உத்தரப் பிரதேச தேர்தல் - கோரக்பூர்: யோகி ஆதித்யநாத் ’வாழ்வா சாவா’ சோதனையில் வெற்றிபெறுவாரா ?- கள நிலவரம்

பிரயாக்ராஜில் தேர்தல் பிரசாரம் செய்யும் யோகி ஆதித்யநாத்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரயாக்ராஜில் தேர்தல் பிரசாரம் செய்யும் யோகி ஆதித்யநாத்.
    • எழுதியவர், கீர்த்தி துபே
    • பதவி, பிபிசி செய்தியாளர் கோரக்பூரில் இருந்து

கோரக்பூர் அரசியலில் கோரக்நாத் மடத்தின் அனுமதியின்றி ஒரு இலை கூட அசையாது என்று கூறப்படுகிறது. காரணம், 2002இல் நடந்த தேர்தல்.

2002ஆம் ஆண்டு தேர்தலில், கோரக்பூரில் பாஜகவை நேரடியாக எதிர்த்தார் யோகி ஆதித்யநாத். பாஜக ஷிவ்பிரதாப் சுக்லாவை தனது வேட்பாளராக நிறுத்தியது. யோகி ஆதித்யநாத்துக்கு அவரை பிடிக்காது. அதனால் ஷிவ்பிரதாப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்து சபாவிலிருந்து டாக்டர் ராதா மோகன்தாஸ் அகர்வாலை அவர் (யோகி ஆதித்யநாத்) கோரக்பூரில் வேட்பாளராக நிறுத்தினார்.

பாஜகவை எதிர்த்து இந்து மகாசபையின் வேட்பாளரை மடம் வெளிப்படையாக ஆதரித்தது இதுவே முதல் முறை. விளைவு, பாஜக வேட்பாளராக 4 முறை தேர்தலில் வெற்றி பெற்ற ஷிவ்பிரதாப் சுக்லா இந்த முறை தேர்தலில் தோல்வியடைந்தார்.

அதே சமயம் கோரக்பூர் அரசியலில் யோகி ஆதித்யநாத்துக்கும், கோரக்நாத் மடத்துக்கும் என்ன பலம் உள்ளது என்ற செய்தியை இந்த தேர்தல் வெற்றி பாஜக மேலிடத்துக்கு உணர்த்தியது.

20 ஆண்டுகளுக்குப் பிறகு, யோகி இப்போது மீண்டும் கோரக்பூர் நகர் தொகுதியில் இருந்து முதல்முறையாக சட்டப்பேரவைத்தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவருடன் ஒரு காலத்தில் துணை நின்றவர்கள், இப்போது அவருக்கு எதிராக நிற்கிறார்கள்.

கோரக்பூரில் பாஜகவின் வலுவான தலைவரான மறைந்த உபேந்திர தத் சுக்லாவின் மனைவி சுபாவதி சுக்லாவை சமாஜ்வாதி கட்சி இந்த தொகுதியில் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. யோகி முதலமைச்சரான பிறகு, 2018 இல் நடந்த மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் உபேந்திர சுக்லாவுக்கு பாஜக சீட் கொடுத்தது. ஆனால் அவர் சமாஜ்வாதி -நிஷாத் கட்சி கூட்டணியின் பிரவீன் நிஷாத்திடம் தோல்வி அடைந்தார்.

28 ஆண்டுகளில் முதல்முறையாக பாஜக, கோரக்பூர் மக்களவைத்தொகுதியில் தோல்வியை சந்தித்தது. அதாவது, பாஜகவின் ஒரு பிரிவினர் சுக்லாவை ஆதரிக்கவில்லை என்பதை இந்தத் தோல்வி காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் யூகம் கிளம்பியது.

இந்த நிலையில், அரசியலில் எந்த முன் அனுபவமும் இல்லாத சுக்லாவின் மனைவி, இப்போது இந்தத் தேர்தலில் யோகியை எதிர்த்து போட்டியிடுகிறார்.

யோகியுடன் இருந்தவர்கள் இன்று எதிரணியில்

கோரக்பூர் நகரின் உருது பஜார் அருகே உள்ள ஒரு குறுகிய பாதையில், சுபாவதி சுக்லாவின் வீட்டிற்கு அருகில், கழுத்தில் சிவப்பு பட்டைகள் அணிந்த தொண்டர்களை தூரத்தில் இருந்தே பார்க்கமுடிந்தது. நான் வீட்டிற்குள் நுழைந்ததும், மிகவும் மங்கலான வெளிச்சம் உள்ள அறையில் நான் அமர வைக்கப்பட்டேன். சிறிது நேரம் கழித்து சுபாவதி சுக்லா அந்த அறைக்கு வந்தார். அவருடன் நின்றுகொண்டிருந்த அவரது மருமகன், "அவர் இல்லத்தரசி என்பதால் ஊடகங்களிடம் அவருக்கு சரியாக பேசத்தெரியாது," என்று கூறினார்.

மிகவும் அமைதியான குணம் கொண்டவர் போலத்தெரிந்த சுபாவதி, என் முதல் கேள்விக்கே உணர்ச்சிவசப்பட்டு, கண்களில் கண்ணீர் மல்க பதில் சொன்னார். "என் கணவர் இறந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. ஆனால் யோகி அல்லது கட்சியின் பெரிய தலைவர்கள் யாருமே எங்கள் வீட்டுப்பக்கம் கூட வரவில்லை. நாங்கள் என்ன நிலையில் இருக்கிறோம் என்று யாருமே எங்களிடம் கேட்கக்கூட இல்லை. நாங்கள் அகிலேஷிடம், ​​​​அவர் மரியாதை கொடுத்தார். நான் அவருடைய அம்மாவைப் போல என்று சொன்னார். என் கணவரின் மரியாதைக்காக இந்த தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்," என்று அவர் கூறினார்.

சுபாவதியின் வார்த்தைகளில் இருந்து பாஜக மீதான அவரது விரக்தி தெளிவாகத் தெரிகிறது. ​​"42 ஆண்டுகளாக பாஜகவில் இருந்த என் கணவர் தலைவர்களுக்காக அனைத்தையும் செய்தார். அந்தக் கட்சியிடம் நான் சென்றபோது,' ​​​​இது இறந்தவர்களின் கட்சியல்ல' என்ற பதில் கிடைத்தது.

அகிலேஷ் வெற்றி பெற வேண்டும். 2018-ம் ஆண்டு இடைத்தேர்தலில் போட்டியிட என் கணவர் விரும்பவில்லை. ஆனால் அவரை கட்டாயப்படுத்தி தேர்தலில் நிற்கவைத்து, தோல்வியடைய வைத்தனர். இது யாருடைய தூண்டுதலின் பேரில் நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சுபாவதி சுக்லா (இடது)

பட மூலாதாரம், KIRTI DUBEY

படக்குறிப்பு, சுபாவதி சுக்லா (இடது)

பல ஆண்டுகளாக யோகி ஆதித்யநாத்துக்காக வாக்கு சேகரித்த சுபாவதி இன்று யோகிக்கு எதிராக நிற்கிறார்.

இவர் மட்டுமல்ல. கடந்த காலத்தில் பாஜக மற்றும் யோகியுடன் தொடர்புடைய ஒரு வேட்பாளரை காங்கிரஸ் கட்சியும் நிறுத்தியுள்ளது.

இம்முறை காங்கிரஸ் வேட்பாளராக சேத்னா பாண்டே போட்டியிடுகிறார். 2005ஆம் ஆண்டு கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க துணைத் தலைவராக இருந்த சேத்னா, ஆர்எஸ்எஸ்-ஐச் சேர்ந்த மாணவர் அமைப்பான ஏபிவிபியில் நீண்ட காலமாக தொடர்பு கொண்டிருந்தார்.

காங்கிரஸ் தனது வேட்பாளரை அறிவித்த உடனேயே, தற்போதைய மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் அவர் இருக்கும் படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட ஆரம்பித்தது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சேத்னா 2019 இல் காங்கிரஸில் சேர்ந்தார், ஆனால் அவர் 2005 முதல் ABVP உடன் இணைந்திருந்தார்.

மாநிலத்தில் காங்கிரஸின் நிலை மோசமாக இருக்கும் நேரத்தில் சேத்னா ஏன் பாஜகவை விட்டு வெளியேறி காங்கிரஸுக்கு சென்றார்?

"'மாணவர் அரசியலில்' பெண்கள் வராத அந்தக் காலக்கட்டத்தில் ஏபிவிபியில் இருந்து மாணவர் சங்கத் தேர்தலில் நான் போட்டியிட்டேன். பல ஆண்டுகளாக பாஜக, மற்றும் ஏபிவிபி சொன்னதை நான் செய்தேன். அந்த சித்தாந்தத்தை ஆதரித்தேன். ஆனால், அவர் (யோகி ஆதித்யநாத்) எவ்வளவு சக்தி வாய்ந்தவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர் தனது சொந்தக் கட்சி அரசியலில் மட்டுமல்ல, பிற கட்சிகளின் அரசியலிலும் செல்வாக்கு செலுத்தக்கூடியவர் என்று கருதப்படுகிறார். நான் பாஜகவின் சித்தாந்தத்துடன் தொடர்புடையவள். அதற்காக இரவும் பகலும் உழைத்தேன். ஆனால் கட்சி என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. நான் கட்சிக்காக என்னவெல்லாம் செய்தேன் என்று எல்லா மூத்த பாஜக தலைவர்களுக்கும் தெரியும். ஆனால் வழியை மறிப்பவர்கள் பலர் அங்கு உள்ளனர்," என்று சேத்னா பதில் அளித்தார்.

கோரக்பூர் சட்டசபை தேர்தல்

பட மூலாதாரம், KIRTI DUBEY

படக்குறிப்பு, கோரக்பூர் சட்டசபை தேர்தல்

நான் கட்சியின் கொள்கைக்காக அங்கு இருந்தேன், யோகியுடன் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் எப்போதும் யோகி அவர்களின் அறிக்கைகளுக்கு எதிராகவே இருந்திருக்கிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.

தேர்தலில் தான் நிறுத்தப்பட்டது குறித்துப்பேசிய சேத்னா,"நான் மிகவும் படித்த வேட்பாளர். நான் ஏற்கனவே பொதுமக்களுக்காக பணியாற்றி வருகிறேன், எனவே பொதுமக்கள் சேத்னாவை தேர்வு செய்வார்கள்."என்றார்.

கோரக்பூரின் பிராமணர் Vs தாக்கூர் காரணி

யோகிக்கு எதிராக நிற்கும் இரு வேட்பாளர்களும் பிராமணர்கள். கோரக்பூரில் பிராமணர்களுக்கும் தாக்கூர்களுக்கும் இடையிலான சண்டை பல தசாப்தங்கள் பழமையானது. இது இங்குள்ள அரசியலில் மிகப்பெரிய காரணியாகும்.

இந்த சண்டை, மடத்தின் தலைவர் திக்விஜய் நாத் காலத்தில் இருந்து தொடங்கியது. அப்போது திக்விஜய்நாத்துக்கும், பிராமணர்களின் தலைவரான சுரதிநாராயண் திரிபாதிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இங்கிருந்து இந்த சண்டை தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. இதற்குப் பிறகு, வலிமையான பிராமணர் தலைவர் ஹரிசங்கர் திவாரி, பிராமணர்- தாக்கூர் சண்டையில் பிராமணர்களின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மேலும் வீரேந்திர பிரதாப் ஷாஹி தாக்கூர்களின் மிகப்பெரிய தலைவரானார்.

1998 ஆம் ஆண்டில், கேங்ஸ்டர் ஸ்ரீபிரகாஷ் சுக்லா, வீரேந்திர பிரதாப் ஷாஹியைக் கொன்றார். அதன் பிறகு தாக்கூர்களின் தலைமை பொறுப்பில் ஏற்பட்ட வெற்றிடத்தை யோகி ஆதித்யநாத் நிரப்பினார். இங்கிருந்து தாக்கூர்களின் தலைமைப்பொறுப்பு யோகி ஆதித்யநாத்தின் கைகளுக்கு வந்தது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மடம் மற்றும் ஹாதாவுக்கு (ஹரிசங்கர் திவாரியின் இல்லம் கோரக்பூரில் ஹாதா என அழைக்கப்படுகிறது) இடையே ஆதிக்கத்திற்கான சண்டை தீவிரமடைந்தது. இந்த சண்டை நீண்ட காலம் நீடித்தது. இறுதியாக 90 களில், யோகி ஆதித்யநாத் மடத்தின் பலத்தை அதிகரிக்கச் செய்தார். மேலும் ஹாதாவின் ஆதிக்கம் குறைந்து கொண்டே சென்றது.

உத்தரபிரதேச தேர்தல்

பட மூலாதாரம், KIRTI DUBEY

படக்குறிப்பு, உத்தரபிரதேச தேர்தல்

பல தசாப்தங்களாக கோரக்பூரின் அரசியலை உன்னிப்பாக கவனித்து வரும் பத்திரிக்கையாளர் மனோஜ் சிங்.

"கோரக்பூர் அரசியலில், தாக்கூர்- பிராமணர் ஆதிக்க சண்டையின் நீண்ட வரலாறு உண்டு. கோரக்பூர் பல்கலைக்கழகம் கட்டப்படும் போது இந்தப் போராட்டம் தொடங்கியது. அந்த நேரத்தில் மடத்தின் தலைவரான திக்விஜய் நாத், பல்கலைக்கழகத்திற்கு நிலத்தை தானமாக வழங்கினார். கோரக்பூர் மீது அவர் ஆதிக்கம் செலுத்த விரும்பினார். மறுபுறம் பிராமண ஆதிக்கத்தை விரும்பும் ஒரு பிரிவினரும் இருந்தனர். பின்னர் இந்த ஆதிக்கப் போர், கும்பல் போராக மாறியது. இந்த அரசியல் மோதல் இன்றும் தொடர்கிறது. இன்றும் பிராமணர்களில் பெரும் பகுதியினர் யோகியை, தாக்கூர்களின் தலைவர் என்று நம்புகிறார்கள், "என்று மனோஜ் சிங் கூறினார்.

கோரக்பூர் தொகுதி யோகி ஆதித்யநாத்துக்கு பாதுகாப்பான தொகுதி. இது அவர் போட்டியிடும் முதல் சட்டப்பேரவைதேர்தல் என்றாலும், 1998 முதல் 2014 வரை கோரக்பூரில் இருந்து 5 முறை மக்களவை உறுப்பினராக அவர் இருந்துள்ளார். 2002 ஆம் ஆண்டு ஒரு முழக்கம் முளைத்தது. அது இன்று வரை கோரக்பூரின் தெருக்களில் எதிரொலிக்கிறது. "நீங்கள் கோரக்பூரில் இருக்க நினைத்தால், யோகி-யோகி என்று சொல்ல வேண்டும்" என்பதுதான் அது.

​"கோரக்பூர் நகர் தொகுதியில் பாஜகவைத் தோற்கடிப்பது கடினம். குறிப்பாக 2012-ம் ஆண்டு தொகுதி மறுவரையறை நடந்தபோது, ​​கோரக்பூர் நகரத் தொகுதியின் சாதி சமன்பாடு மாறியது. இத்தொகுதியில் உயர்சாதியினரின் எண்ணிக்கை அதிகமானது. இவர்கள்தான் பாஜகவின் முக்கிய வாக்காளர்கள். இதனால் அவருக்கு எப்போதும் நன்மையே ஏற்படும். 2012-ல் இருந்து பாஜகவின் வாக்கு சதவிகிதம் இன்னும் அதிகமாகியிருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். இந்தத் தொகுதி அவருக்கு எளிதாக இருப்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் அல்லது பகுஜன் சமாஜ் கட்சி போன்ற எந்தக்கட்சிகளுமே இங்கு பெரிய தலைவரை நிறுவ முயலவில்லை. இந்தக் கட்சிகள் ஒவ்வொரு முறையும் புதிய வேட்பாளரை நிறுத்துவதால், அவர்களின் தலைவர்கள் யாருமே உருவாகவில்லை. ஆனால் யோகி இங்குள்ள மக்களிடையே மிகவும் பிரபலமானவர்," என்று மனோஜ் சிங் குறிப்பிட்டார்.

கோரக்பூர் நகர் தொகுதியில் மிக அதிக எண்ணிக்கையில் காயஸ்த் சாதியினர் உள்ளனர், இவர்கள் பாஜக.வின் வாக்கு வங்கியாக கருதப்படுகின்றனர் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த தொகுதியில் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் காயஸ்தர்கள் 95 ஆயிரம், பிராமணர்கள் 55 ஆயிரம், முஸ்லிம்கள் 50 ஆயிரம், க்ஷத்திரியர்கள் 25 ஆயிரம், வைசியர்கள் 45 ஆயிரம், நிஷாத் 25 ஆயிரம், யாதவர்கள் 25 ஆயிரம், தலித்கள் 20 ஆயிரம் என ஒரு மதிப்பீடு கூறுகிறது.

சந்திரசேகரின் சவால்

கடந்த பல ஆண்டுகளாக, கோரக்பூர் அரசியலில், தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கும் எந்த வேட்பாளரும் வர முடியவில்லை. ஆனால் இந்தத் தேர்தலில் யோகியுடன் சேர்ந்து அதிகம் விவாதிக்கப்பட்டவர் பீம் ஆர்மியின் சந்திரசேகர் ஆசாத்.

சந்திரசேகர் தனது அரசியல் வாழ்க்கையின் முதல் தேர்தலில் போட்டியிடுகிறார். மேலும் அவரது முதல் போட்டியே முதலமைச்சருக்கு எதிராக உள்ளது.

ஆனால் கோரக்பூரின் தெருக்களில் சந்திரசேகரும் இங்கு தேர்தல் களத்தில் இருக்கிறார் என்பதன் அறிகுறிகூட இல்லை. தெருக்களில் உள்ள விளம்பரப்பலகைகளிலோ, உள்ளூர் செய்தித்தாள்களின் பக்கங்களிலோ, எந்த மூலை முடுக்கிலும் அவரது போட்டி பற்றி யாருமே பேசுவதில்லை.

சந்திரசேகர்

பட மூலாதாரம், KIRTI DUBEY

படக்குறிப்பு, சந்திரசேகர்

இந்தக் கேள்வியை சந்திரசேகரிடம் கேட்டபோது, ​​"நீங்கள் என்னை எங்கு தேடுகிறீர்களோ, அது பணம் படைத்தவர்களின் இடம். நான் பணம் கொடுத்தால், செய்தித்தாள் என்னைப்பற்றி அச்சிடும். விளம்பர பலகைகள் வைக்க விரும்பினேன், ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. போஸ்டர்கள் ஒட்டினால் அவை கிழிக்கப்படுகிறது. ஆனால், நான் மக்களை சந்திக்கிறேன். முதல்வர் ஆட்சியால் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், மாற்றம் கொண்டு வருவோம் எனவும் மக்கள் கூறி வருகின்றனர்,"என்று பதிலளித்தார்.

யோகிக்கு சவால் விடுத்துள்ளது பற்றிய கேள்விக்கு பதிலளித்த சந்திரசேகர் ,"எனக்கு எளிதான சண்டை பிடிக்காது. யோகி அயோத்தி அல்லது மதுராவில் போட்டியிட்டால் நானும் அங்கிருந்து போட்டியிடுவேன் என்று சொன்னேன். ஆனால் அவர் திரும்பி கோரக்பூருக்கே வந்துவிட்டார். யோகி ஐந்து ஆண்டுகள் மக்களுக்காக பணியாற்றியிருப்பது உண்மையானால் தனக்கென பாதுகாப்பான தொகுதியை ஏன் தேர்வு செய்யவேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார்.

யோகியின் 'வாழ்வா சாவா' சோதனை

கோரக்பூர் மாவட்டத்தில், கேம்பியர்கஞ்ச், பிப்ராயிச், கோரக்பூர் நகர்புறம், கோரக்பூர் ஊரகப்பகுதி, சஹ்ஜன்வா, கஜ்னி, சௌரி சௌரா, பான்ஸ்காவ், சில்லூபார் ஆகிய ஒன்பது சட்டப்பேரவைத்தொகுதிகள் உள்ளன .

கேம்பியர்கஞ்ச் சட்டப்பேரவைத் தொகுதியில் 40% நிஷாத் வாக்காளர்கள் உள்ளனர் என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. யாதவர்கள் மற்றும் குர்மி வாக்காளர்களும் இங்கு முக்கிய பங்கு வகிக்கின்றனர். பிப்ராயிச் தொகுதியில், நிஷாத் சாதியைச் சேர்ந்த 90 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர் மற்றும் ஓபிசி வாக்காளர்களின் வாக்குகளும், முடிவை நிர்ணயிக்கக்கூடியவை.

கோரக்நாத் கோவில்

பட மூலாதாரம், KIRTI DUBEY

படக்குறிப்பு, கோரக்நாத் கோவில்

கோரக்பூர் ஊரக சட்டப்பேரவைத் தொகுதியில் நிஷாத் மற்றும் தலித் வாக்குகள் மீது அதிக கவனம் செலுத்தப்படுகிறது. கஜ்னி தொகுதியில் தலித் வாக்குகள் முடிவை நிர்ணயிக்கக்கூடியவை. பான்ஸ்காவ், பிராமணர்களின் ஆதிக்கத் தொகுதியாகக் கருதப்படுகிறது.

இதனுடன், சில்லுபார் தொகுதியில் சாதி பெயரால் அல்லாமல், ஹரிசங்கர் திவாரி பெயரில் ஓட்டுக்கள் போடப்படுகின்றன.

அதாவது, கோரக்பூர் நகர் தொகுதியைத் தவிர, கோரக்பூரின் மற்ற இடங்களில் உயர் சாதியினர் அதிக எண்ணிக்கையில் இல்லை.

2017 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த ஒன்பது தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது.

கோரக்பூரின் அரசியலை நன்கு புரிந்து கொண்டவர்கள், யோகியின் 'வாழ்வா சாவா' சோதனை, கோரக்பூர் நகர் தொகுதியில் மட்டுமல்லாது மாவட்டத்தின் மீதமுள்ள எட்டு தொகுதிகளிலும் நடைபெறும் என்று நம்புகிறார்கள்.

ஹரிசங்கர் திவாரி

பட மூலாதாரம், KIRTI DUBEY

படக்குறிப்பு, ஹரிசங்கர் திவாரி

இந்தத்தேர்தலில் யோகியின் முன் உள்ள பெரிய சவாலை குறிப்பிட்ட மனோஜ் சிங், "கோரக்பூர் நகர தொகுதியை வெல்வது யோகிக்கு கடினம் அல்ல. ஆனால் இந்த வெற்றி எவ்வளவு பெரியது என்பதைப் பார்க்க வேண்டும். மேலும் முக்கியமாக, சுமார் ஆறு இடங்களில் அவர் கடுமையான சவாலை எதிர்கொள்கிறார் .யோகி கோரக்பூரில் மீதமுள்ள இடங்களை வெல்லவில்லை என்றால், அவரது தொகுதியில் வெற்றி பெற்றாலும்கூட அது தோல்வியாகவே கருதப்படும். கோரக்பூர் அவருடைய மாவட்டம். முதலமைச்சராக இருந்தாலும்கூட கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு ஒருமுறை அவர் இங்கு வருவார். எனவே இந்த மாவட்டத்தில் அவரால் பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை என்றால், அது அவரது பெருமைக்கு ஏற்றதாக இருக்காது,"என்று குறிப்பிட்டார்.

உத்தரபிரதேசத்தின் இந்த விஐபி மாவட்டத்தில், யோகி தனது 'வாழ்வா சாவா' சோதனையில் வெற்றிபெறுவாரா என்பது மார்ச் 3 ஆம் தேதி பொதுமக்களால் முடிவு செய்யப்பட்டு மார்ச் 10 ஆம் அனைவருக்கும் தெரியவரும்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: