உத்தரபிரதேசத்தில் பாஜகவின் வெற்றிக்கு யார் காரணம்? - யோகியா அல்லது மோதியா?

UP Elections - Modi or Yogi

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சரோஜ் சிங்
    • பதவி, பிபிசி நிருபர்

உத்தரப் பிரதேசத்தில் தொடர்ந்து 2-வது முறையாக ஒரு கட்சி ஆட்சிக்கு வருவது 37 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழப்போகிறது. அம்மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

உ.பி.யின் இந்தத் தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை முன்னிறுத்தி பாஜக போட்டியிட்டிருக்கலாம். ஆனால் பிரதமர் மோதியும் தேர்தல் பிரசாரத்தில் எந்தக்குறையும் வைக்கவில்லை.

ஒருபுறம், யோகி ஆதித்யநாத் கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலைக்குப் பிறகு உத்தரபிரதேசத்தின் எல்லா மாவட்டங்களுக்கும் சென்றார். தேர்தலின் போது 200க்கும் மேற்பட்ட பேரணிகளை நடத்தினார். அதே நேரத்தில் பிரதமர் மோதி 27 தேர்தல் பேரணிகளில் உரையாற்றினார்.

முதல்வர் யோகியின் 'புல்டோசர் பாபா' பிம்பத்தை பயன்படுத்திக் கொள்ள பாஜக முயன்றது. கூடவே மத்திய அரசின் இலவச ரேஷன் பொருட்கள் மற்றும் உப்பு வழங்கும் திட்டமும் பிரசாரத்தில் முக்கிய இடம் பிடித்தது.

UP Elections - Modi or Yogi

பட மூலாதாரம், Getty Images

ஐந்தாண்டுகள் ஆட்சியில் இருந்த பிறகு, மேலும் அதிக வாக்குகளைப் பெற்று பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்த வெற்றிக்கான பெருமை என்ற மணிமகுடம் யார் தலையில் சூட்டப்படும் என்பதுதான் தற்போது அனைவராலும் விவாதிக்கப்படுகிறது.

யார் அதிக வலிமையானார்கள்?

இப்படிப்பட்ட சூழ்நிலையில் உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜகவின் வெற்றி யாருடையது - இது மோதியின் வெற்றியா அல்லது யோகியின் வெற்றியா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு மூத்த பத்திரிக்கையாளர் நீரஜா செளத்ரி ஒரு வரியில் இப்படி பதிலளிக்கிறார்.

"இந்த முடிவுகளால், பிரதமர் மோதி தனது 'பிராண்ட் மோதி'யின் பலத்தை தக்க வைத்துக் கொண்டார். அதே நேரத்தில் யோகி தனது பிராண்ட் இமேஜை மேலும் வலுப்படுத்தியுள்ளார்."

தான் கூறியதற்கு பின்னால் இருக்கும் பல காரணங்களை அவர் பட்டியலிடுகிறார்.

"கடைசி நேரத்தில் பூர்வாஞ்சலை தன் வசம் கொண்டுவந்தார் மோதி. ஒவ்வொரு தேர்தலிலும் இதைத்தான் அவர் செய்கிறார். ஆனால் இந்த தேர்தலின் மிகப்பெரிய நட்சத்திரம் யோகிதான். தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற மாநிலத்தின் மிகப்பெரிய முதல்வர் இவர்தான். வேறு யாரும் இதை சாதிக்கவில்லை.சென்ற முறை யோகியை வெளியில் இருந்து அழைத்து வந்து முதல்வர் நாற்காலியில் அமர வைத்தனர். ஆனால் இந்த தேர்தல் அவரது தலைமையில் நடந்தது. மோதிக்கு இருப்பதைவிட மாறுபட்ட ரசிகர் பட்டாளம் யோகிக்கு உள்ளது. இந்த வெற்றியின் மூலம் யோகி ' மோதிக்கு' பிறகான பிரதமர் பதவி முகமாக தன்னை முன்னிநிறுத்திக்கொண்டுள்ளார். யோகி 2024ல் பிரதமர் வேட்பாளராக இருக்க மாட்டார் என்றாலும்,எதிர்காலத்தில் இது எப்போது வேண்டுமானாலும் நடக்கக்கூடும்," என்று நீரஜா குறிப்பிட்டார்.

இந்தத் தேர்தலில் மோதியை விட யோகியின் நம்பகத்தன்மைதான் சோதனையின் கீழ் இருந்தது என்று பல நிபுணர்கள் சொன்னதற்கு இதுவே காரணம்.

உத்திர பிரதேசத்தில் பாஜக வெற்றி பெறுள்ள நிலையில், யோகியின் பணிகள் குறித்த இந்த ரிப்போர்ட் கார்டில், அவர் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.

