மு.க. ஸ்டாலின்: "திராவிட மாடல் கோட்பாட்டை இந்தியா முழுவதும் விதைப்பேன்"

திமுக ஸ்டாலின்

பட மூலாதாரம், DMK

படக்குறிப்பு, மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

திராவிட மாடல் கோட்பாட்டை இந்தியா முழுவதும் விதைப்பதை தனது பணியாக மேற்கொள்ளவிருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். தனது சுயசரிதை வெளியீட்டு விழாவில் பேசிய முதலமைச்சர், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சுயசரிதை நூலான "உங்களில் ஒருவன் பாகம் 1" இன்று சென்னையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியால் வெளியிடப்பட்டது.

இந்த விழாவில் கேரளாவின் முதலமைச்சர் பினராயி விஜயன், பிஹாரின் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடந்த விழாவில் பங்கேற்றவர்களை தி.மு.கவின் நாடாளுமன்றக் குழு துணைத் தலைவர் கனிமொழி வரவேற்றார்.

இதற்குப் பிறகு, உங்களில் ஒருவன் புத்தகத்தை வெளியிடும் நிகழ்வு நடைபெற்றது. மறைந்த முதலமைச்சர் மு. கருணாநிதியின் கோபலபுரம் வீட்டைப் போல வடிவமைக்கப்பட்டிருந்த வண்டியிலிருந்து புத்தகத்தை எடுத்து ராகுல் காந்தி வெளியிட்டார்.

இதற்குப் பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கிய ஏற்புரையில், 'திராவிட மாடல் கோட்பாட்டை' இந்தியா முழுமைக்கும் விதைப்பதை தனது பணியாக மேற்கொள்ளவிருப்பதாக தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் திராவிட மாடல் என்ற வார்த்தையை ஸ்டாலின் பயன்படுத்தியிருந்தார். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றியது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

அந்த தேர்தல் வெற்றியை குறிக்கும் வகையிலே பேசிய ஸ்டாலின், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் திமுக கூட்டணிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி எங்களது ஒன்பது மாத கால 'திராவிட மாடல்' ஆட்சிக்குத் தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள நற்சான்றிதழ் என குறிப்பிட்டார்.

அதற்கு முன்பாக, கடந்த ஆண்டு ஜூலை 9ஆம் தேதி பொருளாதார ஆலோசனைக் கவுன்சிலின் கூட்டம் நடைபெற்றது. பொருளாதார நிபுணர்கள் ரகுராம் ராஜன், எஸ்தர் தஃப்லோ, அரவிந்த் சுப்பிரமணியன், டாக்டர் எஸ். நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், எஸ்.நாராயணன் எழுதிய "Dravidian Years" நூலை மேற்கோள்காட்டிப் பேசினார்.

"Dravidian Years" புத்தகத்தில் எஸ். நாராயணன் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்.

"அரசியல், வளர்ச்சி, நிர்வாகம் ஆகியவற்றின் இடையில் நெருக்கமான, உயிர்ப்புள்ள ஒரு உறவை உருவாக்குவதில் கருணாநிதி யுகம் வெற்றி கண்டது. பிற்காலத்தில் அது போன்ற பல திட்டங்களை உருவாக்குவதற்கு அது அடிப்படையாக அமைந்தது."

இதை குறிப்பிட்ட ஸ்டாலின், "இதுதான் திராவிட மாடல். எல்லா சமூகங்களுக்குமான வளர்ச்சி. எல்லா மாவட்டங்களையும் சமூகத்தின் எல்லா பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி. இது தான் திராவிட மாடல். எல்லோரையும் உள்ளடக்கிய இந்த பாணியில் தமிழ்நாடு வளர வேண்டுமென நினைக்கிறேன்," என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், திங்கட்கிழமை நடைபெற்ற தமது சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இருந்த மேடையில் திராவிட மாடல் கோட்பாடு பற்றி ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

ஸ்டாலினின் திராவிட மாடல் எது?

ஸ்டாலின்

பட மூலாதாரம், DMK

"எனது தத்துவம் என்பதற்கு 'திராவிட மாடல்' என்று பெயர். 'மாடல்' என்பது ஆங்கிலச் சொல்தான். அதைத் தமிழில் சொல்வதாக இருந்தால் 'திராவிடவியல் ஆட்சிமுறை'தான் எனது கோட்பாடு. அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் என்னுடைய கோட்பாட்டு நெறிமுறை. கல்வியில் - வேலைவாய்ப்பில் - தொழில் வளர்ச்சியில் - சமூக மேம்பாட்டில் - இந்த நாடு ஒரு சேர வளர வேண்டும். பால் பேதமற்ற - ரத்தபேதமற்ற சமூகமாக நமது சமூக மனோபாவம் மாற வேண்டும். 'எல்லார்க்கும் எல்லாம்' என்பதே இந்த திராவிடவியல் கோட்பாடு.

அனைத்து தேசிய இனங்களுக்கும் சரிநிகர் உரிமை தரப்பட வேண்டும் என்பதுதான் திராவிடவியல் கோட்பாடு. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். அனைத்து மாநிலங்களும் சுயாட்சித் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். இந்த மாநிலங்களின் ஒன்றியமான இந்திய அரசானது கூட்டாட்சி முறைப்படி செயல்பட வேண்டும் என்பதுதான் திராவிடவியல் கோட்பாடு.

இந்த திராவிடவியல் கோட்பாட்டை, தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.

ராகுல் காந்தி இந்திய நாடாளுமன்றத்தில் எழுந்து நின்று "India is a union of states" என்றும்; "BJP can never ever rule over the people of Tamil Nadu" என்றும் பேசியது, அவர் திராவிடவியல் கோட்பாட்டை முழுமையாக அவர் உள்வாங்கியவர் என்பதை உணர்த்துகிறது. இத்தகைய மனமாற்றத்தை அகில இந்தியத் தலைவர்கள் அடைய வேண்டும் என்றுதான் அண்ணாவும் கருணாநிதியும் விரும்பினார்கள். அவர்கள் காலத்தில் அடைய முடியாத மாற்றம் இப்போது தெரியத் தொடங்கி இருக்கிறது. மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கொண்ட வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். அதற்கு அகில இந்தியக் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும் - அனைத்து மாநிலக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்.

திமுகஸ்டாலின்

பட மூலாதாரம், DMK

'மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி' என்பது இந்தியா முழுமைக்குமான முழக்கமாக மாறிவிட்டது. அதைத்தான் ராகுல் காந்தி அவர்களும் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தார். அதேபோல், இது சட்டத்தின் ஆட்சியாக மட்டுமில்லாமல் - சமூகநீதியின் ஆட்சியாக மாற்றப்பட வேண்டும். இதற்காக அகில இந்திய அளவிலான சமூகநீதிக்கூட்டமைப்பை திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் உருவாக்கி, அனைத்து அகில இந்தியக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறேன். இத்தகைய திராவிடவியல் கோட்பாட்டை இந்தியா முழுமைக்கும் விதைப்பதை எனது பணியாக மேற்கொள்வேன். அந்த வகையில் எனது அரசியல் வாழ்க்கையின் திருப்புமுனையாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது" என்றார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் பேசிய பிகார் எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், தமிழ்நாட்டின் சமூக நீதி இயக்கத்தால் தனது தந்தை லாலு பிரசாத் யாதவ் மிகவும் உத்வேகமடைந்ததாகவும் அந்த உணர்வை பிகாருக்கும் எடுத்து வந்ததாகவும் கூறினார்.

"மிக முக்கியமான சுயாதீன அமைப்புகள் பலவீனமாக்கப்பட்டுள்ளன. அரசியல் காரணங்களுக்காக செயல்பட அவர் வலியுறுத்தப்படுகின்றன. குறிப்பாக கொலீஜியத்தின் மூலம் தேர்வுசெய்யப்படும் நீதித் துறையில் எல்லா சமூகங்களுக்கும் போதிய பிரதிநிதித்துவம் இல்லை. சமூக நீதிக் கொடியை ஏந்தியிருக்கும் பல கட்சிகள் நீதித் துறையிலும் இடஒதுக்கீடு கேட்டு போராடத் தயாராக இருக்கின்றன. வீதியில் இறங்கிப் போராட வேண்டிய தருணம் இப்போது வந்துவிட்டது. விரைவிலேயே அது நடப்பதை உறுதிசெய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டார் தேஜஸ்வி.

இதற்குப் பிறகு பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், திராவிட இயக்கம் தோன்றியதிலிருந்தே ஆதிக்கக் கதையாடல்கள் குறித்து கேள்வி எழுப்பியதோடு, ஒடுக்கப்பட்டோருக்காக குரல் கொடுத்ததாக தெரிவித்தார்.

கனிமொழி

பட மூலாதாரம், KANIMOZHI

"அவசரநிலை காலகட்டத்தில் நானும் ஸ்டாலினும் சிறைபடுத்தப்பட்டோம். அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்பட்ட எங்களுக்கு அநீதிக்கு எதிராக நிற்பதும் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காக போரிடுவதும் இயல்பாகவே வருகிறது" என்றார் பினராயி விஜயன்.

ஸ்டாலினின் இளமை ரகசியத்தை கேட்ட ராகுல்

இதற்குப் பிறகு பேச வந்த ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இளமையாகக் காட்சியளிப்பதாகக் கூறி தனது பேச்சைத் துவங்கினார்.

"நேற்றைய தினம் என்னுடைய தாயார் என்னை அழைத்து, "நாளை மறுதினம் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பிறந்த நாள் என்று சொன்னார்கள். எனக்குத் தெரியும் என்று நான் சொல்லிவிட்டு, அவருக்கு எத்தனை வயது தெரியுமா?" என்று கேட்டேன். "தெரியாது" என்று என்னுடைய தாயார் சொன்னார்.

"69 வயது" என்று நான் சொன்னவுடன், "சாத்தியமே இல்லை" என்று என்னுடைய தாயார் சொன்னார். நான் என்னுடைய தாயாரிடம் கேட்டேன், "அவருக்கு எத்தனை வயது இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?" என்றேன். "50 அல்லது 60 வயதிற்குள்தான் இருக்கும்" என்று என்னிடம் அவர் சொன்னார்.

அவர் எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறார் என்பதைப்பற்றி மு.க. ஸ்டாலின் இன்னொரு புத்தகத்தை எழுதவேண்டும்" என்றால் ராகுல் காந்தி.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: