அரசியலில் பெண் தலைவர்கள்: உண்மை நிலை குறித்த ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

காங்கிரஸ் கட்சியின் தலைவரான பிரியங்கா காந்தி, நேரு-காந்தி வம்சத்தைச் சேர்ந்தவர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காங்கிரஸ் கட்சியின் தலைவரான பிரியங்கா காந்தி, நேரு-காந்தி வம்சத்தைச் சேர்ந்தவர்
    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
    • பதவி, பிபிசி நியூஸ்

பெரும்பாலான இந்தியர்கள், "நல்ல அரசியல் தலைவர்களாக ஆவதில் பெண்களும் ஆண்களும் சமம்தான்" என்று கூறுகிறார்கள். அதேசமயம், ஆண்களை விட பெண்கள்தான் சிறந்த அரசியல் தலைவராக ஆகிறார்கள் என பொதுவாக 10இல் ஒரு இந்தியர் நினைக்கிறார் என்றும் தெரிவிக்கிறது ஓர் ஆய்வு.

இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 30,000 பேரிடம் நடத்தப்பட்ட PEW ஆராய்ச்சி மையத்தின் புதிய ஆய்வுமுடிவுகள் தெரிவிப்பது என்ன?

வயது வந்த இந்தியர்களில் வெறும் கால் பகுதியினர் (25%) மட்டுமே ஆண்கள்தான் சிறந்த அரசியல் தலைவர்களாக ஆகிறார்கள் என்று நம்புகிறார்கள். அப்படியென்றால் இது வலுவான பெண் தலைவர்களுக்கான தேவையைப் பிரதிபலிக்கிறதா இந்த புதிய ஆய்வு?

இந்தியப் பெண்கள் இதுவரை மாநில முதலமைச்சர்களாகவும், இந்திய அமைச்சர்களாகவும், பிரதமராகவும் இருந்துள்ளனர். 20 ஆம் நூற்றாண்டில் ஒரு நாட்டிற்குத் தலைமை தாங்கிய இரண்டாவது பெண்மணியாக இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இருந்துள்ளார். தற்போதைய நாடாளுமன்றத்திலும் 14% எம்.பி.க்கள் பெண்களாக உள்ளனர். ஆனால், இந்த விகிதம் 1952ஆம் ஆண்டு நடந்த முதல் தேர்தல் முடிவுகளின்போது வெறும் 5% ஆக மட்டுமே இருந்தது. தற்போது உயர்ந்துள்ளது.

இருந்தாலும், பெண்களின் அரசியல் ஈடுபாடும் பங்கேற்பும் குறைவாகவே உள்ளது. அதாவது, மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பங்கேற்ற 50,000 க்கும் மேற்பட்ட வேட்பாளர்களில் வெறும் 8% மட்டுமே பெண்கள் என்று 2019 ஆம் ஆண்டு வெளியான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

இதுமட்டுமன்றி, நாடாளுமன்றங்களில் பெண்கள் என்ற அடிப்படையிலான உலகளாவிய தரவரிசையில் 193 நாடுகளில் இந்தியா 144 வது இடத்தில் உள்ளது . தேசிய நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்கும் மசோதா ஒன்று, 1996ஆம் ஆண்டு முதல் கிடப்பில் கிடக்கிறது.

காணொளிக் குறிப்பு, "இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்வதே முதல் வேலை" - கோவையின் இளம் கவுன்சிலர்

லண்டன் கிங்ஸ் கல்லூரியின் சமூக விஞ்ஞானி ஆலிஸ் எவன்ஸ் போன்ற ஆராய்ச்சியாளர்கள் இந்த சமீபத்திய ஆய்வு முடிவுகள் மீது முரண்படுகின்றனர். "பெண் தலைவர்களுக்கான வலுவான கோரிக்கையாக இதை நாம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. இது தவிர, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை சுட்டிக்காட்டும் ஏராளமான சான்றுகள் உள்ளன" என்று தெரிவிக்கிறார் எவன்ஸ்.

