நரேந்திர மோதியுடன் தேசிய அரசியலில் மோத நினைக்கும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்

கே. சந்திரசேகர் ராவ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கே. சந்திரசேகர் ராவ்
    • எழுதியவர், ஜி.எஸ். ராம் மோகன்
    • பதவி, ஆசிரியர், பிபிசி தெலுங்கு

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவின் படங்களுடன் செய்திகள் வெளியாவதை மும்பை மக்கள் சமீப நாட்களில் பார்க்க முடிந்தது.

கே சந்திரசேகர் ராவ் பற்றிய மராத்தி மொழி விளம்பரங்கள் மற்றும் அவரது புகைப்படங்கள் நாளிதழ்களில் வெளியாகியிருந்தன. மராத்தியர்கள் மட்டுமல்ல சந்திரசேகர ராவ் பிரதமர் நரேந்திர மோதியை தீவிரமாக விமர்சித்து வருவது தினமும் செய்திகளில் இடம் பிடிக்கிறது என்று பல இந்தியர்களும் எண்ணுகின்றனர். பிரதமருக்கு எதிரான அவரது விமர்சனம் வரும் நாட்களில் மேலும் தீவிரம் அடையலாம்.

தேசிய அரசியலில் கேசிஆர் ஏன் திடீரென இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்? மாநில அரசுகளின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவதாக வரும் குற்றச்சாட்டுகள், ஜிஎஸ்டி நிலுவை, சிவில் சர்வீஸ் அதிகாரிகள் நியமனம் உள்ளிட்டவற்றை சுற்றியே இந்த விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் அவை மட்டுமே பிரதமரை கேசிஆர் விமர்சிப்பதற்கு முக்கியமான காரணங்கள் அல்ல என்று கருதுவதற்கான சாத்தியமும் உண்டு.

கீழ்கண்ட ஐந்தும் சந்திரசேகரராவ் நரேந்திர மோதியை விமர்சிப்பதற்கான காரணங்களாக இருக்கலாம்.

1. மூன்றாவது இன்னிங்ஸ்

அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். தமக்கு மூன்றாவது இன்னிங்ஸ் வாய்ப்பு இருக்கும் என கே.சி.ஆர் கூட நினைத்திருக்க மாட்டார். '' நான் பிறந்த பொழுது முதலமைச்சர் ஆவேன் என்று என்னுடைய பெற்றோர் கணித்தார்களா என்ன? அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.'' தமது சமீபத்திய செய்திகளை சந்திப்புகளில் தெலங்கானா முதலமைச்சர் இதைத் தொடர்ந்து கூறி வருகிறார்.

கே. சந்திரசேகர் ராவ் என்.டி ராமராவின் தீவிர ரசிகர். தமது மகனுக்கும் ராமராவின் பெயரையே சூட்டினார். ராமராவின் தெலுங்குதேசம் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். சில காலம் அக்கட்சியிலேயே நீடித்தார். அரசியலில் இது அவருக்கு முதல் இன்னிங்ஸ்.

இரண்டாவது இன்னிங்சில் தமக்கென ஓர் அரசியல் கட்சியைத் தொடங்கினார். சுமார் 20 ஆண்டு காலம் அனைத்து தடைகளையும் கடந்தார். தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டு அதன் முதலமைச்சர் ஆனது மட்டுமல்லாமல் அவருக்கென அரசியல் எதிரிகள் கிட்டத்தட்ட இல்லாத நிலையிலேயே உள்ளார். இப்பொழுது மூன்றாவது இன்னிங்சில் அவரது இலக்கு டெல்லி.

2. நரேந்திர மோதி புதிய எதிரி

அரசியலில் எதிராளிகள் மட்டுமே இருப்பார்கள் எதிரிகள் இல்லை என்று சொல்லப்படுவது உண்டு. ஆனால் சந்திரசேகர் ராவுக்கு எப்போதுமே ஓர் எதிரி இருப்பார். பாரதிய ஜனதா கட்சியின் அரசியலை போலவே தெலங்கான ராஷ்ட்ர சமிதி கட்சியின் அரசியலிலும் மக்களை துருவமயமாக்கும் கூறுகள் இருக்கும்.

மோதி

பட மூலாதாரம், NOAH SEELAM/ CONTRIBUTOR

தமது எதிரிகளை தெலங்கானா மாநிலத்தின் எதிரியாக காட்டும் உத்தியை கேசிஆர் பின்பற்றி வருகிறார். ''ஆந்திர பிரதேச மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டபோது நாடாளுமன்றத்தில் சட்டநடவடிக்கைகள் முழுமையாக பின்பற்றப்படவில்லை, நாடாளுமன்றத்தின் மூடிய கதவுகளுக்கு பின்பு இருட்டில் தெலங்கானா தனி மாநில சட்டம் நிறைவேற்றப்பட்டது,'' உள்ளிட்ட நரேந்திர மோதியின் கூற்றுகள் அவர் தெலங்கானா மாநிலத்தின் எதிரி என கேசிஆர் சுட்டிக் காட்டுவதற்கு ஏதுவாக உள்ளன.

''2009ஆம் ஆண்டு ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அவருக்கு எதிராக இருந்தது. 2014ஆம் ஆண்டு ஆந்திர பிரதேச மாநிலத்தின் தலைவர்கள் அவருக்கு எதிராக இருந்தனர். 2019ல் சந்திரபாபுநாயுடு எதிரி. ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்காளர்களை உணர்வுபூர்வமாக திரட்ட அவருக்கு ஓர் உருவம் தேவைப்படுகிறது. தற்பொழுது மோதிதான் புதிய எதிரி,'' என்று மூத்த ஊடகவியலாளர் ஜின்கா நாகராஜு கூறுகிறார்.

3. பாரதிய ஜனதா கட்சியின் புதிய இலக்கு தெலங்கானா

மோதி அமித்ஷா

பட மூலாதாரம், Getty Images

பாரதிய ஜனதா கட்சி எதிர்க் கட்சி வரிசையில் இருந்தாலும் சமீப காலம் வரை அக்கட்சியுடனான உறவு கேசிஆர்-க்கு சுமூகமாகவே இருந்தது. பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய சட்டங்களுக்கு தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆதரவளித்து வந்தது.

தெலங்கானா பாரதிய ஜனதா கட்சி கிஷன் ரெட்டியின் கட்டுபாட்டில் இருந்த வரை அனைத்து விமர்சனங்களும் கட்டுக்குள் இருந்தன. ஆனால் இப்பொழுது நிலைமை மாறிவிட்டது. வடமாநிலங்களில் இதற்கு மேல் வளர்ச்சி அடைய அதிக வாய்ப்பு இல்லாத சூழலில் தென்மாநிலங்களில் தன்னுடைய இருப்பை விரிவாக்க பாரதிய ஜனதா கட்சி விரும்புகிறது.

தெலங்கானா அதில் ஓர் அங்கமாக இருக்கிறது. மேற்கு வங்கத்திற்கு பிறகு பாஜகவின் இலக்குதான் தெலங்கானா. பாரதிய ஜனதா கட்சியை தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்த இளம் தலைவர்கள் கேசிஆர் அரசின் மீதான விமர்சனங்களை தீவிரமாக முன்னெடுக்கிறார்கள்.

எதிர்பார்த்ததைவிட அதிகமாக ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் வாக்குகளை பெற்றது, சமீபத்தில் நடந்த இரண்டு சட்டமன்ற இடைத் தேர்தல்களில் வென்றது ஆகியவை பாஜக தொண்டர்களை உற்சாகப்படுத்தியது.

சாதி ரீதியான கணக்குகளும் தற்பொழுது மாறியுள்ளன. கடந்த காலங்களில் பாரதிய ஜனதா கட்சி வேலமா -ரெட்டி சாதியினரின் தலைமையின் கீழ் இருந்தது. தெலங்கானா ராஷ்டிர சமிதி உடனான போட்டியை போட்டியில் வலுவாக பாஜக பிற்படுத்தப்பட்ட சாதியினரை இலக்கு வைக்கிறது.

இது டிஆர்எஸ் கட்சிக்கு ஆபத்தாக முடிய வாய்ப்புள்ளது என்று ஓய்வுபெற்ற அரசியல் அறிவியல் பேராசிரியர் கே. ஸ்ரீனிவாசலு கூறுகிறார்.

தெலங்கானாவின் முக்கிய எதிர்க்கட்சி பாரதிய ஜனதா காங்கிரஸ் என்ற போட்டியும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நரேந்திர மோதி மீதான தீவிர விமர்சனங்கள் காரணமாக பாஜகதான் தங்களுடைய முக்கிய எதிராளி என்பதை கேசிஆர் தமது கட்சியின் தொண்டர்களுக்கு உணர்த்தியுள்ளார்.

கே. சந்திரசேகர் ராவ்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, கே. சந்திரசேகர் ராவ்

4. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

பாகிஸ்தான் மண்ணில் துல்லிய தாக்குதல் நடத்தியதற்கு ஆதாரம் இருக்கின்றதா என்று காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி இந்திய அரசை கேள்வி கேட்டதற்கு பாஜக ஆளும் அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வ சர்மா , அந்த மாநில சட்டமன்றத்தில் விரும்பத்தகாத வார்த்தைகளில் பதிலளித்தார்.

'' உங்கள் தந்தை என்று கூறப்படும் நபருக்குத்தான் நீங்கள் பிறந்தீர்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளதா?'' என்று ராகுல் காந்திக்கு அவர் கேள்வி எழுப்பினார்.

நரேந்திர மோதியை தாக்க கேசிஆர்-க்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்தது.''இத்தகைய அருவருப்பான மொழி எனக்கு கண்ணீரை வரவழைத்துவிட்டது. இப்படித்தான் நீங்கள் பேசுவீர்களா? இதுதான் உங்கள் பண்பாடா? நீங்கள் அவரை கட்சியிலிருந்து நீக்க மாட்டீர்களா,'' என கேசிஆர் பாஜகவுக்கு கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் கட்சி தெலங்கானாவில் தம்மை எதிர்த்து வரும் நிலையில் காங்கிரஸ் தலைவருக்கு ஆதரவாக இவர் கருத்து வெளியிட்டது காங்கிரசை தமக்கு ஓர் அச்சுறுத்தலாக அவர் கருதவில்லை என்று அவர் உணர்த்தியுள்ளார்.

தேர்தலுக்கு பின்பு அரசியல்ரீதியாக ஒன்றுபடுவதற்கான விதைகளை விதைத்து விட்டார்.

காங்கிரஸ் கட்சி இல்லாமல் தேசிய அளவில் 3வது அணி சாத்தியமில்லை என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். தேவைப்பட்டால் இனி வரும் நாட்களில் மாநில அரசியலில் கூட காங்கிரசுடன் இணைவதற்கான வாய்ப்புகளை கேசிஆர் திறந்தி வைத்துள்ளார் என நாகராஜு கூறுகிறார்.

காங்கிரசுடன் அரசியல் ரீதியாக உறவாடுவது என்பது தெலங்கானா ராஷ்டிர சமிதி புதிதல்ல ஒரு காலத்தில் காங்கிரசுடன் டிஆர்எஸ் கூட்டு சேர்ந்தது. காங்கிரசின் குலாம்நபி ஆசாத் உடன் பிரசாரத்தில் ஈடுபட்டது.

தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட பின் தமது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து விடுவேன் என்று கூட கேசிஆர் கூறியிருந்தார். தெலங்கானா உருவாக்கப்பட்ட பின்பு சோனியா காந்தியின் இல்லத்திற்கு சென்று அவர் நன்றியும் தெரிவித்தார்.

5. வேகம் அதிகரித்துள்ளது; இலக்கு மாறவில்லை

தேசிய ஊடகங்களில் கேசியர் பெரும் கவனம் அதிகரித்து வருகிறது. ஆனால் அவரது கவனம் தேசிய அரசியலில் அவர் காட்டும் ஆர்வத்தை பற்றியது மட்டுமல்ல. தெலங்கானாவில் இரண்டாம் முறையாக தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு 2019ஆம் ஆண்டு அவர் மூன்றாவது அணி ஒன்றை அமைக்க முற்பட்டார்.

தமக்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் நம்பினார். மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோரிடம் அவர் ஆலோசித்தார். கடந்த காலங்களில் அத்தகைய நம்பிக்கை மெய்யான முன்னாள் பிரதமர் தேவே கவுடாவையும் அவர் சந்தித்தார்.

மம்தா பேனர்ஜி மற்றும் க. சந்திரசேகர் ராவ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மமதா பானர்ஜி மற்றும் சந்திரசேகர் ராவ்

இயற்பியலில் ராமன் விளைவு இருப்பதுபோல இந்திய அரசியலில் தேவே கவுடா விளைவு என்ற ஒன்று உள்ளது. பெரிய அளவில் செல்வாக்கு இல்லாத நிலையிலும் திடீரென பிரதமராகி ஐக்கிய முன்னணி அரசுக்குத் தலைமை வகித்தவர் தேவே கவுடா. ஆனால் கேசிஆர்-க்கு சமீபத்தில் அப்படி எதுவும் நிகழவில்லை.

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில் கேசிஆர் மீண்டும் ஆயத்தம் ஆகியுள்ளார்.

மூன்றாவது அணிக்கு உருவம் கொடுக்கும் நோக்கில் பிராந்திய கட்சிகளின் தலைவர்களை அவர் சந்தித்து வருகிறார். மாநில அரசியல் நடவடிக்கைகளை தமது மகனிடம் ஒப்படைத்து விட்டு டெல்லி அரசியலுக்கு மாற அவர் சரியான காலத்துக்காக காத்திருக்கிறார்.

மாநிலத்தில் கேசிஆர் அளவுக்கு சிறந்த பேச்சாற்றல் மிகுந்த தலைவர்கள் இல்லை. தேசிய அளவிலும் அவர் பேச்சாற்றல் மிக்க தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். இந்தியை தாராளமாக பேசக்கூடிய அவரது ஆற்றல் அவருக்கு இன்னொரு சாதகமாக உள்ளது.

நாடாளுமன்ற தொகுதிகள் குறைவாக உள்ள தெலங்கானா மாநிலத்தில் இருந்து கவனம் பெற வேண்டுமானால் தாக்குதல் சந்திரசேகர் ராவின் தாக்குதல் மிகவும் தீவிரமானதாக இருக்க வேண்டும். அதற்கு அவர் தொடர்ந்து செய்திகளில் இடம் பிடிக்கவும் வேண்டும். தமது கடுமையான வார்த்தை பயன்பாடுகள் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்று தற்போது விவாதங்களிலும் இடம் பிடித்துள்ளார் சந்திரசேகர் ராவ். போட்டி தொடங்கி விட்டது.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: