சந்திர சேகர் ராவ்: நரேந்திர மோதிக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைப்பதில் ஸ்டாலினை முந்துகிறாரா கேசிஆர்?

உத்தவ் கேசிஆர்

பட மூலாதாரம், Twitter/@trspartyonline

உத்தரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தின் மீதும் அனைவரின் பார்வையும் இருந்தது. தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் (கே.சி.ஆர்.) முதலில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரேயை சந்தித்தார். இதை தொடர்ந்து அவர் என்சிபி தலைவர் ஷரத் பவாரையும் சந்தித்துப்பேசினார்.

இரண்டு சந்திப்புகளுக்குப்பிறகும் செய்தியாளர் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் "புதிய முன்னணி"க்கான ஏற்பாடுகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன என்ற தெளிவான செய்தி அளிக்கப்பட்டது. இப்போது நாடு இயங்கும் விதம் சரியான திசையில் இல்லை என்றும், "நாட்டிற்கு மாற்றம் தேவை" என்றும் கே.சி.ஆர் கூறினார்..

தற்போது நாடு இயங்கும் முறையை மாற்ற வேண்டிய அவசியம் இருப்பதாக உத்தவ் தாக்கரே உடனான செய்தியாளர் சந்திப்பில், கேசிஆர் கூறினார்.

"நாட்டில் பெரிய மாற்றங்கள் தேவை என்ற விஷயத்தை நாங்கள் ஒப்புக்கொண்டோம். நாட்டின் சூழலை கெடுக்கக்கூடாது," என்று கே.சி.ஆர் மேலும் தெரிவித்தார். "நாங்கள் அடக்குமுறையை எதிர்த்துப் போராட விரும்புகிறோம். நாங்கள் சட்டவிரோதமான செயல்களை எதிர்த்துப் போராட விரும்புகிறோம்,"என்றார் அவர்.

மறுபுறம் மாற்றத்தின் தேவை குறித்துப்பேசிய உத்தவ் தாக்ரே, தற்போதைய அரசியல் சூழ்நிலையில், பழிவாங்கும் மனநிலையுடன் நடவடிக்கை எடுக்கப்படுவதாக குறிப்பிட்டார். "நமது இந்துகள் பழிவாங்குபவர்கள் அல்ல" என்றும் அவர் கூறினார்.

ஷரத் பவாரை சந்தித்த பிறகு பேசிய கேசிஆர், நாட்டின் மேலும் சில தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு விரைவில் "செயல் திட்டங்களை" வழங்குவோம் என்று கூறினார்.

"புதிய நம்பிக்கையுடன், புதிய செயல் திட்டங்களுடன் நாட்டை அழைத்துச் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஷரத் பவார் என்னை ஆசிர்வதித்தார். நாட்டில் புதிய வழியில் வேலை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. நாங்கள் இதை ஒப்புக்கொண்டோம். கூடிய விரைவில் மற்ற கட்சிகளுடன் பேசுவோம். ஒன்றாக அமருவோம். எங்களுடன் சேர விரும்புபவர்கள் அனைவரையும் உடன் அழைத்துச் செல்வோம். அதன் பின்னரே நாட்டின் முன் எங்கள் செயல் திட்டங்களை முன்வைப்போம்," என்று கேசிஆர் குறிப்பிட்டார்.

கேசிஆர்

பட மூலாதாரம், Twitter/@trspartyonline

வளர்ச்சி குறித்து பேசவே இந்த சந்திப்பு நடந்ததாக ஷரத் பவார் கூறுகிறார். "நாட்டில் புதிய சூழலைஉருவாக்க முடியும். அத்தகைய சூழலை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்" என்று அவர் கூறினார்..மமதா பானர்ஜி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கேசிஆர், நாட்டின் மற்ற தலைவர்களையும் சந்திப்பேன் என்றும், மகாராஷ்டிராவில் இருந்து உருவாகும் எந்த முன்னணியும் இதுவரையில் வெற்றிபெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்புக்களின் தேவை என்ன என்பதை இப்போது புரிந்து கொள்வோம்.

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் கேசிஆர் ஏன் ஈடுபட்டுள்ளார்?

கே.சி.ஆர் மற்றும் தாக்கரே இருவருமே என்.டி.ஏவுடன் ( தேசிய ஜனநாயக கூட்டணி) மேடையில் காணப்பட்ட ஒரு காலம் இருந்தது. கடந்த மகராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனை தனக்கென ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுத்தது. அதேபோல கேசிஆரும் தற்போது மத்திய அரசின் மீது கண்டன மழை பொழிவதைப்பார்க்க முடிகிறது.

பிப்ரவரி மாதத்தை மட்டுமே எடுத்துக்கொண்டால், கேசிஆர் மற்றும் அவரது டிஆர்எஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே வேறுபாடுகள் தெளிவாகத் தெரிந்த பல சந்தர்ப்பங்கள் உள்ளன.

தெலங்கானா சுற்றுப்பயணத்தில் பிரதமரை வரவேற்க முதல்வர் வராதது, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோதியின் அறிக்கையை 'தெலங்கானா உருவாக்க எதிர்ப்பு' போல ஆக்கியது, ராகுல் காந்தி குறித்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியதை கண்டித்து, சர்மா ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது போன்றவை ஒரு சில உதாரணங்கள்.

கேசிஆர் கடைப்பிடிக்கும் நிலைப்பாடு காரணமாக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பாஜக அல்லாத தலைவர்களிடமிருந்தும் அவருக்கு ஆதரவு கிடைத்து வருகிறது. கடந்த வாரம், உத்தவ் தாக்ரே அவரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு மும்பை வருமாறு அழைப்பு விடுத்தார்.

"ஷரத் பவார்- கேசிஆரின் ஒரு மணி நேர சந்திப்பு, புதிய சமன்பாட்டிற்கு ஷரத் பவாரின் "ஆசிர்வாதம்" கேசிஆருக்கு கிடைத்திருப்பதை சுட்டிக்காட்டுகிறது. எந்த எதிர்கட்சி முன்னணிக்கும் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவர் ஷரத் பவார் ," என்று பிபிசி தெலுங்கு ஆசிரியர் ஜிஎஸ் ராம்மோகன் தெரிவித்தார்.

சந்திப்பு

பட மூலாதாரம், Twitter/CEO TELANGANA

கே.சி.ஆருடன் பிரகாஷ் ராஜ் வந்ததும் ஒரு சுவாரசியமான விஷயம் என்று அவர் குறிப்பிட்டார். "தற்போது அவர் எந்த கட்சியிலும் இணைந்திருக்கவில்லை. பிரகாஷ் ராஜின் மதசார்பற்ற, தாராளவாத இமேஜ் காரணமாக அவர் உடன் இருப்பது, சிவில் சமூகங்களுக்கு ஒரு நல்ல செய்தியை அளித்துள்ளது,"என்கிறார் அவர்.

ஒற்றுமையால் சாதிப்பது என்ன?

உத்தவ் தாக்ரே மற்றும் ஷரத் பவார் ஆகியோரை கேசிஆர் சந்தித்த பிறகு வெளிவரும் கருத்துக்கள், நாட்டுக்கு புதிய அரசியல் வாய்ப்பு வழங்குவது குறித்து பேசப்படுவதை தெளிவாக்குகிறது என்று பிபிசி மராத்தி ஆசிரியர் ஆஷிஷ் தீக்‌ஷித் கூறினார்.

கே.சி.ஆர் மற்றும் ஷரத் பவார் இருவருமே நாட்டில் வளர்ச்சி ஏற்படவில்லை என்றும் வளர்ச்சிக்கான முன்னுரிமை திட்டங்கள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர். முன்பெல்லாம் எந்த ஒரு முன்னணி உருவானாலும் ஷரத் பவாரின் பெயர் முக்கியமாக முன்னே வரும். இன்றைய உரையாடலில், ஷரத்பவாரின் ஆசிர்வாதத்தை வாங்க வந்துள்ளேன் என்று கே.சி.ஆர் கூறிய விதம் மற்றும் கே.சி.ஆரின் பணியை பவார் பாராட்டியிருப்பதையும் பார்க்கும்போது, இந்த புதிய முன்னணியை கேசிஆர் வழிநடத்தக்கூடும் என்று தோன்றுகிறது.

சிவசேனாவைப் பொருத்த வரையில், 2019க்குப் பிறகு பாஜகவிடமிருந்து சிவசேனை பிரிந்தபோது, மமதா பானர்ஜியைப் போல மோதி அரசை தினமும் தாக்கிப்பேசவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உத்தவ் மற்றும் சிவசேனையும் "சுயபாதுகாப்பு" தோரணையில் அதிகம் காணப்பட்டனர். ஆனால் பாஜகவுக்கு எதிராக வெளிப்படையாக விளையாட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை சிவசேனை கடந்த சில நாட்களில் புரிந்து கொண்டுள்ளது.

கேசிஆர்

பட மூலாதாரம், AFP

அடுத்த சில நாட்களில் பிஎம்சி(முன்பை மாநகராட்சி ) தேர்தல் நடைபெற உள்ளதாகவும், இது சிவசேனைக்கு மிகவும் முக்கியமானது என்றும் இங்கு அக்கட்சியின் நேரடிப் போட்டி பாஜகவுடன் இருப்பதாகவும் ஆஷிஷ் கூறுகிறார். அதனால்தான் பாஜகவுக்கு எதிராக சிவசேனை எந்தவித தயக்கமும் இல்லாமல் பேச ஆரம்பித்துள்ளது.

இப்போது இங்கே இன்னும் ஒரு முக்கியமான விஷயம் உள்ளது. பாஜக ஆட்சியில்இல்லாத மாநிலங்கள் தொடர்ந்து மத்திய அமைப்புகள் மற்றும் ஆளுனரின் கட்டுப்பாடுகளை பார்த்து "அஞ்சுகின்றன". பிரதமர் மோதியை விமர்சிக்கும் கேசிஆர், மாநில அரசின் அதிகாரங்களில் தலையிடுதல், ஜிஎஸ்டி, நிர்வாக சேவைகளில் நியமனங்கள், மத்திய அமைப்புகளின் தலையீடு போன்ற பிரச்னைகளை எழுப்பி வருகிறார்.

மத்திய அரசு இந்த அமைப்புகளை மிகவும் தவறான வழியில் பயன்படுத்துகிறது என்றும் அதனால் ஏற்படும் விளைவுகளை அது சந்திக்கவேண்டும் என்றும் தாக்ரேயுடனான செய்தியாளர் சந்திப்பில் கே.சி.ஆர் கூறினார்.

சிவசேனையின் பல பெரிய தலைவர்களை மத்திய அமைப்புகள் கண்காணித்து வருகின்றன என்று ஆஷிஷ் தீக்‌ஷித் கூறுகிறார். சிவசேனை எம்.எல்.ஏ ஒருவர் உத்தவ் தாக்ரேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'இந்த அமைப்புகளின் கண்காணிப்பில் இருந்து நாம் தப்பவேண்டுமானால் பாஜகவுடன் செல்லவேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். இத்தகைய நேரத்தில் தலைவர்கள் ஒன்று கூடுவதானது, பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் இந்தப் பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கிறது என்ற செய்தியையும் அனுப்புகிறது.

புதிய "ஆரம்பத்தில்" காங்கிரஸ் எங்கே?

இந்தப் புதிய 'தொடக்கத்தில்' காங்கிரஸ் எங்கே இருக்கிறது? இந்தக் கேள்வியை இரு தலைவர்களுமே தவிர்த்தனர். உத்தவ் தாக்ரே காங்கிரஸுடனான கூட்டணி அரசுக்கு தலைமையேற்றுள்ளார். காங்கிரஸை கோபப்படுத்தும் எதையும் சிவசேனா செய்யாது.

அதே நேரத்தில், கேசிஆர் சமீப காலங்களில் காங்கிரஸிடம் மென்மையான போக்கை கைப்பிடிக்கிறார். மாநிலத்தில் காங்கிரஸ் அவரது எதிர்க்கட்சியாக உள்ளது. ஆனால் அவர் பாஜகவையே தாக்குகிறார்.

மோதி

பட மூலாதாரம், NOAH SEELAM/ CONTRIBUTOR

இதற்கு முன்பு மமதா பானர்ஜி இதேபோன்ற முன்னணியை உருவாக்க முயற்சி மேற்கொண்டபோது, அவர் காங்கிரஸை விமர்சித்தார். இந்நிலையில், கே.சி.ஆரின் முயற்சியில் காங்கிரசுக்கு சாதகமான சமிக்ஞையும் தெரிகிறது. இந்த முன்னணியின் வரம்பை அதிகரிக்க, காங்கிரஸ், டிஎம்சி, ஆம் ஆத்மி போன்ற கட்சிகளும் தேவைப்படும்.

"பெரிய கட்சிகள் ஒன்று சேராவிட்டால், இதுபோன்ற சிறிய கட்சிகளால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது ," என்று ஒரு காலத்தில் டிஆர்எஸ்-ன் பெரிய தலைவராகவும், கேசிஆரின் வலது கரமாகவும் கருதப்பட்ட பாஜக தலைவர் இ.ராஜேந்திரா தெரிவித்தார்.

சந்திப்பின் நேரம் "சிறப்பானதா"?

இந்த சந்திப்பின் நேரத்தையும் பார்ப்பது முக்கியம். 5 மாநிலங்களில் தேர்தல் நடந்துவரும் நிலையில் புதிய முன்னணி தொடங்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் கேசிஆர். இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் பாஜக மகத்தான வெற்றி பெற்றால், கே.சி.ஆரின் நடவடிக்கையின் வேகம் மீண்டும் குறையும். மறுபுறம், பா.ஜ.கவின் இடங்கள் சரிந்தால், இந்த முன்னணியின் உற்சாகம் அதிகரிக்கும்.

இத்துடன் குடியரசுத்தலைவர், குடியரசு துணைத்தலைவர் தேர்தலையும் பார்க்க வேண்டும். இவ்விரு பதவிகளுக்கும் இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால், பாஜகவுக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சி வேட்பாளரை களமிறக்க முடியும். அவரது வெற்றி வாய்ப்பும் அதிகரிக்கக்கூடும்.

'சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பு' என்ற பெயரில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தொடங்கிய இயக்கம் தேசிய அரசியலுக்கான அடித்தளமாகக் கவனிக்கப்பட்டது. இத்தகைய சூழலிலும், பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக தேசிய அளவில் கட்சிகளை ஒருங்கிணைப்பதில் இதற்கு முந்தைய முயற்சிகள் பெரிய வெற்றியைப் பெறாத நிலையிலும், கேசிஆரின் முயற்சி முக்கியத்துவம் பெறுகிறது.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: