யுக்ரேன் போரில் மாணவர் நவீன் இறந்தது, நீட் தேர்வை விலக்கவேண்டிய தேவையை மீண்டும் உணர்த்துகிறது - மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், MKSTALIN/TWITTER
(இன்றைய (மார்ச் 3) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)
யுக்ரேனுக்கு மருத்துவம் படிக்கச் சென்று, போரில் உயிரிழந்த மாணவரின் துயர நிலை நீட் தேர்வு விலக்கப்படவேண்டியதின் அவசியத்தை மீண்டும் உணர்த்துகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனவே, நீட் தேர்வு ரத்துக்காக இணைந்து போராடுவோம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக, 'தினமணி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அவர் நேற்று, புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "நீட் தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்து, அதிகக் கட்டணம் செலுத்த முடியாமல் தனது கனவை நனவாக்க யுக்ரேன் நாட்டுக்குச் சென்று மருத்துவம் படித்த கர்நாடக மாணவர் நவீனின் இழப்பு மிகுந்த வேதனையை அளிக்கிறது.
வெந்த புண்ணில் வேல்...
யுக்ரேனில் இருந்து வெளியேற முடியாமல், தங்களது மருத்துவக் கனவு என்ன ஆகுமோ என்ற கவலையில் மாணவர்கள் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். உள்நாட்டில் படிக்க முடியாமல், வெளிநாடு சென்று படிக்க முற்பட்ட மாணவர்களின் ஆர்வத்தையும், அதற்காக கஷ்டப்பட்டு தங்களது சொத்துகளை விற்று சொந்த சேமிப்புகளை கரைத்து மேல்படிப்புக்கு யுக்ரேனுக்கு அனுப்பி வைத்த பெற்றோர்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்தும் வகையில் கருத்துகளை இந்திய அரசு வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். இந்திய அரசின் கருத்துகளுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் போடப்படும் பதிவுகள் அனைத்தும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாக உள்ளன.
மேலும், பாஜகவுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் இருப்பவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்க வேண்டியது அனைவருக்குமான பிரதமரின் முக்கியக் கடமையாகும். யுக்ரேனில் தவித்து வருவோருக்கு நம்பிக்கை அளித்து அழைத்து வர வேண்டிய மிக முக்கிய காலகட்டம் என்பதை இந்திய அரசுக்கு நினைவூட்டுகிறேன்.
இப்போது வந்துள்ள யுக்ரேன் சூழல் நீட் தேர்வு ரத்துக்கு மேலும் வலுவான காரணத்தை ஏற்படுத்தியுள்ளது. யுக்ரேன் போன்ற சிறிய நாடுகளுக்கு ஏன் மருத்துவக் கல்வி படிக்கப் போனார்கள் என்று கேள்வி கேட்டு தர்க்கம் செய்வதற்கு ஏற்ற நேரமல்ல இது. யுக்ரேனில் சிக்கியுள்ள மாணவர்களைப் பாதுகாப்பாக மீட்பதும், உள்நாட்டில் மருத்துவக் கல்வி கற்கத் தடையாக இருக்கும் நீட் தேர்வை ரத்து செய்வதும் உடனடி இலக்காக அமைய வேண்டும்" என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"பெண்கள் சமைப்பதை குறைத்ததால்தான் ஹோட்டல்கள் அதிகரிப்பு" - பேசிய மேடையிலேயே புதுச்சேரி அமைச்சரை கண்டித்த பெண்கள்

பட மூலாதாரம், Getty Images
பெண்கள் சமைப்பதை குறைத்ததால்தான் ஹோட்டல்கள் அதிகரித்துவிட்டன என, புதுச்சேரி அமைச்சர் பேசியதற்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக, 'இந்து தமிழ் திசை' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

உங்களது கதையை சொல்ல விரும்புகிறோம்: நீங்களோ அல்லது நண்பரோ, உறவினரோ யுக்ரேனில் இருக்கிறீர்களா?
தற்போது யுக்ரேனில் இருக்கும் தமிழர்களை தொடர்பு கொள்ள விரும்புகிறோம். அங்கு நீங்கள் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள்? அல்லது யுக்ரேனில் இருந்து வெளியேறி அண்டை நாடுகளில் இருக்கிறீர்களா? உங்களது அனுபவங்களை கீழே உள்ள படிவத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். பிபிசி தமிழில் இருந்து விரைவில் உங்களை தொடர்பு கொள்கிறோம். உங்கள் அனுபவங்களை பிபிசி தமிழ் இணையதளத்தில் பிரசுரிக்கலாம்.
உங்கள் கேள்விகளுக்கு பதில்: யுக்ரேன் மோதலில் இந்தியாவின் மீதான தாக்கம்
யுக்ரேன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அந்த மோதலின் தாக்கம் உலக அளவிலோ அல்லது உங்களது அன்றாட வாழ்வில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் பற்றியோ நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பலாம். உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். அதன் அடிப்படையில் அடுத்துவரும் செய்திகளை உங்களுக்கு வழங்குகிறோம்.
புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு மையத்தில் பாரம்பரிய உணவு கருத்தரங்கு நடந்தது. இக்கருத்தரங்கில் புதுச்சேரி வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பங்கேற்று பேசும்போது, "பெண்கள் பாரம்பரிய முறையில் உணவு சமைக்க முன்வர வேண்டும். அம்மியைக்கூட பயன்படுத்துவதில்லை. பெண்கள் சமைப்பதை குறைத்ததால்தான் ஹோட்டல்கள் அதிகரித்துவிட்டன. சரியான காய்கறியை பார்த்து வாங்கக்கூட தற்போது பெண்களுக்கு தெரியவில்லை" என்று குறிப்பிட்டு பேசிக்கொண்டிருந்தார்.
அங்கிருந்த பெண்கள் அமைச்சர் பேசும்போதே எதிர்ப்புக் குரல் எழுப்பினர். "அமைச்சரின் கருத்து தவறானது. அனைத்து பணிகளிலும் கூடுதலாக பெண்கள்தான் செய்கிறோம். காலத்துக்கு ஏற்ப சமையலறைத் தொடங்கி புதிய சாதனங்கள் வருகின்றன. காய்கறிகளை சரியாக இப்போதும் வாங்குவது பெண்கள்தான். ஆண்களும் பணியை பங்கிடாவிட்டால் ஹோட்டல் அதிகரிக்கதான் செய்யும்" என்று தங்கள் கருத்தை முன்வைத்தனர். அமைச்சரும் பதில் கருத்து கூற, அங்கு விவாதம் நடந்தது. அமைச்சர் பேசி முடித்த பிறகு அங்கு நடந்த நிகழ்வுகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தபோது, அமைச்சரின் கருத்துக்கு பெண்கள் பதில் கருத்து எடுத்துரைத்ததை தெரிவித்ததற்கு வெளிநாட்டு பெண்கள் கைத்தட்டி வரவேற்றதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வகுப்பறையில் கிரிக்கெட் விளையாடியதில் மோதல்: சக மாணவர்கள் தாக்கியதில் 10-ம் வகுப்பு மாணவர் பலி

பட மூலாதாரம், Getty Images
தெலங்கானா மாநிலத்தில் சக மாணவர்கள் தாக்கியதில் 10-ம் வகுப்பு மாணவர் உயிரிழந்ததாக, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் யூசூப்குடா என்ற பகுதியில் சாய் குரூபா உயர்நிலைப்பள்ளி என்ற தனியார் பள்ளி உள்ளது.
அந்த பள்ளிக்கூடத்தில் நேற்று 10-ம் வகுப்பு மாணவர்கள் சிலர் உணவு இடைவேளையின் போது வகுப்பறைக்குள் காதிதத்தால் ஆன பந்தை வைத்து கிரிக்கெட் விளையாடினர். அப்போது, மன்சூர் (வயது 15) என்ற மாணவர் தனது வகுப்பில் பயிலும் சக மாணவன் மீது காகிதத்தால் ஆன பந்தை எறிந்துள்ளான். இதனால், மன்சூருக்கும் அந்த மாணவனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அந்த மாணவர் தனது மற்றொரு நண்பனுடன் சேர்ந்து மன்சூரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த இரு மாணவர்களும் மன்சூரை கடுமையாக தாக்கியுள்ளனர். வகுப்பறையில் இருந்த மேஜை மீதும் மன்சூரை கடுமையாக மோதச்செய்துள்ளனர். இதில், மன்சூர் படுகாயமடைந்து கிழே விழுந்துள்ளார்.
மாணவர்களிடையே சண்டை நடைபெறுவது குறித்து ஆசிரியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக வகுப்பறைக்கு வந்த ஆசிரியர்கள் மாணவன் மன்சூர் படுகாயங்களுடன் கிழே விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக மன்சூரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், மன்சூரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், மன்சூரை தாக்கிவிட்டு பள்ளியில் இருந்து தப்பியோடிய சக மாணவர்கள் 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர் என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரிலிருந்து தப்பித்து பொதுமக்களிடம் உதவி கேட்ட காதல் ஜோடி

பட மூலாதாரம், ASHISH KUMAR
கோவை லக்ஷ்மி மில் சிக்னல் சந்திப்பில் நேற்று இரவு புதிதாக திருமணமான காதல் ஜோடி பொதுமக்களால் மீட்கப்பட்டதாக, 'நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
காதல் திருமணம் செய்த அவர்களை பெண்ணின் பெற்றோர் ஏமாற்றி காரில் அழைத்துச் சென்றதாக குற்றம்சாட்டப்படுகிறது. அப்போது, காரிலிருந்து தப்பித்த அவர்கள், கடும் போக்குவரத்து நெருக்கடியில், பொதுமக்களுக்கு மத்தியில் உதவி கோரி குரல் எழுப்பினர். தங்களை காப்பாற்றுமாறு அவர்கள் கேட்டனர். இதனை சிலர் வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் தாங்கள் மார்ச் 1 அன்று திருமணம் செய்ததாகவும், பின்னர் சரவணம்பட்டி காவல்நிலையத்திற்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். அதன்பின், பெண்ணின் பெற்றோர் காரில் அவர்களை வலுக்கட்டாயமாக ஏற்றியதாகவும், அதில் ஒருவர் ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த வீடியோ வைரல் ஆனதைத் தொடர்ந்து, ரேஸ் கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, திருமணமான ஜோடியையும், காரில் இருந்த 5 பேரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
விசாரணையில் திருமணமானவர்கள் சினேகா - விக்னேஷ் என்பது தெரியவந்தது. அவர்கள் சாதி மறுப்புத் திருமணம் செய்துள்ளனர். அவர்கள் திருமணத்தை ஒப்புக்கொண்டதாகக் கூறி, பெண்ணின் பெற்றோர் அவர்களை பெண்ணின் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு செல்வதற்காக காரில் ஏற்றியுள்ளனர். ஆனால், தங்களை ஏமாற்றி காரில் ஏற்றியதை பின்னர் அறிந்த அத்தம்பதி, காரிலிருந்து தப்பித்து உதவி கேட்டுள்ளனர்.
போலீஸ் விசாரணைக்குப் பின் காரிலிருந்த 5 பேர் விடுவிக்கப்பட்டனர். இன்று அவர்கள் 5 பேரையும் உதவி காவல் ஆணையர் (மத்திய மாவட்டம்) முன்பு ஆஜராகுமாறு போலீசார் தெரிவித்ததாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- உலகில் எந்த நாட்டிடம் எத்தனை அணு ஆயுதங்கள் உள்ளன?
- யுக்ரேன்-ரஷ்யா மோதலால் இலங்கைக்கு என்ன சிக்கல்?
- யுக்ரேனில் இருந்து தப்பிக்க 28 மணி நேரம் காரில் பயணித்த இந்திய மாணவிகள்
- ராகுல் விழா மேடையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கொதித்தது ஏன்?
- கோரக்பூரின் ’வாழ்வா சாவா’ போட்டியில் வெற்றிபெறுவாரா உ.பி. முதல்வர் யோகி?
- மு.க. ஸ்டாலின்: "திராவிட மாடல் கோட்பாட்டை இந்தியா முழுவதும் விதைப்பேன்"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












