தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வென்ற தம்பதிகள் - என்ன செய்யப் போகிறார்கள் ?

- எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி, திருவாரூர், சேலம், ராமநாதபுரம். தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கணவன் - மனைவி இருவரும் உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் கடந்த 22ம் தேதி வெளியாகியது. இதில், கவுன்சிலராகியுள்ள கல்லூரி மாணவர்கள், ஒரு ஓட்டு கூட வாங்காத வேட்பாளர்கள், சுயேச்சையாக களமிறங்கி வெற்றி பெற்ற அதிருப்தியாளர்கள், சுயேச்சைகளாக வென்று ஆளும்கட்சி ஆதரவாளர்களாக மாறியவர்கள், அதிமுகவில் இருந்து திமுகவிற்கு தாவியவர்கள், சுயேச்சைகள் தீர்மானிக்கும் தலைவர் பதவி என பல்வேறு சுவாரஸ்ய முடிவுகள் வந்துள்ளன. இவர்களுக்கு நடுவில் தம்பதிகள் சிலரும் வெற்றி பெற்று கவனம் ஈர்த்துள்ளனர்.
ஓரே வீட்டில் இருந்து கொண்டு இரண்டு வார்டுகளுக்கான மக்கள் பணியை எப்படி திட்டமிட்டுள்ளார்கள் ? என்று இந்த தம்பதிகளிடம் பிபிசி தமிழ் கேட்டது. அவர்களும் தங்கள் அரசியல் பணிகள், தேர்தல் போட்டி மற்றும் வெற்றி குறித்து பகிர்ந்து கொண்டனர்.
கட்சி வாய்ப்பளித்தது: மக்கள் அங்கீகரித்துள்ளார்கள்

பட மூலாதாரம், Manonmani Thangamani
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் 19, 20 வார்டுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தங்கமணி - மனோன்மணி தம்பதியை தொடர்பு கொண்டோம். தங்கமணி பேசுகையில், ''என்னுடைய தந்தை காலத்தில் இருந்து எங்களது குடும்பம் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளது. இந்த வார்ட்டில் குழந்தைப் பருவத்தில் இருந்து வளர்ந்து, பல்வேறு சமுதாயப் பணிகளை செய்துள்ளோம். இந்த பகுதிக்கு நாங்கள் புதியவர்கள் அல்ல. தற்போது 19, 20 என்று 2 வார்டுகளாக இருந்தாலும் முன்பு ஒரே வார்டாக 14வது வார்டு என்று இருந்தது. இதில், என்னுடைய சகோதரர் இந்திரஜித் நகராட்சி உறுப்பினராக இருந்தார். நான் 30 ஆண்டுகளாக கட்சியில் உள்ளேன். என்னுடைய மனைவி என்னோடு 15 ஆண்டுகளாக கட்சிப் பணியில் உள்ளார். எங்கள் உழைப்பை ஏற்று கட்சி வாய்ப்பளித்தது. அதை மக்கள் அங்கீகரித்துள்ளனர். அருகருகே உள்ள வார்டுகள் என்பதால், தனி அலுவலகம் அமைத்து, பணியாளர்களை நியமித்து, மக்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம். வாரத்திற்கு ஒரு நாள் என்னுடைய வார்டு மக்களை அவரும் அவருடைய வார்டு மக்களை நானும் நேரில் சந்திக்க உள்ளோம்,'' என்றார்.
மனோன்மணி கூறுகையில், "மணப்பாறை நகராட்சியில் கவுன்சிலராக இருவரும் செல்கிறோம். கவுன்சிலராக மட்டுமல்ல, இதற்கு முன்னர் இருவரும் கட்சி அறிவித்த போராட்டங்கள். மக்கள் பிரச்னைகளுக்காக ஒன்றாக பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றோம். குறிப்பாக கடந்த பல ஆண்டுகளாக பெரும் பிரச்னையாக இருந்த மதுபானக் கடையை அகற்ற சாலை மறியல், முற்றுகை, பூட்டு போடும் போராட்டம் என தொடர் போராட்டங்களை நடத்தினோம். அதில் வெற்றியும் பெற்றோம். அப்போதைய வெற்றிக்கும் இப்போதைய வெற்றிக்கும் மக்கள் ஆதரவளித்தனர். அவர்களின் ஆதரவு தொடரும் வகையில் எங்களது பணி தொடரும். குறிப்பாக குடிநீர், சாலை, தெருவிளக்கு, கல்வி, முதியோர் உதவித் தொகை உள்ளிட்டவற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்போம்.''என்கிறார்.
கடந்த 1969ஆம் ஆண்டு நடைபெற்ற மணப்பாறை நகர்மன்றத் தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு பெற்ற பஞ்சாலை தொழிற்சங்க தலைவர் வி.பெருமாள், அவரது மனைவி ராஜம் என்கிற சுப்புலெட்சுமி இருவரும் போட்டியிட்டு,வென்றனர். தொடர்ந்து பலமுறை நகர்மன்ற உறுப்பினராக இருந்தனர். அதற்குபின் தற்போது கணவன், மனைவியாக தங்கமணி - மனோன்மணி இருவரும் செல்கின்றனர்.
கட்சி கடந்த ஆதரவால் வெற்றி பெற்றோம்

பட மூலாதாரம், Malarvizhi Kaliyaperuimal
திருவாரூர் நகராட்சியில் மொத்தமுள்ள 30 இடங்களில் அதிமுக 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இவர்களில் அக்கட்சி பிரமுகர் கலியபெருமாள், அவரது மனைவி மலர்விழி ஆகிய இரண்டு பேரும் அடக்கம். இருவரிடமும் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
கலியபெருமாள் கூறுகையில், "மாணவப் பருவத்தில் இருந்து அதிமுகவில் இருக்கிறேன். திருவாரூர் திருவிக கல்லூரி மாணவர் பேரவைச் செயலாளராக பணியாற்றியுள்ளேன். ஆகையால் இங்கு அனைத்து தரப்பு மக்களிடமும் பழகி, அவர்களின் ஆதரவால் தேர்வு செய்யப்பட்டுள்ளோம். ஒரு கட்சியின் சார்பில் போட்டியிட்டாலும், கட்சி சார்பின்றி அனைத்து தரப்பு மக்களும் வாக்களித்துள்ளனர். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் செயல்படுவோம் என்கிறார்.
அவரது மனைவி மலர்விழி கூறுகையில், "நான் நகராட்சி உறுப்பினராக ஏற்கனவே பணியாற்றியுள்ளேன். அப்போது செய்த பணிகளுக்கு இப்போதும் பாராட்டு கிடைத்துள்ளது. பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்கள் எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். அம்மாவின் ஆசியோடு வெற்றி பெற்றுள்ளோம். பிரசாரத்தின் போது, ஒரே நாளில் ஒரு வீட்டிற்கு 2 முறை வரை சென்று வாக்கு கேட்டோம். வீட்டில் இருந்து இருவரும் வெளியில் செல்வது போல், வார்டுக்கும் நகராட்சிக்கும் செல்வோம்." என்கிறார்.
பேரூராட்சிகளிலும் தம்பதிகள் வெற்றி

பட மூலாதாரம், Meenal Karupanan
இந்த தேர்தலில் உறவினர்கள் பலர் ஒரு பேரூராட்சியில் வெவ்வேறு கட்சிகளில் போட்டியிட்டுள்ளனர். அதில், வெற்றி, தோல்வி இரண்டும் கிடைத்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சியில் மொத்தம் உள்ள18 வார்டுகளில் திமுக 12, அதிமுக 1, சுயேச்சைகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
இதில், 18வது வார்டில் போட்டியிட்ட திமுக பிரமுகர் ராஜா, 3வது வார்டில் ராஜாவின் மனைவி ஜெயந்தி, 2வது வார்டில் சகோதரர் சம்பத் ராஜா ஆகியோர் வெற்றி பெற்றனர். ராஜாவின் மைத்துனர் இளையராஜா 17வது வார்டில் திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயந்தியின் சகோதரி சைலஜா 12-வது வார்டில் வென்றுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சியில் 5வது வார்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மீனாள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதே பேரூராட்சியின் 6வது வார்டில் அவரது கணவர் கருப்பணனும் அமமுக வேட்பாளராக வென்றுள்ளார்.
கவனம் ஈர்த்த துண்டறிக்கை

பட மூலாதாரம், Bhanumathi Mariyappan
இதேபோல், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சியில் அனைத்து சமுதாய கூட்டமைப்பு என்ற பெயரில் சுயேச்சைகளாக மொத்தமுள்ள 15 வார்டுகளில் போட்டியிட்டவர்கள், 9 வார்டுகளில் வெற்றி பெற்று, பேரூராட்சியைக் கைப்பற்றியுள்ளனர். இவர்களில், 1வது வார்டில் மாரியப்பன் என்பவரும் 2வது வார்டில் அவரது மனைவி பானுமதியும் வென்றுள்ளனர். இருவருமே தென்னை மர சின்னத்தில் போட்டியிட்டனர். முன்னதாக இருவரும் வாக்கு கேட்டு வெளியிட்ட துண்டறிக்கை திருமண அழைப்பிதழ் போல அமைந்து கவனத்தை ஈர்த்தது.
அதிமுகவில் இருந்து திமுகவிற்கு
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் அதிமுக சார்பில் ஓரே குடும்பத்தில் சேர்ந்த அப்பா, அம்மா, மகன் ஆகிய 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதிமுக சார்பில் போட்டியிட்டு சண்முகசுந்தரம், அருணாச்சல வடிவு, மகன் பிரேம்குமார் அகியோர் வெற்றி பெற்றனர். அடுத்த திருப்பமாக, இவர்கள் அனைவரும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இதேபோல், துத்துக்குடி மாவட்டம் ஏரல் பேரூராட்சி 15 வது வார்டில் ரமேஷ், 1வது வார்டில் அவரது மகன் பால கௌதம், 2வது வார்டில் மகள் மதுமிதா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
சேலத்தில் வென்ற திமுக தம்பதிகள்

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சி தலைவர் பதவி பெண் ( பொது) என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 18 வார்டுகளில் 11 இடங்களில் திமுக வென்றுள்ளது. அதிமுக வேட்பாளர்கள் 3 வார்டுகளிலும், சுயேச்சை மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தலா 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். திமுக நகர செயலாளர் விபி ஆர் ராஜா 4வது வார்டிலும், அவரது மனைவி கவிதா 2வது வார்டிலும் வென்றுள்ளனர். தான் வெற்றி பெற்றதும் இல்லாமல் மனைவியை பேரூராட்சித் தலைவராக்கும் விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து, விபிஆர் ராஜா பிபிசி தமிழிடம் கூறுகையில், "தமிழ்நாடு முதலமைச்சரின் நல்லாட்சியினால்தான், நாங்கள் இருவரும் வெற்றி பெற்றுள்ளோம். அரசின் நல்ல திட்டங்கள், வெற்றியைக் கொடுத்துள்ளன. நாங்கள் இருவரும் வெற்றி பெறுவோம் என்பது எதிர்பார்த்ததான். ஆகையால் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
மேலும், மொத்தம் உள்ள 18 இடங்களில் திமுக வென்றுள்ளது. சுயேச்சையாக வெற்றி பெற்ற சபீனா பேகம், செந்தில் இருவரும் தற்போது, திமுகவில் இணைந்து விட்டனர். இதன் மூலம் எங்களுடைய பலம் 13 ஆக உயர்ந்துள்ளது. என்னுடைய மனைவி கவிதா பேரூராட்சி தலைவர் பதவியை கேட்க உள்ளார். தலைமை பார்த்து முடிவை அறிவிக்கும்.'' என்றார்
இதேபோல், மேட்டூர் நகராட்சி 1வது வார்டில் உமாமகேஸ்வரி, 14வது வார்டில் அவரது கணவர் வெங்கடாஜலம் ஆகியோர் திமுக சார்பில் போட்டியிட்டு வென்றுள்ளனர். இந்த நகராட்சியில் 82 ஆண்டுகளில், முதல் முறையாக தம்பதிகள் கவுன்சிலர்ளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பிபிசி தமிழுக்காக செய்தியாளர்கள் ஏ.எம்.சுதாகர், பிரபுராவ் ஆனந்தன் ஆகியோர்களின் உள்ளீடுகளுடன் எழுதப்பட்ட கட்டுரை.
பிற செய்திகள்:
- நியூட்ரினோ திட்டத்தால் என்ன ஆபத்து? தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியது என்ன?
- "தேர்தலில் வெற்றிபெற பணத்தையும் பரிசுப் பொருள்களையும் வாரியிறைக்கும் கட்சிகள்"
- திருவள்ளூர் சாமியாரின் ஆசிரமத்தில் விஷம் குடித்து இறந்த கல்லூரி மாணவி - என்ன நடந்தது?
- கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிரான போராட்டம்: கனடாவில் அவசரநிலை
- "என்னுடைய நிர்வாணப் படங்களை டெலிகிராம் நீக்காதது ஏன்?"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













