உத்தர பிரதேச தேர்தலில் காங்கிரஸ், பிரியங்காவின் பிரசாரம் எடுபடாமல் போனது ஏன்?

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், சுஷீலா சிங்
- பதவி, பிபிசி இந்தி
உத்தர பிரதேசத்தில் 403 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. இங்கு யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து மார்ச் 11ஆம் தேதி மாநில ஆளுநரை சந்தித்து முறைப்படி ஆட்சி அமைப்பதற்கான உரிமையை கோரியிருக்கிறார் யோகி ஆதித்யநாத்.
இந்த நிலையில், இந்திய அளவில் ஆளும் பாஜகவுக்கு அடுத்த நிலையில் இரண்டாவது மிகப்பெரிய கட்சியாக உள்ள காங்கிரஸுக்கு உத்தர பிரதேச தேர்தலில் இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
2017ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் மொத்தம் ஏழு இடங்களைப் பெற்றிருந்தது, அந்த கட்சி பெற்ற வாக்குகளின் சதவீதம் 6.25 ஆக இருந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸின் வாக்கு சதவிகிதம் 2.34 ஆக குறைந்துள்ளது.
முடிவுகள் வெளியான பிறகு தமது பதிலை ட்விட்டர் பக்கம் வாயிலாக வெளியிட்டார் பிரியங்கா காந்தி. கடின உழைப்பை வாக்குகளாக மாற்றுவதில் கட்சி வெற்றி பெறவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
"ஜனநாயகத்தில் மக்களின் தீர்ப்பே இறுதியானது. எங்கள் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் கடினமாக உழைத்தனர். அமைப்பை உருவாக்கினர், மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடினர். ஆனால், எங்கள் கடின உழைப்பை வாக்குகளாக மாற்றுவதில் நாங்கள் வெற்றி பெறவில்லை."என்று பிரியங்கா குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாக கட்சித்தொண்டர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, மனம் தளர வேண்டாம் என்று அவர்களிடம் கூறினார். "நமது போராட்டம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. புதிய உத்வேகத்துடன் நாம் முன்னேற வேண்டும்," என்று அவர் கூறினார்.
மறுபுறம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,"தேர்தல் முடிவுகளை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். காங்கிரஸ் தொண்டர்களின் கடின உழைப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்வோம். மக்களின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம்," என்று ட்வீட் செய்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இந்த தேர்தலில் வெற்றி எட்டாக்கனியாக இருக்கும் என்ற எண்ணம் காங்கிரஸுக்கு முன்பே இருந்ததா என்பது பற்றி இப்போது அக்கட்சிக்கு உள்ளே ஆழமாக விவாதிக்கப்படுகிறது.
பிரியங்கா காந்தி சட்டப்பேரவை தேர்தலின் போது, மாநிலத்தில் கட்சியின் பொறுப்பை சிறப்பாக கையாண்டார். ஏராளமான சாலை நிகழ்ச்சிகள் மற்றும் பேரணிகள் மூலம் மக்கள் கூட்டத்தை திரட்டினார். இருப்பினும் அதை வாக்குகளாக மாற்றுவதில் தோல்வியடைந்தார் என்ற வருத்தம் காங்கிரஸாருக்கு இருப்பதை காண முடிகிறது.
உத்தர பிரதேச தேர்தலை கருத்தில் கொண்டு, பிரியங்கா காந்தி, 'லட்கி ஹூன் லட் சக்தி ஹூன்'( நான் பெண், என்னால் போராடமுடியும்) என முழக்கமிட்டார். மகளிர் தேர்தல் அறிக்கையை, லக்னெளவில் அவர் வெளியிட்டார். தமது கட்சியின் முன்னுரிமை 'பெண்கள்' என்று அப்போது அவர் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், அவர் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் பல வாக்குறுதிகளை அளித்தார். அதில் முக்கியமானது 40 சதவிகித இடங்களில் பெண்கள் போட்டியிடுவதை உறுதிசெய்வதாகும்.
சொன்னபடியே பிரியங்கா தமது வாக்குறுதியை நிறைவேற்றினார். தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் அறிவித்த முதல் வேட்பாளர் பட்டியலில் 50 பெண்கள் இடம்பெற்றனர். இதுவரை தேர்தலில் போட்டியிடாத பல பெண்களுக்கு தேர்தலில் காங்கிரஸ் மேலிடம் வாய்ப்பு வழங்கியிருந்தது.

தலைமை பற்றிய கேள்விகள்
"பிரியங்கா காந்தியின் மகளிருக்கு 40 சதவிகித தொகுதி அறிவிப்பு ஒரு விளம்பர ஸ்டண்ட். அதற்கு அரசியல் அல்லது சமூக அடிப்படை இல்லை" என்று மூத்த பத்திரிகையாளர் ராம்தத் திரிபாதி கூறுகிறார்.
மற்றொரு பத்திரிகையாளரான அமிதா வர்மா, "தேர்தல் தோல்வி பிரியங்கா காந்தியின் தலைமைத்துவம் மீது சில கேள்விகளை எழுப்புகிறது. தேர்தல் பிரசாரத்தில் மட்டுமே கவனம் செலுத்திய பிரியங்கா, கட்சியில் நடக்கும் உட்பூசலை கவனிக்கத் தவறி விட்டார். அவரது பிரசாரம் அரசியலை விட அதிகமாக சமூக ரீதியில் இருப்பதுபோலத்தோன்றியது,"என்கிறார்.
"ஜிதின் பிரசாத், ஆர்.பி.என். சிங், லலிதேஷ்பதி திரிபாதி போன்ற மாநில காங்கிரஸ் முகங்கள் அவர் மீது கோபத்தில் இருந்தனர். அவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார்கள். ராகுல் காந்தியிடம் சென்று பேசினார்கள். அவரோ 'பிரியங்கா காந்தியிடம் பேசுங்கள்' என்று சொல்லிவிட்டார். ஆனால் பிரியங்கா அவர்களை சந்திக்கவே இல்லை. தேர்தல் வேளையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பலர் வெளியேறினர் அல்லது நீக்கப்பட்டனர். ஆனால், நலிவடைந்து வரும் கட்சியின் அமைப்பு முறை மீது அவர் கவனம் செலுத்தவில்லை. சீட் கொடுத்த பெண்களில் பலர் வெகுஜன செல்வாக்கைக் கொண்டிருக்கவில்லை. கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாருக்கு டிக்கெட் கொடுத்தது காங்கிரஸ் கட்சி. ஆனால், அது வாக்காளர்களின் அனுதாபத்தை பெறக்கூடிய முயற்சியாக பார்க்கப்பட்டது," என்றார் அவர்.
"அமேதி மற்றும் ரே பரேலி போன்ற காங்கிரஸின் முந்தைய பலமான கோட்டையில் கூட அந்தக் கட்சி இப்போது வலுவாக இல்லை. இவை எல்லாம் காங்கிரஸ் கட்சியின் தலைமை மீது சில கேள்விகளை எழுப்புகின்றன,"என்று அமிதா வர்மா குறிப்பிட்டார்.
காங்கிரஸுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை
பிசினஸ் ஸ்டாண்டர்ட் நாளிதழ் அரசியல் பத்திரிகையாளர் சித்தார்த் கல்ஹன்ஸ், "காங்கிரஸுக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை என்று தெரியும். கடந்த முறை போட்டியிட்ட வேட்பாளர்கள் கட்சியை விட்டு வெளியேறியதால் இந்த தேர்தல் அவர்களுக்கு ஒரு சோதனையாக இருந்தது."என்று கூறுகிறார்.
2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் போட்டியிட்டு 7 இடங்களைப் பெற்றது.
"இந்த முறை கட்சி, அடிப்படை தொண்டர்கள், மற்றும் இளைஞர்களுக்கு சீட்டு வழங்கியது. இந்த தேர்தலில் காங்கிரஸ் குறிப்பிடத்தக்க செயல்பாடு எதையும் செய்யவில்லை. 2007இல் , 300 இடங்களில் அக்கட்சி தனது சின்னத்தில் போட்டியிடவில்லை. ஆயினும் இந்த முறை பிரியங்கா காந்தி மூலம், எல்லா தொகுதிகளிலும் காங்கிரஸ் வாக்காளர்களை சென்றடைந்தது,"என்கிறார் சித்தார்த் கல்ஹன்ஸ்.
"பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிட்டால் சிறிது பலன் ஏற்படும் என்று கூட விவாதிக்கப்பட்டது. ஆனால் அவர் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பிரசாரகராக மட்டுமே வலம் வந்தார். கட்சிக்காக கூட்டத்தை திரட்டுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். ஒருவேளை பிரியங்கா தேர்தலில் போட்டியிட்டியிட்டிருந்தால், ஒட்டுமொத்த மாநிலத்துக்கும் அவரால் கவனம் கொடுத்திருக்க முடியாது," என்றார் சித்தார்த்.

பட மூலாதாரம், ANI
பலவீனமான அமைப்புமுறை
அகிலேஷ் யாதவ் மற்றும் பிரியங்கா காந்தியின் சாலை வழி பிரசாரத்தில் இரு தலைவர்களையும் காண மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் இரு கட்சிகளும் தங்கள் அமைப்பு முறையில் கவனம் செலுத்தவில்லை என்ற கருத்தை மூத்த பத்திரிகையாளர்களான ராம்தத் திரிபாதி மற்றும் அமிதா வர்மா எதிரொலித்தனர்.
காங்கிரஸ் எந்த ஒரு பிராந்திய தலைவரையும் உத்தர பிரதேசத்தில் வளர்க்கவில்லை, யாரையும் அமைப்பு அல்லது சமூகத்தின் தலைவராக்கவில்லை. மாநிலத்தில் உருவாகும் எந்த பிரச்னையானாலும் அதை எழுப்ப அவர்களுக்கு ராகுல், பிரியங்கா போன்ற தலைவர்கள் டெல்லியில் இருந்து வர வேண்டிய கட்டாயம் உருவாக்கப்பட்டது. உதாரணமாக ஹத்ராஸ் விவகாரம், லக்கிம்பூர் கேரி, விவசாயிகள் பிரச்னை பற்றியை குறிப்பிடலாம்.
ஆனால், இந்த தலைவர்களின் வருகை எந்தப்பலனையும் தரவில்லை. டெல்லியில் இருந்து வந்த தலைவர்கள் ஒரு சில தினங்களில் தலைநகருக்கே திரும்பி விடுவர் என்ற பொதுவான கருத்து மக்களிடையே இருந்தது.
சித்தார்த் கல்ஹன்ஸ் உத்தர பிரதேசத்தின் இந்த தேர்தலை இருமுனைப்போட்டி என்று விவரிக்கிறார்.
"இந்த தேர்தலில் பாஜக மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையேதான் முக்கிய போட்டி நிலவியது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்த இரண்டு பெரிய கட்சிகளின் ஓட்டு சதவிகிதம் கண்டிப்பாக அதிகரிக்கும். காங்கிரசின் ஓட்டு சதவிகிதம் கண்டிப்பாக குறைந்துள்ளது, ஆனால் பிரியங்கா காந்தியின் முயற்சியை நாம் பாராட்ட வேண்டும்." என்று அவர் கூறினார்.
பிரியங்கா காந்தி கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் அதிகம் ஈடுபடவில்லை. ஆனால் அவர் உ.பி.யில் தோன்றிய விதமானது, இந்ததேர்தலில் கட்சியால் எந்த அற்புதமும் செய்ய முடியாது என்ற எண்ணம் காங்கிரஸுக்கு இருந்ததையும்,ஏற்பாடுகள் எல்லாமே 2024 தேர்தலை மையமாக்கக்கொண்டவை என்றும் உணர்த்துவதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
"உத்தர பிரதேசத்தை விட்டு வெளியேற மாட்டேன் என்று தேர்தல் நேரத்தில் பிரியங்கா கூறியதால், அவர் அம்மாநிலத்தை விட்டு வெளியேறப் போவதில்லை என்று தெரிகிறது. கட்சியின் அடித்தளத்தை இங்கு பலப்படுத்த வேண்டும் என்று அவர் புரிந்து கொண்டார். தேர்தலுக்கு முன் அமைதிக் காலத்தில் செய்ய வேண்டியதை, போர்க்காலத்தில் அவர் செய்துள்ளார். அதாவது தேர்தலுக்கு முன் அமைப்பை பலப்படுத்தும் வேலையை செய்துள்ளார்," என்று சித்தார்த் கல்ஹன்ஸ் குறிப்பிட்டார்.
"காங்கிரஸ் கட்சியின் மீது மக்கள் மனதில் 'அனுதாபம்' எழுந்துள்ளது. ஆனால், ஓட்டு என்பது 'நம்பிக்கை சார்ந்தது'. அவர் மக்கள் மத்தியில் இன்னும் அதிகம் இருந்திருந்தால், ஒருவேளை அது ஓட்டுகளாக மாறியிருக்கும். ஏனென்றால், மக்களுக்கு இன்னும் சந்தேகம் உள்ளது. தேர்தலுக்கு பிறகு அவர் வருவாரா மாட்டாரா என்று மக்கள் சந்தேகப்படுகின்றனர்," என்றார் அவர்.
கடந்த ஆண்டுகளில் பிரியங்கா காந்தி அரசியலில் அவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கவில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் அது நீண்டகாலம் நீடிக்காது என்று பிரியங்கா புரிந்து கொண்டுள்ளார். ஏனெனில் 2024ஆம் ஆண்டில் நரேந்திர மோதிக்கு சவால் விடவேண்டும் என்றால், காங்கிரஸ் எப்பாடுபட்டாவது உத்தரபிரதேசத்தில் தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பிற செய்திகள்:
- மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுமி: மறுவாழ்வு பெற்ற 4 பேர்
- டிஜிட்டல் திரையில் வாசிப்பு - நம் மூளையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது?
- நான்கு மாநிலங்களில் ஆட்சியை தக்க வைக்கும் பாஜக - பஞ்சாபில் ஆம் ஆத்மி வெற்றி
- அகிலேஷ் யாதவ்: தனக்குத் தானே பெயர் வைத்துக் கொண்ட தலைவர்
- யோகி ஆதித்யநாத்தின் அரசியலை விவரிக்கும் 10 புகைப்படங்கள்
- ராமேஸ்வரத்தில் டாட்டூ போட வந்ததை போல் நடித்து இளைஞரை கடத்திய கும்பல்: என்ன நடந்தது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












