உத்தரப் பிரதேச தேர்தல்: யோகி ஆதித்யநாத் அரசு விவசாயிகளுக்குச் செய்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதா?

உத்தரப் பிரதேசம் தற்போது நாட்டிலேயே கரும்பு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உத்தரப் பிரதேசம் தற்போது நாட்டிலேயே கரும்பு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது
    • எழுதியவர், ஸ்ருதி மேனன் மற்றும் ஷதாப் நஸ்மி
    • பதவி, பிபிசி ரியாலிடி செக்

கடந்த 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு விவசாயத் துறையில் உத்தரப் பிரதேசம் பல்வேறு அளவுகோல்களில் சிறப்பாகச் செயல்பட்டதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார்.

சமீபத்தில் தான் அந்த மாநில விவசாயிகள் தங்கள் விவசாயப் பிரச்னைகளுக்காக ஓராண்டுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேச அரசு தெரிவித்த சில கூற்றுகளைச் சரி பார்த்தோம்.

கூற்று: "2014-ஆம் ஆண்டுக்கு முன்பு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டதை நாம் அனைவரும் அறிவோம். லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள். ஆனால், 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு, விவசாயிகளுக்கு ஆதரவான கொள்கைகளை அமல்படுத்தியதன் பலன்களை நீங்கள் பார்க்கலாம்."

உண்மைச் சரிபார்ப்பு: உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்த விவசாயிகள் நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் இதைக் கூறினார்.

2014-ஆம் ஆண்டிலிருந்து விவசாயிகள் தற்கொலைகள் நாடு முழுக்கவும் சரி மாநிலத்திலும் சரி கணிசமாகக் குறைந்துள்ளன. ஆனால், அந்த ஆண்டு தரவு சேகரிப்பு முறையிலும் மாற்றம் ஏற்பட்டது.

அவர் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளைக் குறிப்பிடுகிறாரா அல்லது நாடு முழுவதுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பாரதிய ஜனதா கட்சி 2014-ல் மத்தியிலும் 2017-ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேச மாநிலத்திலும் பதவியேற்றது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அதிகாரப்பூர்வ தரவுகள், 2014-ம் ஆண்டு முதல் தேசிய அளவிலும் மாநில அளவிலும் விவசாயத் துறையுடன் தொடர்புடைய தற்கொலைகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் காட்டுகிறது.

கடந்த மாதம் நடத்தப்பட்ட பேரணியில், மாநிலத்தில் நடந்த விவசாயிகள் தற்கொலைக்கு முந்தைய அரசுகளே காரணம் என்று ஆதித்யநாத் கூறியிருந்தார்.

உத்தரப் பிரதேசத்தில் விவசாயம் சார்ந்த தற்கொலைகள் 2012 மற்றும் 2013-ல் 745 ஆகவும் 750 ஆகவும் இருந்தது. 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அதிகமாவதற்கு முன்பாக, 100-க்கும் கீழே சரிந்து 2017-இல் 110 ஆகவும் 2019-ல் 108 ஆகவும் இருந்தது.

கடன் சுமை, குடும்பப் பிரச்னைகள் மற்றும் பயிர் நஷ்டம் ஆகியவை விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்கான முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவு சேகரிப்பு செயல்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்தால், 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான விவசாய தற்கொலைகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளை விட மிகக் குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள், விவசாயம் தொடர்பான தற்கொலைகள் என இரண்டு தனித்தனி பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தத் தொடங்கியது.

மேலும், நில உரிமை இல்லாத விவசாயிகளும் இனி தரவுத்தளத்தில் சேர்க்கப்பட மாட்டார்கள். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை, 'விவசாயிகளை' வயல்களில் வேலை செய்பவர்கள் மற்றும் விவசாயத்திற்கு தொழிலாளர்களை பணியமர்த்துபவர்கள் என வரையறுக்கிறது. ஆனால், இதில் விவசாயக் கூலிகள் அல்லது சொந்தமாக நிலம் இல்லாதவர்கள் இல்லை.

2013-ஆம் ஆண்டில், மறு வகைப்படுத்தலுக்கு ஓராண்டு முன்பு, "விவசாயிகள்" என்று வரையறுக்கப்பட்ட 11,774 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.

2014-ஆம் ஆண்டு மறு வகைப்படுத்தலுக்குப் பிறகு, விவசாயத்தில் ஈடுபட்டிருந்த 12,360 பேர் தற்கொலை செய்துகொண்டார்கள். அவர்களில் 5,650 பேர் "விவசாயிகள்" என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கூற்று: "பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சி ஆட்சி புரிந்த பத்து ஆண்டுகளில் சர்க்கரை உற்பத்தி 6.4 மில்லியன் மெட்ரிக் டன். ஆனால், பா.ஜ.க ஆட்சியின்போது ஓராண்டு சர்க்கரை உற்பத்தி 11.6 மில்லியன் மெட்ரிக் டன்."

உண்மைச் சரிபார்ப்பு: கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது அரசின் சாதனைகளைப் பட்டியலிடும்போது யோகி ஆதித்யநாத் செய்தியாளர் அறிக்கையில் இவ்வாறு கூறினார்.

சர்க்கரை உற்பத்தி உயர்ந்துள்ளது உண்மைதான். ஆனால், 2017-ஆம் ஆண்டுக்கு முன் படிப்படியாக உயர்ந்து வந்தது.

இந்திய சர்க்கரை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் உத்தரப் பிரதேச அரசின் தரவுகளின்படி, பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் ஆட்சியிலிருந்த ஆண்டுகளில் (2007-08 மற்றும் 2016-17 ஆண்டுகளுக்கு இடையில்) சராசரி ஆண்டு சர்க்கரை உற்பத்தி சுமார் 6 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்தது.

2017 முதல் ஆண்டு உற்பத்தி 10 மில்லியனுக்கும் அதிகமாகவே உள்ளது. இருப்பினும் இது ஆண்டுக்கு ஆண்டு ஏற்ற இறக்கமாக இருந்தாலும், 2021-22 ஆண்டுக்கான இறுதி எண்ணிக்கை இன்னும் அறியப்படவில்லை.

உத்தரப் பிரதேசம் தற்போது நாட்டிலேயே சர்க்கரை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.

கூற்று: "2017-ஆம் ஆண்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, எங்களுடைய முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், 8.6 மில்லியன் விவசாயிகளின் 36 ஆயிரம் கோடி ரூபாய் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதை வெற்றிகரமாகச் செய்த முதல் மாநிலம் உத்தரப் பிரதேசம்."

உண்மைச் சரிபார்ப்பு: மாநில தலைநகர் லக்னோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஆனால், அவை 8.66 மில்லியன் விவசாயிகள் என்ற இலக்கை எட்டவில்லை. மேலும் கடன் தள்ளுபடியை அறிவித்த முதல் மாநிலம் உத்தரப் பிரதேசம் இல்லை.

2017-ஆம் ஆண்டில் நடந்த அதன் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், சுமார் 8.6 மில்லியன் விவசாயிகளின் 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

செப்டம்பர் 2020 நிலவரப்படி, விவசாயம் மற்றும் விவசாயி நலனுக்கான அமைச்சகத்தினுடைய தரவுகளின்படி, 4.4 மில்லியன் விவசாயிகளுக்கு 25 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

மார்ச் 2021 நிலவரப்படி நாட்டிலேயே அதிக விவசாயக் கடன்கள் நிலுவையில் உள்ள மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் உள்ளது.

தமிழ்நாடு மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து அதிக கடன் நிலுவையில் உள்ளன.

இந்தியாவின் புள்ளியியல் அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2012-13 ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேசத்தில் 79,000 விவசாயக் குடும்பங்கள் கடனில் இருந்தன.

2018-19 ஆம் ஆண்டில், மாநிலத்தில் பாஜக பதவியேற்ற ஓராண்டுக்குப் பிறகு, எண்ணிக்கை 74,000 ஆக ஓரளவுக்குக் குறைந்தது.

உத்தரப் பிரதேசம் தான் முதன்முதலில் விவசாயக் கடன்களை வெற்றிகரமாகத் தள்ளுபடி செய்தது என்ற கூற்று தவறானது.

ஆந்திரா, தெலங்கானா, மற்றும் தமிழ்நாடு போன்ற தென்னிந்திய மாநிலங்கள் விவசாயக் கடன் தள்ளுபடி திட்டங்களை 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் செயல்படுத்தின.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: