ராகுல் விழா மேடையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கொதித்தது ஏன்?

தமிழ்நாடு முதலமைச்சரின் நூல் வெளியீட்டு விழாவுக்கு சென்னை வந்த ராகுல்காந்தி, சத்யமூர்த்தி பவனில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளோடு பேசுவதற்காக வந்திருந்தார். `மேடையில் எனக்கு அவமரியாதை நேர்ந்துவிட்டதற்காக தொண்டர்கள் வருந்த வேண்டாம்' என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
`உங்களில் ஒருவன்' என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது சுயசரிதையை எழுதியிருந்தார். இந்தப் புத்தக வெளியீட்டு விழாவுக்காக திங்கள்கிழமையன்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன், காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, பிகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்பட பலர் வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சத்யமூர்த்தி பவனில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை ராகுல் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கான பணிகளில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஈடுபட்டிருந்தனர். விமான நிலையம் முதல் போரூர் நந்தம்பாக்கம் வரையிலும் பின்னர் சத்யமூர்த்தி பவன் வரையிலும் திரளாக மக்களை நிறுத்தியிருந்தனர். அதிலும், மதிய நேரத்தில் மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே உள்ள பிரதான சாலையில் கொளுத்தும் வெயிலில் அவர்கள் நிற்க வைக்கப்பட்டிருந்தனர்.
மேலும், சத்யமூர்த்தி பவனிலும் வாழை, விளக்குகள் என அலங்கார தோரணங்கள் கட்டப்பட்டன. ராகுல் வருகையின் காரணமாக அண்ணாசாலையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. மேலும், மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த காங்கிரஸ் நிர்வாகிகளின் வாகனங்களும் பெரும் இடையூறாக இருந்தன. அவற்றை ஒழுங்குபடுத்துவதில் காவல்துறையினர் தீவிரம் காட்டினர்.
இதன்பின்னர் மாலை 6 மணிக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் உள்ளாட்சியில் வெற்றி பெற்றவர்களும் சத்யமூர்த்தி பவனுக்குள் வந்தனர். மேடையில் பேசிய நிர்வாகி ஒருவர், உள்ளாட்சியில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார். அந்தநேரம், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த கேமராமேன் ஒருவர், ட்ரோன்களோடு வலம் வந்தார். அவர் அதனை ஓடவிட்டு சில காட்சிகளைப் படம் முடிக்க முயற்சித்தார். அப்போது ஓடிவந்த காவல்துறை அதிகாரிகள், `யாரைக் கேட்டு ட்ரோன்களை ஓடவிட்டீர்கள். யார் அனுமதி கொடுத்தது?' எனச் சத்தம்போட, `விளக்கு அலங்காரக் காட்சிகளைப் படம் பிடிக்கச் சொன்னார்கள். அதற்காகத்தான் ஓட விட்டேன்' எனப் பதற்றத்தோடு அந்த நபர் விளக்கினார். இதனை ஏற்காத காவல்துறை அதிகாரிகள், `மொத்தக் குழுவையும் வெளியே அனுப்பிவிடுவோம். ட்ரோனை ஆஃப் செய்யுங்கள்' என எச்சரித்துவிட்டு நகர்ந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
இதனையடுத்து, உள்ளாட்சியின் சிறப்புகள் குறித்தும் ராஜீவ்காந்தியின் பஞ்சாயத்து ராஜ் சட்டம் குறித்தும் காங்கிரஸ் நிர்வாகிகள் பேசிக் கொண்டிருந்தனர். ராகுல் வருவதற்கு சில நிமிடங்களே இருந்ததால் கட்சியின் நிர்வாகிகளும் பதற்றத்தில் இருந்தனர். அப்போது மேடை ஏறிய முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அங்கு போடப்பட்டிருந்த இருக்கைகளைக் கவனித்தார். பின்னர், ஏதோ கேள்விகளைக் கேட்டவர், பதிலே பேசாமல் கீழே இறங்கிச் சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் மேடைக்குக் கீழே வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இருந்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.
அவர்களை அமைதியாக இருக்குமாறு மேடையில் இருந்த நிர்வாகிகள் கூறியும் சத்தம் குறையவில்லை. ஒருகட்டத்தில் இளங்கோவனை மேடையில் ஏற்றினர். அவரும், `எனக்கு நேர்ந்த அவமதிப்புக்காக தொண்டர்கள் வருந்த வேண்டாம். உங்கள் இதயங்களில் எனக்கு இடம் இருக்கிறது. நான் ஜெயலலிதாவையே எதிர்த்து அரசியல் செய்தவன்' எனக் கூறிவிட்டு மேடையில் முதல் வரிசையில் அமர்ந்து கொண்டார்.
இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகி ஒருவரிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டபோது, ``உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கீழே அமர்ந்திருந்தனர். அப்போது ஒரு கவுன்சிலர் மட்டும் மேடைக்குச் சென்றார். நீங்கள் மட்டும் எப்படி மேடைக்குப் போகலாம் என சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்தநேரத்தில், மேடையில் இளங்கோவன் ஏறினார். அவருக்கு இரண்டாவது வரிசையில் இடம் போடப்பட்டிருந்தது. இதனால் அவர் கோபப்பட்டு வெளியேறினார். இதனை அறிந்த அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து சத்தம் போட்டனர். சில நிமிடங்கள் கூச்சல் குழப்பம் நீடித்ததால், இளங்கோவனே மேடையில் ஏறி அவர்களை சமாதானப்படுத்தினார்'' என்றார்.

இதையடுத்து சில நிமிடங்களில் ராகுல்காந்தி மேடைக்கு வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, ராகுல்காந்தியின் குடும்பப் பாரம்பரியம் குறித்து விளக்கிக் கொண்டிருக்க, மேடைக்குக் கீழே இருந்த ஒரு சிறுமியை சட்டமன்றக் காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை ராகுலின் பக்கம் கொண்டு போய் நிறுத்தினார். அந்தச் சிறுமியிடம் விவரங்களைக் கேட்ட ராகுல், அவரை தன்பக்கத்திலேயே அமர வைத்துக் கொண்டு செல்ஃபி எடுத்தார். பின்னர், சாக்லேட்டை கொண்டு வரும்படி கூறினார். சாக்லேட் வந்ததும் அதனை சிறுமிக்கு அளித்துவிட்டு அனுப்பி வைத்தார்.
இறுதியாக, ராகுல்காந்தி பேசும்போது, `` உங்கள் வெற்றிக்காக என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களுக்கு நெருக்கமான அமைப்பாக உள்ளாட்சி இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாடு மிக முக்கியமான மாநிலமாக இருக்கிறது. என்னுடைய நாடாளுமன்றப் பேச்சைக் கேட்டிருப்பீர்கள், இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டமைப்பு எனக் குறிப்பிட்டேன். இந்த அமைப்பில் ஒவ்வோர் மாவட்டத்துக்கும் முக்கியத்துவம் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை வலிமையாக அமைக்க வேண்டும் என்றால், அது தமிழ்நாட்டில் வலிமையாக இருக்க வேண்டும். அதற்கு நமது அடிப்படைக் கோட்பாடுகளில் சமரசம் இல்லாமல் நாம் செயல்பட வேண்டும்'' என்றார்.
மேலும், ``இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருப்பதை உணர்கிறேன். இங்கு தி.மு.கவுடன் இணைந்து நாம் ஒரு பெரும் சக்தியாக இருக்கிறோம். தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியை வலுப்படுத்த வேண்டும். அதற்கு முதலில் அமைப்புரீதியாகவும் அடித்தட்டு அளவிலும் நம்மை நாம் வலிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். என் பின்னால் உள்ள கட்டடம், அடித்தளம் வலுவாக இல்லாவிட்டால் இவ்வளவு காலம் நீடித்திருக்க முடியாது. அடித்தளம் சரியாக இல்லாவிட்டால் அது பயனற்றது. ஓர் அறையில் 50 தமிழ்நாடு காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒன்றாக இருந்தால், அது 500 பேருக்கு சமம்'' என்றார்.
ராகுல் வருகைக்காக முன்னதாக மேடையில் சலசலப்பு ஏற்பட்டாலும் கட்சியினரின் ஒற்றுமை குறித்து இறுதியாக ராகுல் பேசியதை வரவேற்பைப் பெற்றது. அதேநேரம், இளம் கவுன்சிலர்களோடு ராகுல் உரையாடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. பயணத் திட்டமிடல் காரணமாக அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டதாக சத்யமூர்த்தி பவன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பிற செய்திகள்:
- ரஷ்ய படையெடுப்பு: யுக்ரேனின் எதிர்காலம் என்ன?
- யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி: நாடகத்தில் அதிபரானவர், நாட்டில் அதிபரான கதை
- யுக்ரேன் தலைநகர் கீயவ் தெருக்களில் கடும் சண்டை: வெடிகுண்டு சத்தம் - நேரலை செய்தி
- யுக்ரேனில் ரஷ்யாவின் நுழைவு குறித்து ரஷ்யர்களின் மனநிலை என்ன?
- யுக்ரேன்: ரஷ்யா மீது விதிக்கப்படும் தடைகள் என்ன? சர்வதேச உறவுகளில் தடைகளின் பொருள் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












