தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்: மேயர் ஆன ஆட்டோ டிரைவர் - திருச்சி, தஞ்சை, கரூர், கும்பகோணம் மேயர்கள் யார்

பட மூலாதாரம், PRO-Trichy
- எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
- பதவி, பிபிசி தமிழ்
கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயர் ஆக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சரவணன் இன்று பதவியேற்றுக் கொண்டார். "கும்பகோணத்தில் 20 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுநராக இருப்பதால், அனைத்து பகுதிகளின் தேவைகளும் நன்கு தெரியும்," என்கிறார் சரவணன்.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த பிப்ரவரி 19ம் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 22ம் தேதி வெளியாகியது. கடந்த 2ம் தேதி உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து இன்றைய தினம் (மார்ச் 4ம் தேதி) மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்று, தேர்வு செய்யப்பட்டவர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
காலையில் மேயர்கள், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்கள் பதவியேற்றுக் கொண்டனர். பிற்பகலில் துணை மேயர், துணைத் தலைவர்கள் பதவியேற்றனர். பெரும்பாலான இடங்களில் இந்த பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு நடந்தது.
மூத்த மற்றும் அனுபவம் கொண்ட உறுப்பினர்களுடன் பதவியேற்றுக் கொண்ட இளையவர்கள், எதிர்பாராதவர்களுக்கு பெரிய பதவி, கவுன்சிலராகியுள்ள கல்லூரி மாணவர்கள், சுயேச்சைகள் கைப்பற்றிய பேரூராட்சிகள், சுயேச்சைகளின் ஆதரவுடன் தலைவர், துணைத் தலைவர் ஆனவர்கள் என பல்வேறு சுவாரஸ்ய நிகழ்வுகள் நடைபெற்றன.
இதில், டெல்டா மாவட்டங்களில் உள்ள திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், கரூர் ஆகிய 4 மாநகராட்சிகளில் மேயர், துணை மேயர்கள் குறித்து பார்க்கலாம். .
மலைக்கோட்டையின் முதல் & திமுக மாநகரத் தந்தை
திருச்சி நகராட்சி கடந்த 1994ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, 1996, 2001, 2006, 2011, 2022 என என தொடர்ந்து 5 தேர்தல்களிலும் திமுக சார்பில் போட்டியிட்ட அன்பழகன் வெற்றி பெற்றுள்ளார். இவர் திருச்சி மாநகர திமுக செயலாளராகவும் உள்ளார்.
இரண்டு முறை துணை மேயராக பதவி வகித்துள்ளார். மேலும், திருச்சி மாநகராட்சியின் முதல் திமுக மேயராக, முதல் மாநகரத் தந்தையாக அன்பழகன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். முதுகலை வரலாறு படித்துள்ளார்.
சிறையில் இருந்தும் வெற்றி பெற்ற அன்பழகன்

பட மூலாதாரம், Kavini
2001ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலிலும், 26வது வார்டில் போட்டியிட்டு வென்றார் அன்பழகன். அப்போது, அதிமுக ஆளுங்கட்சியாக இருந்த நிலையிலும், மறைமுக தேர்தலில் முன்னாள் அமைச்சர் மரியம்பிச்சையைத் தோற்கடித்து, துணை மேயரானார்.
அடுத்ததாக, 2006இல் நடைபெற்ற தேர்தலில், பழைய 47வது வார்டில் வெற்றி பெற்று, திமுக ஆட்சிக் காலத்தில் துணை மேயராக பதவி வகித்தார். அதைத்தொடர்ந்து, 2011ஆம் ஆண்டு தேர்தலின்போது, அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கில் கைதாகி, திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது நடைபெற்ற தேர்தலில் சிறையிலிருந்தபடி, பழைய, 32வது வார்டில் போட்டியிட்டார். பிரசாரத்துக்கே போகாமல் வெற்றியும் பெற்றார். இதையடுத்து, திருச்சி பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
முதல் முறை போட்டியிட்டவர் துணை மேயர்
திருச்சி மாநகராட்சி துணை மேயராக திமுகவின் திவ்யா (28) பதவியேற்றுக் கொண்டார். பி.காம் படித்து வரும் இவரது கணவர் தனக்கோடி, திமுக வார்டு பிரதிநிதி. இவர்களுக்கு தனுஸ்ரீ (5 வயது), தன்யா ஸ்ரீ (7 மாதம்) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதுவரை எவ்வித பெரிய பதவியும் வகிக்காத தனக்கோடி, தனது மனைவிக்கு திருச்சி 33வது வார்டில் போட்டியிட வாய்ப்பை பெற்றார். திவ்யா கவுன்சிலராக முதல் முறை ஆக வெற்றிப் பெற்றுள்ளார்.
திமுக பிரமுகர்கள், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு துணை மேயர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பாராத வகையில், எளிய குடும்ப பின்னணியை கொண்ட, இளையவர் ஒருவருக்கு, திருச்சி துணை மேயர் பதவியை திமுக தலைமை வழங்கியுள்ளது.
துணை மேயராக மகப்பேறு மருத்துவர்

பட மூலாதாரம், DMK-Thanjavur
தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம் மாநகராட்சிகள் உள்ளன. இதில், தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 51 வார்டுகளில் திமுக 36 அதிமுக 7 , காங்கிரஸ் 2, சுயேச்சைகள் 3, பா.ஜ.க, அமமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளன.
இன்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலில், திமுக தஞ்சாவூர் மத்திய, தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சண்.ராமநாதன் மேயராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து மேயராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். தஞ்சாவூர் நகராட்சியாக இருந்த போது 40வது வார்டில் போட்டியிட்டு 2006 மற்றும் 2011ம் ஆண்டு என இரண்டு முறை கவுன்சிலராக இருந்தார்.
நிறைமாத கர்ப்பிணியாக 51வது வார்டில் போட்டியிட்டு, வெற்றி பெற்ற திமுகவின் அஞ்சுகம் பூபதி துணை மேயராக பதவி ஏற்றுள்ளார். இவருக்கு தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 2 முறை போட்டியிட்டு அஞ்சுகம் தோல்வியடைந்தார்.
'ஆட்டோ ஓட்டுநர்'மேயர் ஆன கதை

பட மூலாதாரம், K.Saravanan
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு முதல் தேர்தல் தற்போது நடைபெற்றுள்ளது. மொத்தம் உள்ள 48 வார்டுகளில் திமுக 38, அதிமுக 3, சுயேச்சைகள் 3, காங்கிரஸ் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 இடங்களில் வெற்றி பெற்றன. திமுகவைச் சேர்ந்தவர் முதல் மேயராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேயர் பதவி கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியில் இருந்து மாநகராட்சி உறுப்பினராகியுள்ள இருவரில் 17வது வார்டில் இருந்து தேர்வான கே.சரவணன் கும்பகோணத்தின் முதல் மேயராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். முதல் முறையாக போட்டியிட்டு, வென்றுள்ளார். நேற்று முன் தினம் வரை ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த சரவணன், தற்போது மேயராகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
ஆட்டோ ஓட்டுநராக இருப்பதால், மாநகரின் அனைத்து பகுதிகளையும் நன்றாக அறிவேன். ஆகையால் முதல் மேயராக பொறுப்பேற்ற நான் முதன்மையான மேயராகவும் பணியாற்றுவேன் என்கிறார் சரவணன்.
தொடர்ந்து அவர் பிபிசி தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், ''நான் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் ஆட்டோ ஓட்டி வருகிறேன். முதலில் வாடகை ஆட்டோ ஓட்டினேன், கடந்த 7 ஆண்டுகளாக சொந்த ஆட்டோ ஓட்டி வருகிறேன். சொந்தமாக ஆட்டோ இருந்தாலும், வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறேன். ஆட்டோ ஓட்டும் வருமானத்தில்தான் குடும்பத்தை நடத்தி வருகிறேன்.'' என்கிறார்.
தாத்தாவைத் தொடர்ந்து அரசியல் ஆர்வம்

தொடர்ந்து அவர் அரசியலுக்கு வந்தது குறித்து கூறுகையில், "எனது தாத்தா குமாரசாமி கடந்த 1976ம் ஆண்டும் கும்பகோணம் நகராட்சி உறுப்பினராக இருந்தார். அவரால் காங்கிரஸ் கட்சியின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. முதலில் கட்சியில் உறுப்பினராக சேர்ந்து, வார்டு தலைவர், நகர துணைத் தலைவராக உள்ளேன். கட்சி நம்பிக்கை வைத்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது. இப்போது மேயராகவும் ஆக்கியுள்ளது,'' என்கிறார்.
மேயராகி விட்டீர்கள், மாநகராட்சிக்கு என்ன திட்டங்களை வைத்துள்ளீர்கள் ? என்று கேட்டதற்கு, "கும்பகோணத்தில் 20 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருவதால், மாநகராட்சியின் 48 வார்டுகளும் எனக்கு அத்துப்படி. அனைத்து தெருக்களையும் அங்குள்ள பிரச்னை, தேவைகள் என அனைத்தையும் நேரடியாக அறிந்தவன். ஆகையால், மக்கள் தேவைகளை தடையின்றி, உடனடியாக நிறைவேற்றுவேன்.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், பாதாள சாக்கடைப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தப்படும். குடிநீர், மின் விளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் தடை ஏற்பட்டால், உடனே கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைகளை முன்வைத்து மாநகராட்சி மேம்பாட்டுக்கான திட்டங்களை கொண்டு வருவேன்.'' என்கிறார்.
கும்பகோணம் துணை மேயராக திமுகவின் மாநகரச் செயலாளர் தமிழழகன் பதவி ஏற்றார்.
மேயர் ஆன தலைமைக் கழக பேச்சாளரின் மனைவி
கரூர் மாநகராட்சியின் முதல் மேயராக திமுகவின் கவிதா கணேசன் (42) இன்று பதவியேற்றுக் கொண்டார். எம்.எஸ்.சி, பி.எட் பட்டதாரியான கடந்த 2006 -11ம் ஆண்டுகளில் இனாம் கரூர் நகர்மன்ற தலைவராக இருந்தார். திமுக தலைமைக்கழக பேச்சாளரான இவரது கணவர் கணேசன், கரூர் மாநகர வடக்கு செயலாளராக உள்ளார். இவர்களுக்கு காவியா, கார்க்கி என இரட்டைக் குழந்தைகள். காவியா சட்டக்கல்லூரி மாணவி. கார்க்கி பொறியியல் மாணவராக உள்ளார்.
துணை மேயராக திமுகவின் தாரணி ப.சரவணன் (54) பொறுப்பேற்கிறார். பி.எஸ்.சி பட்டதாரி. விவசாயம் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் தாரணி மருத்துவர். மகன் ஹனீச்ராம் பொறியியல் பட்டதாரி. இவர், 1996 - 2001ல் தாந்தோணி நகர்மன்ற உறுப்பினராக இருந்துள்ளார். திமுக கரூர் மேற்கு நகர பொறுப்பாளராக உள்ளார்.
பிற செய்திகள்:
- யுக்ரேன் - ரஷ்யா மோதலை குழந்தைகளுக்கு எப்படி விளக்குவீர்கள்?
- காலநிலை மாற்றம்: ஐபிசிசி அறிக்கை தரும் 5 முக்கிய பாடங்கள்
- தமிழக மேற்கு மண்டல மாநகராட்சி பதவி வேட்பாளர்கள் - ஆச்சரியத்தில் திமுகவினர்
- ஐ.நாவில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காதது ஏன்?
- யுக்ரேனில் இருந்து செல்லப் பூனையுடன் தாயகம் வந்த தருமபுரி மாணவர்
- தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு 2வது ஆண்டாக தனி பட்ஜெட் - விவசாயிகளின் எதிர்பார்ப்பு என்ன ?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












