிமுறைகள் உண்டு"என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சொல்கிறது.
ஜெனீவா உடன்படிக்கைகள், பிற சர்வதேச சட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களில் இவை குறிப்பிடப்பட்டுள்ளன.
போர்க்குற்றம் என்றால் என்ன?
குடிமக்கள் வேண்டுமென்றே தாக்கப்பட முடியாது. கூடவே அவர்கள் உயிர்வாழ்வதற்கு இன்றியமையாத உள்கட்டமைப்பையும் தாக்க முடியாது.
கண்மூடித்தனமான அல்லது பயங்கரமான துன்பங்களை ஏற்படுத்துவதால் சில ஆயுதங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதாவது உயிர்க்கொல்லி கண்ணிவெடிகள், ரசாயன அல்லது உயிரியல் ஆயுதங்கள் போன்றவை இதில் அடங்கும்.
போர்க் கைதிகள் என்ற உரிமை பெற்ற காயமடைந்த வீரர்கள் உள்பட நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் கவனிக்கப்பட வேண்டும்.
சித்ரவதை மற்றும் ஒரு குறிப்பிட்ட குழுவை அழிக்க வேண்டுமென்றே செய்யப்படும் முயற்சி அதாவது இனப்படுகொலை செய்வதை சர்வதேச சட்டத்தின் பிற பிரிவுகள் தடை செய்கின்றன.
போரின் போது கொலை, கற்பழிப்பு அல்லது ஒரு குறிப்பிட்ட கும்பலை துன்புறுத்துவது போன்ற கடுமையான குற்றங்கள் "மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்" என்று அழைக்கப்படுகின்றன.

உங்களது கதையை சொல்ல விரும்புகிறோம்: நீங்களோ அல்லது நண்பரோ, உறவினரோ யுக்ரேனில் இருக்கிறீர்களா?
தற்போது யுக்ரேனில் இருக்கும் தமிழர்களை தொடர்பு கொள்ள விரும்புகிறோம். அங்கு நீங்கள் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள்? அல்லது யுக்ரேனில் இருந்து வெளியேறி அண்டை நாடுகளில் இருக்கிறீர்களா? உங்களது அனுபவங்களை கீழே உள்ள படிவத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். பிபிசி தமிழில் இருந்து விரைவில் உங்களை தொடர்பு கொள்கிறோம். உங்கள் அனுபவங்களை பிபிசி தமிழ் இணையதளத்தில் பிரசுரிக்கலாம்.
உங்கள் கேள்விகளுக்கு பதில்: யுக்ரேன் மோதலில் இந்தியாவின் மீதான தாக்கம்
யுக்ரேன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அந்த மோதலின் தாக்கம் உலக அளவிலோ அல்லது உங்களது அன்றாட வாழ்வில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் பற்றியோ நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பலாம். உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். அதன் அடிப்படையில் அடுத்துவரும் செய்திகளை உங்களுக்கு வழங்குகிறோம்.
யுக்ரேனில் சுமத்தப்படும் போர் குற்றச்சாட்டுகள் உள்ளன?

பட மூலாதாரம், UKRAINE MILITARY VIA REUTERS
யுக்ரேனின் மேரியோபோலில் உள்ள ஒரு மருத்துவமனையில், மகப்பேறு மற்றும் குழந்தைகள் வார்டுகள் மீது ரஷ்யா நடத்திய வான் தாக்குதல் 'போர்க்குற்றம்' என்று யுக்ரேன் கூறியுள்ளது. அந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 17 ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் காயமடைந்தனர்.
ரஷ்ய துருப்புக்கள், தப்பியோடும் யுக்ரேனிய குடிமக்களை இலக்கு வைத்தும் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
கொத்துக் குண்டுகள் அதாவது ஏராளமான வெடிகுண்டுகளாகப் பிரிந்து தாக்கும் வெடிமருந்துகள், கார்ஹிவ்வின் பொதுமக்கள் வாழும் பகுதிகளைத் தாக்கியுள்ளன என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. இதுபோன்ற வெடிகுண்டுகளுக்கு தடை விதிக்கும் ஒப்பந்தத்தில் ரஷ்யா, யுக்ரேன் ஆகிய இருநாடுகளுமே கையெழுத்திடவில்லை. ஆனாலும் இந்த சம்பவங்கள் போர்க்குற்றமாக கருதப்படலாம்.
ஆக்ஸிஜனை உறிஞ்சி வேக்யூமை உருவாக்கும் தெர்மோபாரிக் வெடிமருந்துகளை ரஷ்யா பயன்படுத்தியதாக பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த அழிவுகர வெடிபொருட்கள் தடை செய்யப்படவில்லை. ஆனால் பொதுமக்களுக்கு அருகில் அவற்றை வேண்டுமென்றே பயன்படுத்துவது போர் விதிகளை நிச்சயமாக மீறுவதாகும்.
இந்த 'படையெடுப்பு' என்பதே 'ஆக்கிரமிப்பு போர்' என்ற கருத்தின் கீழ் ஒரு குற்றம் என்பது பாதுகாப்பு வல்லுநர்களின் வாதம்.
சந்தேக போர்க் குற்றவாளிகள் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது?
சந்தேகத்திற்கிடமான போர் குற்றங்களை விசாரிக்கும் கடமை ஒவ்வொரு நாடுகளுக்கும் உண்டு. சில நாடுகள் மற்றவர்களை விட அதிகமாக செய்கின்றன.
யுக்ரேனில் சாத்தியமான குற்றங்கள் பற்றிய ஆதாரங்களை சேகரிக்க உதவுவதாக, பிரிட்டனில் மூத்த போலீஸ் அதிகாரிகள் முன்வந்துள்ளனர்.
இரண்டாம் உலக போர் முடிந்தபின், யூகோஸ்லாவியாவின் பிளவுக்குப் பிறகு நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களை விசாரித்த தீர்ப்பாயம் உட்பட ஓரிரு நீதிமன்றங்களே நடைமுறையில் இருந்தன.

பட மூலாதாரம், AFP
1994இல் 100 நாட்களில் 800,000 பேரை ஹூட்டு தீவிரவாதிகள் படுகொலை செய்த ருவாண்டா இனப்படுகொலைக்கு காரணமானவர்களில் சிலரை தண்டிக்கவும், ஒரு அமைப்பு நிறுவப்பட்டது.இன்று, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) மற்றும் சர்வதேச நீதிமன்றம் (ICJ) ஆகியவை போர் விதிகளை நிலைநிறுத்தும் பாத்திரங்களை வகிக்கின்றன.
சர்வதேச நீதிமன்றம்
நாடுகளுக்கு இடையிலான தகராறுகளில் சர்வதேச நீதிமன்றம் ICJ தீர்ப்பளிக்கும். ஆனால் தனிநபர்களை தண்டிக்க முடியாது. யுக்ரேன், படையெடுப்பு தொடர்பாக ரஷ்யாவிற்கு எதிராக அங்கு வழக்கு தொடுத்துள்ளது.
ஐ.சி.ஜி (ICJ), ரஷ்யாவிற்கு எதிராக தீர்ப்பளித்தால், அந்த தீர்ப்பை அமல்படுத்தும் பணி ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு (UNSC) வரும்.
ஆனால், யு.என்.எஸ்.சி (UNSC) இன் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் ஒருவரான ரஷ்யா, அதை அனுமதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் வீட்டோ செய்ய முடியும்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஐசிசி, நாடுகளின் நீதிமன்றங்களின் முன்னிலையில் வராத, தனிப்பட்ட போர்க் குற்றவாளிகளை விசாரித்து தண்டனை வழங்கும்.

பட மூலாதாரம், Getty Images
இது நியூரம்பெர்க்கின் நவீன மற்றும் நிரந்தர வடிவம் ஆகும். நியூரெம்பெர்க், 1945 இல் காவலில் இருந்த மிக முக்கியமான நாஜி தலைவர்களுக்கு தண்டனை வழங்கியது.சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்த சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க நாடுகள் ஒப்புக்கொள்ளலாம் என்ற கொள்கையை நியூரம்பெர்க் உறுதிப்படுத்தியது.
யுக்ரேனில் நடந்த குற்றங்களை ஐசிசி விசாரிக்க முடியுமா?
யுக்ரேனில் போர்க்குற்றங்கள் நடத்தப்பட்டதாக நம்புவதற்கு நியாயமான அடிப்படை இருப்பதாகவும், மேலும் விசாரணை நடத்த 39 நாடுகளின் அனுமதி இருப்பதாகவும், பிரிட்டிஷ் வழக்கறிஞரும், ஐசிசியின் தலைமை வழக்கறிஞருமான கரீம் கான் க்யூசி கூறுகிறார்.
யுக்ரேனிடமிருந்து கிரைமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்ட 2013 ஆம் ஆண்டு வரையிலான கடந்தகால மற்றும் தற்போதைய குற்றச்சாட்டுக்களை புலனாய்வாளர்கள் விசாரிப்பார்கள்.
தனிநபர்களுக்கு எதிரான ஆதாரங்கள் இருந்தால், வழக்குரைஞர் ஐசிசி நீதிபதிகளிடம் அவர்களை விசாரணைக்குக் கொண்டு வர கைது வாரண்ட்களை பிறப்பிக்குமாறு கேட்பார் - விசாரணை ஹேக்கில் நடைபெறும்.நீதிமன்றத்தின் அதிகாரத்தின் நடைமுறை வரம்புகள் இங்குதான் வெளிப்படுகின்றன.
நீதிமன்றத்திற்கு சொந்தமாக போலீஸ் படை இல்லை. சந்தேக நபர்களை கைது செய்ய அது நாடுகளை நம்பியுள்ளது.
ஆனால் ரஷ்யா நீதிமன்றத்தில் உறுப்பினராக இல்லை . அது 2016 இல் வெளியேறியது. அதிபர் புதின் எந்த சந்தேக நபர்களையும் ஒப்படைக்க மாட்டார்.
சந்தேகத்திற்கு இடமான ஒருவர் வேறு நாட்டிற்குச் சென்றால், அவர்கள் கைது செய்யப்படலாம். ஆனால் அப்படி நடப்பது மிகவும் அரிது.
அதிபர் புதின் அல்லது பிற தலைவர்களை தண்டிக்க முடியுமா?
சுடக் கட்டளையிட்ட தலைவர்களை விட, போர்க் குற்றத்தைச் செய்யும் ஒரு ராணுவ வீரர் மீது போர்க்குற்றத்தைச் சுமத்துவது மிகவும் எளிது.
ஆனால் ஐசிசி "ஆக்கிரமிப்புப் போரை நடத்துதல்" என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவருக்கும் தண்டனை விதிக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
தற்காப்புக்கான நியாயமான ராணுவ நடவடிக்கை அல்லாத நியாயமற்ற படையெடுப்பு அல்லது மோதல் குற்றம் இது"அமைதிக்கு எதிரான குற்றங்களுக்காக" நாஜி தலைவர்கள் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று மாஸ்கோவால் அனுப்பப்பட்ட நீதிபதி, நேச நாடுகளை நம்பவைத்த பிறகு, இது நியூரம்பெர்க்கில் உருவானது.
"இந்த குற்றத்திற்காக ரஷ்யாவின் தலைவர்களை ஐசிசியால் தண்டிக்க முடியாது. ஏனெனில் அந்த நாடு நீதிமன்றத்தில் கையொப்பமிடவில்லை. பிரச்சனை இதுதான்,"என்று லண்டன் யுனிவர்சிட்டி காலேஜில் உள்ள சர்வதேச சட்ட நிபுணர் பேராசிரியர் பிலிப் சாண்ட்ஸ் க்யூசி கூறினார்.
கோட்பாட்டளவில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இந்த குற்றத்தை விசாரிக்குமாறு ஐ.சி.சி யிடம் கூறலாம். ஆனால் சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் ஒருவராக ரஷ்யா இதை மீண்டும் 'வீட்டோ' செய்ய முடியும்.
தனிநபர்கள் மீது வழக்குத் தொடர வேறு ஏதேனும் வழி இருக்கிறதா?
ஐசிசியின் செயல்திறன்- மற்றும் சர்வதேச சட்டம் நடைமுறையில் செயல்படும் விதமானது உடன்படிக்கைகளை மட்டுமல்லாமல், அரசியல் மற்றும் ராஜீய வழிகளையும் சார்ந்துள்ளது.
நியூரம்பெர்க்கைப் போலவே, ராஜீய வழிகள் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளில் தீர்வு உள்ளது என்று பேராசிரியர் சாண்ட்ஸ் மற்றும் பல வல்லுநர்கள் வாதிடுகின்றனர்.
யுக்ரேனில் நடந்த படையெடுப்பு குற்றத்தை விசாரிக்க, ஒரு தனி நீதிமன்றத்தை உலக தலைவர்கள் அமைக்க வேண்டும் என்றும் பேராசிரியர் சாண்ட்ஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
பிற செய்திகள்:
- மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுமி: மறுவாழ்வு பெற்ற 4 பேர்
- டிஜிட்டல் திரையில் வாசிப்பு - நம் மூளையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது?
- நான்கு மாநிலங்களில் ஆட்சியை தக்க வைக்கும் பாஜக - பஞ்சாபில் ஆம் ஆத்மி வெற்றி
- அகிலேஷ் யாதவ்: தனக்குத் தானே பெயர் வைத்துக் கொண்ட தலைவர்
- யோகி ஆதித்யநாத்தின் அரசியலை விவரிக்கும் 10 புகைப்படங்கள்
- ராமேஸ்வரத்தில் டாட்டூ போட வந்ததை போல் நடித்து இளைஞரை கடத்திய கும்பல்: என்ன நடந்தது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












