யுக்ரேனிய மருத்துவ படிப்பை இந்திய மாணவர்களால் மீண்டும் தொடர முடியுமா?

யுக்ரேன் இந்திய மருத்துவர்கள்
படக்குறிப்பு, ஜெயபிரகாஷ் காந்தி, கல்வியாளர்
    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் ஆறாவது நாளாக நீடித்து வரும் நிலையில், அங்கு கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் எதிர்காலம் என்பது கேள்விக்குரியதாகியுள்ளது.

` மாணவர்களின் நலன்களைக் காக்கும் வகையில் அவர்களை இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் அனுமதிக்க வேண்டும்' என கல்வியாளர்கள் சிலர் பேசி வருகின்றனர்.

``அவ்வாறு இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் யுக்ரேனில் பாதி மருத்துவ படிப்பை படித்த இந்திய மாணவர்களை அனுமதிப்பது நடைமுறையில் சாத்தியம்தானா?'' என்பது குறித்து மூத்த கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தியுடன் பிபிசி தமிழ் நேர்காணல் நடத்தியது. அதன் விவரம்:

``யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலால் அங்கு படித்து வரும் இந்திய மாணவர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதனால் அவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதே?''

``ஆமாம். யுக்ரேன் போர் சூழலால் மாணவர்கள் மீண்டும் கல்வியைத் தொடர்வதற்கு ஒரு வருடமோ இரண்டு வருடங்களோ ஆகிவிடும். போர் நடப்பதால் மீண்டும் அங்கே படிப்பதற்கு தங்கள் பிள்ளைகளை அனுப்புவது தொடர்பாக, பெற்றோருக்கு நம்பிக்கை வர வேண்டும். தற்போதைய நிலையில் ரஷ்யா, யுக்ரேன் பிரச்னை முடியப் போவதில்லை. இது அங்கு படித்து வரும் இந்திய மாணவர்களுக்குப் பாதகமாகத்தான் முடியப்போகிறது. அவர்களின் நலனுக்காக குழு அமைத்து விவாதிக்க வேண்டும்''.

``இந்தியாவில் இவர்கள் படிப்பைத் தொடர்வதற்கு வாய்ப்புள்ளதா?''

``பெற்றோரும் மாணவர்களும் இப்படியொரு கோரிக்கையை வைத்துள்ளனர். அரசு மருத்துவ கல்லூரி அல்லது தனியார் மருத்துவ கல்லூரியிலோ அனுமதி கொடுக்க வேண்டும் எனவும் சிலர் பேசி வருகின்றனர். இதனால் நடைமுறையில் பல சிக்கல்கள் உள்ளன. இவர்களை தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்க்க முடியாது. யுக்ரேனில் இந்த மாணவர்கள் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாயை கட்டணமாக செலுத்துகின்றனர்.

யுக்ரேன் இந்திய மருத்துவர்கள்

இங்குள்ள தனியார் கல்லூரிகளில் ஆண்டுக்கு 25 லட்ச ரூபாயை செலுத்த வேண்டும். இந்த கல்லூரியில் அவர்களால் இந்தளவு கட்டணத்தைச் செலுத்த முடியாது. அரசு மருத்துவ கல்லூரியில் 18 ஆயிரம் ரூபாயை செலுத்த வேண்டும். ஆனால், அங்கு நீட் தேர்வில் வெற்றி பெற்று மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அங்கு சேர்ப்பதிலும் சிக்கல் வரும். எனவே, அந்த மாணவர்கள் எந்தளவுக்கு யுக்ரேனில் மருத்துவ படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர், இங்குள்ள முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்களின் கல்விக்கு இணையாக உள்ளனரா என்பதை சோதிக்கும் வகையில் மதிப்பீட்டுத் தேர்வு ஒன்றை வைக்க வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றாலும் யுக்ரேனில் செலுத்தும் கட்டணத்தையே வாங்க வேண்டும் என்பதுதான் இங்குள்ளவர்களின் கருத்தாக உள்ளது. இதற்கு சற்று காலதாமதம் ஆகும்.

மேலும், தற்போது வரையில் வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்களில் 70 சதவீதம் பேர், ஃபாரின் மெடிக்கல் கிராஜுவேட் தேர்வை முடிக்க முடியாமல் உள்ளனர். தேர்வின் மூலம், ஒரு மாணவர் மருத்துவப் படிப்பின் இறுதியாண்டு செய்முறைப் பயிற்சியில் எந்தளவுக்கு தரமாக உள்ளனர் என சோதிப்பார்கள். வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள், அங்குள்ள நோயாளிகளை எதிர்கொள்வதில் மொழி உள்பட பல்வேறு சிக்கல்களும் உள்ளன''.

``நீட் தேர்வு வந்த பிறகுதான் வெளிநாடுகளுக்கு சென்று படிக்கக் கூடிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாகக் கூறப்படுகிறதே?''

``அது உண்மைதான். பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்தும் தனியார் கல்லூரியில் சேருவதற்கு ஒன்றரை கோடி ரூபாய் வரையில் செலவு செய்ய வேண்டும். வெளிநாடுகளில் படிப்பதற்கு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்தளவுக்கு செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பிலிப்பைன்ஸில் மருத்துவம் படிப்பவர்கள் அதிகமாக உள்ளனர். அதேநேரம், 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த ஃபாரின் மெடிக்கல் கிராஜுவேட் தேர்வை 23,000 பேர் எழுதினர். இதில் ஐந்தாயிரம் பேர்தான் தேர்ச்சி பெற்றனர். 300 மதிப்பெண்ணில் 150 மதிப்பெண்ணை இவர்கள் பெற வேண்டும். ஃபாரின் மெடிக்கல் கிராஜுவேட் தேர்வை இன்னும் கடுமையாக்க வேண்டும். மருத்துவ படிப்பில் சமரசமே செய்யக் கூடாது என்பதுதான் என்னுடைய கருத்து. அதனால்தான் இந்திய மருத்துவர்களுக்கு தனி மவுசு இருக்கிறது. கல்வியை நீர்த்துப் போகச் செய்யக் கூடாது என்பதுதான் எங்களின் கோரிக்கை''.

யுக்ரேன் இந்திய மருத்துவர்கள்

``மருத்துவ கல்வி பயில சிறிய நாடுகளுக்கு இந்திய மாணவர்கள் செல்வதனால் கோடிக்கணக்கான பணம் நாட்டை விட்டு வெளியேறுகிறது என்றும் இதனைத் தடுக்க தனியார்த் துறையினர் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க வேண்டும் என்றும் இதற்கு உதவிட மாநில அரசுகள் நிலங்கள் ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோதி கருத்து வெளியிட்டுள்ளார். இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

``அவர் கூறியிருந்தாலும் நடைமுறையைப் பார்க்க வேண்டும். தனியார் மருத்துவமனைகள் கல்லூரி தொடங்க நிறைய முதலீடு செய்ய வேண்டும். நிர்வாக ஒதுக்கீட்டில் 50 சதவீதம் அரசு ஒதுக்கீட்டுத் தொகையை வாங்க வேண்டும் என்கின்றனர். இது சாத்தியம் இல்லை. 5 லட்ச ரூபாய்க்கு மருத்துவப் படிப்பை கொடுக்க யாரும் முன்வர மாட்டார்கள். இந்தியாவில் சில பொதுத்துறை நிறுவனங்கள், அதிக வருவாயில் இயங்குகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகளுடன் இணைந்து மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளலாம்''.

``யுக்ரேன் போன்ற நாடுகளுக்குச் செல்வதற்கு கல்விக் கட்டணம் மட்டும்தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் புறச்சூழல்கள் உள்ளதா?''

``கல்விக் கட்டணம்தான். நீட் தேர்வில் அதிகமான மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பது அவர்களுக்கு சிரமமாக உள்ளது. வெளிநாட்டு மருத்துவ கல்லூரிகளுக்கு என உள்ள ஆலோசகர்களுக்கு மாணவர் சேர்க்கையின் வாயிலாக நல்ல கமிஷன் கிடைக்கிறது. அவர்கள் மக்கள் மனதைக் கவரும் வகையில் செயல்படுகிறார்கள். நான் அவர்களைக் குறைகூற விரும்பவில்லை. அதேநேரம், சீனாவுக்கு படிக்கச் சென்ற நமது மாணவர்கள் கொரோனா காரணமாக திரும்பி வந்துவிட்டனர். மருத்துவப் படிப்பை ஆன்லைனில் படிக்க முடியாது. இனி அவர்களால் திரும்பிப் போக முடியாது. அவர்களை இங்குள்ள கல்லூரிகளில் சேர்ப்பதற்கான மருத்துவக் கட்டமைப்பு இல்லை. இதற்கு நேரம் ஆகும். இன்னும் ஆறு மாதம் ஆனாலும் தீர்வு கொடுக்கப்பட வேண்டும்''.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

``யுக்ரேன் உள்பட வெளிநாடுகளில் இருந்து வரக் கூடிய மாணவர்களை கல்லூரிக்கு ஐந்து பேர் எனப் பிரித்துப் படிக்க வைக்க முடியாதா?''

``அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளலாம். தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், `நான் நீட் தேர்வு எழுதி ஆண்டுக்கு 25 லட்சம் கொடுத்துப் படிக்கிறேன். அவர்கள் அந்தளவு செலவு செய்யாதபோது ஏன் அனுமதிக்க வேண்டும்' என கேள்வி எழுப்புவார்கள். யுக்ரேன் சென்ற மாணவர்களால் விமானத்தில் திரும்பி வருவதற்குக் கூட வழியில்லாமல் இருந்தனர்''.

``இந்திய மருத்துவ மாணவர்களுக்கு உலகளவில் கிடைக்கும் அங்கீகாரம் குறித்து சொல்கிறீர்கள். யுக்ரேன் போன்ற நாடுகளில் மருத்துவ படிப்புக்கான சூழல்கள் எப்படி உள்ளன என்பது குறித்து சொல்ல முடியுமா?''

``சில நாடுகள் மட்டுமே மருத்துவப் படிப்பை சிறப்பாக வழங்குகின்றன. மற்ற நாடுகளை நான் குறை சொல்லவில்லை. அவர்களைவிட இந்திய மருத்துவக் கல்லூரிகளின் தரம் சிறப்பாக உள்ளது. அதனால்தான் மெடிக்கல் டூரிஸம் என்ற பெயரில் பலரும் இங்கு வருகின்றனர்''.

காணொளிக் குறிப்பு, விளாதிமிர் புதின்யை ரஷ்யாவை போருக்கு தூண்டியது என்ன ?

``வெளிநாட்டில் படிப்பை முடித்துவிட்டு வரும் மாணவர்கள், இந்தியா வந்த பிறகு எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?''

`` ஃபாரின் மெடிக்கல் கிராஜுவேட் தேர்வு என்பது பார்ட் ஏ, பார்ட் பி என இரண்டு பிரிவாக நடக்கிறது. இது 5 மணிநேரம் நடக்கக் கூடிய தேர்வு. இதனை எழுதி முதல்முறை தேர்ச்சி பெறுவது என்பது சிரமம். 100 பேர் எழுதினால் 14 பேர் தேர்ச்சி பெறுவார்கள். வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கு கிளினிக் அனுபவம் என்பதுவும் குறைவுதான். நான்காவது, ஐந்தாவது முறை எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் மருத்துவப் படிப்பில் தேர்ச்சி பெறும்போது 29 வயதாகிவிடுகிறது. வெளிநாட்டுக் கல்லூரிகளின் கட்டணம்தான் மக்களை ஈர்க்கிறது. அதனால் சவால்கள் அவர்களுக்குத் தெரிவதில்லை.

இந்தத் தேர்வுக்காக 20 பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. முதலிலேயே இதைப் பற்றிக் கூறிவிட்டால் மாணவர்கள் பயந்துவிடுவார்கள். அதனால்தான், `தரமாக சொல்லித் தருகிறோம்' என வியாபாரம் செய்கின்றனர்''.

``வெளிநாடுகளில் படிப்பை தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?''

``அவர்கள் படித்து முடித்துவிட்டு வரும்போது இந்தியாவில் நடக்கும் தகுதித் தேர்வுகள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் உள்ள மக்கள் எதிர்கொள்ளக் கூடிய நோய்கள், சிகிச்சை முறைகள், மருந்துகள் ஆகியவை வேறு. நமது நாட்டில் உள்ள தட்பவெப்ப நிலை, மருத்துவ முறை என்பது வேறு. இங்கு படித்தால் உறைவிட மருத்துவராக ஆறு மாதம் பணியாற்ற வேண்டும். அவர்கள் ஓராண்டு பணியாற்ற வேண்டும். இந்த விவரம் சரியான முறையில் மக்களுக்குத் தெரிவதில்லை. இந்திய மருத்துவ கவுன்சிலும், `இந்தக் கல்லூரியை தேர்வு செய்ய வேண்டாம்' என சில நேரங்களில் அறிவுறுத்துகின்றனர். அதேநேரம், யுக்ரேன் பிரச்னைக்குப் பிறகு ` வெளிநாடுகளில் சென்று இனி மருத்துவம் படிக்கலாமா?' என்பது விவாதமாகியுள்ளது''.

காணொளிக் குறிப்பு, யார் இந்த புதின்? அதிபரான உளவாளியின் அரசியலும் அந்தரங்கமும்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: