யுக்ரேன் தாக்குதல்: குடும்பங்கள் அழைத்தும் யுக்ரேனை விட்டு வராத இந்திய மாணவர்கள். காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரசாந்த் முத்துராமன்
- பதவி, பிபிசி தமிழ்
யுக்ரேனை விட்டு வெளியில் வரமுடியாத மாணாக்கர்கள் பலர், எப்படியாவது எங்களை மீட்டு விடுங்கள் என்ற கோரிக்கையுடன் யுக்ரேனில் உள்ள பதுங்கிடங்களில் பாதுகாப்புக்காக தங்கியுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக, இந்தியாவுக்கு வர விரும்பவில்லை என்றும் இரு மாணாக்கர்கள் தெரிவித்துள்ளனர். ஏன்?
யுக்ரேனில் ரஷ்ய படையெடுப்பால் தொடர்ந்து 5 நாட்களாக தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு (யுக்ரேனில்) சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வரும் பணி இந்திய அரசின் சார்பில் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது. 28.02.2022 மாலை 5மணி நிலவரப்படி, இதுவரை 43 மாணவர்களை விமானம் மூலம் இந்தியா அழைத்து வந்துள்ளது இந்திய அரசு.
யுக்ரேனில் வான்வெளி மூடப்பட்டுள்ளதால், யுக்ரேனின் அண்டை நாடுகளான போலந்து, ஹங்கேரி ஆகிய எல்லை நாடுகளிலிருந்து விமானம் மூலம் மாணாக்கர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். இந்தச் சூழ்நிலையில்தான் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக, இந்தியாவுக்கு வர விரும்பவில்லை என்றும் இரு மாணாக்கர்கள் தெரிவித்துள்ளனர். ஏன்?
மனிதம் வென்றது - நேஹா
ஹரியானாவைச் சேர்ந்த மாணவி நேஹா, யுக்ரேனிய மருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு மருத்துவம் படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் இடமில்லாததால் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி வந்துள்ளார்.
இந்த நிலையில், ரஷ்ய படையெடுப்பு தொடங்கி யுக்ரேனில் தாக்குதல் நடைபெற்ற நிலையில், மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறினர். எல்லையை அடைய முடியாத மக்கள் பலரும் பாதுகாப்புக்காக பதுங்கிடங்களில் தங்கவைக்கப்பட்டனர். இதற்கிடையில், 18-60 வயதுக்குட்பட்ட ஆண்கள் நாட்டை வெளியேறத் தடை என்று யுக்ரேனிய அரசு அறிவித்தது. மேலும், ஆண்கள் தன்னார்வமாக வந்து ராணுவத்தில் இணையவும் கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதன் விளைவாக, நேஹா தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரும் ராணுவத்தில் இணையச் சென்றுவிட்டார்.
இப்போது பதுங்கிடத்தில் அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் சேர்ந்து நேஹா தங்கியிருக்கிறார். தன் மகள் இப்படி இக்கட்டில் இருப்பதால், இந்தியாவுக்கு அவரை அழைத்துவர நேஹாவின் தாய் தன்னாலான முயற்சிகளைச் செய்த நிலையில், 'இப்படி ஒரு சூழலில் இந்தக் குழந்தைகளைத் தனியே விட்டுவிட்டு நான் இந்தியா வர விரும்பவில்லை' என்று தெரிவித்துள்ளார் நேஹா.
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.Facebook பதிவின் முடிவு, 1
இந்தச் செய்தியை முதன்முதலில் பொதுவெளிக்கு அறிவித்தவரும் நேஹாவின் தாயாரின் நெருங்கிய நண்பருமான சவிதா ஜாகரிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். அவர் பேசியதாவது, " ஹரியானாவின் சார்க்கி தாத்ரி பகுதியில் வசித்து வரும் நேஹாவின் தாயார் ஒரு ஆசிரியை. கணவனை இழந்த அவர், தற்போது ஏற்பட்டிருக்கும் சூழலால் அவரது மகளின் கல்வி குறித்துத்தான் பெரிதும் கவலை கொண்டிருக்கிறார். மற்றபடி நேஹாவின் இந்த முடிவு குறித்து பெருமிதமோ அல்லது பயமோ பெரிதாக அவருக்கு இல்லை." என்றும் தெரிவித்தார்.
மனிதம் எல்லாவற்றையும் விடப் பெரியது என்பதை நெருக்கடிகள் வரும்போதெல்லாம் மனிதகுலம் மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் நேஹாவின் இந்த செயலையும் பாராட்டி பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
செல்ல நாய்க்காக
யுக்ரேனின் கார்கீவ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் மூன்றாமாண்டு படித்து வருபவர் ரிஷப் கௌஷிக். யுக்ரேனில் நடைபெற்று வரும் ரஷ்ய படைகளின் தாக்குதல் காரணமாக, அவரது வீட்டை விட்டு வெளியேறி அங்குள்ள பதுங்கிடத்தில் தங்கியுள்ளார். இவர் தன்னுடன் தனது செல்லப் பிராணியான நாய் ஒன்றையும் வைத்துள்ளார்.
இவரது தந்தை யுக்ரேனில் தொழில் நடத்திவருகிறார். இவரது குடும்பத்தில் இவர் உட்பட மொத்தம் 7 பேர். இந்நிலையில், யுக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் இப்படி சிக்கல் வரக்கூடும் என்று எண்ணிய ரிஷப்பின் குடும்பம் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதியே துபாய்க்கு இடம்பெயர்ந்து விட்டது.
ரிஷப்பையும் துபாய்கு வரும்படி அவரது குடும்பம் அழைத்த நிலையில், தான் ஒரு வருடமாக வளர்த்து வரும் செல்ல நாயான மலிபு இல்லாமல் வரமுடியாது என்றும் இன்னும் 2-3 தினங்களில் அதற்கான அனுமதிகளைப் பெற்று மலிபுடன் துபாய்க்கு வருகிறேன் என்றும் சொல்லியிருக்கிறார். ஆனால், 24ஆம் தேதி தாக்குதல் தொடங்கிய நிலையில் ஆவணங்கள் சிக்கலால் ரிஷப் துபாய் செல்ல முடியவில்லை.
இதற்கிடையில் குடும்பம் இவரை மட்டுமாவது வந்துவிடு என்று கேட்டபோது, "நாய்க்குட்டி இல்லாமல் நான் வரமாட்டேன்" என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு, இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டுள்ளார். எனினும் தொடர்ந்து ஆவணங்களைச் சரிபார்ப்பதற்கென்று சிக்கல்கள் இருந்துள்ளன. இதனால், வீட்டை விட்டு பதுங்கிடங்களில் தங்கியிருந்து கொண்டே நாய்க்குட்டிக்கான ஆவணங்களை தயார் செய்துள்ளார்.
இருந்தும், தனக்கு அதிகாரிகள் தரப்பில் இருந்து முறையான பதிலோ உதவியோ ஏதும் வரவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் ரிஷப். இது தொடர்பாக அவர் வெளியிட்ட காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. ஒரு நாய்க்குட்டிக்காக தன் உயிரை பணயம் வைக்கிறாரே என்று பலரும் கேள்வி எழுப்பினர்.
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.Facebook பதிவின் முடிவு, 2
இது தொடர்பாக, ரிஷப் கௌஷிகை தொடர்பு கொண்டபோது இணைப்புக் கோளாறு காரணமாக அவரால் பேச முடியவில்லை. டேராடூனைச் சேர்ந்த அவரது நண்பரும், சமூக வலைதளத்தில் ரிஷப்புக்காக உதவிகள் கேட்டவருமான பிரவீன் நம்முடன் பேசினார். அப்போது, "ஒரு நாய்குட்டிக்காக ஏன் உன் உயிரைப் பணயம் வைக்கிறாய் என்று நாங்களும் கேட்டோம். ஆனால், நான் இங்கு வந்துவிட்டால் மலிபுவை யார் பார்த்துக் கொள்வது என்றுதான் மீண்டும் மீண்டும் பதில் சொல்கிறார்" என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Facebook
"இன்று வெளியேற முடியவில்லை"
இதற்கிடையில், "ரிஷப் இன்று ஹங்கேரிக்குப் பயணப்படுகிறார் என்றும் ஹங்கேரி எல்லையில் யாராவது அவருக்கு உதவுங்கள் என்றும் பதிவுகளை சமுக வலைதளங்களில் பார்க்க முடிந்தது. இது தொடர்பாக ரிஷப்பை அழைத்தபோது, "இல்லை. இன்று நான் செல்ல முயற்சித்தேன். ஆனால், கீவிலிருந்து செலும் ரயில்களில் இன்று எனக்கு இடம் கிடைக்கவில்லை" என்று தெரிவித்தார். அத்துடன், தான் நான் துபாய் செல்லப்போவதில்லை. இந்தியாதான் செல்கிறேன். என் குடும்பத்தில் பாதிப்பேர் (அம்மா, அப்பா உட்பட) தற்போது இந்தியாவில்தான் இருக்கின்றனர். அதனால் இந்தியாவுக்கே போகிறேன் என்று தெரிவித்தார்.
இப்போது உங்கள் செல்லப்பிராணிக்கான அனுமதி கிடைத்துவிட்டதா? என்று கேட்டபோது, "இல்லை. இருந்தாலும் தொடர்ந்து தடையில்லா சான்றுக்காக போராடி வருகிறேன். இங்க்கிருந்து போலந்து போய் அங்கிருந்து இந்தியா செல்லும் திட்டமும் எனக்கு இருக்கிறது. ஆனால், தடையில்லா சான்றோ/அனுமதியோ கிடைக்காதபட்சத்தில் அப்போது எங்கே இருக்கிறேனோ அங்கேயே இருப்பேன்" என்று தெரிவித்தார்.
அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்டு விடுமோ என்றும், இந்தப் போர்ச்சூழல் ஓய்ந்தால் நன்றாயிருக்குமே என்றும் பொதுவான மனிதநேய உணர்வுகள் உலகெங்கும் பரவிக்கிடக்கும் சூழலில், இந்த மாணவர்களை தன் உயிரையும் கடந்து பிற உயிர்களுக்காகச் சிந்திக்க வைத்திருக்கிறது உயிர்நேயம்.

பிற செய்திகள்:
- ரஷ்ய படையெடுப்பு: யுக்ரேனின் எதிர்காலம் என்ன?
- யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி: நாடகத்தில் அதிபரானவர், நாட்டில் அதிபரான கதை
- யுக்ரேன் தலைநகர் கீயவ் தெருக்களில் கடும் சண்டை: வெடிகுண்டு சத்தம் - நேரலை செய்தி
- யுக்ரேனில் ரஷ்யாவின் நுழைவு குறித்து ரஷ்யர்களின் மனநிலை என்ன?
- யுக்ரேன்: ரஷ்யா மீது விதிக்கப்படும் தடைகள் என்ன? சர்வதேச உறவுகளில் தடைகளின் பொருள் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