இந்தியாவில் பெண்களின் தேர்தல் வெற்றிக்கு "தனித்த கவனத்தால் செய்த வினைகள் என ஏதுமிலை என்றும் டாக்டர் எவன்ஸ் கூறினார். அதாவது, தேர்தலில் நிறுத்தப்பட்ட பெண் வேட்பாளர் ஒருவர் வெற்றி பெறுவதற்கும், பெறவைக்கப்படுவதற்குமான வேறுபாடு அது.

"பெண்கள் பயணிப்பதற்கு இருக்கும் கட்டுப்பாடு என்பது இந்தியத் தேர்தலில் பெண்களுக்கு இருக்கும் தேர்தல்காலப் போராட்டங்களை விளக்கும். அவர்கள் தங்கள் சகாக்களுடன் கூடிவருவதற்கும், பரந்த உலக அறிவைப் பெறுவதற்கும், முன்னறிமுகம் இல்லாத ஆண்களுடன் கூட்டணியை உருவாக்குவதற்கும், பிரச்சாரத்துக்கான தேர்தல் நிதியைச் சேகரிப்பதற்கும் அவர்களுக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லை," என்று அவர் கூறினார்.

இந்தியப் பெண்களில் ஐந்தில் நான்கு பேர் ஊதியம் இல்லாத வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, இந்தியப் பெண்களில் ஐந்தில் நான்கு பேர் ஊதியம் இல்லாத வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்

இந்தியாவின் பல பெண் தலைவர்கள், செல்வந்தர்களாகவும் உயர் சாதியினர் அல்லது பாரம்பரிய அரசியல் குடும்பங்களின் வாரிசுகளாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு அரசியல் வாழ்வைத் தொடங்குவதற்கான சலுகை இருக்கிறது. ஆனால், "சாதாரண பெண்களுக்கு, அரசியல் என்பது இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறது" என்றும் டாக்டர் எவன்ஸ் கூறினார்.

விகிதாசாரப் பிரதிநிதித்துவம் அமலில் இருக்கும் நாடுகளில், பெண்களின் அரசியல் ஈடுபாடு அதிகமாக இருப்பதாக OECD நாடுகளில் மட்டும் நடத்தப்பட்ட தனி ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. ( அதாவது, அதிக வாக்குகள் பெற்றவர்தான் வெற்றி பெறுவார் என்பதற்கு பதில் கட்சிகள் பெற்றிருக்கும் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை பகிர்ந்தளிக்கப்படும் முறை அது.)

அதேபோல, ஆய்வாளர்கள் பரிந்துரைக்கும் ஒரு காரணமும் உண்டு. "மக்கள் கட்சிகளுக்காகத்தான் வாக்களிக்கிறார்கள். தனிநபர்களுக்காக அல்ல (பெண் வேட்பாளராக இருந்தாலும்). வெற்றி பெற்ற பெண்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் இருந்து ஓய்வெடுக்கலாம் மற்றபடி உள்ளூர் மக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுடன் வலுவான மற்றும் நீடித்த தொடர்புகளெல்லாம் தேவையில்லை."

ஆனால், இந்தியா, பிரிட்டன் போன்ற நாடுகளில் பின்பற்றும், ஒரு தொகுதியில் அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் முறை, அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தும் பின்னடைவில் இருக்க மேலும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அரசியல்வாதிகள் தங்கள் மீதான தனிப்பட்ட நம்பகத்தன்மையை நிலைநாட்ட, குறிப்பிட்ட தொகுதி மக்களுடன் நல்லவிதமான தொடர்புகளை உருவாக்க வேண்டும். இதனால், தொழில் வாழ்வில் ஏற்படும் குறுக்கீடுகளால் அதிக செலவும் கூட ஏற்படும். எனினும், உள்ளாட்சி அமைப்புகளில், பெண்களை விட ஆண்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று இந்தியர்கள் கூறுகிறார்கள்.

10 இந்தியர்களில் ஒன்பது பேர், மனைவி எப்போதும் தன் கணவருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்ற கருத்தை ஒப்புக்கொள்கிறார்கள். இதில் மூன்றில் இரண்டு பங்குதான் இந்த கருத்துடன் முழுமையாக உடன்படுகிறார்கள். ஆனால், ஆண்களை விட குறைவாகவே பெண்கள் இதை ஒப்புக்கொள்கின்றனர்.

இதுகுறித்துப் பேசும்போது, "இது ஒன்றும் ஆச்சரியமல்ல. இந்தியா பெரும்பாலும் கிராமங்களாகவே உள்ளது. மேலும் பல பெண்கள் மிகக் குறைவான நண்பர்களுடனும் அல்லது தொடர்ந்து தனிமையாகவுமே இருக்கிறார்கள். இது கூடிப்பேசி ஏற்றத்தாழ்வுகளை விமர்சிப்பதற்கான அவர்களது வாய்ப்பைக் குறைக்கிறது. அதாவது ஆண்கள் தங்கள் அதிகாரத்தைச் செலுத்துகிறார்கள், பெண்கள் அதைத் சகித்துக்கொள்கிறார்கள்" என்று டாக்டர் எவன்ஸ் கூறினார்.

பெண் சிசுக்கொலைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் சுமாரான பலனைத் தந்துள்ளன

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெண் சிசுக்கொலைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் சுமாரான பலனைத் தந்துள்ளன

Pew கணக்கெடுப்பின்படி, பல இந்தியர்கள் வீட்டில் பாலின சமத்துவம் குறித்த கருத்துகளை வெளிப்படுத்துகின்றனர். இந்தியாவின் 62% பெரியவர்கள், குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது என்று கூறுகிறார்கள்.

ஆனால் பாரம்பரியமான பாலின நெறிமுறைகள்தான், மக்கள்தொகையின் பெரும் பகுதியினரிடையே இன்னும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவர்களில், தோராயமாக மூன்றில் ஒரு பங்கு மக்கள், குழந்தை பராமரிப்பு என்பது முதன்மையாக பெண்களால் கையாளப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இதேபோல், 54% பேர், பணம் சம்பாதிப்பதற்கு குடும்பத்தில் உள்ள ஆண்களும் பெண்களும் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள், ஆனால் பல இந்தியர்கள் (43%) இதை முக்கியமாக ஆண்களின் கடமையாகவே பார்க்கிறார்கள். மேலும் பெரும்பாலான இந்திய பெரியவர்கள், வேலைகள் பற்றாக்குறையாக இருக்கும் போது, பெண்களை விட ஆண்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

ஆண்தான் குடும்பத்துக்கான சம்பாத்தியத்தை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே, பெண்களுக்கான குறைவான வேலைவாய்ப்புகளின் விளைவு என்று பார்க்கப்படுகிறது. ஆனால், இது கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா? என்பது போன்ற கேள்விதான் என்கிறார் எவன்ஸ்.

காணொளிக் குறிப்பு, கோவிட் பாதிப்பையும் கடந்து Mrs.இந்தியா பட்டம் வென்ற நளினி

அதுபோக, "கௌரவ-வருமானம்" என்ற நிலைமையை இந்தியக் குடும்பங்கள் எதிர்கொள்வதாகவும் நம்புகிறார் எவன்ஸ். குடும்பத்தின் கௌரக்குறைச்சலை விட பெண் போதுமான அளவு சம்பாதித்தால், பெண்ணின் வேலைவாய்ப்பு உயரும். பெண் பட்டதாரிகள் பலரும் ஐ.டி, பொறியியல், தொலைத்தொடர்பு, நிதி மற்றும் விருந்தோம்பல் துறையில் பணிபுரிகின்றனர். "ஆனால் இந்தியாவில் வேலை உருவாக்கம் குறைவாகவே உள்ளபோதும் வேலைக்கான வரிசைகள் மிக நீளமாக உள்ளன, இதிலும், பெண்கள் பின்னேதான் உள்ளனர்" என்றும் டாக்டர் எவன்ஸ் கூறினார்.

இந்தக் கருத்துக் கணிப்பில் ஒரு கவலையளிக்கக் கூடிய முடிவும் வெளியாகியுள்ளது. அதுதான், குழந்தையின் பாலினத்தைப் பொறுத்துக் கருக்கலைப்பு செய்யும் முடிவு. இது சட்டவிரோதம் என்றாலும் சில சூழ்நிலைகளில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகி விடுகிறது என்று கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

10 இந்தியர்களில் நான்கு பேர், "குடும்பத்தில் உள்ள பெண் குழந்தைகள் மற்றும் ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையை சமப்படுத்த, நவீன முறைகளைப் பயன்படுத்தி பரிசோதனை செய்துகொள்வது (பிறப்புக்கு முந்தைய பாலின சோதனை) முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது" அல்லது "ஓரளவு ஏற்கத்தக்கது" என்றும் கூறுகிறார்கள்.

இந்தியா பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, இந்தியா பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும்

இந்தக் கேள்வியில் மத வேறுபாடுகளுக்கு பெரிதும் இடமில்லை. 10ல் நான்கு பேர் - இந்துக்கள் (40%), முஸ்லிம்கள் (37%), கிறிஸ்தவர்கள் (43% ), சீக்கியர்கள் (38%) மற்றும் ஜெயின்கள் (40%) - இது ஏற்கத்தக்கது என்று கூறுகின்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஐந்தில் ஒருவராவது பாலினத்தைத் தேர்ந்தெடுத்து கருக்கலைப்பு செய்வது முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று கூறுகிறார்கள்.

இதுவும், பெண்களுக்கான வேலைவாய்ப்பு குறைவுடன் தொடர்புடையது என்று டாக்டர் எவன்ஸ் நம்புகிறார். ஏனெனில் "வயதான காலத்தில் அவர்களுக்கு உதவ குறைந்தபட்சம் ஒரு மகனை பெற்றோர்கள் தொடர்ந்து விரும்புகிறார்கள். இந்தச் சூழலில், பெண்களுக்கு அதிக வேலைகள் இருந்தால், மகள்கள் கண்ணியமான வேலைகளைப் பெற்று பெற்றோருக்கு உதவிகளை வழங்கினால், தென் கொரியா மற்றும் சீனாவின் சில பகுதிகளைப் போலவே மகன்களுக்கான விருப்பம் குறைந்துவிடும்" என்று அவர் கூறினார்.

பாலின சமத்துவம் பற்றி இந்த ஆய்வு முடிவுகள் என்ன சொல்கின்றன?

பெண்களுக்கு சம உரிமை தொடர்பான கருத்தில், இந்தியர்கள் ஏறக்குறைய உலக சராசரியில் இருக்கிறார்கள் என்று தெரிவிக்கிறார் இந்த சர்வேயின் முதன்மை ஆராய்ச்சியாளர் ஜோனதன் எவன்ஸ். அதேபோல, வேலைவாய்ப்புகள் குறைவாக இருக்கும்போது, பெண்களை விட ஆண்களுக்கே வேலை பெறும் உரிமை அதிகம் இருக்கிறது என்ற கூற்றை ஒப்புக்கொள்வதில், PEW ஆய்வு நடத்திய 61 நாடுகளில் ஒன்றான துனிஷியா மட்டுமே இந்தியாவை விட அதிகமாக உள்ளது.

அதிகமான இந்தியப் பெண்கள் கல்வி கற்கிறார்கள், மேலும் பெண்களுக்கான இயக்கங்கள் வரதட்சணை, விவாகரத்து, குடும்ப வன்முறை மற்றும் வாரிசுரிமை பற்றிய சட்டங்களைப் பாதுகாத்துள்ளன. அத்துடன், குடும்ப உறுப்பினர்களின் இறுதிச் சடங்கில் கொள்ளி வைப்பது உள்ளிட்ட செயல்களின் மூலம் பெண்கள் பாரம்பரிய விதிமுறைகளையும் கூட பகிரங்கமாக கேள்விக்கு உட்படுத்தியுள்ளனர்.

"ஆனால், இந்த உரிமைகளைப் பெறுவதற்கும், ஆணாதிக்க பாதுகாவலர்களுக்கு சவால் விடுவதற்குமான பெண்களின் திறனை இந்த சமூகத்தின் தனிமைப்படுத்தல் மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மைதான் கட்டுப்படுத்துகிறது.

பெண்கள் தங்கள் உரிமைகளைப் பெற முதலில் அவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். அதற்கு, அதிகமான வேலைவாய்ப்பு சார்ந்த வளர்ச்சி மற்றும் பாதுகாப்பான பொது இடங்கள்தான் தேவை. " என்கிறார்ஆலிஸ் எவன்ஸ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: