யுக்ரேனில் இருந்து தப்பிக்க 28 மணி நேரம் காரில் பயணித்த இந்திய மாணவிகள்

யுக்ரேன் நெருக்கடி
படக்குறிப்பு, யுக்ரேனிலிருந்து இந்தியா வந்த மாணவ, மாணவிகள்: கோப்புப்படம்

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (மார்ச் 1 ) வெளியான முக்கிய செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.

யுக்ரேனில் வழிநெடுகிலும் குண்டுமழை பொழிந்ததாக, ருமேனியா எல்லையில் தங்கியுள்ள தெரிவித்ததாக, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்தவர் சுனேகா. இவர் யுக்ரேன் நாட்டில் படித்து வருகிறார். இந்த நிலையில், யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுக்க ஆரம்பித்ததும் சுனேகா, அவரது தோழி ரச்சனா ஆகியோர் ஒரு தோழியின் வீட்டில் தங்கி உள்ளனர்.

இந்த நிலையில், அங்கு அவர்களுக்கு உணவு, குடிநீர் எதுவும் கிடைக்காத காரணத்தால் சுனேகாவும், ரச்சனாவும் ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட்டுக்கு செல்ல முடிவு செய்தனர். இதையடுத்து, ஒரு காரை வாடகைக்கு அமர்த்திய சுனேகாவும், ரச்சனாவும் அந்த காரில் யுக்ரேன் தலைநகர் கீயவ்வில் இருந்து புகாரெஸ்ட்டுக்கு புறப்பட்டனர். அவர்கள் தற்போது ருமேனியா எல்லையில் உள்ள ஸ்லோவக்கியன் என்ற இடத்தில் ஓட்டலில் தங்கி உள்ளனர்.

இது குறித்து, சுனேகா வெளியிட்டு உள்ள வீடியோவில், "யுக்ரேனில் தற்போது நிலைமை மோசமாக உள்ளது. இதனால் அங்கிருந்து தப்பித்து புகாரெஸ்ட் நோக்கி காரில் சென்று கொண்டு இருக்கிறோம். இதுவரை 28 மணி நேரம் தொடர்ந்து பயணித்து உள்ளோம். நாங்கள் வரும் வழிநெடுகிலும் எல்லாம் குண்டு மழை பொழிந்தது. உயிரை கையில் பிடித்து கொண்டு இங்கு வந்து உள்ளோம். விரைவில் ருமேனியாவுக்கு சென்று விடுவோம். அங்கு உள்ள இந்திய தூதரகம் உதவியுடன் விரைவில் இந்தியா திரும்பி விடுவோம் என்று நம்பிக்கை உள்ளது" என கூறியுள்ளார் என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடஒதுக்கீடு முறையை முடிவுக்குக் கொண்டுவர பாஜக சதி: அகிலேஷ்

அகிலேஷ் யாதவ்

பட மூலாதாரம், Reuters

இடஒதுக்கீடு முறையை முடிவுக்குக் கொண்டு வர பாஜக சதி செய்கிறது எனவும், அதனைக் கருத்தில்கொண்டுதான் அரசு அமைப்புகளை தனியாருக்கு விற்று வருகிறது என்றும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியதாக, 'தினமணி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமையன்று 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. வரும் 3ஆம் தேதி 6ஆம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், 5 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மார்ச் 7ஆம் தேதி நடைபெறும் இறுதிகட்ட தேர்தலில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய ஆஸம்கருக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

அதனத் தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதுபோல, ஜலால்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனது கட்சி வேட்பாளர்கள ஆதரித்து பரப்புரை செய்த அகிலேஷ் யாதவ் பேசியதாவது:

"இடஒதுக்கீடு முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சதியை பாஜக செய்து வருகிறது. அதனைக் கருத்தில் கொண்டுதான் அரசு அமைப்புகளை தனியாருக்கு விற்று வருகிறது.

அந்த வகையில், இதுவரை நடந்து முடிந்துள்ள 5 கட்ட வாக்குப்பதிவு நிலவரத்தின்படி, மக்கள் பாஜகவை புறக்கணித்திருப்பதே தெரியவந்துள்ளது. அடுத்து நடைபெற இருக்கும் 6ஆம் கட்ட வாக்குப்பதிவில் பாஜக முழுமையாக புறக்கணிக்கப்பட்டுவிடும்.

அம்பேத்கர்நகர் மாவட்டம் மற்றும் அதனச் சுற்றியுள்ள அனைத்துத் தொகுதிகளிலும் சமாஜ்வாதி கட்சிதான் வெற்றிபெறும்" என அவர் பேசியதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் சுற்றுலாப் பயணிகளின் ஆடை குறித்து புதுச்சேரி போலீசார் பேச்சு: வைரலாகும் வீடியோ

புதுச்சேரி
படக்குறிப்பு, கோப்புப்படம்

பெண் சுற்றுலாப் பயணிகளிடம் புதுச்சேரி போலீசாரின் உடை பற்றிய பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என, 'இந்து தமிழ் திசை' இணையத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

புதுச்சேரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். அவர்கள் புதுச்சேரியின் தட்பவெப்ப நிலைக்கு தகுந்தபடி டி-ஷர்ட், அரைக்கால் சட்டை, ஜீன்ஸ் போன்றவற்றை அணிந்திருப்பர்.

இந்நிலையில், சமீபத்தில் அரவிந்தர் ஆசிரமத்துக்கு அருகில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண் சுற்றுலாப் பயணிகளை நிறுத்தி, அவர்களிடம் ஆடை கட்டுப்பாடு குறித்து போலீசார் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், இந்த மாதிரி உடைகளை அணிந்து வரக்கூடாது என்று கூறும் போலீசாரிடம், "எங்கள் உடை குறித்து உங்களிடம் புகாரளித்தது யார்?" எனக் கேட்கின்றனர் அப்பெண்கள். அதற்கு சரியாக பதிலளிக்க முடியாமல் அந்த போலீசார் திணறுவபோல் முடிவடைகிறது அந்த வீடியோ.

இதுதொடர்பாக அந்த வீடியோவில் இருக்கும் பெரியகடை காவலரிடம் கேட்டபோது, "ரோந்துப் பணியின்போது ஆசிரமத்தைச்சேர்ந்த ஒருவர், பள்ளி இருக்குமிடத்தில் அரைகுறையாக ஆடை அணிந்து வருகிறார்கள். அவர்களை கண்டிக்க வேண்டுமெனக் கூறினார். அதனால் அப்பெண்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தோம்" என கூறியதாக, அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் தலித் செயற்பாட்டாளரை சிறுநீரை குடிக்க வைத்ததாக புகார்

தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

மத்திய பிரதேச மாநிலம், குவாலியர் மாவட்டத்தின் பாரி கிராமத்தில் பஞ்சாயத்து செலவுகள் குறித்த செலவுகளை ஆர்டிஐ தகவல் மூலம் கேட்ட தலித் செயற்பாட்டாளரை, 7 பேர் அடங்கிய கும்பல் தாக்கி, அவரை ஷூவில் நிரப்பப்பட்ட சிறுநீரை குடிக்க வைத்ததாக புகார் எழுந்துள்ளதாக, 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம், பிப். 23ஆம் தேதி நடந்ததாகவும், இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குவாலியர் எஸ்.பி அமித் சங்கி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட நபர் சஷிகாந்த் ஜாதவ் காயங்களுடன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தன்னுடைய புகாரில், ஆஷா கௌரவ், சஞ்சய் கௌரவ், தாமு, புரா, கௌதம், விவேக் சர்மா மற்றும் சர்னம் சிங் ஆகிய 7 பேர் மீது அவர் குற்றம்சாட்டியிருந்தார். அவருடைய ஆர்டிஐ கேள்வியால் அந்த கிராமத்தின் சார்பாஞ்ச் கணவர் உள்ளிட்டோர் கோபமடைந்து, அவரை பிப். 23ஆம் தேதி தங்கள் கிராமத்திற்கு வரவழைத்ததாகவும் அப்புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு வைத்து அவரை தாக்கி, சிறுநீரை குடிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

புகார் அளித்தவருக்கு எதிராகவும் 9 வழக்குகள் உள்ளதாக, அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: