உள்ளாட்சிப் பதவிகள்: ராஜினாமா செய்ய மறுக்கும் தி.மு.கவினர் - ஸ்டாலின் அமைத்துள்ள குழுவால் பலன் உண்டா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
நகர்ப்புற உள்ளாட்சிப் பதவிகளில் தி.மு.க தலைமை ஒதுக்கிய இடங்கள் முழுமையாக கிடைக்காததால், கூட்டணிக் கட்சியினரிடையே தொடர்ந்து அதிருப்தி நிலவுகிறது. ` தலைமையின் உத்தரவுக்குப் பிறகும் பதவிகளை ராஜினாமா செய்யாதவர்களை நீக்கும் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதற்காக தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது' என்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள். என்ன நடக்கிறது?
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தி.மு.க கூட்டணியே 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது. மேலும், நகராட்சிகள், பேரூராட்சிகள் என பெரும்பான்மையான இடங்களை தி.மு.க கூட்டணியே பெற்றது. இதையடுத்து மாநகராட்சிகளின் மேயர், துணை மேயர், நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கும் மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.
தி.மு.கவினர் கைகளில் 984 பதவிகள்
முன்னதாக, காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மேயர், 2 துணை மேயர், 6 நகராட்சித் தலைவர் பதவிகள் என ஒதுக்கப்பட்டது. இதர கூட்டணிக் கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க, சி.பி.ஐ, சி.பி.எம் ஆகிய கட்சிகளுக்கும் தலா ஒரு துணை மேயர் உள்பட உள்ளாட்சிப் பதவிகள் வாரிக் கொடுக்கப்பட்டன. ஆனால், இந்த உற்சாகம் ஒருநாள்கூட நீடிக்கவில்லை. இவற்றில் பெரும்பாலான பதவிகளில் தி.மு.கவினரே போட்டியிட்டு வென்றனர். குறிப்பாக, 20 மேயர் பதவிகள், துணை மேயர் பதவிகள் 15, நகராட்சித் தலைவர் பதவிகள் 125, நகராட்சித் துணைத் தலைவர் பதவிகள் 98, பேரூராட்சித் துணைத் தலைவர் பதவிகள் 395, துணைத் தலைவர் பதவிகள் 331 என 984 பதவிகளை தி.மு.க பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் காங்கிரஸ், வி.சி.க, ம.தி.மு.க, சி.பி.எம், சி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகள் கொதிப்பில் ஆழ்ந்தன.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இந்தத் தகவலால் அதிர்ச்சியடைந்த தி.மு.க தலைவர் ஸ்டாலின், `கட்சித் தலைவர் என்ற முறையில் கூனி குறுகி நிற்கிறேன். கட்சிக் கட்டுப்பாட்டை மீறி போட்டியிட்டு வென்றவர்கள், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த பிறகு என்னை வந்து சந்திக்க வேண்டும்' எனவும் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதன்பின்னரும் தி.மு.க தலைமையின் உத்தரவை மதித்து பல இடங்களில் யாரும் பதவிகளை இழக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால், `மேயர், நகராட்சித் தலைவர் ஆகிய பதவிகளை மக்களே நேரடியாக தேர்வு செய்யும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். மறைமுகத் தேர்தல் தேவையில்லை' என வி.சி.க தலைவர் திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.
கூட்டணிக் கட்சிகளின் கொதிப்பு
நகர்ப்புற உள்ளாட்சிப் பதவிகளைப் பொறுத்தவரையில் கூட்டணிக் கட்சிகளுக்குக் கிடைத்த அதிர்ச்சி சாதாரணமானதல்ல. கடலூர், நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவி வி.சி.கவுக்கு ஒதுக்கப்பட்டாலும் தி.மு.கவை சேர்ந்தவரே தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார். இந்தப் பதவியை ராஜினாமா செய்வதற்கும் தி.மு.கவை சேர்ந்தவர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதேபோல், தருமபுரியில் உள்ள பொ.மல்லாபுரம் பேரூராட்சித் தலைவர் பதவியும் திருப்போரூர் பேரூராட்சித் துணைத் தலைவர் பதவியும் வி.சி.கவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் தி.மு.கவினரே கைப்பற்றினர்.
இதேநிலைதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கரூர், புலியூர் பேரூராட்சியை தி.மு.க வசம் வந்துவிட்டது. சி.பி.எம் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சித் தலைவர் பதவியும் பறிபோய்விட்டது. காங்கிரஸ் கட்சியினரால் பெரிதும் மதிக்கப்படும் இடமான ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியும் கூட்டணி தர்மத்தை மீறி தி.மு.கவினர் கைப்பற்றிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்பட்ட அதிருப்தியை ஈடுகட்டும் வகையில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து தி.மு.கவின் சுரேஷ்ராஜன் நீக்கப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கடலூர் எம்.எல்.ஏ கோ.அய்யப்பனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே நீக்கி தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி அய்யப்பன் செயல்பட்டதன் காரணமாகவே நீக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. தி.மு.க தலைமையின் அதிரடியான நடவடிக்கைகள் மூலம், கூட்டணிக் கட்சிகளின் கோபம் சற்று தணியும் எனவும் கூறப்படுகிறது.
எங்கெல்லாம் சிக்கல் ஏற்பட்டது?
``வி.சி.கவுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளில் எங்கெல்லாம் சிக்கல் ஏற்பட்டது?'' என அக்கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமாரிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். `` கடலூர் மாநகராட்சி துணை மேயர் பதவியில் எங்களுக்குப் பிரச்னை வரவில்லை. நெல்லிக்குப்பத்தில் நகராட்சித் தலைவர் பதவியை கொடுத்தனர். அது எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஜெயங்கொண்டம் நகராட்சித் தலைவர் பதவியில் பிரச்னை வரவில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் நகராட்சித் துணைத் தலைவர் பதவி கிடைத்துவிட்டது. ஆனால், திருப்போரூர் பேரூராட்சித் துணைத் தலைவர் பதவி கிடைக்கவில்லை. மொத்தமாகக் கணக்கிட்டால் தி.மு.க கூட்டணியில் எங்களுக்கு ஒதுக்கப்பட்டவற்றில் ஏழு இடங்கள் கிடைக்கவில்லை'' என்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
`` தி.மு.க தலைவர் கூறிய பிறகு யாரெல்லாம் பதவியை ராஜினாமா செய்தார்கள் என்ற விவரம் வெளிவரவில்லை. நெல்லிக்குப்பத்திலும் திருப்போரூரிலும் யாரும் பதவிகளை ராஜினாமா செய்யவில்லை. தேர்தலில் செலவு செய்தவர்களும் பதவியைத் தக்கவைக்கப் பார்ப்பார்கள். தி.மு.க தலைமை அறிவித்த பிறகு உடனே நடப்பதைவிட ஓரிரு நாள்கள் ஆகலாம். இந்தளவுக்குத் தி.மு.க தலைமை கூறியிருப்பதே பெரிய விஷயம்தான்'' எனக் குறிப்பிடும் ரவிக்குமார்,
``கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களை கொடுப்பார்கள் என நினைக்கிறோம். உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்தவரையில் தலைமை ஒன்று தெரிவித்தாலும் கீழே சில இடங்களில் இதுபோன்று நடப்பது இயல்புதான். அவர்கள் கட்சிக்குள்ளேயே இதுபோன்று நடக்கின்றன'' எனவும் சுட்டிக் காட்டுகிறார்.

பட மூலாதாரம், Ravikumar/Facebook
ராஜினாமா செய்ய மறுப்பது ஏன்?
`` உள்ளாட்சி அமைப்புகளில் இதுபோன்று கடந்த காலங்களிலும் நடந்துள்ளன. இதனைத் தலைவர்கள் கண்டித்தாலும் 80 சதவீதம் பேர், தலைமையின் உத்தரவை கண்டுகொள்வதில்லை. காரணம், அவர்களின் உள்ளூர் அரசியல்தான். இவர்களில் பலரும் எம்.பி, எம்.எல்.ஏ பதவிகளை நோக்கி நகராமல் உள்ளூர் அளவிலேயே செல்வாக்கை வளர்த்துக் கொள்ள விரும்புவார்கள். அதனால் அவ்வளவு எளிதில் பதவிகளை ராஜினாமா செய்ய மாட்டார்கள்'' என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.
தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய ஷ்யாம், `` நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் ஒரு பெண்மணி வெற்றி பெற்றுள்ளார். அவரது கணவர், கல்வி நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். இதற்கு முன்பு வரை பட்டியலினத்தவருக்கான பதவியாக நகராட்சித் தலைவர் பதவி இருந்து வந்துள்ளது. பொது இடமாக மாறியவுடன் தனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் அதிக செலவு செய்திருக்கலாம். இதில், அவர்களுக்கு வேண்டிய கவுன்சிலர்களும் உள்ளனர். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, `வி.சி.கவுக்கு ஏன் பொது பதவியை கொடுக்க வேண்டும்?' என நினைத்துள்ளனர். இதனால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அவர்கள் தலைமையின் உத்தரவை பொருட்படுத்தவில்லை. முதலமைச்சரின் அறிக்கையும் அரசியல்ரீதியான ஓர் அறிக்கைதான். தலைமையின் உத்தரவை மீறி பதவி பெற்றவர்களில், அடுத்தகட்ட அரசியலை நோக்கி நகர விரும்புகிறவர்கள் மட்டும் ராஜினாமா செய்வார்கள்'' என்கிறார்.
கூட்டணியில் சிக்கல் வருமா?
`` இவர்களை தலைவர், துணைத் தலைவர் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு வாய்ப்புள்ளதா?'' என்றோம். `` பெரும்பாலும் அதற்கு வாய்ப்பில்லை. மூன்றில் இரண்டு பங்கு கவுன்சிலர்களின் ஆதரவுடன் தலைவர் பதவிக்கு வந்துள்ளனர். அதற்காக பெரும் செலவு செய்துள்ளதால், அவர் சொல்வதைத்தான் கவுன்சிலர்களும் கேட்பார்கள். இதன்பின்னணியில் உள்ளூர் சாதி பின்புலமும் இருக்கும். அவர்களை நீக்குவதில் மாவட்ட செயலாளர்கள் ஆர்வம் காட்டுவார்களா என்பது சந்தேகம்தான்.
காரணம், நாளை சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் மாவட்ட செயலாளர்கள் நிற்கும்போது உள்ளூர் சாதி அரசியலை எதிர்கொள்ள வேண்டும். இதுபோன்று உள்ளாட்சியில் நடக்கும் என்பதை அறிந்து முன்கூட்டியே மாவட்ட செயலாளர்களை தி.மு.க தலைமை எச்சரித்திருந்தது. உள்ளாட்சித் தேர்தலிலேயே போட்டி வேட்பாளர்களை தி.மு.கவினர் நிறுத்தியிருந்தனர். உள்ளூர் அரசியலை கையில் எடுப்பவர்கள் யாரும் கவுன்சிலர் பதவிகளை இழக்க விரும்ப மாட்டார்கள். கூட்டணி தர்மத்தின்படி பதவிகளை விட்டுக் கொடுக்க அவர்கள் விரும்புவதில்லை. தனது சொந்த சாதி செல்வாக்கிலும் உள்ளூர் செல்வாக்கிலும் வெற்றி பெற்றதாகத்தான் அவர்கள் நினைக்கிறார்கள்'' என்கிறார்.
`` இதனால் தி.மு.க கூட்டணியில் பெரிதாக எந்தப் பாதிப்பும் வரப் போவதில்லை. அடுத்து வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க அணியை நோக்கி நகரவே அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் விரும்புவார்கள். தற்போதைய அரசியல் சூழல் என்பது அப்படித்தான் உள்ளது'' என்கிறார்.
அறிவாலயத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
``கட்சிக் கட்டுப்பாட்டை மீறியவர்கள் மீது எந்தளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?'' என தி.மு.க செய்தித் தொடர்பாளரும் தலைமைக் கழக வழக்குரைஞருமான சூர்யா வெற்றிகொண்டானிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். `` நகர்ப்புற உள்ளாட்சிக்கான பதவிகளில் சில இடங்களில் பிரச்னை ஏற்பட்டவுடன், கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் வருத்தத்தில் கருத்துகளை வெளியிட்டனர். தி.மு.க நம்பவைத்துக் கழுத்தறுத்துவிட்டதாகவும் சிலர் பேச ஆரம்பித்தனர்.
இதனால் வேதனைப்பட்ட முதல்வரும், `உள்ளாட்சியில் தவறு நடந்திருந்தால் அவர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு என்னை வந்து சந்திக்க வேண்டும்' எனக் கூறியிருந்தார். நெல்லிக்குப்பம் உள்பட சில நகராட்சித் தலைவர்கள் பதவியைவிட்டு விலக மறுக்கின்றனர். தி.மு.க கொடியைக் காட்டியும் முதல்வரின் ஒன்பது மாதகால ஆட்சியை வைத்தும்தான் அவர்கள் வெற்றி பெற்றனர். இது அவர்களின் தனிப்பட்ட செல்வாக்கு அல்ல. இந்தத் தேர்தலில் கிடைத்த 90 சதவீத வெற்றி என்பது முதலமைச்சரின் உழைப்புக்குக் கிடைத்த வெற்றிதான். கட்சித் தலைமையின் உத்தரவை மதிக்காதவர்கள், கட்சியில் இருப்பதற்கே தகுதியற்றவர்கள்'' என்கிறார்.
``ராஜினாமா செய்ய மறுத்த அனைவரையுமே கட்சியைவிட்டு நீக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அவர்களின் பின்னால் இருந்து இயக்கிய மாவட்ட செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் என அவர்களையும் கண்டறிந்து நீக்கப்பட உள்ளனர். இதற்கென குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் ஆ.ராசா எம்.பி, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உள்ளனர். இவர்களுக்கு மாவட்டங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன'' எனக் குறிப்பிடும் சூர்யா வெற்றிகொண்டான்,
``சில இடங்களில் கூட்டணிக் கட்சிக்கு என ஒதுக்கினாலும் அங்குள்ள கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு கொடுக்காத சம்பவங்களையும் கேட்க முடிகிறது. அதையும் தாண்டி பலர் ராஜினாமா செய்துள்ளனர். தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய மறுப்பவர்கள் எல்லாம் தி.மு.கவினர் அல்ல. இந்த விவகாரத்தில் எந்தவித தயவையும் தி.மு.க தலைவர் காட்டவில்லை'' என்கிறார்.
பிற செய்திகள்:
- Ind Vs Pak பெண்கள் கிரிக்கெட் உலக கோப்பை: 107 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்ற இந்தியா
- இந்தியாவில் பெண் அரசியல் தலைவர்களுக்கான வலுவான கோரிக்கை எழுந்துள்ளதா?
- மயில்வாகனம் நிமலராஜன்: இலங்கை பத்திரிகையாளர் கொலையில் 22 ஆண்டுகளுக்கு பிறகாவது நீதி கிடைக்குமா?
- ரஷ்ய படையெடுப்பு: யுக்ரேன் கட்டடங்கள் - தாக்குதலுக்கு முன்னும் பின்னும்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












