உத்தர பிரதேச தேர்தல்: அகிலேஷின் 'சைக்கிள்' பஞ்சர் ஆனது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சரோஜ் சிங்
- பதவி, பிபிசி இந்தி
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சியை இழந்திருந்த அகிலேஷ் யாதவ் இந்த முறையும் அந்த வாய்ப்பை தவற விட்டுள்ளார்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அகிலேஷ் யாதவ் முதல் முறையாக தமது கருத்தை தமது ட்விட்டர் பக்கம் வாயிலாக வெளியிட்டார். "எங்கள் வெற்றித் தொகுதிகளை இரண்டரை மடங்கும், வாக்கு சதவீதத்தை ஒன்றரை மடங்கும் உயர்த்திய உ.பி மக்களுக்கு மனமார்ந்த நன்றி! பாஜகவின் வெற்றித் தொகுதிகளைக் குறைக்க எங்களால் முடியும் என்பதை நாங்கள் காட்டியுள்ளோம். பாஜகவின் இந்த வீழ்ச்சி தொடரும். மனக் குழப்பமும், மாயையும் பாதிக்கு மேல் நீங்கிவிட்டன, மீதி சில நாட்களில் முற்றிலுமாக நீங்கிவிடும். மக்கள் நலனுக்கான எங்களின் போராட்டம் வெல்லும்!" என்று அதில் அகிலேஷ் குறிப்பிட்டுள்ளார்.
அகிலேஷ் கூறுவது போல தேர்தல் களத்தில் பதிவான முடிவுகளின்படி, பாஜகவின் வெற்றி வித்தியாசம் குறைந்துள்ளது. சமாஜ்வாதி கட்சியின் செயல்பாடும் 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த முறை வாக்குகள் அளவில் மேம்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இந்த முறை நடந்த சட்டசபை தேர்தலில், அகிலேஷ் துணிந்து பல நடவடிக்கைகள் எடுத்தார். சமயோசிதமாக செயல்பட்டபோதும் அவர் வெற்றிக்கனியைப் பறிக்கத் தவறிவிட்டதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்தத் தேர்தலில் முலாயம் சிங் யாதவ் இவருக்காக முதன்முறையாகப் பிரச்சாரம் செய்த கர்ஹல் சட்டமன்றத் தொகுதியை அவரால் தக்க வைத்துக்கொள்ள முடிந்தது.
ஆனால் மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட தமது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த ஒரே நட்சத்திரப் பிரசார பீரங்கியாக இவர் மட்டுமே தனித்துச் செயல்பட்டார். இந்த தேர்தலில் மாநிலம் முழுவதும் சுமார் 130 தேர்தல் பொதுக்கூட்டங்களில் அகிலேஷ் உரையாற்றினார். ஆனாலும் அவரது கட்சிக்குரிய 'சைக்கிள்' சின்னம் பின்தங்கிவிட்டது.
நரேந்திர மோதி, யோகி ஆதித்யநாத் கூட்டணிக்கு முன்பு தேர்தல் களத்தில் அகிலேஷ் யாதவ் பின்தங்கிவிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
பாஜக, சமாஜ்வாதி கட்சிகளிடையேயான வித்தியாசம்
இந்த கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் பிபிசியிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் நீரஜா செளத்ரி, "2017இல் அகிலேஷ் 50க்கும் குறைவான தொகுதிகளையும் 20 சதவீத ஓட்டுகளையும் பெற்றிருந்தார். அதை கவனத்தில் கொண்டால், அந்தக் கட்சியின் செயல்பாடு இந்த முறை அவ்வளவு மோசமில்லை. வெற்றி பெற்ற தொகுதிகளும் வாக்கு சதவீதமும் இம்முறை அதிகரித்துள்ளன," என்றார்.
"ஆனால், பாஜகவுடனான சமாஜ்வாதி கட்சியின் வாக்குகள் வித்தியாசம் மிகப் பெரிதாக இருந்ததால் அதை முற்றிலும் நிரப்புவது கடினமாக இருந்தது. 2017இல் பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்றிருந்தது." என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் நீரஜா, "இந்தத் தேர்தலில் மக்கள் மத்தியில் பாஜக மீது அதிருப்தி இருந்ததேயொழிய கோபம் இல்லை," என்கிறார்.
"கோபத்தைக் குறைக்க பாஜக தனது முழு இயந்திரத்தையும் களத்தில் இறக்கியது. உப்பு, எண்ணெய், பணம், தடுப்பூசி, எரிவாயு என அனைத்தையும் கொடுத்து மக்களின் கோபத்திலிருந்து தன்னைக் காத்துக்கொண்டது. ஆனால் அகிலேஷ் மக்களின் இந்தக் கோபத்தை மேலும் தூண்டித் தனக்குச் சாதகமான வாக்குளாக அதைத் திருப்பத் தவறிவிட்டார்."
