தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: டெல்டா பிராந்தியத்தில் யாருக்கு அறுவடை? 9 மாவட்ட வெற்றி நிலவரம்

பட மூலாதாரம், Mani
- எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். மண்டலத்தில் உள்ள 4 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. ஓரிரு இடங்களைத் தவிர அனைத்து நகராட்சி, பேரூராட்சிகளில் திமுக வென்றுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகள் பிப்ரவரி 22ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 9 மாவட்டங்களில் எந்த கட்சிக்கு அதிக வெற்றி கிடைத்துள்ளது என்பதை பார்க்கலாம்.
திருச்சியில் என்ன நிலவரம்?
திருச்சி மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகள் உள்ளன. இதில், திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகளில் திமுக 49, காங்கிரஸ் 5, அதிமுக 3, மதிமுக 2, இந்திய கம்யூனிஸ்ட் 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1, அமமுக 1, விசிக 1, சுயேச்சைகள் 2 இடத்தில் வெற்றி பெற்றுள்ளன. திமுக தனிபெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது.
திருச்சி மாநகராட்சியாகி 25 ஆண்டுகளைக் கடந்து விட்ட நிலையில், முதல் முறையாக திமுக மேயர் பதவியைப் பிடித்துள்ளது. அக்கட்சியின் மாநகரச் செயலாளர், முன்னாள் துணை மேயர் அன்பழகன் மேயராக தேர்வு செய்யப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்டத்தில் உள்ள 14 பேரூராட்சிகளிலும் திமுக பெரும்பான்மையாக வெற்றி பெற்றுள்ளது. துவாக்குடி, துறையூர், லால்குடி, முசிறி ஆகிய 4 நகராட்சிகளை திமுக பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது. துவாக்குடி நகராட்சி 5வது வார்டு சுயேச்சை வேட்பாளர் 22 வயதான ஸ்னேகா, 495 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இவர் தனியார் பொறியியல் கல்லூரி மாணவியாக உள்ளார். இவரது தந்தை திமுகவில் உள்ளார். கூட்டணிக் கட்சிக்கு இந்த வார்டை ஒதுக்கியதால், மகளை சுயேச்சையாக களமிறக்கி வெற்றி பெற்றுள்ளார். திமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மகேஸ்வரி 81 வாக்குகள் பெற்றார்.

பட மூலாதாரம், M.Anbalagan
மணப்பாறை நகராட்சி சுயேச்சைகள் திமுகவிற்கு ஆதரவு
மணப்பாறை நகராட்சி மொத்தமுள்ள 27 வார்டுகளில், அதிமுக - 11, திமுக - 8, சுயேச்சைகள் -5, காங்கிரஸ். -1, இ.கம்யூனிஸ்ட் -2 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன. அதிமுக, திமுக கூட்டணி இரண்டும் தலா 11 வார்டுகளில் வெற்றி பெற்று, சம நிலையில் உள்ளன. சுயேச்சைகளின் ஆதரவைப் பெறும் கட்சிக்கு தலைவர், துணைத் தலைவர் கிடைக்கும் நிலை ஏற்பட்டது. வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் 5 பேரும் திமுக முதன்மைச் செயலாளரும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேருவைச் சந்தித்து திமுகவிற்கு ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மணப்பாறை நகராட்சியும் திமுக வசம் சென்றுள்ளது.

பட மூலாதாரம், Manonmani
மேலும், மணப்பாறை நகராட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 19வது வார்டில் போட்டியிட்ட த.தங்கமணி, 20வது வார்டில் போட்டியிட்ட அவரது மனைவி மனோன்மணி தங்கமணி இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். மணப்பாறை நகர்மன்றமாக உருவானது 1966ம் ஆண்டு உருவானது. இதையடுத்து 1969ல் நடைபெற்ற நகர்மன்றத் தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சியின் வி.பெருமாள், அவரது மனைவி ராஜம் என்கிற சுப்புலெட்சுமி இருவரும் போட்டியிட்டு,வென்றனர். தொடர்ந்து பலமுறை நகர்மன்ற உறுப்பினராக இருந்தனர். அதற்குபின் தற்போது கணவன், மனைவியாக தங்கமணி - மனோன்மணி வென்றுள்ளனர்.
தஞ்சையிலும் திமுக கொடி

பட மூலாதாரம், Dr. Anjugam boopathi
தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம் மாநகராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 51 வார்டுகளில் திமுக 36 அதிமுக 7 , காங்கிரஸ் 2, சுயேச்சைகள் 3, பா.ஜ.க, அமமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளன.
நிறைமாத கர்ப்பிணியாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி 51வது வார்டில் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்தது.
மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, முதன் முறையாக தேர்தலை சந்தித்த கும்பகோணம் மாநகராட்சியைத் திமுக கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 48 வார்டுகளில் திமுக 38, அதிமுக 3, சுயேச்சைகள் 3, காங்கிரஸ் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சிகளை திமுக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. மாவட்டத்தில் உள்ள 20 பேரூராட்சிகளில் 17ல் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
ஆடுதுறை பேரூராட்சியில் 15 வார்டுகளில், திமுக 4, பாமக 4, சுயேட்சைகள் 5, அதிமுக 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. சுவாமிமலை பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளில் திமுக 6, அதிமுக 6, காங்கிரஸ் 1, சுயேச்சைகள் 2 இடங்களில் வென்றுள்ளன.
அமமுக கைப்பற்றிய பேரூராட்சி

பட மூலாதாரம், M.Sekar
ஒரத்தநாடு பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் அமமுக வேட்பாளர்கள் 9 இடங்களில் வென்று, பேரூராட்சியைக் கைப்பற்றியுள்ளனர். திமுக 3, அதிமுக 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளார் ஆர்.வைத்திலிங்கம் எம்.எல்.ஏவாக உள்ளார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிடமிருந்து மீண்டும் அதிமுக கைப்பற்றியிருந்தது. ஆனால், இந்த தொகுதிக்குட்பட்ட பேரூராட்சியை அமமுக கைப்பற்றியுள்ளது. இது மட்டுமின்றி, தஞ்சாவூர் மாநகராட்சி வார்டுகள், திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி உள்ளிட்ட வார்டுகளில் அமமுக வெற்றி பெற்றுள்ளது.
அதிமுக சார்பில் போட்டியிட்ட கணவன், மனைவி வெற்றி

பட மூலாதாரம், Kaliyaperumal
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர் ஆகிய 4 நகராட்சிகள், வலங்கைமான், நீடாமங்கலம், பேரளம், நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி, முத்துப்பேட்டை ஆகிய 7 பேரூராட்சிகளில் திமுக கூட்டணியே தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
குறிப்பாக திருவாரூர் நகராட்சி 1வது வார்டில் அதிமுக கலியபெருமாள் வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது வார்டில் அவரது மனைவி மலர்விழி வெற்றி பெற்றுள்ளார். கலியபெருமாள் அதிமுக ஜெ.பேரவை மாவட்ட செயலாளராக உள்ளார். திருவாரூர் நகராட்சியில் மொத்தம் உள்ள 30 வார்டுகளில் திமுக 23, அதிமுக 3, மமக 2, காங்கிரஸ் 1, சுயேச்சை 1 என வென்றுள்ளன.
சுயேச்சைகள் கைப்பற்றிய பேரூராட்சி

பட மூலாதாரம், Siva Ve Meiyanathan
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2 நகராட்சி, 4 பேரூராட்சிகள் உள்ளன. இதில், நாகப்பட்டினம், வேதாரண்யம் நகராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது. கீழ்வேளூர், வேளாங்கண்ணி ஆகிய பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது. தலைஞாயிறு பேரூராட்சியில் அதிமுக பெரும்பான்மையாக வென்றுள்ளது.
திட்டச்சேரி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகளில் சுயேச்சைகள் 9 பேர் வெற்றி பெற்று, பேரூராட்சியைக் கைப்பற்றியுள்ளனர். திமுக 5, அதிமுக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.
திட்டச்சேரி பேரூராட்சியில் வெற்றி பெற்றுள்ள சுயேச்சை வேட்பாளர்கள் திமுகவில் இருந்தவர்கள். கட்சியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், சுயேட்சையாக 13 பேர் களமிறங்கினர். அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்களில் 9 பேர் வெற்றி பெற்று, பேரூராட்சியைக் கைப்பற்றியுள்ளனர்.
மயிலாடுதுறையிலும் சுயேச்சைகள் ஆதிக்கம்
புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 நகராட்சிகள், 4 பேரூராட்சிகள் உள்ளன. இதில், மயிலாடுதுறை நகராட்சியை திமுக பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது.
சீர்காழி நகராட்சியில் மொத்தம் உள்ள 24 வார்டுகளில் திமுக 10 இடங்களில் வெற்றி வெற்றுள்ளது. சுயேச்சைகள் 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர். சுயேச்சைகள் ஆதரவுடன் திமுக நகராட்சியைக் கைப்பற்ற திட்டமிட்டுள்ளது.
தரங்கம்பாடி, குத்தாலம், மணல்மேடு, வைத்தீஸ்வரன் கோயில் ஆகிய 4 பேரூராட்சிகளையும் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று, கைப்பற்றியுள்ளது.
ஒரு வாக்கு கூட பெறாத வேட்பாளர்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி நகராட்சிகளை திமுக தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது. இலுப்பூர், பொன்னமராவதி, ஆலங்குடி, கறம்பகுடி, கீரமங்கலம், கீரனூர் ஆகிய 7 பேரூராட்சிகளில் திமுக பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது. அன்னவாசல் பேரூராட்சியில் திமுக, அதிமுக இடையில் யார் வசம் செல்லும் ? என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சி 7வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் பிரிதிவிராஜா 175 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். திமுக. வேட்பாளர் பரூக் 149 வாக்குகள் பெற்று 2ம் இடம் பெற்றார்.
இந்த வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இப்ராகிம்ஷா, மார்க்சிஸ்ட் - லெனிஸ்ட் கட்சி வேட்பாளர் தர்மராஜ் ஆகியோர் ஒரு வாக்கு கூட பெறவில்லை. நாம் தமிழர் பீர் முகமது 4 வாக்குகள் பெற்றுள்ளார்.
புதுக்கோட்டை நகராட்சி 4 வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட பர்வேஸ் 282 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
கரூர் மாவட்டம் முழுவதும் திமுக வசம்

பட மூலாதாரம், Getty Images
கரூர் மாவட்டத்தில் கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகளில் 42 , அதிமுக 2, சுயேச்சை 2, காங்கிரஸ் 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. கரூர் மாநகராட்சிக்கான முதல் தேர்தலில் மேயர் பதவியை திமுக கைப்பற்றியுள்ளது. மேலும், குளித்தலை, பள்ளப்பட்டி, புகழூர் ஆகிய 3 நகராட்சிகளையும் திமுக தனிப் பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி 3வது வார்டில் பா.ஜ.க வேட்பாளர் கோபிநாத் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பாஜ.க வேட்பாளர் 174 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் 173 வாக்குகள் பெற்றார். இந்த வார்டில், அதிமுக, அமமுக வேட்பாளர்கள் தலா 5 வாக்குகள் பெற்றனர்.
அரியலூரில் சுயேச்சைகள் ஆதரவுடன் திமுக உறுதி

பட மூலாதாரம், Sivasankar
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சி மற்றும் குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிக்காடு ஆகிய 4 பேரூராட்சிகளையும் தனிப்பெரும்பான்மையுடன் திமுக கைப்பற்றியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் 2 நகராட்சி, 2 பேரூராட்சிகள் உள்ளன. இதில், ஜெயங்ககொண்டம் நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. உடையார்பாளையம், வரதராஜம்பேட்டை பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது.
அரியலூர் நகராட்சியில் திமுக 7, அதிமுக 7, சுயேச்சைகள் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற சுயேச்சைகள் நான்கு பேரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கரைச் சந்தித்து, திமுகவிற்கு ஆதரவளித்துள்ளனர். இதையடுத்து, அரியலூர் நகராட்சியும் திமுக வசம் உறுதியாகியுள்ளது.
மீண்டும் டெல்டாவில் திமுக அமோக அறுவடை
டெல்டாவை உள்ளடக்கிய மத்திய மண்டலத்தில் மொத்தமுள்ள 41 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளையும் திமுக கைப்பற்றியது. ஒரத்தநாடு வைத்திலிங்கம், விராலிமலை விஜயபாஸ்கர், வேதாரண்யம் ஓ.எஸ்.மணியன், நன்னிலம் காமராஜ் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் 4 பேர் மட்டும் வெற்றி பெற்றனர்.
அதற்கு முந்தைய ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர் என அனைத்தையும் திமுக கைப்பற்றியது. பிற மாவட்டங்களிலும் திமுக கூட்டணி பெரும்பான்மையாக வென்றுள்ளது.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று, அமோக அறுவடை செய்துள்ளனர். மண்டலத்தில் உள்ள 4 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. ஓரிரு இடங்களைத் தவிர அனைத்து நகராட்சி, பேரூராட்சிகளிலும் திமுக வென்றுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













