ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: திமுக - காங்கிரஸ் கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம் வருமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அடைந்திருக்கும் பின்னடைவு, பொதுத் தேர்தலின்போது கூட்டணிகளை அமைப்பதில் பாதகமாக அமையுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
நடந்து முடிந்த பஞ்சாப், உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தராகண்ட் மாநிலத் தேர்தல்களின் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவைத் தந்திருக்கின்றன. பஞ்சாபில் ஆட்சியை இழந்ததோடு, கோவாவில் கடந்த முறையவிட பல இடங்கள் குறைவாகப் பெற்றது. உத்தரப்பிரதேசத்திலும் பெற்றிருந்த இடங்களின் எண்ணிக்கை 7ல் இருந்து ஐந்தாகக் குறைந்துவிட்டது.
பாரதிய ஜனதா கட்சிக்கு மாற்றாக தேசிய அளவில் இருப்பைக் கொண்டிருக்கக்கூடிய கட்சியாக காங்கிரஸ் தன்னை முன்னிருத்திவந்த நிலையில், இந்தத் தேர்தல் முடிவுகள் அக்கட்சி மிகவும் பலவீனமடைந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
2024ஆம் ஆண்டில் இந்தியாவில் அடுத்த பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், காங்கிரஸ் மற்றும் பிராந்தியக் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணியை இந்தத் தேர்தலின் முடிவு பாதிக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
தற்போதைய சூழலில் காங்கிரசின் முக்கியமான தோழமைக் கட்சிகளாக திராவிட முன்னேற்றக் கழகம், கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதாதளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி, ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவை இருந்து வருகின்றன. இக்கட்சிகள் கடந்த தேர்தலில் ஒரே கூட்டணியில் இணைந்து போட்டியிட்டன.
கூட்டாட்சி முன்னணி என்ற பெயரில் அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ், சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. தெலுங்கு தேசம் தனித்துப் போட்டியிட்டது.
2024ஆம் ஆண்டுத் தேர்தலில் பா.ஜ.கவை எதிர்கொள்ள வேண்டுமென்றால், எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றாகக் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டுமென்பதை தனித்தனியாக பல்வேறு கட்சிகளும் கூறிவருகின்றன. அந்தக் கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை ஏற்பதை இந்தக் கட்சிகள் ஏற்குமா என்பதில் இப்போதுவரை தெளிவில்லை.
வலுவான மாநிலக் கட்சிகள்
இந்தியாவில் பல மாநிலங்களில் பா.ஜ.க., காங்கிரஸ் தவிர்த்த மாநிலக் கட்சிகள் வலுவான நிலையில் உள்ளன. கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதாதளம், தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, ஒரிஷாவில் பிஜு ஜனதா தளம், ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ், பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, தில்லியில் ஆம் ஆத்மி, ஹரியானாவில் ஹரியானா விகாஸ் கட்சி, மகாராஷ்ட்ராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன.
குஜராத், உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், அசாம் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.கவும் காங்கிரசும் நேரடிப் போட்டியில் இருக்கின்றன.
இந்தப் பின்னணியில்தான் 2024 தேர்தலில் தி.மு.க., திரிணமூல் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆகியவை எவ்விதமான நிலைப்பாட்டை எடுக்குமென்பதைக் கவனிக்க வேண்டியிருக்கிறது.
இதில் தி.மு.கவின் நிலைப்பாடு மிக முக்கியமானது. காரணம், 2019ஆம் தேர்தலுக்கு முன்பாக சென்னையில் நடந்த கூட்டத்தில் முதன்முதலாக ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின். அதே மேடையில் இருந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மமதா பேனர்ஜிக்கு ராகுலை முன்னிறுத்துவதில் ஒப்புதல் இருக்காது என்ற நிலையிலும் இந்த அறிவிப்பைச் செய்தார் ஸ்டாலின்.

2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், நடந்து முடிந்த நகர்ப்புர உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் தி.மு.க. - காங்கிரஸ் அடங்கிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் இந்த கூட்டணியை மாற்றிவிடுமா என்பதை கூர்ந்து கவனிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
ஆனால், தொடர்ந்து பா.ஜ.கவுக்கு எதிரான நிலைப்பாட்டில் தி.மு.க. தொடர்ந்து நீடிக்கவே செய்கிறது. தேர்தல் முடிவுகள் வெளிவந்ததற்கு அடுத்த நாள், தென் மாநிலத் துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசின் கல்விக் கொள்கையைக் கடுமையாக விமர்சித்தார். "கல்வி என்பது ஒத்திசைவு பட்டியலில் இருப்பதை வைத்து மத்திய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பிற்போக்குக் கருத்துகளைப் பாடத்திட்டங்களில் புகுத்தும்போக்கு கவலைக்குரியதாக உள்ளது. கல்வி முழுமையாக மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படுவதே இதற்கு சிறந்த தீர்வாக அமையும்.
மாநிலத்தில் உள்ள கல்விக் கொள்கையின் அடிப்படையிலேயே பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டுமென்பது இங்குள்ள மக்களின் விருப்பம். அதனை உணர்ந்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் செயல்பட வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
வரும் நாட்களில் முதலமைச்சர் கலந்துகொள்ளும் வகையில் திராவிடம் சார்ந்த சில நிகழ்வுகளை சென்னையிலோ, தில்லியிலோ தி.மு.க. நடத்தக்கூடுமென்று தெரிகிறது. ஆகவே தி.மு.கவைப் பொறுத்தவரை, பா.ஜ.க. எதிர்ப்பில் உறுதியாக இருக்கும் அதே நேரத்தில், காங்கிரசுடன் தொடர்ந்து பயணிப்பதா அல்லது மூன்றாவது அணி ஒன்று உருவாகும்போது அதனுடன் செல்வதா என்பது குறித்து இதுவரை எதையும் தெரிவிக்கவில்லை.
திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பேனர்ஜியைப் பொறுத்தவரை, காங்கிரஸைச் சேர்ந்தவர்களை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதை ஏற்கவில்லையென்றாலும் ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் ஒப்புக்கொண்டால் கூட்டணிக்குத் தயார் எனத் தெரிவித்திருக்கிறார். தகுந்த இடங்களை ஒதுக்கினால், காங்கிரசும் இந்தக் கூட்டணியை ஏற்கக்கூடும்.

பட மூலாதாரம், Getty Images
தெலங்கானா மாநிலத்தில் தற்போதைய சூழலில் தெலுங்கானா ரஷ்ட்ரிய சமிதி (டிஆர்எஸ்) பா.ஜ.கவைக் கடுமையாக எதிர்த்து வருகிறது. அங்கு மொத்தம் 17 இடங்கள் உள்ளன. "டிஆர்எஸ்சைப் பொறுத்தவரை, காங்கிரசுடனான கூட்டணியை ஏற்கக்கூடும். ஆனால், மிகக் குறைவான இடங்களையே அக்கட்சி ஒதுக்க முன்வரும். இதனைக் காங்கிரஸ் ஏற்குமா என்பது தேர்தல் நேரத்தில்தான் முடிவுசெய்யப்படும்" என்கிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பு செயலரான எஸ்.வி. ரமணி.
மேலும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை எடுத்துக்கொண்டால், அங்கு காங்கிரஸ் இல்லாமல் வெல்ல முடியாது என்கிறார் ரமணி. "இந்த மாநிலங்களில் மதச்சார்பற்ற கூட்டணிக்கே ஆதரவு இருக்கும். மகாராஷ்ட்ராவில் தற்போது இருப்பதைப் போலவே தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி தொடரும். தமிழ்நாட்டிலும் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தொடரும்." என்கிறார் அவர்.
ஆனால், 2024ஆம் ஆண்டு கூட்டணி குறித்து இப்போது விவாதிக்க வேண்டிய அவசியமே எந்தக் கட்சிக்கும் கிடையாது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன். "இன்னும் சில மாதங்களில் மேலும் பல மாநிலங்களில் தேர்தல்கள் வரவிருக்கின்றன. அந்தத் தேர்தல் முடிவுகளும் 2024ஆம் ஆண்டு கூட்டணி அமைவதில் ஆதிக்கம் செலுத்தும். தவிர, கூட்டணி அமையும்போது காங்கிரசால் தங்களுக்கு என்ன தர முடியும் என்பதையும் மாநிலக் கட்சிகள் பார்ப்பார்கள். 2014, 2019ல் இருந்ததைப் போன்ற நிலை காங்கிரசுக்கு இந்த முறை இருக்காது. பல கட்சிகள் காங்கிரசின் தலைமையை ஏற்க மாட்டார்கள்" என்கிறார் ராதாகிருஷ்ணன்.
அம்மாதிரியான சூழலில் ஒவ்வொரு கட்சியும் தன் மாநிலத்தில் தன் பலத்தில் வெற்றிபெற்றுவிட்டு, தேர்தலுக்குப் பிறகு தங்களுக்கு என்ன வாய்ப்பிருக்கிறது என்று பார்க்கக்கூடும். "தேர்தலுக்கு முன்பே அவர்கள் சண்டையிட ஆரம்பித்தால் அது பா.ஜ.கவுக்கு சாதகமாக முடியும்" என்கிறார் ராதாகிருஷ்ணன். தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி போன்ற கட்சியைப் பொறுத்தவரை, 2023ல் நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் தோற்றுவிட்டால் அந்தக் கட்சியின் இருப்பே கேள்விக்குறியாகிவிடும். அந்தச் சூழலையும் மனதில்வைத்துத்தான் டிஆர்எஸ் முடிவெடுக்கும் என்கிறார் ராதாகிருஷ்ணன்.
2024ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலின்போது பா.ஜ.கவின் முக்கியமான கூட்டணிக் கட்சிகளாக ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகியவை இருக்கக்கூடும்.
"எது எப்படியிருந்தாலும் காங்கிரஸ் ஆதரவின்றி மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே 2024 தேர்தலில் இடமிருக்காது. காரணம், பிஜு ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தவிர்த்த பெரும்பாலான மாநிலக் கட்சிகள் கடுமையான பா.ஜ.க. எதிர்ப்பு மனநிலையில்தான் இருக்கின்றன. மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற பெரிய மாநிலங்களில் உள்ள ஆளும்கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியையே விரும்புகின்றன. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதியும் காங்கிரஸ் கூட்டணியில் இணையக்கூடும். எனவே, தேர்தலுக்குப் பிறகு, மூன்றாவது அணி அமைந்தாலும் அது காங்கிரஸ் ஆதரவுடனேயே அமையும்" என்கிறார் ரமணி.
இந்த வருட பிற்பகுதியில் தேர்தலை சந்திக்கவிருக்கும் இமாச்சலப் பிரதேசம், குஜராத், 2023ல் தேர்தலை சந்திக்கவிருக்கும் ராஜஸ்தான், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களின் தேர்தல் முடிவுகளும் பிராந்தியக் கட்சிகளின் 2024ஆம் ஆண்டு தேர்தல் கூட்டணிக் கணக்குகளில் எதிரொலிக்கும்.
பிற செய்திகள்:
- மனிதர்கள் ஒருவரை ஒருவர் தொட முடியாமல் போனால் என்னாகும்?
- யுக்ரேன் Vs ரஷ்யா: போர்க்குற்றம் என்றால் என்ன? புதினை விசாரணை செய்ய முடியுமா?
- தஞ்சாவூர், புதுக்கோட்டையில் களைகட்டும் மொய் விருந்துகள் - கள நிலவரம்
- உத்தர பிரதேச தேர்தலில் காங்கிரஸ், பிரியங்காவின் பிரசாரம் எடுபடாமல் போனது ஏன்?
- உத்தர பிரதேச தேர்தல்: அகிலேஷின் 'சைக்கிள்' பஞ்சர் ஆனது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