"இதுமட்டுமின்றி பெண்கள் வாக்கு வங்கியைக் கவர எந்த வியூகத்தையும் அகிலேஷ் யாதவ் உருவாக்கவில்லை. பலனளிக்கும் திட்டங்களின் மூலம், பெண்களின் பெரும் வாக்கு வங்கியை உருவாக்க பாஜகவால் முடிந்தது. அது அந்தக் கட்சிக்கு மிகப் பெரிய துருப்புச் சீட்டாக இருந்தது." என்கிறார் நீரஜா.

பட மூலாதாரம், Getty Images
யாதவ சமூகத்திற்கு எதிரான ஓபிசி வாக்குகளை பெற முயற்சி
இந்த தேர்தலில் அகிலேஷ், தனது வயூகத்தை அமைப்பதில் தெளிவாக இருந்தார். யாதவர்கள் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட சமூக தலைவர்கள் ஒவ்வொருவராக பாஜகவை விட்டு வெளியேறியபோது, அகிலேஷ் யாதவ் அவர்களுக்காக தமது கதவுகளைத் திறந்து வைத்தார். இது அகிலேஷின் 'மாஸ்டர் ஸ்ட்ரோக்' என்று நம்பப்பட்டது.
ஆனால் தமது அதிருப்தித் தலைவர்களுக்கு எதிராக பாஜக முன்னிறுத்திய வேட்பாளர்கள் களத்தில் மிகவும் கடினமாக உழைத்தனர்.
இது குறித்து விவரிக்கும் நீரஜா, "யாதவர்கள் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் தலைவர்களைத் தங்களுடன் இணைத்துக்கொள்ளும் அகிலேஷின் வியூகத்தில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அதில் அவர் முழுமையாக வெற்றிபெறவில்லை. ஒருவேளை பாஜகவில் இருந்து விலகி வந்தவர்கள், தங்கள் சமூகத்தினரின் நம்பிக்கையைப் பெறத் தவறியிருக்கலாம். அதனால் வாக்குகள் இடம் மாறாமல் போயிருக்கலாம்" என்கிறார்.
மூத்த பத்திரிகையாளர் நிஸ்டுலா ஹெப்பார், நீரஜாவின் கருத்துடன் வேறுபடுகிறார். கடந்த 20 ஆண்டுகளாக இவர் பாஜக, சமாஜ்வாதி கட்சி தொடர்புடைய தகவல்களை தலைநகர் டெல்லியில் மிக நெருக்கமாக கவனித்து வந்தவர்.
"ஜாதி அடிப்படையில் உருவாகும் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதால் பலன் உண்டு, ஆனால் ஓரிரு தலைவர்களை தங்களுடன் சேர்த்துக் கொள்வதால், ஒட்டுமொத்த சமுதாயத்தின் வாக்குகளும் கிடைக்கும் என்று கூற முடியாது. கட்சிக்கு லாபம் வரலாம், ஆனால் சுவாமி பிரசாத் மெளரியா, மௌரிய சமூகத்தினரின் மொத்த வாக்குகளையும் பெற்றுத் தர முடியாது. அது அகிலேஷ் போட்ட தப்புக் கணக்காக இருக்கலாம். பாஜகவின் கணக்கு இந்த விஷயத்தில் சரியாக இருந்தது." என்கிறார் நிஸ்டுலா.
இருப்பினும், அகிலேஷ் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளாரே அந்த சிறிய கட்சிகளின் வாக்குகள் எந்தெந்தக் கட்சிக்குச் சென்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும் நிஸ்டுலா குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
அகிலேஷின் மற்றொரு தவறு
அகிலேஷ் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக, பாஜகவுக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்த அவர் தவறி விட்டார் என்கிறார் நிஸ்டுலா.
"இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பெருந்தொற்றாக கொரோனா நாடு முழுவதையும் புரட்டிப்போட்டிருந்தது. மத்திய, மாநில அரசுகள் செயலற்றுப் போயிருந்த அந்தச் சூழலில் அகிலேஷ் நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் எதிர்கட்சி தலைவராக அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கத் தவறினார். களத்தில் இறங்கி குரல் கொடுக்கத் தவறினார். வறியநிலை மற்றும் பல பிந்தங்கிய மாவட்டங்களைக் கொண்டுள்ள உத்தர பிரதேசத்தில், கொரொனாவின் இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அது மக்கள் பாஜக மீது கோபம் கொள்ளக் காரணமானது. அந்தக் கோபத்தைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ள அகிலேஷ் தவறிவிட்டார்," என்கிறார் நிஸ்டுலா.
"மக்கள் மத்தியில் இறங்கி, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து கண்ணீரைத் துடைக்க முற்பட்டிருந்தால் மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பாஜகவுக்கு மாற்றாகச் சமாஜ்வாதி கட்சி உருவெடுத்திருக்கலாம். இலவச உணவுப் பொருட்கள் வழங்கிய பாஜக, மக்களிடம் இழந்திருந்த நம்பிக்கையை மீட்டெடுத்தது. அகிலேஷ் அந்த வாய்ப்பை தவற விட்டு, காலம் கடந்து அரசியல் களத்தில் இறங்கினார்," என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
நேர்மறைத் திட்டங்கள் இல்லாமை
"இங்கு இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். பாஜகவுக்கு மாற்றாக தமு கட்சி ஆட்சியைக் கைப்பற்ற வாக்குகள கோரிய அகிலேஷ், தேர்தல் அறிக்கையில் மக்களை ஈர்க்கும் சிறப்புத் திட்டங்கள் எதையும் குறிப்பிட்டிருக்கவில்லை. இந்தத் தேர்தலில் அகிலேஷ் நேர்மறைத் திட்டங்கள் எதையும் முன்னெடுக்கவில்லை," என்பதும் பத்திரிகையாளர் நிஸ்டுலா சுட்டிக்காட்டும் மற்றொரு விஷயம்.
சமாஜ்வாதி கட்சி தனது அறிக்கையை "22இன் 22 வாக்குறுதிகள்" என்ற பெயரில் வெளியிட்டது, அதில் விவசாயிகளுக்கு அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை, 15 நாட்களில் கரும்பு விவசாயிகளுக்குப் பணம், 2025க்குள் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகள் இருந்தன. வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு இரண்டு எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் இரு சக்கர வாகன உரிமையாளர்களுக்கு மாதம் ஒரு லிட்டர் பெட்ரோலும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மாதந்தோறும் மூன்று லிட்டர் பெட்ரோல் அல்லது ஆறு கிலோ சிஎன்ஜி வழங்கப்படும் என சமாஜ்வாதி கட்சி வாக்குறுதி அளித்தது.
வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை தேர்தல் வாக்குறுதியில், மன்ரேகா என சுருக்கமாக அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ், நகர்ப்புற வேலை உறுதிச் சட்டத்தை உருவாக்குவது குறித்தும், தகவல் தொழில்நுட்பத் துறையில் 22 லட்சம் பேருக்கு வேலை வழங்குவதாகவும் உறுதியளித்தது. தேர்தல் பிரசாரத்தில் விவசாயிகள், பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய பிரச்னைகளை அகிலேஷ் மையமாக வைத்திருந்தார். ஆனால் பொதுமக்கள் அவரது வாக்குறுதிகளை நம்பவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
அகிலேஷ் இந்தத் தேர்தலில் சரியான விஷயத்தைக் கையிலெடுத்தார். இந்து - முஸ்லிம் பிரிவினையைத் தொடாமல் வேலையில்லா திண்டாட்டத்தைக் கையிலெடுத்தார். தனது யாதவ சமூக வாக்கு வங்கியை வலுப்படுத்தினார். இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளையும் இணைக்க முயற்சித்தார்.
ஆனால் பாஜகவை எட்டிப்பிடிக்கும் அளவுக்கு அவருக்கு வெற்றி கிட்டவில்லை. ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியுடனான கூட்டணி, சமாஜ்வாதி கட்சிக்குப் பெரிய அளவில் பலனளித்துள்ளது. ஆனால் எந்த அளவிற்கு என்பதை அறிய, மேற்கு உத்தரபிரதேசத்தின் இடங்களைப் பற்றி ஒரு தனிப் பகுப்பாய்வு செய்து பார்க்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
பலவீனமான கட்சிக் கட்டமைப்பு
அகிலேஷின் இந்தத் தோல்விக்கு சமாஜ்வாதி கட்சியின் பலவீனமான கட்டமைப்பும் ஒரு பெரிய காரணம் என்கிறார் நீரஜா செளத்ரி.
"அகிலேஷ் எங்கு சென்றாலும் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு தொண்டர்களும் காணப்பட்டனர். ஆனால், பேரணியை நடத்திவிட்டு அவர் செல்லும்போது, கூட்டமும் காணாமல் போவது வழக்கமாக இருந்தது" என்கிறார் அவர்.
காங்கிரசுக்கும் இதே பிரச்னைதான். அதே சமயம் பாஜகவிடம் பண பலமும் பூத் அளவில் விரிவான தொண்டர் படையும் இருந்தன.
இவ்வளவு பெரிய தேர்தலில் வெற்றி பெற தமது பலவீனமான கட்டமைப்பு போதாது என்பதை அகிலேஷ் உணர்ந்து கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்கிறார் நீரஜா செளத்ரி.
பிற செய்திகள்:
- மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுமி: மறுவாழ்வு பெற்ற 4 பேர்
- டிஜிட்டல் திரையில் வாசிப்பு - நம் மூளையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது?
- நான்கு மாநிலங்களில் ஆட்சியை தக்க வைக்கும் பாஜக - பஞ்சாபில் ஆம் ஆத்மி வெற்றி
- அகிலேஷ் யாதவ்: தனக்குத் தானே பெயர் வைத்துக் கொண்ட தலைவர்
- யோகி ஆதித்யநாத்தின் அரசியலை விவரிக்கும் 10 புகைப்படங்கள்
- ராமேஸ்வரத்தில் டாட்டூ போட வந்ததை போல் நடித்து இளைஞரை கடத்திய கும்பல்: என்ன நடந்தது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