'தி இந்து' நாளிதழில் தொடர்புடைய மூத்த பத்திரிகையாளர் நிஸ்துலா ஹெப்பர், இந்த வெற்றிக்கு மோதி-யோகி ஜுகல்பந்திதான் காரணம் என்கிறார்.

"பாஜகவின் முதன்மை ஜோடியில், மூன்றாமவர் சேரும் வாய்ப்பு தென்படுகிறது. இவ்வளவு பெரிய மாநிலத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெறுவது பெரிய விஷயம். 2017-ன் வெற்றி மோதியின் வெற்றி. ஆனால் 2022 ஆம் ஆண்டின் வெற்றியில் யோகியும் இணைந்துள்ளார்," என்கிறார் அவர்.

UP Elections - Modi or Yogi

பட மூலாதாரம், Getty Images

ஆனால் 2022 வெற்றியில் மத்திய அரசின் நலத்திட்டங்களை புறக்கணிக்க முடியாது என்றும் அவர் கூறுகிறார். "வாராணசியில் மூன்று நாட்கள் இருந்து பிரதமர் மோதி செய்ததும் மிகவும் முக்கியமானது. பிரதமர் மோதி உயர் சாதியில் இருந்து வரவில்லை. மண்டல் எதிர்ப்பு அரசியலிலும் முக்கிய பங்கு வகித்தார். இதுமட்டுமின்றி, ஐந்து மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் பாஜக நான்கில் வெற்றி பெற்றால் அதன் பெருமை பிரதமர் மோதியையே சாரும்," என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சட்டம் ஒழுங்கு நிலைமை

உ.பி.யில் பாஜகவின் வெற்றியில் யோகியின் பங்களிப்பைப் பற்றிக்கூறிய நிஸ்துலா, "மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த முதல்வர் யோகி மேற்கொண்ட நடவடிக்கைகளின் பலன் பாஜகவுக்கு கிடைத்தது. இது தேர்தல்முடிவுகளில் தெளிவாகத் தெரிகிறது,"என்று குறிப்பிட்டார்.

தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில், பாஜக எம்பி ஹேமமாலினி, "புல்டோசருக்கு முன்னால் எதுவும் வேலை செய்யாது" என்று கூறியதற்கு இதுதான் காரணம்.

தனது ஆட்சியில் கலவரங்கள் நடக்கவில்லை, குற்றங்கள் குறைந்தன என்று பாஜக தொடர்ந்து கூறி வருகிறது.

என்.சி.ஆர்.பி புள்ளி விவரத்தின் அடிப்படையில் இது உண்மையல்ல என்றாலும், சமாஜ்வாதி ஆட்சியை ஒப்பிடும்போது தனது ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலைமை மேம்பட்டுள்ளது என்று பொதுமக்களை நம்ப வைப்பதில் பாஜக வெற்றி பெற்றது.

இது மட்டுமின்றி, 2017க்கு முன் சமாஜ்வாதி ஆட்சியில் இருந்த மோசமான சட்டம் ஒழுங்கு நிலைமை பற்றிய அச்சத்தையும், பாஜக மக்களுக்கு காட்டியது. பாஜக தலைவர்கள் தங்கள் பேரணிகளில், சிவப்புத் தொப்பிகள் ஆட்சிக்கு வந்தால், மீண்டும் போக்கிரித்தனம் தொடங்கும் என்று பலமுறை கூறியுள்ளனர்.

UP Elections - Modi or Yogi

பட மூலாதாரம், Getty Images

யோகி மற்றும் அகிலேஷ் ஆட்சிக்கு இடையே உள்ள வித்தியாசத்தை, சட்டம் ஒழுங்கு மூலமாக மக்களுக்கு காட்டுவதில் பாஜக வெற்றிபெற்றுள்ளது

இந்து-முஸ்லிம் மற்றும் கோவில் விவகாரம்

சட்டம் ஒழுங்கு என்று வரும்போது, 2013ல் நடந்த முசாஃபர்நகர் கலவரம் நிச்சயம் நினைவுக்கு வரும். 2014 மற்றும் 2017ல் நடந்த கலவரங்களால் ஒருமுனைப்படுத்தலின் பலனை பாஜக பெற்றதாக பல நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் 2022 தேர்தலில் ஒருமுனைப்படுத்தல் முக்கிய விஷயமாக இருக்கவில்லை.

முதல்வர் யோகி ஆதித்யநாத் இதை 80:20 தேர்தல் என்று அழைத்தார். இது முஸ்லிம்களுக்காக விடப்பட்ட அறிக்கை என்று அகிலேஷ் கூறினார். ஆனால் பாரதிய ஜனதா கட்சி எப்போதும் 'அனைவருக்கும், அனைவருடனும் வளர்ச்சி' பற்றி பேசுகிறது.

இங்கே இன்னும் ஒரு விஷயத்தை நிஸ்துலா சேர்க்கிறார். "பாஜக நேரடியாக இந்து-முஸ்லிம் என்று சொல்வதில்லை. ஆனால் பல இடங்களில் அவர்களின் 'குறியீடு' வேலை செய்தது," என்று அவர் கூறுகிறார்.

பா.ஜ.க., 'பாதுகாப்பு' பற்றி பேசும்போது, 'மாஃபியா' 'டான்' என்ற செய்தி மக்களிடம் செல்கிறது. மேலும் சில முகங்கள் கண்முன்னே வருகின்றன. அதே போல, அயோத்தி, காசி என்றெல்லாம் பேசப்படும்போது, இந்துக்கள், இந்துத்துவா என்ற விஷயங்கள் பொதுமக்களுக்கு தானாகவே சென்றடைகின்றன.

இந்த விஷயத்தை வேறு விதமாக முன்வைக்கிறார் நீரஜா. "யோகி ஒரு வலிமையான தலைவராக உருவெடுத்துள்ளார். அவர் முஸ்லிம்களை ஒடுக்கக்கூடிய இந்து பாதுகாவலர் என்ற தனது பிம்பத்தை மேலும் வலுப்படுத்திக் கொண்டார். அவர் அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசவில்லை அல்லது பிரசாரம் செய்யவில்லை. ஆனால் அது மறைமுகமாக கண்டிப்பாக செய்யப்பட்டது," என்று அவர் கூறுகிறார்.

யோகி எப்பொழுதும் அணியும் உடை, கோவில் கட்டுவதற்கான வழி பிறந்தபிறகு யோகி ஆதித்யநாத் எத்தனை முறை அங்கு சென்றார் போன்ற எல்லாமே, ஒரு இந்து தலைவர் என்ற அவரது பிம்பத்தை மேலும் வலுப்படுத்தியது.

அதன் விளைவு என்னவென்றால்,தேர்தல் நெருங்க நெருங்க அகிலேஷூம் கோவிலுக்குச் செல்லும் நிலையை பாஜக ஏற்படுத்திவிட்டது

வறியோருக்கான நலத்திட்டங்கள்

சில வல்லுநர்கள் ஆட்சிக்கு எதிரான அலை குறித்தும் கேள்விகளைக் கேட்கிறார்கள். ஐந்து ஆண்டுகால பாஜக ஆட்சிக்கு பிறகு யோகிக்கு எதிராக ஆட்சி விரோத அலை இல்லையா?

இதற்கான பதில், இலவச ரேஷன் மற்றும் கிசான் சம்மான் நிதி போன்ற திட்டங்களில் மறைந்துள்ளது.

இந்த இரண்டு திட்டங்களும் இல்லாமல் இருந்திருந்தால், ஒருவேளை ஆட்சிக்கு எதிரான அலையின் தாக்கம் பாஜகவின் வெற்றியின் அளவு மீது தெரிந்திருக்கக்கூடும் என்று பல நிபுணர்கள் கூறுகிறார்கள்.

கோவிட் சமயத்தில் மக்கள் எதிர்கொண்ட கஷ்டங்களை ஓரளவு குறைக்க இலவச ரேஷன் உதவியதாக நிஸ்துலா கூறுகிறார்.

கோவிட் இரண்டாவது அலையின்போது மக்கள் மத்தியில் பாஜக மீது கோபம் இருந்தது, வெறுப்பு இல்லை என்று நீரஜா கூறுகிறார். கோபத்தை ஓரளவு குறைக்க இப்படி ஒரு திட்டம் வேலை செய்தது. இதன் பெருமை மோதி அரசையே சாரும்.

இந்தத் திட்டங்களை மக்களிடம் சரியான முறையில் எடுத்துச் சென்று மூலதனமாக்குவதில் பாஜக அமைப்பும், மாநில அரசும் பெரும் பணியைச் செய்தன.

இதனால் உ.பி.யில் கிடைத்த வெற்றி மோதி, யோகி இருவருக்குமே சொந்தம்.

பிற விவசாயிகளின் மனக்கசப்பும், OBC அல்லாத தலைவர்களின் கிளர்ச்சியும் பாஜகவுக்கு சில பாதிப்புகளைஏற்படுத்தியது இரு நிபுணர்களுமே இதை ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் பாஜக அதை தனது அமைப்புமுறை மற்றும் தொண்டர்களால் இட்டு நிரப்பியது. அவர்கள் வீடு வீடாகச்சென்று அரசின் திட்டத்தை மக்களிடம் எடுத்துச்சென்றனர்.

இந்த இரண்டு தலைவர்களும் (மோதி மற்றும் யோகி) எதிர்காலத்தில் எவ்வாறு ஒருங்கிணைவார்கள் என்பதைப் பார்ப்பது சுவாரசியமாக இருக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: